No more Answers
விடையில்லா சந்தேகங்கள்
மாம்பழத்தின் கண்ணப்பகுதிகளை வெட்டிய மாத்திரத்தில் இது வண்டு விழுந்த பழம் என்று தெரிந்துகொண்டேன். மாங்கொட்டையை சுற்றியுள்ள சதைகளை நறுக்கி எடுத்துவிட்டு, அதை தட்டிய வேளையில் உள்ளிருந்து வண்டு வெளியேவந்துவிட்டது.
வண்டை பார்த்ததும் எனக்குள் நான் சிறுவனானேன்... மாம்பழம் நறுக்கி, வண்டை தட்டி வெளியேற்றி எனக்கு தந்தபிறகும் பயந்துகொண்டே கொட்டையை சப்பிப்போட்ட நினைவு வந்தது... ”ஒரு கொட்டையில் ஒரு வண்டுதான் இருக்கும்டா, பயப்படாம சாப்பிடு” என் அத்தை விளக்கினார். அதெப்படி என்று தெரியவில்லை...
“அடடா, அது பறந்து வீட்டிலேயே இருந்துட போகுது, தூக்கி வெளியே போடுங்க” என்றார் என் மனைவி.
“உள்ளே இருந்ததை வெளியே வரவழைத்ததே பாவம், இதை எப்படி வெளியே விடுவது...” சொல்லிக்கொண்டே அந்த வண்டை ஒரு ஓவியம் வரையாத காகிதத்தில் எடுத்து வாசல் கதவை திறந்து, மதில் சுவருக்கு வெளியே விட்டுவிட்டேன்.
வண்டு விழுந்தபழம் ருசிக்கும் என்பதற்கு மாறாக ஒரு சுவையும் இன்றி புதுச்சுவையாக இருந்தது... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது...
இந்த வண்டு இனி என்ன செய்யும், இன்னொரு மாம்பழத்தை தேடுமோ? ஒரு கொட்டையின் உள்ளே, வெளிச்சம் நுழையாத இருட்டிலே இத்தனைகாலம் இருந்ததே, இனி என்ன செய்யுமோ? இதுவரை இது தன் உணவுக்கு கொட்டையின் உள்பகுதியையும், அதன் வழியே வந்த சாறுகளையும் தின்றிருக்கும். இனி அதற்கான உணவாக என்ன தேடும்? அதற்கு இந்த புதிய சூழல் ஏற்றுக்கொள்ளுமா என்ன?
இந்த வண்டு இருக்கும் பழம் எங்கே முளைத்ததோ, பிடுங்கி எங்கே விற்கப்பட்டதோ, அதை நான் எனக்காக வாங்கி, நறுக்கி, அந்த வண்டுக்குரிய வாழ்க்கை சக்கரத்தை திசை திருப்பிவிட்டோனோ? ஒருவேளை வாங்காமலிருந்தால் இந்த வண்டு இன்னேரம் எப்போதும் போல இருந்திருக்குமே?
ஒருவேளை இதன் விடுதலைக்கு நான் ஒரு காரணியா என்ன? என் மூலமாக அது தன் இருட்டு வாழ்விலிருந்து, வெளிச்சத்திறகு வரவேண்டும் என்பதா? அந்த விடுதலை, வண்டுக்கான மறு வாழ்வா, இல்லை அது இனி சாகுமா?
இப்படி கேள்விகள் மேல் கேள்வியா கேட்டுக்கொண்டே, அதை இந்தவலையிலும் எழுதிவிட்டேன்...
வாழ்க்கை சுவாரஸ்யம் மிகுந்த பதில் தெரியாத கேள்விகளை உள்ளடக்கியது... இந்தவண்டாக நான், என்னைக்கூட உதாரணமாகக் கொள்ள முடிகிறது...
தொடர்வேன்...