The Game Changer
வணக்கம் அன்பர்களே.
கடந்த 2023 ஆண்டு ஜூலை மாதம் முதலாகவே, @வேதாத்திரியா (@Vethathiriya) எனும் YouTube வழியாக தரக்கூடிய பதிவுகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதை அறிவீர்கள். என்னுடைய இருப்பிட இடமாறுதல், வேலை மாற்றம், உடல்நிலை, குடும்பத்தினர் உடல்நிலை என பல்வேறு சோதனை காலமாக ஆரம்பமானது. தெளிவாக சொன்னால், கரோனா நோய்த்தொற்றுக்கு முன்பான சூழலே, வழக்கமான வேலைகளை குறைத்துவிட்டது. அந்த வகையில், கடந்த ஆறு ஆண்டுகளாகவே, அருள்துறையில் அதிசயதக்க உயர்வுகளை அடைந்தாலும் கூட, பொருள்துறையில் பெரும் தடுமாற்றத்தை பெற்றேன். முக்கியமான காரணம், கடந்த இருபது ஆண்டுகளாக, தனி நபராக, சுயசார்பாக இயங்கியதுதான். தனிப்பட்ட எந்த நிறுவனத்தையோ, எந்த நபரையோ சார்ந்து நான் இயங்கியதில்லை. இதனால், கரோனா நோய்தொற்று காலம், வேலைகள் இல்லாது, பொருளாதாரத்தில் வீழ்ச்சி. தடுமாற்றம். சிக்கல்கள் ஏற்பட்டு சமாளிக்க முடியாத திண்டாட்டம் ஆகிவிட்டது.
‘எனினும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்பதை தெரிந்து கொண்டிருந்ததாலும், பல்வேறு மாற்றங்களை தந்து, நமக்கு பாடம் நடத்தும் இறையின், இயற்கையின் நீதி அறிந்ததாலும், ‘நடப்பது நடக்கட்டும் எனினும் நான் என் முயற்சிகளில் தயங்கி நின்றிடமாட்டேன்’ என்ற உறுதியில், என்னால் முடிந்ததை, சரியான வழியிலே செயல்பட்டுக்கொண்டே இருந்தேன். வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை ஒன்றை அவ்வப்பொழுது நான் நினைவில் கொண்டுவருவேன்.
-
இயற்கை என்னும் பேராட்டக்காரனுக்கு
எல்லோருமே ஆட்டக்காய்கள், பெயர்த்து
இடமாற்றி வைப்பான், பிய்த்தெறிவான்,
அருள்வான். குறையென்று சொல்லுவதற்கு
பிறந்தோர் உலகில் யாருளர்!
-
இந்த கவிதையின் உண்மை அறிந்தோர், எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று மனம்வருந்த முடியாது. எதனால்? என்ன காரணம்? என்று நம்முடைய குறை அறிவுக்கும் விளங்கிடாது. ஆனால் எங்கோ தவறு இழைத்திருக்கிறோம். அதனால், இதை, இந்த சூழலை, அதற்கான திருத்தமாக ஏற்றுக்கொள்வோம் என்ற முழுமையான முடிவுக்கு வந்து நிற்பதற்கு தயாராகிவிடுவோம். அதுதான் எனக்கும் நிகழ்ந்தது. இதில், மறுபடியும் எழமுடியுமா? என்ற கேள்விகூட எழலாம். ஆனால், மனிதன் தாங்கமுடிகிற துன்பத்தைத்தான் ‘இந்த இயற்கை நீதி’ வழங்குகிறது என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது நமக்கான திருத்தம் என்பதை ஆழமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனக்குப்போய் இப்படியா? என்று தனை வருத்தம் செய்துகொண்டால், யாராலும் உங்களை தேற்றிட முடியாது. நடப்பது எனது தவறுகளுக்கான திருத்தம், தண்டனை என்று ஏற்றுக்கொள்ளலாம். அந்த நிலைக்கு மனம் தெளிவு வரவேண்டும் என்பதும் முக்கியம். இல்லையானால், உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட சில முயற்சிப்பார்கள்.
