Stay Tuned with Art | CJ

Stay Tuned with Art

Stay Tuned with Art


ஓவியத்தோடு கலத்தல்...


ஒரு குறிப்பிட்ட செய்திகளை உள்வாங்கிக்கொண்டு தனக்குரிய பாணியில் எழுத்தில் தரவல்லவர்கள் நிறைய நபர்கள் இருக்கும் இந்நாட்களில், நானும் அதில் ஒருவனாக சிறப்பிக்க ஆர்வமாக இதுவரை எழுதிக்கொண்டிருந்தேன் என்பது உண்மை. ஆனால் ஒரு ஓவியனாக நான் நிலைத்திருப்பதும், அந்த ஓவிய திறமையினாலே நான் என் வயிற்றுப்பாட்டை நடத்திக்கொண்டிருப்பதும் உண்மை. இதை நினைவுக்கு கொண்டுவரும் வேளையில், இதுவரை நான் மறந்திருந்தேனோ என்று நினைக்கிறேன்.

இப்பொழுது எனக்கு நன்கு தெரிந்தது எது என்னும் நிலையில் ஓவியமே என்று முடிவுக்கு வந்துவிட்டேன். இதுவரை நான் என் வட்டத்தைக்கடந்து என் பெருவெளி என நினைத்து எழுத்திலும், பிறவகையான துறைகளிலும் ஒரு காலைப்பதித்து, என்னை ஒரு நிலையிலும் நிறுத்திக்கொள்ளாதிருக்கிறேன்.

பல ஆண்டுக்கால பயணத்தில், ஒரு குறிக்கோளுடன் தொடங்கிய பயணத்தில் என் நிறுத்தம் வந்துவிட்டதை அறியாமல் அல்லது அந்த நிறுத்தத்தில் மனமோ, உடலோ, நினைவோ எதோ ஒன்றை வைத்துவிட்டு அந்த பயணத்தை தொடங்கி போய்க்கொண்டிருப்பதாக என்னை கருதுகிறேன். தொடர்வண்டி பயணத்தில் தன் ஊர்வந்ததை அறியாது, மற்றவர்களிடம் கேட்டு அறியாமலும், தன் தூக்கத்தை தொடர்ந்தும், தன் பயணத்தை தொடர்ந்தும் பயணிக்கும் பயணி போல...

என் வாழ்வில் பல ஆண்டுகளை பலவகையான தேடல்களிலும், கற்றுக்கொள்ளலிலும், நிலைப்படுத்தி, அதன்மூலமான வேலைவாய்ப்பு தேடலிலும் என்னை இழந்திருக்கிறேன், இப்பொழுதைய கால கட்டத்தில், ஒரு ஓவியனாக என்னை நிலைபெறச்செய்யும் முயற்சியில் கொஞ்சம் வெற்றியோடு நின்றிருந்தாலும், இன்னமும் இதில் கவனம் செலுத்தவேண்டி இருப்பதாலும் இனிமேலும் சிதறி பறக்கலாகாது என்பது என் முடிவு.

அரசுத்துறை, தனியார் பணியாளர்கள் எப்போதும் தன் மேஜை எல்லைக்குள் மட்டுமே செயல்படுவதை பார்த்து வியந்திருக்கிறேன். ஒருவித மனக்குவிப்பு இதில் வரும் என்பதும், வேலைகளில், தன் செயல்களில் கவனம் வரும், தேவையில்லாத பிறரது செயல்களில் தலையிடுவதும், அதன்மூலமாக வரும் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம் என்பதும் உண்மை.

ஏற்கனவே ஓட்டைபானையாக இருக்கிற நான், ஓவியம் முதலான எல்லா ஓட்டைகள் வழியாக என் கவனங்களை செலுத்திக்கொண்டிருந்தது மகா விரயம் என்பது என்புத்திக்கு இப்பொழுதான் தெரியவருகிறது. இனி ஓவியத்துக்கான ஓட்டையில் மட்டும் விரயச்செலவு செய்ய முடிவு செய்திருக்கிறேன்.

ஓவியம் தொடர்பான தகவல்களில் என்னை நிறுத்தினால், பிறருக்கு கண்டிப்பாக உதவுமா என அறியாத நிலையில், அது என் வயிற்றுக்கு உதவும் என்பது தெளிவு. இதோடு நான் இன்னும் ஓவியம் குறித்தான அனுபவத்தில் என்னை மேம்படுத்தவும் உதவும்....

இந்த ஓவியன் இதையும் செய்தான் அல்லது எழுதினான் என்றால்... ஓவியத்தையாவது நன்றாக செய்தானா என்ற கேள்வி எழுப்பப்பட்டால்... இவன் இரண்டையுமே சரியாக செய்யவில்லை என்ற பதில் எனக்கானதாக இருக்கவேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

இதனால் இழப்பொன்றும் யாருக்கும் இல்லை. இப்போது வரை என் நிலை, என் அனுபவம், என் ஆர்வம் என்று ஆய்வு செய்தால் “ஓவியம் தவிர ஏதுமில்லை” என்பதே முடிவாக இருக்கும் என்பதால் நான் அந்த நிலையிலேயே நின்று என்னை சிறப்பித்துக்கொள்ள விரும்புகிறேன்...

ஆனால் என் கற்றுக்கொள்ளலும், மேம்படுத்திக்கொள்ளலும் என்றும் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்...