December 2020 | CJ

December 2020

The other side of man - Part 01



ந்த சமூகத்தில் ஆளுமை கொண்ட நபர்கள், தன் திறமையினால், தங்கள்படைப்புக்களால் மட்டுமே. இப்படியான நபர்கள், மக்களிடத்தில் எந்த பிம்பத்தையும் ஏற்படுத்துவது இல்லை என்பது உண்மைதான். ஆனால் சகமனிதனான “இவன்” இப்படியெல்லாம் படைக்கிறானே! என்றொரு பெருமிதமும், மகிழ்ச்சியும், உத்வேகமும், பாராட்டும் நல்ல குணமும் உருவாவது இயல்புதானே?!

ஆனால், தன்னைக்காட்டும் நிலைக்கண்ணாடிக்கும் மறுபக்கம் உண்டு என்று சொல்லுவார்கள் தானே. அப்படி, ஓவ்வொருவருக்கும் ஒரு மறுபக்கம் அல்லது மறுமுகம் உண்டு. மறு மனிதன் என்றுகூட சொல்லலாம். அந்த மறு மனிதன் எப்படிப்பட்டவன் என்ற கருத்து நம்மால் முன்கூட்டியே அனுமானிக்க இயலாது.

இதென்ன ஆணுக்கு மட்டும்தானா? இல்லை பெண்களுக்கும் உண்டுதான், ஆனால் இங்கே ஆண்கள் மட்டுமே உதாரணம் கொண்டு சிந்திப்போமே.

என்னுடைய நண்பர், சித்தூர் முருகேசன் ஜோதிட வல்லுனர். இயல்பான வாழ்க்கையில் எதையும் கடந்து செல்ல எளிய வழியை சொல்லுபவர். தன்னிடம் ஜாதகம் தந்து பலன் கேட்க விரும்புவோருக்கு சொல்லும் வழி என்ன தெரியுமா? என் மின்னஞ்சலுக்கு உங்கள் ஜாதக விபரம் அனுப்புங்கள். அல்லது தபால் மூலமாக என் முகவரிக்கு அனுப்புங்கள். தயவு செய்து என்னை நேரில் வந்து பார்த்து, பலன் தெரிந்துகொள்ளவேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். உங்கள் நல்லதுக்குத்தான் சொல்லுகிறேன். நீங்கள் இப்படி, அப்படி என்று கற்பனை செய்து வைத்திருக்கும் பிம்பத்திற்குள் நான் சிக்கமாட்டேன். அதனால் உங்களுக்கு ஏமாற்றம் வரும். அதனால் நேரில் வரவேண்டாம் அது அவசியமும் இல்லை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். 

காரணம் “தனக்கு தானாக அவரைப்பற்றி, இவர்கள் கட்டிக்கொண்ட பிம்பம்தான்”

//அந்த மறு மனிதன் எப்படிப்பட்டவன் என்ற கருத்து நம்மால் முன்கூட்டியே அனுமானிக்க இயலாது.// ஏற்கனவே சொன்னது போலவே, இந்த பிம்பக்கணக்கு எப்படி நிகழ்கிறது? இதுவரை ஒருவரின் செயலுக்கும், அவரின் தன்மைக்கும் ஏற்படுத்திக்கொண்ட முடிச்சுத்தான்.  “வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான், குண்டாக இருப்பவன் சூதுவாது அறியாதவன்” இப்படியெல்லாம் பொதுவாக சொல்லுவோம் அல்லவா?! அதுதான் இந்த முடிச்சு.

ஆளைப்பார்த்து, ரகம் பிரிப்பதும், மதிப்பளிப்பது என்றும் சரியாக இருந்ததில்லை. அன்பே சிவம் திரையின் வசனம் போல, “தீவிரவாதி என்பவன் என்னைப்போல கொடூரமுகத்தோட இருக்கனும்னு அவசியமில்லை, உங்களைப்போல அழகாகவும் இருக்கலாமே” 

இந்த முடிச்சால் உருவான பிம்பம் உடையும்போது, இவனால் மதிக்கப்பட்ட அந்த மனிதர் கீழே இறக்கப்படுகிறார், கேலியும் கிண்டலும் செய்யபடுகிறார் அல்லது இவனெல்லாம் ஒரு மனிதனா? என்று தாழ்த்தியும் விடப்படுகிறார்.

இசைஞானி இளையராஜா அவர்கள், என்று சொன்னதுமே,  இங்கே இரு நிலைப்பாடுகள் வந்திருக்கும்தானே?! மொத்த கூட்டத்தில் ஒருபாதி, இருபாதியாக பிரிந்து வம்பு இழுத்துக்கொண்டிருப்பது இப்போதும் சமூக வலைத்தளங்களில் காணமுடியும். விஜய் டிவியில், நீயா நானாவில் ஒரு அன்பர், “எனக்கு பொழுதுபோகவில்லை என்றால், இளையராஜாவை போற்றி, பாராட்டி, தூக்கிப்பிடித்து ஒரு டிவிட் போடுவேன், அப்படியே பத்திக்கும்” என்று சொன்னது ஞாபகமிருக்கிறது.

ஒரு தனிநபராக, உலக அளவில் ஓவியனாக வேலைகளை அவ்வப்பொழுது வாங்கி, பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கும் எனக்கே கூட இப்படியான, முடிச்சால் உருவான பிம்பம் உருவாக்கி விட்டிருக்கிறார்கள். “நீ என்னாய்யா இப்படி வேகமா பேசுறே, ஒன்னுமே புரியலை” என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த முடிச்சை அவிழ்க்க நான் படாதபாடு பட்டேன், பட்டுக்கொண்டும் இருக்கிறேன்.  

ஆனால் நானே கூட அப்படியான முடிச்சு பிம்பத்தை உருவாக்கியும் வைத்திருக்கிறேன் என்பது கொடுமை. அதில் சில உதாரணங்களை காண்போம். ஒருவர், இளையராஜா, இன்னொருவர் பி.சி ஸ்ரீராம்.

அடுத்தபதிவில் சந்திப்போம்.