July 2023 | CJ

July 2023

How many meditation can practice per day and which one is best?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளைக்கு எத்தனை தவம் செய்யலாம்? எந்த தவம் அதிகம் செய்யவேண்டும்? அது எப்படி உதவும் என்று சொல்லுங்கள்!


பதில்:

ஒரே மூச்சாக மூன்று கேள்விகளை அடுக்கி வீட்டீர்கள். நல்லதுதான். மனவளக்கலை வழியாக கற்றுக்கொண்ட தவங்கள் அனைத்துமே தொடர்ந்து செய்து வரலாம். எனினும் ஒருநாள் என்று எடுத்துக்கொண்டால், காலை, நண்பகல், மாலை என்று மூன்று நேர தவம் போதுமானது. இரவு நேரம் / படுக்கைக்கு முன்னதாக தவம் என்பதை ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்யத்தேவையில்லை.

பிரம்மஞானி / அகத்தாய்வு நிலைகள் முடித்தவர்கள் / அருள்நிதி / ஆசிரியர்கள் இரவில் தவம் செய்யலாம். அதுவும் ஆராய்ச்சி அடிப்படையில் துரியதவம் மிகச் சரியானது. துரியாதீதம் என்ற உயர்நிலை தவம் இரவில் செய்வதை தவிர்க்கலாம் என்பது பொதுவான கருத்து. மற்றபடி பொதுவாகவே துரியதவம் எல்லோருக்குமே அற்புதமானது. துரியதவம் நன்கு ஆழ்ந்து கற்றுத்தேர்வது உதவும், துரியாதீத நிலைக்கு தானாகவே அது உங்களை உயர்த்திதரும் என்பதும் உண்மை.

அதுப்போல தவ ஆற்றல் கூடினால் சாந்திதவம் கட்டாயமாக செய்தாக வேண்டும். அதற்காக வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கவும் அவசியமில்லை. 

ஆரம்பகாலத்தில் ஆக்கினையில் நல்ல தேர்ச்சியும், பிறகு துரியத்தில் நல்ல தேர்ச்சியும் இருந்தால்தான், துரியாதீதத்தின் பயன்களை நன்கு பெறவும் முடியும்.

அதுபோலவே இறைநிலைதவமும் மிகசிறப்பு வாய்ந்தது. மற்றபடி, நித்யானந்த தவம் தினமும் செய்துவரலாம். வேறுபல சிறப்பு தவமும் செய்துவரலாம். ஆனாலும் ஒருநாள் என்று எடுத்துக்கொண்டால், அடிக்கடி தவம் செய்வதில் ஆர்வம் வந்தாலும் தவிர்ப்பது நல்லது, மூன்று தவம் போதுமானதே. இதில் கூட்டுத்தவம் கணக்கில் சேர்க்கவில்லை.

வாழ்க வளமுடன்.

Vethathiriya Kayakalpa Practice Makes body heat or not?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முறையாக காயகல்பம் கற்றேன். ஒரு மாதம் தொடர்ந்து செய்துவந்தேன். உடல் சூடு ஆனதாலும் அதனால் உடல் நலமும் கெட்டுவிட்டது. எனவே நிறுத்திவிட்டேன். இன்னும் சூடு குறையவில்லை. என்ன செய்யலாம்?


பதில்:

முறையாக காயகல்பம் கற்றேன் என்று சொல்லுகிறீர்கள். அதன்படியே செய்தீர்களா? என்ற கேள்விக்கும் பதில் சொல்லியாக வேண்டும். ஏனென்றால், கற்கும்பொழுது இருக்கும் கவனம், அதை நாம் தொடர்ந்து செய்யும் பொழுதும் வரவேண்டியது அவசியம்.

குரு மகான் வேதாத்திரி மகரிசி, பல ஆண்டுக்காலம் ஆராய்ச்சியாகவே, காயகல்ப பயிற்சியை செய்து பார்த்து, அதன் விளைவு, மாற்றங்கள், ஏற்பு இவற்றை கணித்து, தவறுகளையும், குழப்பங்களையும் மாற்றி அமைத்துத்தான், மனவளக்கலை வழியாக பாடமாக நமக்கு தந்திருக்கிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனவே மேம்போக்காக, காயகல்பத்தில் தவறு என்று நாம் சொல்லிவிட முடியாது. அதற்கு வழியும் இல்லை!

காயகல்ப பயிற்சியில், கால்களின் நிலை, கைகள் வைக்கும் நிலை, அங்கே தரப்படும் லேசான அழுத்தம், முறையான அஸ்வினி முத்திரை அளவுகள், அதற்கான கால அளவு, ஓஜஸ் மூச்சு வெளிவிடும் நிலையில் நாக்கின் நிலைபாடு, ஓஜஸ் மூச்சின் அழுத்தம் மற்றும் வெளியிடும் முறை என்பதாக பலவற்றில் நாம் செய்யும் தவறுகளை, அப்படியே விட்டுவிடுகிறோம். அங்கேதான் நீங்கள் குறிப்பிட்ட உடல் உஷ்ணம் அல்லது உடல் சூடு ஏற்பட்டுவிடுகிறது என்பதை கவனத்தில் கொள்க.

