July 2021 | CJ

July 2021

NE YOU WS


உன்னை நெருக்கும் செய்தி


பொறுப்புத்துறப்பு

படிக்கும் யாரையும், இந்த கட்டுரை கட்டாயப்படுத்தவில்லை. சில ஆய்வுக்காக, விளக்கங்களுக்காக, ஆன்மீக தேடுதலுக்காக எழுதப்பட்டது. குறிப்பிட்ட எந்த செய்தித்தாள், பத்திரிக்கை, நிறுவனங்கள், வழங்குனர் நேராகவோ மறைமுகமாகவோ சார்ந்தது அல்ல. தவறுகளிருந்தால் மன்னிக்கவும். 


உலகம் சுருங்கிவிட்டது

உலகின் புதிய கண்டுபிடிப்புக்களையும், அது குறித்த வளர் சிந்தனைகளையும் நான், எங்கள் வீட்டில் உயபயோகப்படுத்திக் கொண்டிருந்த பொருட்களால் அறிவேன். ஆனாலும், அறிவியல் அறிஞர்களின் மகத்தான தொடர் கண்டுபிடிப்புக்களால் இந்த உலகம் எல்லைகளற்று சுருங்கிவிட்டது. இந்த கருத்து நான் 1985 ம் ஆண்டு, என் வகுப்பறையில், ஒரு ஆங்கில பாடத்தின் வழியாக தெரிந்துகொண்டேன். அதற்கு பிறகும் நிற்காத அறிவியல் முன்னேற்றம், இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இணையத்தால் ஒன்றுபட்ட உலகம், கையடக்கத்தில் சுருங்கி கைபேசியில் உள்ளது. ஆனால், என்னதான் இணைய சுதந்திரம் என்றாலும்கூட, அந்தந்த நாட்டுக்கான சர்வர்கள் (Worldwide web internet servers) மூலம், எல்லைகள் அமைந்துதான் இருக்கிறது.


தானியங்கி?!

இந்த சர்வர் எல்லைகள் சுதந்திரமானவை, மக்களுக்கானவை, அவர்களின் உரிமைகள் என்றாலும், அவை, அவ்வப்பொழுது கதவடைக்கும் அல்லது கதவை திறக்கும். அது அந்தந்த இணைய சேவை வழங்குனரைப் பொறுத்தது. சில நேரங்களில் இது காசுக்கும், கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும், தீர்வுக்கும், யுத்தத்திற்கும், உள்நாட்டு கலவரத்திற்கும் வேலை செய்யும். ஆனால் இது இதற்காக என்று யாருக்குமே தெரியாது. முக்கியமாக இணையத்துக்கு இயக்குனர் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. 



காலையில் காஃபியும் செய்தியும்

சுடச்சுட என்று நாம் காலையில் குடிக்கும் காஃபியை மட்டுமல்ல, செய்திகளையும் சொல்லலாம். செய்தித்தாள் விற்பனையில் சுடச்சுட செய்திகள் என்றுதான் சொல்லப்படும். ஓவ்வொருநாளும் காலையில், செய்திகளை தாங்கி கடைவிரிக்கும் பத்திரிக்கைகள் நிறைய இருந்தன. இன்றைய இணையயுகத்தில் சில உலகளாவிய பெரும் செய்தித்தாள்கள் பரிதாபமாக, தன் கடைசி பதிப்பை தந்து ஓய்ந்துவிட்டன. வானொலியும், தொல்லைகாட்சிகளும் இருந்த நிலையிலும், உயிரோடு வலம் வந்த செய்தி பத்திரிக்கைகள், கைபேசி இணைய உலகத்தில் மூர்ச்சை ஆகிவிட்டன.

