October 2020 | CJ

October 2020

I am just standing in the dark



நானும்தான் இருட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். 

இன்று மாலை மணி 5.25 , என் வீட்டின் மூன்றாவது தள மாடிக்கு வந்து நடந்துகொண்டிருந்தேன்.  வீட்டிற்குள்ளேயே “எளிய முறை உடற்பயிற்சி” செய்வதால், நடைபயணத்திற்கு செல்வதில்லை. என்றேனும் சூரியனின் மறைவு காட்சியை காண்பதற்காகவே, மாடிக்கு செல்வதுண்டு.

பாதி சூரியன் அடிவான மேகத்தால் மறைந்தும், கொஞ்சம் வெளிக்காட்டியும், மஞ்சளும் ஆரஞ்சும் கலந்து அடிக்கும் அந்த வண்ணக் கலவைக்காகவே, கண் இமைக்காது பார்த்துக்கொண்டே இருக்கலாம். மாலை சூரியன், வேகமாக பூமிக்கடியில் புதைவது போல தோன்றுவது ஒருவகை மாயைதான். சூரியன் மறைந்துகொண்டிருக்கும் அதேவேளையில் எதிர் கிழக்குவானில் மேகக்கூட்டங்கள் அதே வண்ணக்கலவையை கடன் வாங்கி பூசிக்கொண்டு மிளிரும் காட்சி அற்புதமானது. 

வடமேற்கிலிருந்து மிகப்பெரிய அம்பின் நுனிவிளிம்பு மட்டும் பாய்ந்து வருவதுபோல பறவைகள் கூட்டம், ஒரு கருப்பு கோடுகளாக தெரிகிறது, அருகில் வர வர, ஒரே அடுக்காக, ஒவ்வொரு பறவைக்கும் இதுதான் இடைவெளி என்று வகுத்துக்கொண்டு அந்த அளவு மாறாமல், ஒரு கீச்சும் இல்லாமல் என் தலைக்குமேல் என்னை கடந்து செல்கிறது. 



பார்த்துக்கொண்டே வியக்கிறேன்.  இவைகள் எங்கிருந்தன, இப்போது எங்கு செல்கின்றன என யோசிக்கிறேன்.  அடுத்தடுத்து இப்படி நான்கு பறவைகூட்டங்களை கண்டேன். சில கூட்டங்களில் அந்த அம்புநுனி விளிம்புக்கு முன்பு வழிகாட்டியாக சில பறவைகள் முன்சென்றதையும் கவனித்தேன்.

எப்படியான வாழ்வு இவைகளுக்கு? எப்படியான சுதந்திரம் இவைகளுக்கு? காலையும் மாலையும் இப்படியான ஊர்வலம். மனிதர்களைப்போல இவைகளும் “தினம்” இருக்கிறது. நட்பு, காதல், ஒற்றுமை, ஒழுங்கு, அறிவு எல்லாம் இருக்கிறது. பறவைகளுக்கு ஐந்தறிவுதான், இருக்கலாம். ஆனால் மனிதன் அதினினும் சிற்றறிவாக இருக்கிறானே? 

இவைகளைப்போல ஒரு மனிதனால், ஒரு தனி மனிதாகக்கூட வாழ முடியாத மனிதசமுதாயம் நாம் பெற்றிருக்கிறோம். வாழ வழி இல்லையென்றால் செத்துப்போ என்று முடிவுசெய்கிற அல்லது தூற்றுகிற மனிதம் இங்கே?! 

தன் காலடித்தடத்தை வானில் பதிக்காத பறவையினங்கள், விதைக்கவும் தெரியாத, அறுவடையும் செய்யாத நிலையிலும், அவைகளுக்கான வாழ்வு இந்தபுவியில் இருக்கிறதே! ஓவ்வொரு உயிரினமும் தனக்கென இருக்கின்ற வாழ்வை வாழ்கின்றன. முக்கியமாக இயற்கையோடு தன்னை இணைத்துக் கொள்கின்றன. தனக்கு விதிக்கப்பட்டது எது என ஆராயும் அறிவு அவைகளுக்கு இல்லை என்றாலும், எதனோடும் எல்லை மீறுவதற்கு கூட தெரியாது. 