அதனால்தான், காயகல்ப பயிற்சி கற்றுக்கொள்ளும் பொழுதே, தனியாகவும் செய்து காண்பித்து, குறைகளை திருத்திக் கொள்வது நல்லது. கற்றுக்கொண்டேன், இனி வீட்டில் செய்து கொள்ளலாம் என்று உடனடியாக முடிவெடுக்கக் கூடாது. அதுபோல குழப்பம் என்றால், ஆசிரியரிடமே நேரடியாக சந்தித்துக் கேட்பதே நல்லது.

சரி, இனி தீர்வு என்ன என்றால், தற்பொழுது நிறுத்திவிட்டீர்கள் என்பதால், உடனடியாக, கற்றுக்கொண்ட மன்றத்தின் வழியாகவோ, வேறு மன்றத்திலும் கூட, உங்கள் நிலையை சொல்லி, திருத்தங்களை பெற்றுக்கொள்ளலாம். இதுவரையுல் தவறாக செய்ததால்தான் உடல் உஷ்ணம் / உடல் சூடு இருக்கிறது என்பதை புரிந்துகொள்க. நிச்சயமாக உங்களின் இந்த பிரச்சனை தீரும், கவலை வேண்டாம்.

வாழ்க வளமுடன்.

What is VithuNatham as Sanskrit? As woman have it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வித்துநாதம் என்றால் என்ன? அது பெண்களுக்கும் உண்டா?


பதில்:

நாம் இந்த உலகில் பிறப்பதற்கு காரணமே, வித்து நாதம் சேர்க்கைதானே?! வித்து என்பது ஆண்கள் உடலில் உருவாகும் ஏழாவது தாது ஆகும், நாதம் என்பது பெண்கள் உடலில் உருவாகும் ஏழாவது தாது ஆகும். ஆனால் பிரித்துச்சொல்லாமல், வித்துநாதம் என்றுதான் அக்காலம் முதல் சொல்லுவது வழக்கம். பெண்களுக்கும் உண்டா? என்று கேட்பது உங்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. அதை திருத்திக்கொள்ள வேண்டும்.

பொதுவாக பெண்களுக்கு, காம இன்பத்தின் உச்சத்தில், ஆண்களுக்கு வெளிப்படுவது போலவே வெளிப்படுவது இல்லை. ஏனென்றால் பெண்களுக்கான பாலுறவு சக்தி என்ற நாதம், ஆண்களுக்கான பாலுறவு சக்தியான வித்து (விந்து) போல இல்லை என்பதே உண்மை. இதனால் வெளிப்பட்டாலும் கூட அதை நாம் தெரிந்துகொள்வதும் கடினமே. இதன் காரணமாக, பெண்களுக்கு இல்லை என்று கருதுவிடக்கூடாது.

பெரும்பாலும் அது ஏதும் நிறமற்ற நீர் போல, திரவம் போல வெளிப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.

இந்த நாதமும், வித்துவும் கூடி, சக்திபெற்று, அதன்வழியாகவே கருமுட்டையை அடைந்து ஜீவனாக வளரும்படி இயற்கை வியத்தகு நிகழ்ச்சியை நடத்துகிறது. எனவே வித்து நாதம் என்பது, ஆண், பெண்ணுகான பாலுறவு சக்திதான் என்பதை அறிந்து கொள்க.

முக்கியமாக, இந்த வித்துநாதம், இயல்பாக திணிவு பெற்றால்தான், பாலுறவில் ஆர்வம் வரும். ஆனால் இக்காலத்தில், அப்படியல்லாது ஆர்வத்திலும், பழக்கத்திலும், விருப்பத்திலும் அதை வெளியேற்றி இன்பம் அடைவது என்று பருவ வயதினரும், இளம் வயதினரும் வாழ்கிறார்கள். வித்துநாதம் வீணாக வெளியேறினால் அது உடலையும், மனதையும், உயிரையும் பாதிக்கும். எனவே அப்பழக்கத்தை, தகுந்த ஆலோசனையோடு மாற்றிடவேண்டியது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்.

What is the meaning of Aswini Mudra and Ojas Breath?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய காயகல்பத்தில் அஸ்வினி முத்திரை, ஓஜஸ் மூச்சு என்பதை எங்களுக்கு விளக்கம் முடியுமா?


பதில்:

புரிந்துகொள்ளும் வகையில் பதில் தரமுடியும் எனினும், மிக விளக்கமாக தர வழியில்லை. ஏனென்றால், இதன் பெரும் உண்மை விளக்கத்தை, நேரடியாக, மனவளக்கலை மன்றத்தில் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்,. அதுபோல கேட்டுக்கொள்ளவும் முடியும். நாம் இங்கே முகம்பாராமல், வார்த்தைகளால் விளக்கிக் கொள்வதில் பயனில்லை. மேலும் அது தவறாகவும் விளங்கிக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம்.

முதலில், சித்தர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆராய்ந்து, முழுமையாக செய்துவந்த, இந்த காயகல்பக்கலை ஏறக்குறைய அழிந்துவிட்டது எனலாம். ஆனால் அதன் பகுதிகள், இந்த உலகெங்கும் பலப்பல மனிதர்களிடம் சென்று சேர்ந்துவிட்டது என்பதே உண்மை. நம் நாட்டில், காயகல்பம் எதோ சாப்பிடும் லேகியமாகவும், உணவுப்பொருளாகவும் மாறிவிட்டது சோகம். ஆனால் காயகல்பம் யோகபயிற்சி முறைமட்டுமே!

