Medicine does not work - part 02
வேலை செய்யாத மருந்து பகுதி 02
நேற்றைய பதிவில்,
ஞானியை தேடிச் சென்று யோகம் கற்பதற்கான தகுதி குறித்து கண்டோம். ஞானியோடு இணைந்து சென்றவன், தன்னை அவர்க்கு ஒப்படைத்திருந்தான் எனில், குருவிடம் அர்பணிப்பு என்ற வகையில், அவர், அவனுடைய தலையை ஆற்றில் மூழ்கடிக்கும் பொழுது, மூச்சடைக்கும் பொதுவான நேரமாவது அமைதியாக இருந்திருக்கலாம். (எப்படியும் சராசரி மனிதன் 10 முதல் 30 நொடிகள் வரை மூச்சை நிறுத்தி வைக்கலாம்) தன்னை தேடிவந்த ஒருவனை, ஒரு ஞானி, உயிர்க்கொலை செய்வாரா? என்று சிந்திருக்கலாம். ஆனால் அதற்கு அவகாசமில்லாமல், “நான் செத்துவிடுவோனோ” என்று திகைத்து, ஞானியின் பிடியிலிருந்து விலக முயற்சித்தான்.
பொதுவான மனித மனம் இப்படித்தான் திகைக்கிறது. யோகத்திற்கு சென்றால், நான் பரதேசி போல ஆகிவிடுவேன். பணம் சம்பாதிக்க முடியாது, சுகம் அனுபவிக்க முடியாது, இல்லறம் இல்லாது போய்விடும், பிச்சை எடுக்கவேண்டிவரும் என்றெல்லாம் ஏதேதோ “அந்தக்கால பொய்” நிரப்பி பயப்படுவார்கள். பரஞ்சோதி மகான் காலம் முதல், வேதாத்திரி மகரிசி காலம் வரை, இல்லறம் இல்லாத துறவறம் காலாவதி ஆகிவிட்டது. எனவே இனிமேல் திருமணமும், உலக வாழ்வியலும் யோகத்திற்கு ஒரு தடையும் இல்லை என்பது உண்மையாகி விட்டது. ஆனாலும் சிலரிடம் அந்தப் பொய்கள் நிலைத்திருக்கின்றன.
இன்னொரு கதையை பார்க்கலாம்.
ஒரு திருமண தம்பதி, மாப்பிள்ளை பெரும் பணக்காரன். அவன் தன்னளவில் உயர்ந்த பெண்ணை திருமணம் செய்தால், தனக்கு அடங்கமாட்டாள் என்ற ஆணடிமைத்தனத்தில், ஓர் நடுத்தர வர்க்கப் பெண்ணை திருமணம் செய்தான். நல்லவிதமாக திருமணம் நடந்தது. முதலிரவு அறையில், தன் மனைவியிடம் சொன்னான்,
“இத்தனை நாள், நான் நன்றாக சாப்பிட கூட முடியாமல் கஷ்டப்பட்டேன். இனி நீ வந்துவிட்டாய். எனக்கு கவலைவிட்டது. எனக்கு பிடித்தமான உணவை சமைத்துதருவாய் என்று நம்புகிறேன்”
“சரிங்க, அப்படியே செய்கிறேன். எனக்கு தெரிந்த அளவிலும், புதிதாக கற்று சமைக்கவும் நான் தயங்காமல் சமைத்துத் தருகிறேன். உங்க திருப்திதான் எனக்கு முக்கியம்” என்றாள் மனைவி.
மறுநாள் காலையிலேயே, மனைவி அடுப்படிக்குச் சென்று இருக்கிற பொருள் எல்லாம் சரிபார்த்து, காலை உணவுக்கு சிறந்த உணவாக, கொஞ்சம் கேசரி, பொங்கல், இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி, மெதுவடை என்று அமர்க்களமாக செய்து வைத்தாள். தன் கணவன் எழுந்து வருவதற்குள் இதை அவனுக்கு சாப்பிட தயாராக இருக்கவேண்டும் என நினைத்து, பரிமாறும் அறையிலும் அடுக்கி வைத்துவிட்டு. கணவனை எழுப்பி விட்டாள்.
“எல்லாம் தயாராக இருக்கு, இன்னைக்கு நீங்க திருப்தியா சாப்பிடலாம்” என்று புன்சிரிப்போடு ஆவலாக சொன்னாள்.
அவனோ சாவகாசமாக காலைக்கடன் முடித்து, குளித்து வந்து சாப்பிட அமர்ந்தான். தன் முன் பரப்பி இருந்த உணவுகளை ஒவ்வொன்றாக மூடி திறந்து பார்த்தான். அவன் மனைவி பரபரப்பாக, அவனுக்கு ஓர் இலையைப் போட்டு, அதன் மேல் நீர் தெளித்தாள்.
“நான் செய்துக்கிறேன்” என்றான் அவன்.
சுதாரித்துக்கொண்ட அவள். “கேசரி வைக்கட்டுமா?” என்றாள்.
“சரி கொஞ்சமாக வை” என்று ஒவ்வொன்றாக அவள் கேட்டு கேட்டு வைத்து அவன் முகத்தை ஆர்வமாக பார்த்தாள்.
அவனோ, ஒவ்வொன்றாக சாப்பிட்டுப்பார்த்து, உதட்டை பிதுக்கினான்.
“ஏங்க, பிடிக்கலையா?” என்று குரல் தேம்பிட கேட்டாள்.
“ஆமா, என்ன செஞ்சி வச்சிருக்க? ஒரு ருசியும் சரியில்லை, எனக்கு பிடிக்கவும் இல்லை”
அவள் ஏறக்குறைய அழுதிடும் நிலைக்குப் போய்விட்டாள்.
“இதிலே என்னென்ன குறைன்னு சொன்னா அதை சரி செய்துக்கிறேன். இல்லைன்னா உங்களுக்கு எப்படி, என்னென்ன பிடிக்கும்னு சொல்லுங்க, அதுபடிவேனா செய்துதரேன்”
“இங்கபார், அதலாம் எனக்கு தெரியாது, எனக்கு என்ன புடிக்கும்னு சொல்லவும் மாட்டேன், நீயே அதைக் கண்டுபுடி” என்று சொல்லிவிட்டு கை அலம்பிட எழுந்துவிட்டான். இலையில் எல்லாமே அப்படியே இருந்தன.
“மத்தியானமாவது எனக்கு புடிச்சதா நாலு நல்லது செய்துவை, சரியா?” என்றவாறு வெளியே கிளம்பிவிட்டான்.
புது மனைவிக்கு தலை இருண்டுவந்தது.
நாளையும் தொடர்வோம் அன்பர்களே!
வாழ்க வளமுடன்.
----