மனிதனுக்குத்தான் எத்தனை பிணக்குகள்?! தன்னோடும் பிறரோடும், இந்த உலக மக்களோடும், இத்தனைக்கும் மேலாக இந்த இயற்கையின் மீதும்?! ஏன்? ஏன் இப்படி சிக்கிக்கொண்டான்? கண்ணுக்குத்தெரியாத காப்புகளை தானே எடுத்து பூட்டிகொண்டான். எல்லாம் நிறைவாக இருக்கும் இந்த உலகில், ஏன் வறுமையும், செழுமையும் எதிரெதிராக? 

சூரியன் மறைந்தபிறகும் மேற்குவானம் சிவந்து, பின் நீலமும், கருநீலமுமாக இருள் படரத்துவங்குவது வரை பார்த்துக்கொண்டே இருக்கலாம். இதோ ஒரு நாள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது, நாட்காட்டியில் ஒரு தாள் கிழிக்கப்படும், நம் வாழ்வில் ஒரு நாள் கழிக்கப்படும். 

சிந்தித்துக்கொண்டிருக்கையில், என்மீதும் இருள்படர ஆரம்பித்தது. நானும்தான் இருட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். 

-----------------------

Thanks to image: My mobile photos

The path and ride on opposite directions




எதிரெதிர் திசைகளில் பாதையும் பயணமும்.

ஒரு படைப்பாளி தான் கற்றுத்தேர்ந்த திறமைய வெளிக்காட்டவும், அதன் மூலமாக தன்னை முன்னிறுத்தி, தன் பெயர் நிலைக்கவும், கலையின் தரம் உயர்த்தி, வகைப்படுத்தவும், பிறரையும் அதில் ஆர்வம் வரச்செய்யவும் நினைத்துத்தான் செயல்படுகிறான்.

கூடவே இந்தக்காலங்களின் பொருளாதார தேவைகளை முன்னிட்டு, தனக்காக என்றில்லாமல், பிறர் கேட்டுக்கொண்டபடி, அவர்களுக்கு தேவையான கலைப்பொருளை வடித்துக்கொடுத்து, தன் வயிற்றுப்பாட்டையும் சமப்படுத்திக்கொள்கிறான்.

ஆனாலும், இந்த படைப்பாளிகளில் ஓவியனுக்கு இருக்கிற மரியாதையும், மதிப்பும்; மக்களைச்சார்ந்து, அவர்களின் தேவை கேட்டு வழங்கும் ஓவியங்களில் இல்லை என்றே சொல்லலாம். சில விதிவிலக்காக, இவர்களில் நல்ல மக்களையும், அவர்கள் ஓவியத்தின் மேலும், ஓவியரின் மேலும் மதிப்பும், மரியாதையும் தருவதை எண்ணி வியந்திருக்கிறேன்.

தான் நினைத்ததை மட்டுமே தரும் படைப்பாளியாக, எழுத்தாளனும், சிற்பியும், மரபு ஓவியர்களும் இருக்கிறார்கள். இவர்கள் யாருக்காகவும் தன்னை, தன் படைப்பில் சமரசம் செய்துகொள்வதில்லை. இதுதான் என் படைப்பு, உனக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் எனக்கு குறையில்லை என்ற ரீதியில் இயங்குவார்கள். இவர்களில் சிலர், சமூகத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள பெரும்பாடு. சிலர் வறிய நிலையிலும் இருக்க காணலாம். 

இந்த பொருளாதார சமூகத்தில், படைப்புக்கான மதிப்பும், கிடைக்ககூடிய பணமும் ஒரு படைப்பாளி சமரசம் செய்துகொள்ளும் பொழுதுதான் கிடைக்கிறது என்பது சோகம். இந்நிலை மாறவேண்டும். 

படைப்பாளி, இந்த உலகை வழிநடத்தும் திறமைகொண்டவன். அவன் இந்த உலகை, சமூகத்தை, உங்களை, என்னை பதிவுசெய்கிறான். அடுத்த பரம்பரைக்கும், வருங்கால சமூகத்திற்கு செய்தியை எடுத்துச்செல்கிறான். புதிய சமுகமே, உங்களுக்கு முன் இருந்த சமூகம் இப்படி இருந்தது என்று வெளிக்காட்டுகிறான். அது பாடமாகவும், அறிவுரையாகவும், பெருமையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கமுடியும்.