அப்படி கலைந்து கிடந்த, காயகல்ப யோகக்கலையை ஒன்றுசேர்த்து, குறைகளை நீக்கி, முழுமை செய்து நமக்கு தந்தவர், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களே ஆகும். தான் வாழும் காலம் வரையும் கூட, அவ்வப்போது சில மாற்றங்களை கவனித்தும் வந்தார் என்பதே உண்மை.

அஸ்வினி என்றால் குதிரை என்ற கருத்தாகும். விலங்கிங்களில், குதிரை ஒன்றுதான், இந்த முத்திரையை, இயல்பாக, இயற்கையின் வழியில் செய்துவருகிறது என்பதை சித்தர்கள் கண்டார்கள். அதனால் அதற்கான பெயரை, அஸ்வினி முத்திரை என்றே வைத்தார்கள். ஓஜஸ் மூச்சு என்பது, நம்முடைய பாலுறவு சுரப்பியில் தங்கி நிற்கும், வித்துநாதத்தில் இருந்து பிரித்தெடுக்கக்கூடிய ஒரு சக்தி, இதை நம் மூச்சோடு கலந்து மேலேற்றுகிறோம். இதற்கு ஓஜ்ஸ் மூச்சு என்று சித்தர்கள் பெயரிட்டு அழைத்தார்.

வாழ்க வளமுடன்.


Is it true that they say that we were born to solve karma?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கர்மாவை தீர்க்கவே பிறந்தோம் என்று சொல்லுகிறார்களே அது உண்மையா?


பதில்:

கர்மாவை தீர்க்கவே பிறந்தோம் என்பதை விட, கர்வால்தான் பிறந்தோம் என்று சொல்லுவதே மிக பொருந்தமாக இருக்கும். இந்த கர்மா என்பதை புரிந்து கொள்வதில் பல குழப்பங்கள் இருந்துவருவதால், கரமா என்பதை வினப்பதிவுகள் என்றே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். ஒரு வினை, அதன் விளைவு ஆகிய இரண்டும் சேர்ந்து பதிவாக மாறிவிடுகிறது. அதுவே வினைப்பதிவு, கர்மா என்று அழைப்படுகிறது!

இயற்கையோடு ஒட்டிவாழும் உயிரினங்களுக்கு, கர்மா என்ற வினைப்பதிவு எழுவதில்லை, பதிவாகவில்லை, மறுபடியும் எழுவதில்லை. உதாரணமாக ஐந்தறிவு விலங்கினங்கள் மற்றும் பறவைகள். ஆனால், ஆறறிவான மனிதன், அவனின் விரிந்த ஆற்றலாலும், இயற்கையின் ஒர் அங்கமாகவே பரிணாமத்தில் வந்ததால், அவன் எது செய்தாலும் அது வினையாக பதிவாகிறது. நல்லது என்றால் அது நல்ல பதிவையும், தீயது, ஏற்பில்லாதது என்றால் அதுவும் வினைப்பதிவாகவும், அதை சரி செய்யும் பொருட்டாக, திருத்தம் பெறும் வழியிலும் மறுபடி மலர்கின்றது. சரியாக புரிந்து கொண்டு, திருத்தாவிட்டால், மறுபடியும் எழும் மற்றொரு விளைவோடு கூடுதலாக பதிவாகிவிடும். 

ஒரு மனிதனால், தன் ஆயுட்காலத்தில் தீர்க்கமுடியாத, கர்மா என்ற வினைப்பதிவுகளை, கருத்தொடர் வழியாக அவர்களின் வாரிசுகளுக்கு கடத்தப்படுகிறது. இங்கே இறையாற்றலே செயல்படுகிறது. அப்படி கடத்துவதற்காகவே, பிள்ளைகள் பிறப்பும் நிகழ்கிறது எனலாம். எனவே பிறவின் நோக்கம், கர்மாவை தீர்க்க மட்டுமில்லாமல், ஏற்கனவே தீர்க்கப்படாத கர்மாவால்தான் அந்த பிறப்பே நிகழ்கிறது என்பதுதான் உண்மை.

இந்த கர்மா என்ற வினைப்பதிவு இருப்பதால்தான், ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி சிறப்புத்தன்மையும் அமைகிறது எனலாம். ஓவ்வொருவருடைய செயல் ஒன்றாகவே இருந்தபொழுதும், விளைவு என்பதில் வேறுபட்டு அமைகிற உண்மையை எல்லோரும் அறிவார்கள். அந்த விளைவை தருவதில் ‘கர்மா என்ற வினைப்பதிவு’ முதன்மையாக அமைகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

How can come to know the mistake and correction in Kayakalpa yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப பயிற்சிகளில் ஏற்படும் தவறுகளை எப்படி அறிந்திடலாம்? நாமாக திருத்திக் கொள்ளலாமா?


பதில்:

காயகல்ப பயிற்சி என்பது, மனித வாழ்வோடு துணை செய்வதும், மனிதனின் ஆயுட்காலத்தையும் உயர்த்திட வழி செய்வதும் ஆகும். மேலும் முதுமையிலும் இளமை என்ற மாற்றத்தை காப்பதும் ஆகும். சித்தர்களின் காயகலப கலையை, முழுமைப்படுத்தித் தந்த, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை போற்றி வணங்குவோம்.

