Why should I carry someone's karma? Want to solve?
யாருடைய கர்மாவையோ நான் எதற்காக தூக்கி சுமக்கவேண்டும்? தீர்க்கவும் வேண்டும்?
வேதாத்திரியத்தில் ஆழ்ந்து விட்டால் தானாக தெரியக்கூடிய உண்மைகள், வெளிப்பார்வைக்கு பொருத்தமாக இருப்பதில்லை, புரிவதும் இல்லை. முன்னோர்கள் என்னுடைய முன்பிறவி, என்குழந்தைகள் என்னுடைய பிற்பிறவி என்பது, கர்மா என்ற வினைப்பதிவுகளின் அடிப்படையில் சொல்லுவது மட்டுமே. ஒருவர் முன்னாலும் பிறப்பதில்லை, பிற்பாடும் பிறப்பதில்லை. வாழ்வது ஒருமுறை, இறப்பதும் ஒருமுறையே.
ஆனால் கர்மா என்ற வினைப்பதிவு அப்படியல்ல. ஒரு சட்டையில் ஒட்டிய தூசி போல. யார் அதற்கு உரிமையாளரோ அவர் துடைக்கவேண்டும். அல்லது யார் அதை உரிமை கொண்டாடுகிறார்களோ அவர் துடைக்கவேண்டும். இந்த சட்டைதான் நம் உடல், சட்டையின் தூசி கர்மா. யாருமே தனியா வானத்திலிருந்து குதித்து பிறப்பதில்லையே! தாத்தாவின் சொத்து பேரனுக்கு என்றால், தாத்தாவின் கர்மா பேரனுக்கு வராமல் போகுமா? வேண்டாம் என்றாலும் இறைநிலை விடாது. (இறையே இல்லை என்றால் இயற்கை என புரிந்துகொள்க)
மேலும், மனிதனின் பிறப்பு ‘நான் யார்?’ என்று அறியவே மலர்ந்தது. அதற்கு தடையாக இருப்பது கர்மா என்ற வினைப்பதிவுகள். அந்த தடையை, ஒருவர் அதை தீர்க்காதவரை, மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி இப்படியே, ‘இந்தா, தீர்க்கப்படாத இந்த கர்மாவை தீர்’ என்று ஒவ்வொரு பிறவியிலும், இறை அல்லது இயற்கை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
எவருடைய கர்மாவோ எனக்கெதற்கு? நான் ஏன் சுமக்கவேண்டும்? தீர்க்க வேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பு. அது நம் மூளையின் அறிவு சார்ந்தது. ஆனால் கர்மா கருமையம் சார்ந்தது, மூளை மண்ணோடு மண்ணாகலாம், சாம்பலும் ஆகலாம். கருமையம் அப்படியே நகர்ந்து விடும், ஆண், பெண் வித்தின் வழியாக!
நீங்கள் மனம் விரும்பி வைத்திருக்கும் பொருளில், கறை இருந்தால் அதை அப்படியே விட்டுவிடுவீர்களா?
கர்மா எனக்கில்லை என்று சொல்லுவதாக இருந்தால், ஏன் உங்கள் நடவடிக்கைகள், உங்களின் முன்னோர்கள் மாதிரி, தாத்தா மாதிரி, பாட்டி மாதிரி இருக்கின்றன? உங்கள் சொந்த வழக்க பழக்கங்களை ஏன் நீங்கள் செயல்படுத்துவதில்லை?! கற்றுக் கொள்ளவில்லையா?! கற்றது பதியவில்லையா? செயல்படுத்த முடியவில்லையா?!
இன்னமும் யோசிக்கலாம், ஆராயலாம்! வாழ்க வளமுடன்.