ஒரு படைப்பாளி, இறந்தபிறகும், காலம் கடந்தபிறகும் போற்றப்படுவதுதான் அவனுக்கு கிடைத்த விதியாக இருக்கலாம். ஆனால் மன்னர்களும், புரவலர்களும், அரசுகளும் படைப்பாளிகளை போற்றிய காலங்கள் கடந்து, அவன் இந்த சமூகத்தை நோக்கி நகர்ந்துவந்துவிட்டான். இதனால், மக்களில் தேவையறிந்து, கேட்பதை தரும் நிலைக்கு சமரசம் செய்துகொண்டிருக்கிறான். 

அந்த படைப்பாளியையும், படைப்பையும், பணத்துக்கு நிகராக மதிப்பளிக்கும் வரை சரியானதுதான். ஆனால், அந்த பணத்திற்காக தன் இசைவுக்கு ஏற்ப வாலாட்டு என்று நினைப்பது தவறான நிலை. இதற்கு அந்த படைப்பாளியே ஒருகாரணமாகவும் அமைந்துவிடுவது சோகம்.

படைப்பாளி கிழக்கே போனால் இந்த சமூகம் மேற்கே போகிறது.  இரண்டுபேரும் சந்திக்கும் காலம்வரும். காத்திருப்போம்.

--------------------

Thanks to image: Kelli McClintock @kelli_mcclintock

 


Choice to be a tributary or a river


 



பெரும் நதியும் - கிளை ஆறும்
------------------------------------------------

எப்போதும் பெரும் நதி திரண்டு

கரை புரண்டு எல்லாம் தன்னோடு,

புரட்டி இழுத்து சென்றிடும் நில்லாது

அப்பெரும் நதியில் கிளை ஆறு. 

தானாய் கிளைவிட்டு மண்ணில் பாயும்

தேங்கும் படரும் செழிக்கச் செய்யும்

மண்ணையும் உயிரையும் தன் போக்கில்.

சித்தனும் புத்தனும் பித்தனும் அப்படியே

தேர்ந்து எடுப்பது நதியோ ஆறோ,

உன்கடனும் அப்படியே சென்று சேரும்,

மழையா மண்ணில் உரமா தேர்ந்துகொள்.


----------------

Images thanks to: Marc Zimmer @knipszimmer 

Rebuild the art business for our customer



என்னைப்பொறுத்தவரை இந்தியர்களுக்கு ஓவிய அறிவு கொஞ்சம் அதிகம் தான். எப்படியென்றால், ஒரு ஓவியருக்கே தெரியாத, அறியாத, கற்றுத்தேறாத ஓவிய அறிவு நம் இந்தியமக்களுக்கு உண்டு. அவ்வறிவை அந்த ஓவியருக்கே கற்றுத்தரவும் தயங்காத ஆற்றல் கொண்டவர்கள். 

இதனால்தான், ஒரு ஓவியராக இந்தியாவில் பிழைப்பை நடத்துவது பஞ்சப்பாடு தரும். இது என் அனுபவத்திலிருந்து தருகிறேன். ஒருவேளை இவர்களோடு எப்படி ஓவிய வியாபாரம் செய்வது என்று அறியாத ஓவியனாகக்கூட நான் இருந்திருக்கலாம். அதனால் இந்த, என்னுடைய கணிப்பில் தவறிருந்தால்  சக ஓவியர்கள் என்னை மன்னிக்கவும்.

கிட்டதட்ட பதிமூன்று ஆண்டுகளாக, ஓவியத்தை மட்டுமே தொழிலாக வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டியிருக்கிறேன். கொஞ்சம் அங்கங்கே பஞ்சர் ஆன இடங்களில் எனக்கு தெரிந்த பிற, Graphics design, web design and developing, sound and video editing என்றெல்லாம் அவதாரம் எடுத்து சரி செய்திருக்கிறேன்.

ஒரு விரலை சுட்டினால், மூன்றுவிரல் நம்மைத்தான் காட்டுமாமே?! அப்படி ஏதேனும் இந்த சமூகத்தை குறை சொன்னால் “நீ” சரி இல்லை என்பதுதான் இந்த சமூகத்தின் பதிலடி. இருக்கலாம். அதன் பாடத்தை அல்லது விளக்கத்தை கடந்த ஒரு வருடத்தில் படித்து தெளிந்தேன். என்னா அடி?! தவிலுக்கு இரண்டுபக்கமும் அடி என்பதுபோல.