அன்பர்கள், காயகல்ப பயிற்சியை, மனவளக்கலை மன்றங்களில், ஆசிரியரின் நேரடி பார்வையில்தான் கற்றுக்கொள்ள வேண்டும். கணவன் மனைவி என்ற நிலையில் கூட, அவர்களுக்கு அவர்களே கற்றுக்கொள்வதில் முழுமை கிடைத்திடாது. ஆனால் விபரமும், அதன் தத்துவ விளக்கவும், தகுந்த ஆசிரியரிடம், அனுபவம் பெற்ற மனவளக்கலை அன்பரிடம் பெற்றுகொள்ளலாம். ஆனால் அதில் உண்மை இருக்கவேண்டியது அவசியம்.

காயகல்ப பயிற்சி உங்களுக்கு, ஆசிரியரால் கற்றுக்கொடுக்கும் பொழுதே, கவனமாக அதன் தத்துவ விளக்கங்களை கேட்டு, நிலை மற்றும் பயிற்சி முறைகளை செய்துபார்த்து திருத்தம் பெற்றுக்கொள்வது நல்லது. பயிற்சியை நாம் தனியாக, வீட்டில் செய்யும் பொழுது ஏற்படும் தவறுகளை அறியலாம் என்றாலும், நாமாக திருத்திக்கொள்ள முடியாது. அது அந்த தவறை மேலும் அதிகப்படுத்திவிடும் என்று அறிக. 

என்னென்ன தவறுகள் என்று சுருக்கமாக பார்த்தால், உடல் நிலையை சரியாக வைக்காமல் பயிற்சி செய்வது, அஸ்வினி முத்திரையை வேகமாகவோ, மிக மெதுவாகவோ செய்வது, ஓஜஸ் மூச்சு வெளியிடுவதில் புரிதல் இல்லாமை, அதை தவறாக வெளியிடுதல் ஆகியன எனலாம். மேலும் காலை, மாலை, இரவு பயிற்சிகளை கலந்தோ, மாற்றியும் செய்வது தவறே. அதுப்போல இந்த காலம் தவிர, அடிக்கடி செய்வதும் தவறே. இந்த தவறுகளை கணக்கில் கொண்டு, நீங்கள் எந்த தவறை செய்கிறீர்களோ அதை கவனித்து, நேரடியாக உங்களுக்கு, கற்றுக்கொடுத்த, மனவளக்கலை மன்ற ஆசிரியரிடம் அல்லது பொறுப்பான மற்றொரு ஆசிரியரிடம் கேட்டுத்தான் தெளிவு செய்துகொள்ள வேண்டும். நீங்களாகவோ, அனுபவம் இல்லாத வேறு யாரோ ஒருவர் சொல்லுவதை கேட்டு திருத்தம் பெறக்கூடாது.

எனவே தவறு நேர்ந்தால், அதில் உடல்நலம் பாதிப்பு உண்டாவதை அறிந்து, காயகல்ப பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு, அந்த நாளோ, மறுநாளோ உடனே மனவளக்கலை மன்றத்தை தொடர்புகொண்டு சந்தேகம் தெளிக.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

Shall we learn kundalini yoga self from old notes or books?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பர் ஒருவர், சித்தர்களின் நூல்களை படித்தே குண்டலினி சக்தியை உயர்த்திக் கொள்ளலாம் என்று சொல்லுகிறார். அது சரியா?


பதில்:

குரு இல்லாத வித்தை பாழ் என்று ஒரு பழமொழி உண்டு. அதை அந்த நண்பருக்கு சொல்லுங்கள். அந்தக்காலங்களில் வழிவழியாக குருகுலம் என்ற வகையில், குருவின் நேரடி பார்வையில்தான் யோகம் கற்றுத்தரப்பட்டது. யோகத்தில் விருப்பமில்லாதவர்களுக்கு, பக்தியும், வழிபாடுகளும் போதும் என்றும் சொல்லப்பட்டது. இன்றைக்கு அந்த குருகுலம் இல்லை. பக்தியும் வேறுமாதிரி திரிந்து விட்டது.

சித்தர்களின் நூல்களில் இலைமறைகாயாக யோக பயிற்சி முறைகள் சொல்லப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதெல்லாம், பரிசோதனைக்கும், ஒப்பிட்டுப்பார்க்கவும் தான் உதவுமே தவிர, நேரடியாக இந்தமாதிரியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படவில்லை. அதாவது பயிற்சி முறைகளாக, படிப்படியாக சொல்லவில்லை. ஆனால் உண்மை இருக்கிறது அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யோகம், தகுந்த ஒரு குருவின் வழியாகவே பெறவேண்டும். தீட்சையும் அவர் கண்காணிப்பில்தான் பெறப்பட வேண்டும். இன்றுதான் காலம் மாறிவிட்டதே. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, எளியமுறை குண்டலினி யோகமான, மனவளக்கலை இருக்கிறதே? மேலும் அது தொட்டுத்தரும் தீட்சையாகவும் மலர்ந்துவிட்டது. அந்தக்காலம் மாதிரியான கடின முறைகளும் கிடையாதே!

