September 2017 | CJ

September 2017

You are kicked


அடிமேல் அடி :D

ஆரம்பகாலங்களிலேயே, மற்ற எந்த கேரிகேச்சர் ஓவியரும் தராத தரத்தில் நான் தருவதை அறிந்துகொண்டதால், இதுதான் என் ஓவியத்தின் விலை என்ற நிலையில் கொடுத்தேன். ஆனால் நிறைய  வாடிக்கையாளார்கள் கேட்டுக்கொண்டபடி, ஒரு குறிப்பிட்ட விலை வைத்து, அதிகம் பாதிப்படையாமல், அவர்களாகவே விரும்பியும் தரும் வகையில், இதுவரை என் ஓவியங்களை கொடுத்துவந்தேன்.

முன் பணம் கூட வாங்காமல், ஆரம்பித்து முடித்து தரும்போது, இது எனக்கு பிடிக்கலை என்ற ஒரே சொல்லில் என் உழைப்பை உதாசீனப்படுத்தியதால், முன்பணம் கொடுத்தால் மட்டுமே இனி வேலை ஆரம்பிக்கப்படும் என்று மாற்றிக்கொண்டேன். ஆனால் நண்பர்களுக்கும், அவர்களின் அறிமுகத்துக்கும் கொஞ்சம் சலுகை கொடுக்கப்பட்டது. ஆனாலும் காலப்போக்கில் முன்பணம் முக்கியம் என்பதை அவர்களுக்கு புரியவைத்து, முடித்துக்கொடுத்தவுடன் மீதம் பெற்றுக்கொள்வது தொடர்ந்தது.

முக்கியமாக என் ஓவியவேலைகளில், முதல் நிலையில் கோட்டுவோவியம் அனுப்பி, குறைகளை கேட்டு திருத்தி, மறுபடியும் எத்தனை திருத்தம் வேண்டுமோ அத்தனை வாய்ப்புக்களையும் தந்து, பிறகுதான் வண்ண நிலைக்கு வருவேன். அப்போதும், வண்ணத்தை மாற்றுதல், பின்னணி அமைப்பு, பொருள் மாற்றியும் தருவேன், எந்த முகசுழிப்புமில்லாது.

என் நண்பர்கள் யாருமே இந்த திருத்தம் தருவதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஓவியம் என்பது ஒருமுறை என்பதான படைப்பு, இதில் நெளிவு, சுழிவு, திருத்தத்திற்கு இடமே இல்லை என்றே கூறிவந்தனர். நான் அவர்களிடம் சொல்லுவேன்... ஒருவர் இதற்காக பணம் செலுத்துகிறார். ஆகவே தான்  விரும்பியதை அவர் கேட்கிறார், அவருக்கான ஓவியம், வியாபாரமாக்குகிறேன் என்பதால், திருத்தம் ஏற்றுக்கொள்வதில் பிழை இல்லை என்றே சொல்லிவந்தேன்.

இந்த ஓவியங்களில், வாங்குபவர்களுக்கே தெரியாத, கவனிக்கமுடியாத சிறப்புக்களை தருவேன். ஒரு ஓவியம் போல இன்னொன்று இல்லாதவகையில், என் கையொப்பமில்லாமல், நானே உரிமை கொண்டாடி என் தளத்தில், பிற தளத்தில் பகிர்ந்துகொள்ளாமல், எந்த வடிவ கோப்பாகவும் தருவேன்.

கடந்தமாதம் instagram ல் என் தனிபட்ட பொழுதுபோக்கு ஓவியங்களை பார்த்து நிறையமக்கள் என்னிடம் ஓவியம் கேட்டனர், அதற்கான விலை கேட்டு தயங்கினர். சரி, இவர்களுக்காக தரம் குறைக்காமல், கோப்பின் அளவை குறைத்து தரலாமே என்று ஐந்து விதமான விலைப்பட்டியல் தயாரித்து அதன்படி ஓவியம் செய்துதர எண்ணினேன். ஏதோ ஒரு சில வேலைகள் கிடைத்தன.