வாங்கிய  ஓவிய வேலைகளில் ஒருவர் கூட மிச்சம் வைக்காமல், இதை திருத்து, அதை திருத்து, இது என் மூஞ்சி இல்லை, தாடையை குறை, கன்னத்தை குறை, முடியை இப்படி திருத்து?! என்றெல்லாம் எனக்கு ஓவியம் கற்றுக்கொடுத்தார்கள்

முக்கிய நிகழ்வாக ஒரு கஷ்டமர்,  அவர் கேட்ட மாதிரிபடம் போல வரைந்து கொடுத்த பிறகு, இது நான் இல்லை, ஏற்கனவே கொடுத்த என் போட்டொ பார்த்து வரைந்து தாருங்கள் என்றார். மறுபடி முதலிருந்து வரைந்து கொடுக்க, இந்த பெண் முகம் குண்டாக இருக்கிறது சரி செய்க என்றார். சரி செய்து கொடுக்க இரண்டாவது முறை ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய வேலை முடிந்தது.  அடுத்து எழுத்துக்கள் பதிக்கும் வேலை. ஒரு கொடிபோல போட்டு அதில் எழுத்து கேட்க அப்படியே வரைந்து கொடுத்தேன். எனக்கு இந்த கொடி வேணாம், வேறு வேண்டும் வேறு வண்ணத்திலும் வேண்டும் என்றார்.

நான் எதற்கடா வம்பு என்று ஒரு பத்து கொடி மாதிரிகளையும், பத்து வண்ணங்களையும் கொடுத்து எதுவேண்டும் என்று சொல்லுக என்றேன். அதற்கு அந்த கஷ்டமர், இப்படி கேட்ட எப்படி? அந்த படத்தில் வைத்து காமிக்கவும் என்றார். 

யப்பா சாமி, இதுக்காக, உங்க சாய்ஸ்க்காக 10 மாதிரி அனுப்பிவைக்கிற பழக்கம் என்கிட்ட இல்லை. எதுவேண்டுமென்று சொன்னால் அதை வைத்து முடித்து அனுப்புகிறேன் என்றேன். அதற்கு அவரிடம் பதிலில்லை. சரி என்று நானே ஒரு மாதிரிவடித்து அனுப்ப, எனக்கு பிடிக்கலை,  வேறே வேண்டும் இத்தனை ஓவியம் செய்யறீங்க, எது பெட்டர்னு நீங்கதானே தரனும்?! என்று அந்த கஷ்டமர் பதில்தர,

என் அனுபவத்தில் எது சரியாக இருக்கும் என்று கொடுத்தால்தான் நீங்க மாற்ற சொல்லுகிறீர்களே? இதெல்லாம் சரிபட்டுவராது, உங்களுகாக என் முழு நேரத்தையும், முழு வேலைலையும் செய்துகொண்டிருக்க முடியாது, என்ன வேணும் என்று சொன்னால்தான் கேட்பதை தரமுடியும். எல்லாமே புதிதாக வரைவது தான் எங்கள் வேலை. பழசை புதிதாக தரும் மாயம் எங்களுக்கு தெரியாது. உங்களுக்கு தேர்ந்தெடுக்க தெரியாவிட்டால், இத்தோடு நிறுத்திக்கொள்வோம். உங்களுக்கு பிடித்தவகையில் வேறு யாரிடமாவது ஓவியம் வாங்கிக்கொள்க என்று சொன்னேன். நான் சொன்னதை புரிந்துகொள்ளும் நிலையில் அந்த கஷ்டமர் இல்லை. அவர் கொடுத்து சிறு அட்வான்சோடு நிறுத்திவிட்டேன். எனக்குத்தான் 5 நாள் ஓவியவேலை கெட்டது. அந்த ஓவியம் அந்த கஷ்டமரின் விருப்பம் என்பதால் வேறு யாருக்கும் மாற்றித்தரவும் முடியாது.

காசை வாங்கி ஓவியம் தருவதாலும், கஷ்டமர் நமக்கு கடவுள் (மகாத்மா காந்தி சொன்னது) என்பதாலும், கொஞ்சம் கூட கோபமே என்வார்த்தைகளில் வராத வகையில் மிக மிக அமைதியாகவேதான் பதில் கொடுப்பேன். ஆனாலும் அந்த வார்த்தைகளுக்கு அவர்களின் பதிலடி பலமாகவே இருக்கும். தரையோடு படுத்து காலை ஏதாவது செய்வதற்கு, கைகொடுத்து நட்பாக விலகிவிடலாமே?! ஆனாலும் சிலரை திருப்தி படுத்த இறையாலும் முடியாது.

