Caricature Workshop | CJ

Caricature Workshop

Caricature Workshop


கடந்த வாரத்தில் நடந்த கேரிகேச்சர் பயிலரங்கத்தில் நான் செயல்பட்ட சில விபரங்களை சொல்ல விரும்புகிறேன். இந்த கேரிகேச்சர் என்கிற ஒன்றை புது விசயமாக, இதை எப்படி செய்கிறார்கள், நாமும் இதை கற்றுக்கொள்ளவேண்டுமே என்ற ஆர்வத்தில் இன்றைய இளைஞ, இளைஞிகள் கூட்டம் இருப்பதை நாம் அறிவோம்.

அவர்களுக்காகவே இந்த கேரிகேச்சர் பயிலரங்கம் விழா குழுவினரால் நடத்தப்பட்டது. நான் பயிற்றுனராக கலந்துகொண்டேன்.


ஒரு கல்லூரியில், அதும் புகழ்பெற்ற கல்லூரியில் எனும் பொழுது, (NIT, TRICHY)கற்றுக்கொடுப்பவரும் திறமையானவராகவே இருப்பார் என்பது உண்மைக்கு ஏற்ப, நான் இந்த பயிலரங்கத்தை எப்படி பயனுள்ளதாக தரவேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதகாலமாக என் வழக்கமான வேலைகளூடே, புது முயற்சிகளை செய்துபார்த்துக்கொண்டேன்.

பேஸ்புக், எண்ணற்ற நண்பர்களை எனக்கு தந்திருப்பதால், ஒரு புது முயற்சி என்றால், அதில் என்னோடு இணைந்திருக்கிற ஒரு நண்பருக்கு, பிறந்தாள் பரிசாக ஒரு கேரிகேச்சர் செய்தாலே, அந்த புது முயற்சிகளை செய்துபார்த்துவிடலாம்... அதை அவர் விரும்புகிறாரா என்பது உள்ளூர கேள்வி எழும்பினாலும், அவர் நிச்சயமாக வேண்டாம் ஒதுக்கமாட்டார். ஏனென்றால், அவரின் நண்பர்கள், அந்த ஓவியத்தை பார்த்து, அதிலிருக்கிற கிண்டலை புரிந்துகொண்டு அந்த நண்பரை மகிழ்ச்சிப்படுத்துவர், அதனாலே நான் தப்பித்துவிட சந்தர்ப்பம் கிடைத்துவிடும்...

பயிலரங்கத்தில் கேரிகேச்சர் இடம்பெறுகிறது என்பதை நன்கு விளம்பரப்டுத்திக்கொண்டதால் எதிர்பார்த்தபடி நிறைய மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர், என்றாலும் இன்னமும் நிறைய எண்ணிக்கையில் வந்திருந்தால் அமைப்பாளர்களுக்கு கூடுதல் திருப்தி அளித்திருக்கும்...




காலை ஒரு வகுப்பும், பிற்பகலில் ஒரு வகுப்புமாக இரண்டாக பிரித்து பயிலரங்கம் நடத்தினோம்... இரண்டு வகுப்புகளுக்கும் சிறியவித்தியாசம் அமைத்துக்கொண்டேன். முதல் பயிலிரங்கத்தில், சில மாணவர்கள், நான் கேரிகேச்சருக்கான விளக்கங்களை தந்துகொண்டிருந்தபோதே கொட்டாவி விட்டதை காணமுடிந்தது. சில கவனம் பிசகி, வாயடைக்கப்பட்டிருந்த கைபேசியில் சில ஒளிப்படங்களை பார்த்து அவர்களாகவே வரைய முனைந்தது அறிந்தேன்... இதனால் முதல் வகுப்பில் அவர்கள சோர்வுறச்செய்த விசயங்களை அடுத்தவகுப்பில் தவிர்த்துவிட்டேன்...

அடுத்து நான் இதுவரை என்ன செய்திருக்கிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டேன். நான் என் கைபேசியிலும், கைபலகையிலும், கணிணியிலும் எடுத்துவைத்திருந்த எண்ணற்ற கேரிகேச்சர்களை காட்டவே இல்லை. அவற்றையெல்லாம் காட்டும்பொழுது, ஒரு திறமையாளன் செய்த ஓவியமாகவே அவர்களுக்குப்படும், கூடவே இதை காண்பித்து என் தற்பெருமையை காட்டிக்கொள்வதாகவும் தோன்றும். இதைப்போல நான் செய்யமுடியுமா என்று அவர்களை பயமுறுத்துவதாகவும் அமையலாம்...