உலகில் என்ன நடந்திருக்கிறது என்ற ஆர்வமும், நேற்றிருந்தோர் இன்றில்லையே என்ற தலைவர்களின் கடைசி வாழ்க்கை நிகழ்வும், விளையாட்டின் வெற்றி தோல்வி நிலையும், பண மதிப்பின் தற்போதைய நிலையும், நாட்டின், அரசின் நிலைத்தன்மையும், எதிர்கட்சியின் சுட்டிக்காட்டுதலும் அறியவும், கல்வி கட்டுரைகள் படிக்கவும், வேலைவாய்ப்பு தேடவும், இயற்கை பேரழிவும், சமூக அவலங்களும், தீவிரவாதி, போராட்டங்கள், கிளர்ச்சியாளார்கள், குற்றங்கள், நோய் தன்மைகள், ராசி பலன்கள், ஆன்மீக செய்திகள் இப்படி இன்னும் பலப்பல விசயங்கள் குறித்து அறிந்து தெளிய செய்திகள் நமக்கு உதவுகிறது என்பது நன்றாக நமக்கு தெரிந்ததுதான். ஒவ்வொரு நாளும் செய்திகள் தெரியாமல் இருப்பது குற்றம் என்ற அளவில், பிறர் அதைபற்றி நம்மிடம் பேசும்பொழுது கூறியிருப்பார்கள் என்பது உண்மை.


NEWS

இந்த ஆங்கில வார்த்தையை அக்ரனிம் (Acronym) முறையில், வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளின் வழியாக பார்க்கும் பார்வையை, இந்த செய்திகள் வழங்குகிறது என்பது பொதுவான கருத்து.  ஆனால் திசையும், பார்வையும் என்று எடுத்துக்கொண்டால், பத்துவகையானவை உள்ளன. அந்த கூடுதல் ஆறு வகை என்ன? வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, மேலே, கீழே என்பன ஆகும்.


ஓசிபேப்பர்

அந்தக்காலத்தில் ஓசிபேப்பர் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்துவந்தது. காசு கொடுத்து வாங்குபவர் ஒருவர், படிப்பவர்கள் பலபேர். ஒரு செய்தித்தாள் வரிசைப்படி படிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால் இந்த ஓசி பேப்பர் ஆசாமிகள், ஒரு தாளை பிரித்து தாருங்கள் என்பார், அவர் படித்துவிட்டு, இன்னொருவருக்கு பகிர்ந்து விடுவார். பேப்பர் வாங்கியவருக்கு அந்த தாள் மீண்டும் வருமா என்பது கேள்விக்குறி!

இதனால், நிறைய ஒரிஜினலாக பேப்பர் வாங்கியவர், ஒரு நூல் கொண்டு தைத்து விடுவார். ஏனென்றால், பிரிந்த பேப்பர் தன்கைக்கு வராது என்பதும், வரிசை மாற்றினாலும் பிடிக்காது என்பதும் காரணம். வாங்கி படித்து, பக்கம் மாற்றி வைத்துக்கொடுத்தால், காசு கொடுத்து வாங்கியவருக்கு, கோபம் வரும்.  இதனாலேயே, தையல், பிரிக்கமுடியாது அப்படியே படித்துத்தான் தருவேன் என்பார். ஓசிபேப்பர் ஆசாமி விடமாட்டார். இவர் படிக்கும் பொழுதே, அவர் அங்கங்கே தலையை நுழைத்து தடங்கல் செய்து, ஆகமொத்தமாக இரண்டு பேரும் சரியாக படிக்கமாட்டார்கள். 


கொக்கி போடும் தலைப்பு

இந்த ஓசிபேப்பர் ஆசாமிகளையும், செய்தித்தாள் வாங்க வைத்த பெருமை, பத்திரிக்கை தலைப்பு செய்திகளுக்கு உண்டு. மத்திய மந்திரிக்கு சிறை? என்று ஒரு செய்தியை போட்டு, ஓசி பேப்பர் ஆசாமிகளை மாட்டவைத்து விடுவார்கள். வாங்கி படித்துப்பார்த்தால், செய்தியில், விசாரணை என்று, சிறை செல்ல நேரலாம் என்று ஒரு யூகம் மட்டுமே இருக்கும். சினிமா கிசு கிசு கொக்கிகள் அதிகம். 