இப்படியான கொடுமையான நிகழ்வில், கரோனா தொற்று நோயும் கலந்துகொள்ள, என் ஓவியவேலைகளும் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டன. சரி, இந்த இடைவெளியும் நல்லதுதான், என்னை ஆற்றுப்படுத்தும் என்றெண்ணி, சிலர் அப்படியும் கேட்ட ஓவியங்களை, வாங்குவதில்லை என்று சொல்லிவிட்டேன். என் வாட்ஸப்பில், இந்த ஓவியர் புது ஓவிய வேலைகளை வாங்குவதில்லை என்றும் ஸ்டேடஸ் போட்டுவிட்டிருந்தேன்.

வழக்கமாக எனக்கு பிடித்த வேலைகளிலும், பொழுதுபோக்குகளிலும் நேரம் கழிந்தன. இதற்கிடையில் நான், இனிமேலும் இப்படி ஓவியம் வரைந்துதான் பிழைக்கனுமா? என்று அகத்தாய்வு செய்ய ஆரம்பித்துவிட்டேன். 

மேலும் இந்த எல்லாம் தெரிந்த, ஓவியரைவிடவும், ஓவிய அறிவுகொண்ட இந்திய மக்களை சும்மா விடலாமா? வேலை தருகிறார்களோ இல்லையோ ஒரு ஓவியரையும், ஓவியத்தையும் மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டாமா? சிந்தித்தேன்.

அதன் விளைவுதான் என் புதிய “caricaturelives website" அவதாரம். இனி உங்க போக்குக்கு நான் இல்லை. 

1) இதுதான் ஓவியம், நீயே தேர்ந்தெடுத்து தரும் உன் போட்டோ கொண்டு அதன் மாதிரியாக - கவனிக்கவும், அதன் மாதிரியாக ஓவியம் கிடைக்கும்

2) திருத்தங்களுக்கு இடமில்லை

3) தலைப்புக்கு, வாக்கியத்துக்கு இடமுண்டு

4) எழுத்துப்பிழை திருத்தம் உண்டு, எழுத்து மாற்றமில்லை (போட்டது போட்டதுதான்)

5) இதைச்சேர், அதைச்சேர் என்று சேர்க்கும் பொருளுக்கெல்லாம் இடமில்லை

6) இந்த குதிரை சவாரி, மாட்டுவண்டி சவாரி, பைக், கார், பிளேன் சவாரி எல்லாம் கிடையாது

7) விலை திருத்தம் கிடையாது

8) ஒரு ஓவியத்திற்கு 14 நாள் ( இருவாரம்) ஆகும்

 9)பின்புலம் வெள்ளை வண்ணம்தான். 

10) இந்த சும்மா Soft copies கிடையாது, ஒரே விலை ஒரே High resolution soft copies any format (without layers)

என்று மாற்றங்களை, கடந்த அக்டோபர் 10 முதல் கொண்டுவந்துவிட்டேன்.  இனி தொடங்கும் வேலைகளுக்கு காத்திருக்கிறேன். Coustmer ஆ கஷ்டமாரா என்று பார்த்துவிடவேண்டியதுதான்.


இவண்

சுகுமார்ஜி


    

Pattaiya Bharati Mani


 பாரதி மணி...



மணி என்பது பெயராகவும், பாரதி என்பது துணைப்பெயராகவும் இருக்கிறது என்பதை யோசித்துக்கொண்டேன்... ஓவியர் ஜீவாநந்தன் தன் நிலை தகவல்களிலும், பிறரது தகவல்களிலும் தனக்கே உரிய பொருத்தமான கேலியில் அந்த தகவலை மேலும் சுவாரசியமாக்குவார். அப்படியாகவே பாரதி மணி அவர்களின், அதற்கு பதிலடியையும், பிறகு அவரின் மண்வாசம் மிகுந்த மனவெளிப்பாடுகளையும் நான் படித்துக்கொண்டு வந்தேன்.


பொதுவாகவே தன்னை, தன் அறிவை, வளர்ச்சியை, அனுபவத்தை, ஆற்றலை, பலமின்மையை, தாழ்ச்சியை, மதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே இந்த உலகில் தன் வாழ்நாளில் அலை இல்லாத குளமாக (கடலாக) இருக்கமுடியும். பாரதி மணி அப்படி ஒருவாராக இருப்பார் என்பதை நான் நம்புகிறேன்.