ஒரு கோடுக்கூட மிகச்சரியாக வரையத்தெரியாத, கற்றுக்கொள்வதற்காக வந்திருக்கும் அவர்களுடைய தன்னம்பிக்கையை வலுவூட்ட நினைத்தே, அந்த பயிலரங்கள் முழுவதும் ஒரு வெற்றுத்திரையில், ஒவ்வொன்றாக வரைந்து, வரைந்தே அவர்களுக்கு விளக்கினேன்.

சாதாரணமாக ஒரு கோடு போடுவதற்கும், தன்னபிக்கையோடு கோடுபோடுவதற்கும் வித்தியாசத்தை, வந்திருந்த எல்லா மாணவ, மாணவிகளுக்கும் அவர்களுடைய பயிற்சி ஏட்டில் வரைந்து காட்டி, அதையே அவர்களையும் தொடரச்செய்தேன்.

கை நடுங்காமல், அழுத்தியும், லேசாகவும் கோடுகள் போடுவதற்கான பயிற்சிகளை கொடுத்தேன். இயற்கையான பொருட்கள் எந்த மனித நெறிகளுக்கும் அடங்காத அமைப்பையும், மனிதன் உருவாக்கிய அனைத்தும் வரையறைக்குட்பட்டே இருப்பதையும் விளக்கினேன்.

எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை தோற்றம் இருப்பதையும், அதில் ஒவ்வொரு அடையாளங்கள் இருப்பதையும் காட்டினேன். மனித முகம் பொதுவான ஒரு அளவீடை கொண்டிருப்பதும், அந்த அளவிலேயே எல்லா முகங்களையும் எப்படி அமைக்கலாம் என்பதையும் வரைந்தே காட்டினேன்.

முகத்தின் வகைகள், அதன் பகுதிகளை தனித்தனியாக வரைந்து அவர்களை பதிந்துவைத்துக்கொள்ள செய்தேன்...மாதிரியாக என் முகத்தையே பலவிதமாக வரைந்தும் காட்டினேன்.

ஒரு கேரிகேச்சர் ஓவியர் ஒரு முகத்தை எப்படி கவனிக்கிறார்? என்னன்ன விசயங்களை எடுத்து, தன் ஓவியத்தில் மிகைப்படுத்துகிறார்? இதில் நான் எந்த அளவில் அதை தருகிறேன்? ஒரு நபரை கேரிகேசராக வரைந்தால் அவருக்கு பிடிக்கிறதா இல்லையா என்பதையும் நான் விளக்கினேன். ஒரு மாணவரையும், மாணவியையும் என் எதிரில் வைத்து, அவர்களின் முக அடையாளங்களை சொல்லி, அவர்களை அந்த நிமிடத்திலேயே கேரிகேசராக வரைந்து காட்டினேன்... எனக்கு பாராட்டாக கைத்தட்டுகளை அளித்தனர்...

தினமும், கண்ணாடியில் அவர்கள் முகத்தை அவர்களே பார்த்துக்கொள்வதால், அந்த முகத்தில் உள்ள அடையாளங்களை அறியச்செய்து, அதையே நீங்கள் ஓவியமாக்குங்கள் என்று பயிற்சி செய்ய சொன்னேன். அவர்கள் வரைந்துகொண்டிருக்கையில், நான் ஓவ்வொருவரின் ஓவியத்திலும் அவர்கள், இன்னமும் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில விசயங்களை சொல்லியும், வரைந்தும் காட்டினேன்.

ஒரு வகுப்புபிற்கான நேரம் கடந்தும் ஆர்வமாக வரைந்துகொண்டிருந்தனர். கூடுதாலாக நான் விரும்பும் எல்லா மாணவ, மாணவியருக்கும், அவர்களை நானே கேரிகேச்சராகவும் வரைந்துதந்தேன்...

உண்மையாகவே இந்த நேரத்திற்குள் அவர்கள் கேரிகேச்சரை ஒரு தூண்டுதாலாக வைத்து, தன் முயற்சி, பயிற்சிகளால் செமைப்படுத்திக்கொண்டால் மட்டுமே அதை செய்ய இயலும்... ஆனால் அதுவே இந்த நேரத்திற்குள்ளாக, இவ்வளவு விசயங்களையாவது அங்கே தரமுடிந்ததே என நான் திருப்திபட்டுக்கொண்டேன்...

பயிலரங்க அமைப்பாளர்களுக்கு என் மனம் கனிந்த நன்றி...