ஆர்வத்தை முறைகேடாக்குதல்

இந்த செய்தித்தாள் படிக்கும் ஆர்வ பரம்பரையில் வந்த நாம், இக்காலத்திலும் செய்திகளில் ஆர்வமாக இருப்பது இயல்பானதுதான். ஆனால் காலமாற்றத்தில், செய்தி வழங்குனர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் செய்திகளைத் தருவதற்கு பதிலாக, செய்திகளை தந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.  மறைமுகமாக, மனிதர்களின் மனங்களில் ஒரு கிளர்ச்சியை தூண்டி, அதன்மூலம் உணர்ச்சிகளை ஊக்குவித்து, தவறாகவும் எதிராகவும் செயல்பட தூண்டுகிறார்கள். 

சிலவகைகளில் தனக்குச் சாதகமான நாட்டிற்கும், தலைமைக்கும், தலைவருக்கும் ஆதரவாக மக்களை திரட்டி, தங்களின் எதிரிக்கு பலிகடா ஆக்குகின்றனர். இதற்கெல்லாம் ஆதாரம் எளிதில் சிக்குவதில்லை. இது, உடலில் சேர்ந்துவிட்ட மெதுவாக வேலைசெய்யும் விஷம் போலானது ஆகும். அவரவர் கையிலேயே இந்த செய்திகள் சேரும்வகையில் இருப்பதால், அவர்களுக்கும் வேலை எளிதாக ஆகிவிடுகிறது. இப்படியான செய்திகளை தடுப்பதிலும், உண்மை அறிவதிலும் எல்லோருமே சோர்ந்துவிடுகின்றனர்.


மக்களின் செய்திகள்

தனிப்பட்ட நபர்களும், இப்பொழுது யூடுயுப் காணொளி மூலமாக செய்திகள் வழங்கிறார்கள். கைபேசி வழி செய்திகள், காணொளிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. சில வேளைகளில், பெரும் நிறுவனங்கள் காட்டாத, அவர்களுக்கு கிடைக்காத செய்திகளை மிக எளிதாக, இந்த மக்களின் செய்திகள் தந்துவிடுகின்றன. 

சமூக வளைத்தள தனி நபர் செய்திகளும், காணொளிகளும் விதிவிலக்கல்ல.

பேஸ்புக்கும், டிவீட்டரும் ஒரு நாட்டில், அம்மக்களின் கிளர்ச்சிக்கு உதவிசெய்வதை மறுக்கவும் முடியாது. ஆனாலும் இதிலும் பொய்யும் புரட்டும் கலந்திருக்கிறது, கட்டுக்கடங்காமல். 



உங்களை நெருக்கும் செய்திகள் 

நாலாபக்கங்களிலும் வரும் செய்திகள், உங்கள் கழுத்தை அல்ல, உங்கள் மனதை, அறிவை, வாழ்க்கையை நெருக்குகின்றன. உன் கையில் எதிரி வேண்டுமா, கை பேசியில் செய்தி பார், உன் வரவேற்பறையில் எதிரி வேண்டுமா? உங்கள் வீட்டு தொல்லைகாட்சியை பார். சாவகாசமாக ஓய்வு நேரத்தில் எதிரி வேண்டுமா? செய்தித்தாள் படித்துப்பார். 


மனமும் நிம்மதியும்

ஒரு மனிதனுக்கு வாழ்வியல் பொக்கிசம், அவனின் மனம்தான். அது அமைதியாக இருந்தால், அவனுக்கு நிம்மதியும் கிடைக்கும். அவனின் மனம் அமைதியை தேடிச்செல்வதில் ஆர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால் பல வழிகளில் தோல்வியுறுகிறது. 