பாரதி மணி என்பவர்தான் பாபாவில் முதலமைச்சராக வருவார் என்பது அப்பொழுதான் தெரியும். இல்லையென்றார் “யார்ரா இவரு?” என்பதாகவே இருந்திருக்கும். பிறகு விசயமறிந்தால் கப்பல் வியாபாரியாக இருந்திருக்கிறார், நீதிபதியாக இருந்திருக்கிறார்... இன்னும் பலபல...

பாரதி மணி அய்யா, சார் என்று சொன்னால் ஒரு அன்னிய பாவம் வரும் :) ஆனால் பாட்டையா என்று பாசத்தோடு அழைக்கின்றனர்... எனக்கோ பாட்டையா என்றால் ரொம்ப வயாதானவரோ என்ற எண்ணம் உருவாவதினால் அய்யா போதுமானது. நிலைத்தகவல் மூலமாக அவரைப்பற்றிய ஒரு முழு வடிவம் அவரின் சினேகிதத்தை உருவாக்கியது. நான் அவரின் நண்பரானேன். என்னுடைய சில நிலைத்தவகலுக்கும் அவர் அவருடைய பாணியிலேயே பதில் தந்திருக்கிறார். ஒரு புதியவரோடு குரலால் பேசினால் அதில் தொணிக்கும் குரல் உச்ச, கீழ் ஸ்தாயி எதிராளியையும், நம்மையும் புடம்போட்டு காட்டிவிடும்...பின்னர் விவகாரத்தையும் ஏற்படுத்தும்... நேரில் பார்ப்பதோ ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி தள்ளிவைக்கும்... ஆனால் முகம் காணாது எழுத்துக்களால் பேசிக்கொள்ளும்பொழுது நம் மனம்தான் பேசிக்கொள்ளும். நம் அனுபவமே எதிராளுக்காக வடிவம் எடுத்து தானே உருமாறிக்கொள்ளும். அப்படி பாரதி மணி எனக்குள் ஒரு வடிவத்தை ஏற்படுத்தியிருந்தார்...

நிஜமாகவே பாரதி மணி எழுத்தாளரா, நாடக நடிகரா, கட்டுரையாளரா எனபதாக அவரைப்பற்றி எனக்கு வேறெந்த விசயமும் எனக்கு தெரியாது. ஆனால் அவரின் வார்த்தைகள் அந்த நுணுக்கங்களை கொண்டிருந்தன... தமிழோடு வார்த்தைகளால் விளையாடுவது எனக்கு வரும் என்பதால்... அதை யார் செய்தாலும்,அது எனக்கு பிடிக்கும்... பாரதி மணி அய்யாவையும் அப்படி பிடித்திருந்தது... வழக்கமாக என் நண்பர் குழாமுக்கு அவர்களின் பிறந்தாநாளின் அன்று என் பாணியில் ஒரு கேலி சித்திரம் தருவது உண்டு. பாரதி மணி அய்யாவுக்கு தனியாக ஒரு பரிசாக தருவது என்று முடிவெடுத்து அவரின் ஒளிப்படம் ஒன்றை சேகரித்து, அவருக்கே தெரியாமல் அதை வரைந்துமுடித்து என் பக்கத்தில் வெளியிட்டேன்...

கடவுளின், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தால் யாரை வரைந்தாலும் அதில் அவர்களின் முகபாவனையை அப்படியே கொண்டுவரும் தகைமை எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன்... அந்தவகையாகவே பாரதி மணி அவர்களின் ஓவியம் அவராலேயே மிகச்சிறப்பாக பாராட்டப்பட்டது... அந்த ஓவியத்தின் பக்கத்திலேயே மிக அருமையான கலந்துரையாடலும் நடைபெற்றது...

அந்த ஓவியத்தை அவரின் பிறந்தநாளுக்கே பயன்படுத்திக்கொண்டேன்... ஒரு சில நாட்களுக்கு பிறகு ஒரு நன்றியுரை எனக்கு கிடைத்தது.

---
அன்புள்ள சுகுமார்ஜி: என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என் பிறந்தநாளுக்கு யாரும் தரமுடியாத ஒரு பரிசை தந்திருக்கிறீர்கள். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போனது.

