Athma Goes to | CJ

Athma Goes to

Athma Goes to


 ஆத்மா எங்கே போகிறது?


ந்த கேள்வி குறித்து சிலர் கேட்டிருந்ததமையால், அதுகுறித்தும் சில உண்மைகளை அறியத்தருகிறேன். கடந்த பதிவுகளின் வழியாக, ஆத்மா என்பது குறித்து தொடர்ச்சியாக பார்த்திருப்பதால், இந்த பதிவும் சுலபமாக புரிந்துவிடும் என்று நம்புகிறேன். ஆத்மா என்பது நமது பிம்பம் என்று உதாரணமாக வைத்துக் கொள்வோம் எனில் நம்முடைய எண்ணங்கள், விருப்பம், வெறுப்பு, செயல்கள், கவலை, கோபம் இப்படி எல்லாமும் ஆத்மாவிலும் இருக்கும். ஆத்மா என்பது சுத்தமானது என்ற பொது கருத்துக்கு வந்துவிடக்கூடாது. நாம் எப்போதோ செய்த தவறுகளைக்கூட, நாம் மறந்திருந்தாலும் கூட, தானாகவே செயலுக்கு வந்து நம்மை ஆட்கொண்டுவிடும் தன்மை கொண்டது நம் ஆத்மா. எனவே உங்களினின் 100% முழுமையான பிரதி ஆனால் உங்களையும் இயக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.


சரி, நல்ல ஆத்மா இல்லையா? கிடையாதா?

நல்ல ஆத்மா இருக்கிறது, யோக சாதனை முலமாக, தவத்தின் வழியாக, தன் சஞ்சித, பிராரப்த, ஆகாமிய (மும்மலங்கள்) (இருவினை என்று சித்தர்கள் சொல்லுவர்) கர்மங்களை, வினைப்பதிவுகளை தன் வாழ்நாளிலேயே போக்கி, இறைநிலையில் முழுமை அடைந்தவரே நல்ல ஆத்மா. அப்படியானால் வினைப்பதிகளை போக்க நாம் வாழும் இந்த பிறவிக்காலமே போதுமானது ஆகும். நாம் இந்த உலகில் பிறப்பதின் காரணமே வினைப்பதிவுகளை, போக்கிக் கொள்வதற்குத்தானே! ஆனால் பிறந்தபிறகு நாம் அதை மறந்துவிடுகிறோம்.


எனக்கு வினைப்பதிகள் இல்லை

இறை மறுப்பாளர்களும், பகுத்தறிவு சிந்தனையாளர்களும் இதை ஏற்றுக்கொள்வதில்லை. யாரோ செய்த தவறுகளுக்கு நான் பொறுப்பாளியா? எனவே எனக்கு வினைப்பதிவுகள் இல்லை என்று சொல்லிக் கொள்வார்கள். ஒரு மனிதனை யாரும், இரசாயன ஆராய்ச்சி கூடங்களில், “ஒரு பொம்மைகள் போல” உருவாக்குவதில்லை. தாயும், தந்தையும் இணைந்து உறவின் மூலமாக, கருவாகி வளர்ந்து வருகிறோம். எனவே, அவர்கள் இருவரின் வினைப்பதிவுகள் நம் சொத்தாகி விடுகிறதே? கூடவே நாம் வாழும் பொழுது நாமாக சேர்த்துக் கொண்ட வினைப்பதிவுகள் உண்டு. இந்த விதை, நல்ல மாங்கனிகளை கொடுத்த மரத்தின் விதை என்ற எதிர்பார்ப்போடுதானே விதைக்கிறோம். அப்படியென்றால், மாங்கனியின் தன்மை விதையில் உள்ளடக்கமாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே நமக்குள் வினைப்பதிவுகள் உண்டு.


வினைப்பதிவு தீர்க்க "IDEA" இல்லை

இந்த உலகில், நமக்கு எப்படி வாழப்பிடிக்குமோ அப்படியே வாழ்ந்து, நினைத்ததை சாதித்து, நேர்மையாகவோ, பக்திமார்க்கமாகவோ, இறைமறுப்புடனோ, பகுத்தறிவுடனோ, இயற்கையை மதித்தோ, அவமதித்தோ, பொய், சூது, களவு, கொலை, செய்தும்கூட, மத, இன, ஜாதி பேதம் காட்டி சக மனிதர்களை, இயற்கை வளம், சமூகம், அரசியல் எல்லாம் கெடுத்து, நான் சுத்தமானவன், என்னிடம் தவறே இல்லை என்று இப்படி சொல்லித்தான் வாழ்ந்து, ஒரு நாள் செத்தும்போகிறோம். வினைப்பதிவு தீர்க்க "IDEA" இல்லை. நமக்கும் தெரியவில்லை. யாரும் சொன்னாலும் தெரிந்துகொள்வதில்லை. அதுகுறித்து ஆர்வம் கொண்டதும் இல்லை. நிதம் தேடிச்சோறு தின்று, கை நிறைய, அலமாரி நிறைய, தேவைக்கு மீறிய காசும், ஒருத்தருக்கும் கடனோ, அன்பளிப்போ கொடுக்காது சேர்த்து,  நோய்பட்டு, மருத்துவத்திற்கே செலவு செய்து, கிழடுதட்டிப்போய், முரட்டு கௌரவத்தோடு, இன்னும் வாழ முடியவில்லையே, சுகம் அனுபவிக்கவில்லையே, காசு சேர்க்கவில்லையே, இப்படி ஆகிவிட்டதே எனும் வருத்தத்தோடு, செத்துவிடுவோம். நம் உடல் மண்ணோடு மண்ணாகவோ, மாநகராட்சி மின் மயானத்தில் சாம்பலாகவோ மாறிவிடும். ஆனால் நம்முடைய வினைப்பதிவுகளும், அதை தாங்கி நிற்கக்கூடிய ஆத்மாவும் (நாம் தான்) அப்படியே இருக்கும். அதாவது நம் வினைப்பதிவுகள் தீர்ந்து நாம் முழுமை அடையும் வரை.