உனக்கு உன் உன்னளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உள்ளூர் செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாவட்ட அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாவட்ட செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாநில அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாநில செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு தேசம் அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? தேசிய செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு உலக அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உலக செய்திகளை படி, கேள், பார்.

இப்படித்தான், இந்த செய்தி உலகம் நம்மோடு கலந்திருக்கிறது. இதில் ஆபாச செய்திகளும், போதைதரும் விளையாட்டு செய்திகளும் தனி.



செய்திகளை தேர்ந்தெடுங்கள்

அன்பர்களே, உங்களிடம் வந்து, மோதி, குவியும் செய்திகளை பிரித்தெடுங்கள். அதன் தலைப்புக்களில் மயங்காதீர்கள். உங்கள் மகத்தான ஓவ்வொரு நொடியையும், உங்கள் மனம் கெட பயன்படுத்தாதீர்கள். படித்தால், கேட்டால், பார்த்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்று இறங்கிவிடாதீர்கள். ஏற்கனவே நம் மனம் பலப்பல குப்பைகளில் சிக்கி தவிக்கிறது. இன்னும், இனிமேலும் குப்பைகள் வேண்டாம். விழிப்போடு இருங்கள், நிம்மதியோடு இருங்கள். அமைதியாக இருங்கள். வாழ்வியலை அனுபவியுங்கள்.

இயற்கையும், இரவு வானமும், தரும் செய்திகள் மகத்தானவை. அவைகளை படியுங்கள், கேளுங்கள், பாருங்கள். வாழ்க வளமுடன். 

------

Photos thanks to: Marjan Blan l Sierra Koder l Francisco Gonzalez l FreeVector l Google





Incomplete Birth-debt on Life


பிறவிக்கடன் தீர்க்காத வாழ்க்கை


அன்பர்களே, என்னுடைய இணைதள பத்திரிக்கை தேடுதல் என்பது எப்போதாவதுதான் நடக்கும். ஏனென்றால், இத்தளங்களை பார்த்து செய்தியை வாசிப்பது என்பது, தற்போதைய இணையம், அந்தக்கால, மொட்டையான ஆர்வத்தை தூண்டும் துண்டு தலைப்புக்களை போல எழுதி, மீன் புழுவுக்கு ஆசைப்பட்டு கொக்கியில் மாட்டி சிக்கி தவிப்பது போல, நாமும் அந்த இணையதளத்தில் சிக்கி விடுவோம். ஆனால் சில நல்ல தகவல்களும் தருகிறார்கள் என்றும் சொல்லலாம். 


ஓய்வில் உழைப்பு

கடந்த மாதத்தில் அப்படி படித்த, ஒரு இணைதள பத்திரிக்கை ஒரு கட்டுரை படித்தேன். அதில் கிடைத்த செய்தியோடு, என் சிந்தனையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். கோயம்புத்தூரில் இருக்கும், முதியோர் இல்லத்தில், அங்கே இருந்து வாழக்கூடிய பணிஓய்வு பெற்றோர்  ஒரு குழுவாக இணைந்து, பண்பலை வானொலி நடத்திவருகிறார்கள். இதன் மூலமாக அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று அவர்களே சொல்லுகிறார்கள்.

எங்கள் வாழ்க்கை, இப்பொழுது வெறுமனே கழிவதில்லை, எல்லோருக்கும் பயன்படும்வகையில் நாங்கள், ஓவ்வொருவருமே செயல்படுகிறோம்.

இதுவரையில் எங்களின் வாழ்வில், எங்களுக்கு விருப்பமானதை செய்யமுடியாது இருந்தோம், இப்பொழுது அப்படி இல்லை.

எங்களுக்கு பிடித்த விசயத்தை செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் இல்லாமலிருந்தது. தற்பொழுது அதை செய்கிறோம்.

