March 2022 | CJ

March 2022

Medicine that doesn't work?!


வேலை செய்யாத மருந்து?!



கேட்காமல் கொடுப்படும் எந்த மருந்தும் நன்கு பலன் அளிக்காது. இந்த வார்த்தையின் உண்மை என்னவென்றால், அந்த மருந்துக்கு மதிப்பிருக்காது, அதாவது நோயாளி, கேட்காமல் வைத்தியர் கொடுத்த மருந்து அல்லவா? அதனால் இது வேலை செய்வதில் சந்தேகம் கொண்டு, நோயாளி நம்பிக்கை இழப்பார். சில நேரம், வைத்தியரையே “ஆகாத” வைத்தியர் என்று நோயாளி நினைத்துவிடவும் வாய்ப்பு அதிகம்.

“ஐயோ என்னால், தாங்க முடியவில்லை. இந்த நோய் துன்பத்திலிருந்து என்னை விடுவியுங்கள்” என்றவாறு நோயாளி நொந்து, வைத்திரியரிடம் மருந்து கேட்டிருந்தால், வைத்தியர் எந்த மருந்தை கொடுத்திருந்தாலும் கூட, நோயாளியின் நம்பிக்கையில் குணமாகிவிட சாத்தியம் உண்டு. 

இந்த உதாரணங்களைப்போலவே, நவீன கால உலகில், YouTubeல், வேதாத்திரிய சானல் வழியாக யோக, தவ, இறை உண்மைகளை விளக்கும் காணொளிகளை நாங்கள் தருவதும், அதை அன்பர்கள் பார்ப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலான அன்பர்களின் ஆதரவு, வேதாத்திரிய சானலுக்கு உண்டு. அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். ஆனால் உண்மைகள் மிகுதியாக போய் சேரவில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு.

அன்பர்களே, இந்தக்கதையை கேளுங்கள்.

ஒரு ஞானியைக் கண்டு, ஒருவன் ,

“எனக்கும் யோகத்தில் ஆர்வமாக இருக்கிறது. கற்றுக்கொடுங்கள்”

“அப்படியா நாளைக்காலை என் ஆசிரமத்திற்கு வா”

“இன்றைய நாளிலேயே என்னை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?” என்றான் ஆர்வத்தில்.

“நாளைதான் உனக்கு பரிட்சை, அதில் தேர்ந்தால் ஏற்றுக்கொள்கிறேன்”

மறுநாள் அதிகாலை ஆசிரமம் சென்றுவிட்டான். ஞானி அப்பொழுதான் ஆற்றில் குளிக்க தயாராக நின்று கொண்டிருந்தார்.

“என்னோடு வா”

இவனும், ஞானியோடு கூட நடந்து ஆற்றை வந்தடைந்தான். ஞானி அவனின் கை பிடித்து இழுத்துக்கொண்டே, ஆற்றுக்கு நடுவில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டார். திடீரென, அவனின் கழுத்தை பிடித்து அழுத்தி, தலை முழுதும் நீருக்குள் இருக்குமாறு அழுத்தப்பிடித்து அமுக்கினார். பதறிப்போய் அவன் தன்னை விடுவித்துக்கொள்ள போராடினான். ஞானி தன் கைகளை விலக்கி அவனை மேலே எழச்செய்தார். அவனோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான்.

“இப்போது உனக்கு என்ன தேவையாக இருந்தது?” என்று ஞானி கேட்டார்.

“மூச்சுக்காற்று”

“அதுபோல உனக்கு எப்போது யோகம் தேவைப்படுகிறதோ அப்போது என்னிடம் வா” என்று சொல்லிவிட்டு, “என்னிடம் உன்னை ஒப்புவிக்க உன் மனம் எப்பொழுது தயாராகிறதோ அதுவரை காத்திரு” என்றார்.

சீடனாக வந்தவனுக்கு, அப்பொழுதான் ஒரு ஞானியிடம், யோகம் கற்பதற்கான தகுதி என்ன என்பதை உணர்ந்தான்.

நாளை இன்னொரு உதாரண கதையோடு தொடர்வோம் அன்பர்களே!

வாழ்க வளமுடன்!