எனக்கான சூழலில், அதை சரி செய்திட குடும்பத்தினரும், நண்பர்களும் உதவினர். அதன்வழியாக சில சிக்கல்களை கடந்து வந்தேன். எனினும் வேலை தாமதமாகவே அமைந்தது. முழுமையாக, என்னையே மாற்றி அமைக்கும்படி, என் அடையாளத்தையும் மாற்றும்படி வேலை அமைந்தது. என்றாலும், நிறைவான வேலைதான். சொந்தமான தொழில் என்ற நிலை கடந்துவிட்டது. எனினும் இதுவும் ‘இதுவும் நீதிக்காகவே’ என்று ஏற்றுக்கொண்டேன். இன்றுவரை பயணிக்கிறேன், இனிமேலும் அதிலே பயணிப்பேன். எனக்கு அல்லது எனக்குள் எந்த குறையும் இல்லை.
வேதாத்திரியத்தில் விளக்கம் பெற்ற பிறகுமட்டுமல்ல, அதற்கு முன்பாகவேகூட என் தேவைகள் மிகக்குறைவு. எந்த திட்டமும், முனைப்பும், முயற்சியும் கொண்டவனில்லை. இருப்பது போதும், இதில் குறைவின்றி இருந்தாலே நிறைவுதான் என்ற மன நிலை எப்போதும் உண்டு. இது என் குடும்பத்தின் வழியாக எனக்கு கிடைத்திருக்கும் நற்பண்பு என்றுதான் சொல்லுவேன். பெயருக்கும், புகழுக்கும், பெருமைக்கும் என்றும் ஆசையும், அதற்கான திட்டமும், குறுக்குவழிகளும் என்றுமே இருந்ததில்லை. என்னுடைய இருபதாண்டு ஓவிய வேலைகளிலேயே அது நிறைவும் பெற்றுவிட்டேன். ஆனால், நான் வேதாத்திரியா வழியாக எதைச் சொன்னாலும், நான் ஏதோ காசுக்கு ஆசைப்பட்டு செயல்படுவதாகவே சில அன்பர்கள் பின்னூட்டம் தந்ததை அறிவேன். அது அப்படித்தான் நிகழும் என்று எனக்குத் தெரியும். ஆனால், இத்தகைய அன்பர்களின் பின்னூட்டம், மற்ற அன்பர்களையும், ஆர்வத்தையும், உயர்வையும் திசை திருப்பிவிடும், நான் ஒன்று சொல்ல, அவர்கள் அதற்கு ஒரு பின்னூட்டம் இட, இப்படி நீண்டுகொண்டே இருக்கும் என்பதன் காரணமாகவே பின்னூட்டம் தடையும் செய்யப்பட்டது.
இப்படியாக, ஆறுமாதங்களாக இரு புதிய பதிவுகள் மட்டுமே என்னால் தரமுடிந்தது. இதற்காக அன்பர்கள் என்னை பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். என்றாலும், எழுத்துப்பதிவுகளும், வேதாத்திரிய கேள்வி பதில்களும் தொடர்கின்றன. அருள்தந்தை, மகான், வேதாத்திரி மகரிஷி தந்த, உங்களுக்கான விளக்கங்களை, என்வழியாக, என்னுடைய புரிதல் கொண்டு, இன்னும் எளிமையாக தந்திருக்கிறேன் என்பது உண்மை. புதிய பதிவுகள் இல்லாத இந்த நிலையிலும், மிக சிறப்பான பார்வைகள் வந்துகொண்டிருப்பதை YouTube தருகிற மாத அறிக்கை சொல்லுகிறது. அன்பர்களாகிய உங்களுக்கு நன்றி, வாழ்த்துகள்.
உலகமெங்கும், எண்ணற்ற வேதாத்திரியர்கள் தம் மக்களுக்கான பகிர்தலை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்த பதிவுகளை தந்திருக்கிறேன். இன்னும் தருவேன்.
ஒவ்வொரு நொடியும் பல்வேறு சூழல் வழியாகவும், பிறர்மூலமாகவும், எண்ணங்களாலும் வழிநடத்தும் இறையாற்றலுக்கு என்னுடைய வணக்கங்கள், அந்த இறையை உணரத்தந்த மகான் குரு வேதாத்திரி மகரிஷிக்கும் வணக்கங்கள். அன்பர்களாகிய நீங்கள் அனைவரும், இறையாற்றலின் கருணையினால், உடல்நலம், நீள் ஆயுள் நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன்.