ஓவ்வொருவருக்கும் உள்ள திறமைகளை, வெளிக்காட்ட முடியாமல் அடைத்திருந்தோம். அதை செய்ய தள்ளிப்போட்டோம், அதற்கான கால அவகாசம் இல்லாமலிருந்தோம். கால ஓட்டத்தில் பிறரின் பார்வைக்காக செய்ய தயங்கினோம். இன்று ஓவ்வொருவரும் அத்திறமைகளை வெளியே தருகிறோம். திருப்தியாக இருக்கிறோம்.

இன்று எங்கள் பிள்ளைகளுக்கே, இதுவரை தெரியாத ஒரு முகத்தை அவர்களுக்கு காட்டியுள்ளோம். அவர்களும் பாராட்டுகிறார்கள்.

எங்களைப்போல உள்ள ஓய்வு இல்லத்தில் இருப்பவருக்கும், பணி ஓய்வுக்குப்பிறகு வாழ்க்கை இல்லை என்போருக்கும் உதாரணமாக இருக்கிறோம். சொல்லப்போனால் இளையோருக்கும் உத்வேகமாக இருக்கிறோம்.


எத்தனை கேள்விகள்?!

இந்த உலக வாழ்வியலில் இப்படியான அனுபவ வார்த்தைகள் மிகச்சரியானது என்றுதான் தோன்றும். ஆனால், ஒரு மனிதர் எத்தனை காலம்தான் இப்படியான மிகை உணர்ச்சிகளுக்கும், ஏதேனும் சாதிக்க வேண்டும் என்றும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்? வாழ்நாளில் என்றைக்கேனும் “அமைதி” எனும் நிலை நாட வேண்டாமா? எதுவுமே செய்யாமல், உள்முக ஆராய்ச்சியிலேயே அந்த ஆழ்ந்த அமைதி கிடைக்கிறதே அது வேண்டாமா? உங்களுக்காகவும், உங்கள் குழந்தைக்காகவும், பிறருக்காகவும் வாழ்கிறீர்களே, உங்களை யார் என்று அறிந்தீர்களா? “நான் யார்” என்ற கேள்விக்கான பதிலை தேட முயற்சித்தீர்களா?

ஏன் இந்த பூமியில் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? என்ன நோக்கம் கொண்டு என்னை பெற்றெடுத்தார்கள்? என்ன தேடுதலுக்காக நான் வாழ்ந்தேன்? ஏன் இறை? எது இறை? கோவிலிலா? வீட்டிலா? மலைகளிலா? மலைச்சிகரங்களிலா? எங்கே இறை? நான் யார்? இளமையின் வளர்ச்சியில் நான் ஏன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தேன்? அவர் ஏன் என்வாழ்வில் இணைந்தார்? எங்களுக்கும் ஏன் குழந்தைகள் பிறந்தன? அவர்கள் யார்? எதற்காக பிறந்தார்கள்? இப்படி நீண்டு செல்லும் ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தேட முனைந்தீர்களா?

இத்தனை சித்தர்களும், ஞானியர்களும், மகான்களும் வாழ்ந்து சொல்லிச்சென்றதெல்லாம் பொய்யா? இத்தனை குழப்பங்களுக்குப் பிறகும் மேற்குலகம், மன அமைதியை தேடி இந்தியாவுக்கே வருகிறார்களே அதிலெல்லாம் அர்த்தமில்லையா? சில ஆன்மீக, யோக தலைவர்கள் வெளிநாடு சென்று, அங்குள்ள மக்களுக்கு கற்பிக்கிறார்களே அதெல்லாம் விசயமே இல்லையா?


கட உள் என்பதற்கு கூடவா அர்த்தமில்லை?!

இந்த உலகை, இந்த வாழ்க்கையை, இந்த உலக இன்பங்களை, நட்புக்களை, மனிதர்களை புரிந்துகொள்ள அல்லது உங்களை இந்த உலகுக்கு வெளிக்காட்ட, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் வேண்டும்?! இறக்கும் வரையிலும் “இவள்/ன்” உழைத்தான், திறமையோடு இருந்தான். உதாரண மனிதராக வாழ்ந்தார் என்று சொல்லவேண்டுமா? அந்த வார்த்தைகளை பெறுவதனால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? உங்கள் பகிர்வாக இவற்றைத்தான் உங்கள் பங்காக, இந்த உலகில் விட்டுச்செல்ல வேண்டுமா?