என் மனமார்ந்த நன்றி....God bless you!

பாரதி மணி
---
அதற்கு பிறகு என்னையும் அவர் புரிந்துகொண்டிருப்பார் (!?) என்ற நம்பிக்கையில் அவரின் தவலுக்கு நானும் என்பாணியில் கேலியோடு கூடிய பதில்கள் தர ஆரம்பித்தேன். கொஞ்சம் ஒட்டி வந்துட்டோம் அல்லவா... அதான் :)

சென்னை பலநாட்கள் போய்வரும் வேலை எனக்கிருப்பதால் வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கிறேன் அய்யா என்றுதான் சொல்லியிருந்தேன். நான் அதிகபட்சமாக ஒருநாளுக்கு மேல் சென்னையில் தங்குவதுமில்லை. சென்றமாதத்தில் ஓவியர் ஜீவாநந்தன் அவரை சந்திந்த வேளை நானும் சென்னையில் வேறு ஒரு அலுவலில் இருந்ததால் பார்க்க இயவில்லை. நான் இருப்பது தெரிந்து “நீங்களும் வந்திருக்கலாமே சுகுமார்” என்றார்...

என்பெயரில் சுகுமார்ஜி என்பதில் சுகுமார்தான் என்பெயர் ஜி என் தந்தையின் ஆங்கிலமுதல் எழுத்து... ஆனால் ஜி ஹிந்தி ஜியை தோற்றுவிக்கும்... பிரான்ஸ் நாட்டில் இருக்கும் தமிழ் ஆர்வலர் சாமிநாதன் (சாம் விசய்)
“நான் சுகுமார்னுதான் கூப்பிடுவேன்... ஜிலாம் சொல்லமாட்டேன்” என்றார்...
“அய்யா அந்த விளக்கமே வேண்டாம்... உங்களுக்கு எப்படி பிரியமோ அப்படி கூப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டேன்...

அதேபோல நண்பர் வட்டாரத்தில் “சுகு”  மட்டும்தான்... நிலைத்தகவலில் இதை தெரிவித்தவுடன் பாரதி மணி அய்யாவும் சுகு என்றே அழைக்க ஆரம்பித்தார்.

நேற்று (07-01-2013) காலை தாம்பரத்திலிருந்து பாரதி மணி அய்யாவை கைபேசியில் அழைத்தேன்...
என்னை நான் அறிமுகபடுத்திக்கொண்டதும் மகிழ்ந்தார்... ஆனால் “கடவுள் வந்திருந்தார்” சுஜாதாவின் நாடக பயிலரங்குக்கு செல்லவிருப்பதால் நீங்கள் நாளை காலை வாருங்களேன் என்றார். எனக்கும் (!?) நாளை நேரமிருப்பதால் சரி அய்யா என்றேன்.
“நீங்க இருந்து கண்டிப்பா நாளைக்கு பார்த்துட்டுத்தான் போவனும்” என்றார்.

செவ்வாய்கிழமை காலை எழு மணிக்கு மீண்டும் அழைத்தேன். வணக்கத்திற்குப்பின் உங்கள் இல்ல முகவரியை எனக்கு அனுப்பிவையுங்கள் என்றேன். குறுஞ்செய்தி வந்த சில நிமிடங்களில் வடபழனி பேருந்தில் ஏறிவிட்டேன். அங்கேயிருந்து சாலிகிராமம் கடைசி நிறுத்தம் என்பதை அறியாமல், வேறு ஒரு பேருந்தில் சாயி நகர் இறங்கி மூன்றாவது பிரதான சாலை சென்று ஒரு முட்டுச்சந்தில் (!? - அவரே சொன்னது) இருந்த தங்க (முட்டையிடும்)குடிலை அடைந்து வாசலில் நிற்க...
கைபேசியில் அழைத்தார்... எங்கிருக்கீங்க சுகுமார்?
உங்க வாசலில்...
ஓ... வந்தாச்சா... இந்தாவாரேன்...

கதவு திறந்த அந்த மனிதரை பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமான ஒருவராகவே அவரைக்கண்டாலும், வணக்கம் செலுத்தி உள்ளே நுழைந்தேன்... என் தோளில் கைபோட்டு தன் அன்பை வெளிக்காட்டி தன் அறைக்கு அழைத்துச்சென்றார்...