வினைத் தீர்க்க வழி ஏது?

செத்தாகிவிட்டது. அமைதியாக இருந்தால் ஆத்மா, ஆர்ப்பாட்டமாய் இருந்தால் ஆவி. 

ஆட்டத்தில் அவுட் ஆனதுப்போல, வினைப்பதிவு தீர்க்க வந்த வாழ்வில், அதை தீர்க்காமலேயே வாழ்வு முடிந்துபோனது. இருந்த உடலும் இல்லை. ஆனால் வினைப்பதிவு சுமையால் “ஆத்மா” இயற்கையோடு ஒன்ற முடியாது. அது இயற்கையின் வினை விளைவு நீதியாகும். இப்போது உடல் வேண்டுமே? என்ன செய்வது?


இப்படி உடலுமில்லாத, குடலுமில்லாத ஆத்மாவுக்குத்தான், மகனோ, பேரனோ பணம் செலவு செய்து, விற்பனர்கள் மூலமாக பிண்டம் வைத்து, சாந்தி அளிக்கிறார்கள்.


இயற்கை, ஆத்மாவுக்கு உதவுகிறது

ஆனால் இங்கேதான் இயற்கையே, ஆத்ம சாந்தி அடைய, அந்த ஆத்மாவிற்கு உதவி செய்கிறது. அவ்வழியில் ஆத்மா, தனக்கு விருப்பமானவர்களோடு இணைகிறது. தன்னை பகிர்ந்து கொள்கிறது. தன்னுடைய வாழ்க்கை துணை, மகன், மகள், பேரன், பேத்தி இப்படியாக, அவர்கள் உயிரோடு தானுமாய் ஒட்டிக்கொள்கிறது. தான் பெற்ற வினைப்பதிவுகளை, இவர் மூலமாக தீர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு அமைகிறது. அந்தோ பரிதாபம், இறந்துபோனவரின் வழக்கம், பழக்கம் தானே அவர் குடும்பத்தார்க்கும் இருக்கும்?! பிறகு எப்படி வினைப்பதிவுகளை தீர்ப்பார்கள்? பத்தோடு ஒன்றாகி, பதினொன்றாக வினைப்பதிவுகளின் சுமை இன்னும் ஏறிவிடும். பிறகு?! இப்படியே தொடர்கதைதான்.


இதன் பாதிப்பு என்ன? வினைப்பதிவு இருந்தால்தான் என்னவாம்?

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், வாகன விபத்துக்கள், கூடுதல் இறப்பு, நோய், மன நிம்மதியின்மை, வேலை, தொழில் கெடுதல் ஆகியன போல, ஓவ்வொன்றாக பெற்றுக்கொண்டே வாழ்ந்து, சாகவேண்டியதுதான்.


அப்படியானால் தீர்வு?!

ஆனால், இறந்தவருக்கு, பிண்டம் வைத்து சாந்தி அளிக்காமல், தன்னோடு அந்த ஆத்மா கலந்திருக்கிறது என்பதை உணர்ந்து, தன் வாழ்க்கையில் தன்னையும் திருத்தி, யோக சாதனைகளில் இணைந்து, தவம், தற்சோதனைகள் மூலம் வினைப்பதிவுகளை களைந்தால், தன் தகப்பனின் வினைப்பதிவு மட்டுமல்ல, இதுநாள் வரையில் தொடர்ந்திருந்த எல்லா வினைப்பதிவுகளும், தன் வினைப்பதிவுகளும் கலந்தே தீர்ந்துவிடும். அதோடு தான் மட்டுமல்லாது, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பலன் அளிக்கும்.


குரு மகான், வேதாத்திரி மகரிசி அவர்களின் வேதாத்திரியத்தின் வழி இக்கட்டுரை எழுதப்பட்டது. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால், இந்த WhatsApp Group வழியாக கேட்கலாம். வாழ்க வளமுடன்.




வேதாத்திரிய இறையுணர்வு


----------------

Photo Thanks to: Miguel Bruna, @mbrunacr