பொதுவான வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கிறது?

நம் எல்லோருக்குமே, நம் பெற்றோர் ஏழையோ, நடுத்தரமோ, பணக்காரரோ என்றாலும், பொதுவான ஒரு வாழ்வு உண்டு. 14 வயதுவரை கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் உண்டு. அதற்கு பிறகு, விளையாட்டுத்தனம் மறைந்து, குடும்ப சூழல் அறிந்து, கல்வி, வேலை, தொழில், வியாபாரம், கடல் கடந்த வேலை அல்லது வணிகள் என்றபடி, நம் எல்லை எல்லைகள் விரிந்துவிடும். கல்வியில் பெற்றோர் துணை செய்தாலும் கூட, வேலை தேடுதல் அவரராகவே தேர்ந்தெடுக்கவேண்டியது இருக்கும்.  பிறகு, வேலை, தொழிலில், வணிகத்தில் ஓரளவு சம்பாத்தியத்தில் நிறைவு பெற்றால், காதல் வழி, திருமணம் வழி வாழ்க்கைத் துணைவர் கிடைத்து விடுவார்கள். சம்பாத்திய நிறைவு இல்லாத காதல் எப்படி இருக்கும் என்று நான் தனியாக சொல்ல  வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இதற்குள் அல்லது இதற்கிடையில் பெற்றோரின் மறைவு, அவர்களை தன்னோடு வீட்டில் வைத்துக்கொள்ளுதல் உண்டு.


ஓய்வை நோக்கி!

இந்த திருப்தி, அதிருப்தி தம்பதியர் கால வாழ்வில், குழந்தைகள் வந்துவிடுவர், பிறகு அவர்களின் வளர்ப்பு, பராமரிப்புக்கு ஆளில்லாமல் கஷ்டம், தன்னுடைய ஓய்வின்மைக்கு நடுவே அக்குழந்தைகளுக்கு கல்வி, உயர்கல்வி, அவர்களுக்கான வேலை தேடுதல், ஆம். இப்போதெல்லாம் பெற்றோர்கள்தான் பிள்ளைக்காக வேலை தேடுகின்றனர். பிறகு அவர்களுக்கான மணமகன், மணமகள் தேடுதல் என்று பரபரப்பாகி வாழ்க்கை ஓடும். இதற்குள் தன் வயது கிட்டதட்ட 55க்கும் மேலே வந்துவிடும். அதாவது பணிஓய்வு (Retirement) நெருங்கிக் கொண்டிருக்கிறது. 


நம் ஓய்வு வாழ்க்கை!

நம் பெற்றோரை நாம் பார்த்ததுப் போன்ற அன்பும், அக்கறையும் இப்போது இருப்பதில்லை. 58/60 வயதில் பணிஓய்வுக்குப் பிறகு, ஓய்வுகால ஊதியம் வந்தால் அவர்பாடு சுகம். இல்லையேல் அவதி. அதோடு இப்பொதெல்லாம் வெகு சீக்கிரமே உடல்நல குறைபாடுகள் தலைதூக்குகின்றன. அதுவும் சிரமமே. இதனால் தன் பிள்ளைகளுக்கு சுமையாக?! மாறிவிடும் வாய்ப்புக்கள் அதிகம். தற்போதைய பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பணிஓய்வுக்கு பிறகு, தன் பிள்ளைகளுக்கு தொந்தரவு தராமல், நல்ல முதியோர் இல்லங்களில், தாங்களாகவே பணம் கட்டி சேர்ந்துவிடுகின்றனர். அங்கே ஏற்கனவே வந்து தங்கி இருக்ககூடிய மற்றவர்களோடு “நல்ல நண்பர்களாக” வாழத் துவங்கின்றனர்.



materialistic vs spiritual

இப்படியான பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்ப வாழ்க்கைதான், பொருள்முதல்வாத உலகியல் வாழ்வு (Materialistic Life) என்று அழைக்கப்படுகிறது. இந்த வாழ்க்கை முறையில் என்ன இழக்கிறோம் என்றால், நாம் இந்த பூமியில் பிறந்ததற்கான காரணம், பிறப்பின் கடமை, நான் யார் என்ற தேடல் ஆகியவை நிறைவு பெறவில்லை. 