மேலும், யோகத்தை கற்றுக்கொள்ள வேறு பல யோக மையங்களும் இங்கே உருவாகிவிட்டன. யாரும் எங்கு வேண்டுமானலும், யோகம் கற்றுக்கொள்ள வாய்ப்பும் கிடைக்கிறது. இனிமேலும், நூல்களை படித்து தானாகவே கற்றுக்கொள்வேன் என்பது அவசியமில்லை. இதனால், காலவிரயம் மட்டுமல்ல, அறிவுத் தடங்கலும் ஆகிவிடும்.

முக்கியமாக, தானாக பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் படித்து யோகம் கற்க ஆரம்பித்தால், அந்தக்காலம் மாதிரியே, குண்டலினி சக்தி பாதையில் தடை வந்தால் என்ன செய்வீர்கள்? எப்படி அதை போக்குவீர்கள்? மூலாதாரத்தில் இருந்து ஆக்கினை செலுத்துவதற்கு முயற்சிக்கையில், அதற்கு இடையிலான மற்ற ஆதாரங்களில் நின்றுவிட்டால், அது உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும்  சிக்கலை உருவாக்கிவிடுமே? வாழ்நாளையும் சிதைக்கும் அளவுக்கு மாறிவிடவும் கூடும். அவற்றை, அந்த தடைகளை நீக்கிடவும், பாதிப்பில்லாமல் மேல்நோக்கி நகர்த்தவும் அறிவாரா? இப்படி இன்னும் நிறைய பிரச்சனைகள் எழக்கூடும் என்பதால். அவரை, உங்கள் நண்பரை ஏதேனும், யோக மையங்களில் இணையச்சொல்லி அறிவுரை சொல்லுங்கள்!

இன்னும் தெளிவாக சொல்லப்போனால், உடல் நலம் சீர்கெடும், நிற்க நடக்க முடியாமல் போகலாம், பேச்சில் குழப்பம், சிந்தனையில் பதட்டம், புத்தி தடுமாற்றம் பெறும், மன நலம் பாதிக்கும், பிற ஆவி, ஆன்மாக்களின் தொந்தரவும் வரும் என்பதை அவருக்கு தெளிவுபடுத்துக!

வாழ்க வளமுடன்.  

How anyone can start a day based on Vethathiriya Yoga Way?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய வழியில் ஒருநாளை எப்படி ஆரம்பிக்கலாம்? நீண்டநாளாக குழப்பமாக இருக்கிறது!


பதில்:

தற்காலத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை, நள்ளிரவு வரை நீடிக்கிறது என்று சொல்லமுடியும். வாழ்க்கை சூழல்களும், கைபேசியின் வரவும், இணைய பயன்பாடும் அப்படியான மாற்றத்தை தந்துவிட்டது. இது இயல்புதான். ஆனால் இதனால் எழுகின்ற விளைவுகளை கவனித்து, மாற்றங்களை அமைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், நாம் நன்றாக இருக்க, வாழ இந்த உடலும், மனமும் நல்லபடியாக இருக்கவேண்டுமே? அப்படி இருந்தால்தானே, அது யோக வாழ்வுக்கும் உதவிடும்.

ஒரு நாளை ஆரம்பிக்க, அதிகாலை எழுந்துவிட பழக வேண்டும். அதற்காக. 3.30 மணிக்கோ 4.30 மணிக்கோ உடனடியாக எழ வேண்டியதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற பழகிக் கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு நான் தூங்கப்போவேன் என்ற முடிவை வைத்துக்கொண்டு, அதை செயல்படுத்துக. ஒருவார காலத்திற்குள் அதிகாலை எழுந்து விடலாம். எழுகின்ற அந்த நேரம் 5.30 முதல் 6.30 வரை கூட போதுமானதுதான்.

எழுந்த உடனே, சிறிது தண்ணீர் குடித்துவிட்டு, காலைக்கடனை முடித்துவிடுங்கள். வேதாத்திரிய மனவளக்கலை பயிற்சியில் கற்ற ‘காயகல்ப பயிற்சி’ முதல் தேர்வாக இருக்கட்டும். பிறகு ‘எளியமுறை உடற்பயிற்சி’ இரண்டாவது தேர்வு. சிறிது நேர இளைபாறலுக்குப் பிறகு, ‘தவம்’ மூன்றாவதாக அமைத்துக்கொள்க.  இந்த மூன்றும் போதுமானதுதான். மொத்தமாக 10+45+25=1.20 ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் அல்லது கூடுதலாக ஆகலாம். நாம் வீணாக கழிக்கின்ற நேரத்தை விட இது ஒன்றும் பெரியவிசயமில்லை அல்லவா? எனவே அவசரமில்லாமல், பொறுமையாக செய்துவரலாம். இந்த பயிற்சிகளுக்கு இடையே, முன்னே, உங்களின் வழக்கமான ‘காஃபி, தேநீர்’ அருந்துவதை விட்டுவிடுங்கள். எல்லா பயிற்சிகளையும் முடித்த பிறகு, சிறுது நேர அமைதிக்குப் பிறகு, அருந்திக் கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கடினமாகவே இருக்கும், ஆனால் பழகப்பழக, ஒருநாள் ஏதோ ஒரு காரணத்தால் செய்யமுடியாமல் போனால், வருத்தப்படும் அளவிற்கு உங்கள் மனமும், உடலும் பழகிவிடும் என்பதே உண்மை. இதுவரை நீங்கள் இந்த மாற்றத்திற்குள் இல்லை என்றால், இனிமேலாவது, நாளைமுதல் நான் மாற்றிக்கொள்வேன் என்ற மன உறுதியோடு, சங்கல்பமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்திப்பாருங்கள். வெற்றியில் திளைப்பீர்கள்!