அமர்ந்ததும் நான் ஆரம்பித்தேன்...
ரொம்பநாளைக்குப்பிறகு என்னை “டேய் சுகுமாரா”ன்னு சொன்னது நீங்கதான் அய்யா என்றேன்.
“ஹே” என்பதாக பாவனை காட்டி சிரித்தார்...
“என்னை அப்படி என் தந்தைமட்டுமே அழைப்பார், நீங்க அப்படி அழைத்தது எனக்கும் சந்தோசமாக் இருந்தது” என்றேன்...

இந்த “டேய் சுகுமாரா” ஒரு பிளாஷ் பேக்...
பாரதிமணி அய்யா தகவல் தந்திருந்தார்...

---

Bharati Mani ஐயோ.....ஹரன்! நானா?.......எனக்கு கோணல் இல்லாமல் ஒரு நேர்கோடு போடத்தெரியாது! இது ஓவியர் ரஷ்மி வரைந்தது! எனக்கு பார்த்து ரசிக்க மட்டும் தான் தெரியும்!

Caricaturist Sugumarje Bharati Mani Sir... ஒரு படம் வரைந்துதான் பாருங்களேன்!

Bharati Mani சுகு! சில விஷயங்கள் எனக்கு வராதென்ற பிடிவாதமான நம்பிக்கை எனக்குண்டு. காதல் வயப்பட்டபோதே ஒரு கவிதை நான் எழுதியதில்லை. பள்ளிக்கூடத்தில் ட்ராயிங் கிளாசுக்கு மட்டம்.......காரணம் எனக்கு வரையத்தெரியாது! சமீபகாலம் வரையிலும் எழுத்து எனக்கு வராதென்பதை பிடிவாதமாக நம்பினேன்.......இப்போதும் நம்புகிறேன்!

Caricaturist Sugumarje இருக்கலாம்... ஆனால் உங்கள் எழுத்துக்களை தொகுத்தால் அருமையான புத்தகமாக உருவெடுக்கும்... (பிச்சி, பிச்சி எழுதுவதால் அதன் முழுவடிவம் கிடைக்காதிருக்கிறது என்று நினைக்கிறேன்)

Bharati Mani அடேய்......சுகுமாரா! என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்? நான் One Book wonder! என்பது உனக்குத்தெரியாதா? இரண்டாம் புத்தகம் எழுதி வாசகர்களை துன்புறுத்தமாட்டேனென்று சபதம் வேறு செய்திருக்கிறேன்! தண்டனையாக என் ஒரே புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ தொகுப்பை ஒரே மூச்சில் படிக்கக்கடவது!

Caricaturist Sugumarje ஏற்கனவே ஒரு சபதம் போனமாதம் சொன்னீர்கள்... (முதல்வராக மாட்டேன் என்று) இப்பொழுது இன்னொன்று... நீங்கள் புத்தகம் போடவேண்டாம்... நாங்கள் தொகுத்துக்கொண்டாலே ஆயிற்று

Caricaturist Sugumarje புத்தகம் படிப்பது தண்டனையல்ல... அது ஒரு ஆத்மாவோடு வாழ்வது

Bharati Mani அடாடா! மெச்சினோம்! எம் வீட்டுக்கு வந்தால், எனது புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ ஒரு பிரதி இலவசமாகக் கொடுக்கப்படும் என்பதை இந்த நல்ல நேரத்தில் அறிவித்துகொல்கிறோம்!

Caricaturist Sugumarje கொடைக்கு நன்றி அய்யா!

---
ஆக நேற்று காலை ஒருமணிநேரத்திற்கும் மேலாக அவரோடு முடிவே இல்லாது கலந்து பேசிக்கொண்டிருந்தாலும் என் மதிய ஊர்திரும்பும் எண்ணம் அப்போதைக்கு முடித்துவைத்தது... இன்னும் நிறைய அவரோடு பேச விசயங்களும், நேரமும் காத்திருக்கின்றன...

வரும்பொழுது அவரின் வார்த்தைபடியே தண்டனையாக (பரிசாக) புத்தகமும் வாங்கியாயிற்று... இனி ஒரே மூச்சில் படிக்கனும்... தண்டனையின் அடுத்த சாராம்சம் அதானே :)

இதற்கு துணை நின்ற முகநூலுக்கு நன்றி!

பாட்டையா பாரதி மணி அவர்களின் Facebook ID