ஆனால் பெரும்பான்மையோர், ஓவியம், ஓவியன் அவனின் உழைப்பு இப்படி எந்த அறிவுமே இல்லாமல், காசு கொடுக்கிறேன் பேர்வழி என்று, எனக்கு ஓவியபாடமே எடுக்குமளவுக்கு, என் பொறுமையை சோதித்துவிட்டனர்.  அதோடு தினமும், காலையும் மாலையும் அழைத்து என்னவாயிற்று? இதை அப்படி போடுங்க, இதை இப்படி போட்டுங்க என்று திருத்தங்கள்...

கேட்கும் எல்லா திருத்தம் செய்து கொடுத்தும், இன்னும் திருத்தம் வேண்டும் என்ற மன நிலையிலேயே இருந்து, கொடுத்த முன் பணத்தோடு, இதுவரை திருத்தங்கள் செய்ததற்கு நன்றி, எனக்கு இந்த ஓவியம் தேவையில்லை என்றும், இதை வாங்கி நான் என் திருமண அழைப்பிதழில் இடும் காலம் கடந்துவிட்டது வேண்டாம் என்றும் தவிர்த்துவிட்டனர்.  எனக்கோ என் உழைப்பும், ஓவியமும் வீணான நிலை. உடல் சோர்வும், மனச்சோர்வும், கண் எரிச்சலுமே மிச்சம். ஆனால் சில ஓவிய பாடத்தோடு இப்படியான மனிதர்களின் குணாதிசங்களை அறிந்துகொண்ட திருப்தி

முக்கியமாக ஓவியம், அது தொடர்பான அறிவு, ஓவியன், அவனின் படைப்பு சுதந்திரம், அவனின் உழைப்பு இப்படி அந்த விபரங்களுமே அறியாதிருக்கிறார்கள். ஒளிப்படம் என்பது வேறு, ஓவியம் என்பது வேறு என்ற வித்தியாசம் தெரிவதில்லை, என் முகம் மாதிரி இல்லை என்று கிண்டலடிக்கிறார்கள். எத்தனை கேமரா, எத்தனை லென்சு, எத்தனை ஒளி கொண்டு ஒருவரை ஒளிப்படமெடுத்தாலும் ஒன்று போல ஒன்று இருப்பதில்லை, முகத்தை இடது வலது திருப்பினால் கூட ஒரேமாதிரி இருக்காது என்பதும் உண்மை. இதில் ஓவியம் எப்படி 100% வரும்? போட்டோவையே Smudge Tool கொண்டு தேய்த்தால் 101% கூட கொண்டுவரலாம்... ஒரு ஓவியன் தான் கற்றுத்தேர்ந்த திறமையை கொண்டுதான் பார்த்ததை, ஓவியமாக்குகிறான். கேட்பவர்களுக்கு, அவர்கள் சொல்லும் காட்சியை பதிவுசெய்கிறான், அதற்கு விலை அல்ல வெகுமானம் பெற்றுக்கொள்கிறான்.

யாரோ ஒருசிலர் இப்படித்தான் என்று நினைத்தால் இது தொடர்கதையாகிவிட்டது... அடிமேல் அடிவிழ நான் விழித்துக்கொண்டேன்... இதற்குமேலே தாங்குவதற்கில்லை :D

இன்று முதல் ஒரே ஒரு விலைப்பட்டியல், ஒரு திருத்தங்களும் ஏற்றுக்கொள்வதற்கில்லை. முழுபணம் கொடுத்தால் மட்டுமே வேலை பெற்று, ஓவியமாக்கப்படும். ஓவியம் முடிந்த நிலையில் ஒரு சிறு மாதிரி அவர்களுக்கு அனுப்பி, திருப்தியா என கேட்கப்படும், ஆம் என்றால், அந்த ஓவியத்தின் முக்கிய, பெரிய அளாவிலான கோப்பு அனுப்பிவைக்கப்படும். திருப்தி இல்லை என்றால் அவர்கள் செலுத்திய தொகையிலிருந்து பாதி, அவர்களுக்கே அனுப்பிவைக்கப்படும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

#முடியலை