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

How to understand and perform the Shanti Thavam?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படி அந்த சாந்தி தவம் செய்வது? இதுவரை எனக்கு முழுமையாகவில்லை ஏன்?


பதில்:

சாந்தி தவம் என்பது அற்புதமான, சித்தர்களின் கொடை என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுவார். தவத்தில் ஆழ்ந்து செல்லச்செல்ல, உடல் அந்த தவ ஆற்றலை தாங்கமுடியாமல் பல்வேறு வேதனை வெளிப்படுத்தும். இதனால் உடல், மனம், உயிரும் பாதிப்படையும். இதை சீர் செய்து, திருத்தம் பெறுவதற்காக உண்டான தவமே, சாந்தி தவம். இதை இறங்குபடி தவம் என்றும் சொல்லுவார்கள்.

யோகத்தில் தவம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல், பக்தி வழியில் அதீதமாக இருப்போருக்கும் கூட இந்த சாந்தி தவம் உதவுகிறது என்பது உண்மை. அப்படி பக்தி வழியில், பாதிப்படைந்தோர்க்கும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி, இத்தவத்தை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறார்.

யோகத்தில் உயர்வு மட்டும் இல்லை, அவ்வப்பொழுது அதீத தவ ஆற்றலை, உடல் ஏற்றுக்கொள்ளவும் பழக்கவேண்டும். குண்டலினி சக்தியை, ஆக்கினையில் இருந்து, மூலாதரம் கொண்டுவந்து நிறுத்துவதே சாந்தி தவம் ஆகும். ஆரம்ப தவசாதகர்கள், வாரத்தில் ஒருநாள், வெள்ளிக்கிழமை கட்டாயமாக சாந்திதவம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இந்த தவம் செய்வது மிக எளிதே, சாதாரணமாக பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, முதுகுதண்டு நேராக இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். மூலாதாரம் என்ற சக்கரத்தை, ஆதாரத்தை மட்டும் நினைத்து தவம் இயற்ற வேண்டும். வேறு எந்த சக்கரத்தையும் நினைவில் கொண்டுவரக் கூடாது. மனம் அந்த மூலாதரம் என்ற இடத்தில் நிலைத்து நிற்கவும் பழகிக் கொள்ள வேண்டும். காலை 10 நிமிடம், மாலை 10 நிமிடம் செய்தால் போதுமானது.

வெள்ளிக்கிழமை பெரும்பாலும், எல்லா மனவளக்கலை அன்பர்களும் சாந்தி தவம் செய்வதால், நமக்கும் அத்தகைய நிலை கைவரப்பெறும். ஒரு நாள் உங்களுக்கு போதுமானதாக இல்லாமல் இருந்தால், அதாவது தலைபாரம், உடல்வலி தொடர்ந்தால், மறுநாளும், சனிக்கிழமையும் கூட இந்த சாந்தி தவமே செய்துவரலாம், தவறொன்றும் இல்லை.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

Stay with alert in unavoidable circumstances near the dead bodies


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் ஒருவருடைய இறப்பு நிகழ்வில் ஒருநாள் முழுவதும் இருக்கவேண்டி இருந்தது, மறுநாள் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை, தலைபாரம், உடல்வலி, காய்ச்சல் போல இருக்கிறது. இதை எப்படி சரி செய்யலாம்?


பதில்:

நீங்கள், மனவளக்கலையில் தவம் கற்ற அன்பர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனினும் அங்கே உங்களுக்குச் சொல்லப்பட்ட வழிமுறைகளை மறந்துவிட்டீர்கள் என்பதும் தெரிகிறது. உங்களுக்கு, மனவளக்கலை ஆசிரியர்கள், சாந்தி தவம் இயற்றும் பாடம் தந்திருப்பார்கள். அதற்கு முன்னதாக, இந்த சாந்தி தவம் என்பதின் மகிமை என்ன? அது ஏன் செய்யவேண்டும்? எப்பொழுது எல்லாம், சாந்திதவத்தின் வழியாக, மூலாதர நினைவை செலுத்திப் பழவேண்டும் என்ற விளக்கத்தையும் உங்களுக்கு நிச்சயமாக கொடுத்திருப்பார்கள்.

யோகசாதனையில் இருக்கிற எல்லா அன்பர்களுக்கும் ‘சாந்தி தவம்’ முக்கியமானது. அற்புதமானது என்றால் மிகையில்லை. அதிலும், நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷியின், மனவளக்கலையில், அடிப்படை பயிற்சியிலேயே ‘சாந்தி தவம்’ கற்றுத்தரப்படுகிறது.

சாந்திதவம், யோகசாதனையில் ஏற்படுகின்ற தடைகளை அகற்றுகிறது. விரிவான விளக்கத்தை, வேறு கட்டுரையில் காணலாம். சில அடிப்படைகளை மட்டும் இங்கே தெரிந்து கொள்வோம். யோகத்தின் வழியாக தவ ஆற்றலின் அளவு சில நேரம் மீறும். அப்போழுது வழக்கமான தவங்களை செய்யக்கூடாது. எனவே அந்த நேரங்களில் ‘சாந்தி தவம்’ மட்டும் செய்துவந்தால் தவ ஆற்றல், உடல் ஆற்றலாக மாறி நன்மை அளிக்கும்.

மேலும், மூலாதரத்தில் நினைவை செலுத்தும் ஆற்றலும் நமக்கு கிடைத்துவிடும்.

மனிதனின் குண்டலினி சக்தி எனும் ஆற்றலை, உயர்த்துவது எவ்வளவு நன்மையோ, அதுபோல பாதுகாப்பதும் நன்மையே! உங்களை சுற்றி இருக்கும் சூழல் கூட உங்கள், சக்தியை பறித்துவிடும். ஒரு இறந்த மனிதரின் உடலைச் சுற்றி ஒரு சக்தி ஓட்டம் இருக்கும் என்பது உண்மை. யோகத்தில் இணையாத, யோகம் கற்றுக்கொள்ளாத சாதரண மனிதர்கள், இறந்த மனிதரின் உடலின் அருகில் இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் யோகமும், தவமும் செய்யும் அன்பர், மூலாதார நினைவோடு அங்கே இருக்கவேண்டியது அவசியம். அப்படி இல்லையென்றால், அன்பருடைய சக்தி வீணாக பறிக்கப்படும். இது இயற்கையாக நிகழ்வது. எனவே நீங்கள், இனிமேலாவது சாந்தி தவம் நன்கு கற்று, மூலாதர நினைவை செலுத்துவதை பழக வேண்டும்.

சாந்தி தவம் தொடர்ந்து செய்துவாருங்கள், உடல் நலம் பெறும், அதுபோல, வாரத்தில் ஒரு நாள் சாந்திதவம், வெள்ளிக்கிழமைகளில் கட்டாயமாக செய்யவேண்டியதும் அவசியம். 

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

Shall we chant mantra or play bhakti songs when we practice meditation?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்யும் பொழுது, மந்திரம் சொல்லலாமா? பக்தி பாடல்கள் கேட்கலாமா? 

பதில்:

தவம் செய்யும் பொழுது மந்திரம் சொல்லுவது உண்டு. அதுபோல தவம் செய்யும் பொழுது பக்தி பாடல்கள் கேட்பதும் உண்டு. பாடல்கள் பாடியே கொண்டாட்டமாக தவம் செய்வதும் உண்டு. இது இன்னமும் உலக அளவில் ஒவ்வொரு அன்பர்களாலும் தொடரப்பட்டு வருவதுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவை எல்லாம், பதஞ்சலி முனிவர் வகுத்த அஷ்டாங்க யோகத்தில் இருக்கும் நிலைகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தியானம் என்ற நிலைக்கு நாம் உயர விரும்பினால், இதையெல்லாம் விட்டுவிட வேண்டியது அவசியமாகிறது. ஆனால் நாம் தவம் என்பதாக, இந்த மந்திரம் சொல்லுவதையும், பக்தி பாடல் கேட்பதையும், நாமே பாடி ஆடுவதையும் ஏற்றுக்கொண்டுவிட்டோம். குருமகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய, மனவளக்கலையான, எளியமுறை குண்டலினி யோகத்தில், மந்திரமோ, தந்திரமோ, எந்திரமோ இல்லை. அதை எல்லாம் கடந்த, அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது நிலையாகிய, தியானத்திற்கு, உடனே வந்துவிடுகிறோம் என்பதே உண்மை.

இதனால், சராசரியாக தவம் செய்ய விரும்பும் அன்பருக்கும், மனவளக்கலை கற்ற அன்பருக்கும் தவம் செய்வதில் வித்தியாசம் வந்துவிடுகிறது. எனவே மனவளக்கலையில் பயணிக்கும், அன்பர்கள் தவம் செய்யும்பொழுது, இதையெல்லாம் செய்யவேண்டியதில்லை. தவம் இயற்றுவதற்காக, மனவளக்கலை ஆசிரியர் சொல்லிக் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை செய்துவந்தால் போதுமானது.

வாழ்க வளமுடன்.

-

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

How many meditation will practice on the starting level?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்



கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆரம்ப தவசாதகர் ஒரு நாளைக்கு எத்தனை தவம் செய்யலாம்?


பதில்:

ஆரம்ப தவசாதகர் என்றால், முதலில் எளியமுறை உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஏனென்றால், தவத்தில் அமர்ந்தால், மிக எளிதாக, உடல் வலி ஏதும் இல்லாமல் இருக்கவேண்டும். முதுகுதண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார வேண்டியது அவசியம். சாதரண பதமாசனத்தில் அமர்ந்தால் போதும் என்றாலும் கூட, அதில் கூட கால்வலி எதுவும் வரக்கூடாது. 

உடலில் வலி, சோர்வு இருந்தால் தவம் மிகச்சரியாக இயற்ற முடியாது, அந்த தவமும் உதவாது, இடைப்பட்ட நேரத்திலேயே முடித்துவிடத் தோன்றும். எனவே உடல் அதை எல்லாம் பொருட்படுத்தாத நிலையை, உடற்பயிற்சியால் வரவழைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒருவாரம் முதல் ஒருமாதம் எடுத்துகொள்வது நல்லதுதான். கூடவே காயகல்பமும் செய்து பழகி வந்தால் இன்னமும் நன்மை கூடும், தவமும் சிறக்கும்.

ஆரம்ப தவசாதகருக்கு, ஆக்கினை முதல் துரியாதீதம் வரை கற்ற அனுபவம் பெற்றிருப்பார் என்றாலும் கூட, முதல் வாரம் ஆக்கினை தவம் மட்டுமே செய்துவரலாம். ஒருநாளைக்கு இரண்டு முறை தவம் இயற்றினால் போதுமானதே. அதிகாலையில் மற்றும் மாலையில் என்று அமைத்துக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் அந்த அனுபவத்தி நினைத்துப் பார்ப்பதாக நேரத்தை செலவிட்டுக் கொள்ளலாம்.

அடிக்கடியோ, ஒரு நாளைக்கு பல நேரமோ, அதிக நேரமோ தவம் இயற்ற வேண்டியதில்லை. ஒரு தவம் இயற்ற எந்தளவு நேரம் தரப்பட்டிருக்கிறதோ அந்த நேரம் மட்டும் இயற்றினால் போதுமானது. அமிர்தம் என்பதற்காக அடிக்கடி உண்ணக்கூடாது என்பார்கள். அதுபோலவே தவமும் என்று சொல்லலாம்.

ஆக்கினை தவம் இயற்றிவரும் நாட்களில் ஒரு சிலருக்கு, தவ ஆற்றல் கூடிவிடும். அதனால் தலைபாரம் உணர்ந்தால், உடனடியாக சாந்தி தவம் செய்து, அதிகமான தவ ஆற்றலை, உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றிக்கொள்ளலாம். 

உங்களின் ஆரவம், முயற்சி, ஆராய்ச்சி அதிகமாக இருந்தாலும் கூட, ஒருநாளைக்கு இருவேளை தவம் என்பது, ஆரம்ப சாதகருக்கு பொருத்தமானது.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

Why and What the important of the re-touch?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

இன்றுமுதல் வேதாத்திரிய கேள்வி பதில்களும் பதிவாக வழங்கப்படுகிறது. வாழ்க வளமுடன்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மறுதீட்சை என்பது அவசியம்தானா?


பதில்:

மறுதீட்சை என்ற வார்த்தையை நன்கு கவனியுங்கள். கொடுக்கப்பட்ட தீட்சையை, கற்றுக்கொடுக்கப்பட்ட தீட்சையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்களுக்கு நிச்சயமாக, மறுதீட்சை அவசியமே! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், எளியமுறை குண்டலினி யோகமான மனவளக்கலையைக் கூட, அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியாத சூழலில் சிக்கி விடுகிறார்கள்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக வேலைப்பளு, குடும்பத்தில் அன்றாடம் நிகழக்கூடிய நிகழ்வு, பிரச்சனைகள், மனவளக்கலை மன்றத்தை விட்டு தூரமாக விலகி இருத்தல், நீண்ட நோய் தொந்தரவு, ஊர் விட்டு ஊர் மாறிவிடுதல், வெளிநாடு சென்று விடுதல், தவம் செய்யவே நேரம் கிடைக்காமை, விபத்தில் உண்டான காயம், உடல் வலி பிரச்சனை, உடலில் ஏற்றுக்கொண்ட அறுவைசிகிச்சை என்று இருக்கலாம்.

இவர்கள் அனைவரும், முழுமையான யோககல்வி கற்றிருந்தாலும், மறுபடி தவம் செய்ய நினைத்தால், செய்யலாம் என்பது சரிதான். ஆனால் அங்கே ஒரு தடை ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாமே?! அந்த தடையினால், குண்டலினி சக்தியின் பாதையிலும் அதன் ஓட்டத்திலும் பிரச்சனை உருவாகலாம். அதனால் ஆக்கினை தவம் செய்தால், மிகச்சரியாக ஆக்கினையில் பொருந்திவர வேண்டுமே? அதுபோல சாந்தி தவம் செய்தால், மூலாதாரத்தில் நிலைபெற வேண்டுமே? அப்படி இல்லையென்றால் அது, பலவித உடல், மன பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். 

எனவே, மறுதீட்சை அவசியம்தானா? என்ற கேள்வியை விட்டுவிட்டு, இத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்கள் காலமாக, தவம் செய்யாததால், வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்க்கும் பொருட்டு, மனவளக்கலை மன்றத்தை அணுகியோ அல்லது தகுந்த ஆசிரியரைத் தேடியோ, அவரிடம் நேரில், மறுதீட்சை பெறுவது நல்லதுதான்.

தவம் எடுத்துக்கொண்ட எல்லோருமே, மறுதீட்சை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்களா? என்று எதிர்கேள்வி கேட்டு உதாசீனம் செய்தால், அதற்கான பலனை அனுபவிக்கவேண்டியது நீங்களேதான்!

மேலும், மறுதீட்சை என்பது கட்டாயமாக்கப்படவில்லை என்பதையும் இங்கே தெள்வுபடுத்திக் கொள்க. உங்கள் விருப்பத்தில் மறுதீட்சை பெற்றுக் கொள்வது சிறந்த வழி. எனவே அக்கறையின் வழியாகவே இதற்கான பதில் தரப்படுகிறது!

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில் என்ற இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!