ஆனால், பெரும்பாலும் கடவுள் மறுப்பு மிகுந்த இக்காலத்தில் அந்த நாத்திகவாதிகளை விட்டுவிடலாம். சிலரே ஆத்திகவாதிகளாக பக்தி மார்க்கத்தில் திளைத்திருப்பார்கள். அதுகூட என்னால் உத்திரவாதமாக சொல்ல முடியவில்லை. நினைத்தது நடக்கவில்லை என்றால் பக்தி மார்க்கத்திலும் தொய்வு வந்துவிடும்.  அதோடு இந்த உலகில் “இறை வணிகம்” மிக நன்றாக நடக்கிறது. காவி உடுத்திய போலிச் சாமியார்களும் மலிந்துவிட்டனர். அதனால் அவர்கள் அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. 


எனக்கு அவசியமில்லை எனும் கருத்து!

இதில் முக்கியமாக கருதவேண்டியது, இயற்கை குறித்த விளக்கமில்லை என்பதால், இறையை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற சிந்தனைதான். வேதாத்திரி மகரிசி அடிக்கடி இரண்டு உதாரண கேள்விகள் கேட்பார்.

நீங்கள் பசியாற உணவு எடுத்துக் கொள்கிறீர்கள். உணவை எடுத்து வாயில்போட்டு, அரைத்து மென்று முழுங்குவதை தவிர உங்கள் வேலை ஏதும் இல்லை. அவ்வுணவை செரிமானம் செய்து, சக்தியாகவும், ரத்தமாகவும், தசையாகவும் மாற்றுவது யார்வேலை? நீங்கள் செய்தீர்களா? வேறு யாரேனும் செய்தார்களா? இல்லை அரசாங்கம் செய்ததா? சரி இந்த உலகில் மிகப்பெரும் அறிவியல் நிபுணர்களிடம் இரண்டு இட்லியை கொடுத்து, ரத்தமாக, தசையாக மாற்றித்தர கேட்டால், அவர்களாலும் முடியுமா?

இந்த பூமி எவ்வளவு எடை இருக்கும்? கணக்குப்போட்டால் 5.972 × 10^24 kg வரும். சூரியனின் எடை கணக்குப் போட்டால் 1.989 × 10^30 kg வரும். இப்படியே எல்லா கிரங்களுக்கும் போட்டுப்பாருங்கள். இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டிருப்பது எது?  ஒரு எடையுள்ள பொருளை ஒன்று, சும்மா தாங்கி, மிதக்க விட்டுக்கொண்டு இருக்கிறது என்றால், மிதக்கும் பொருள் வலிமையானதா? தாங்கும் பொருள் வலிமையானதா?   



இயற்கையும் இறையும்

இப்பொழுது சிந்தித்துப்பாருங்கள். இது அறிவியல், இயற்கை என்று நீங்கள் வாதிடலாம், இதைத்தான் ஞானிகள் “இறை” என்கிறார்கள். பொதுவாக சொல்லுவார்கள், உண்மையான குருவை தேடுதலில் நீங்கள் ஒரு அடி எடுத்துவைத்தால், அந்த குரு உங்களை நோக்கி இரண்டு அடிகள் எடுத்துவைப்பார். 

இறை சிந்தனையில் தெளிவு பெற, 18 வயது நிரம்பினால் போதுமானது. வாழ்வில் எப்போது நமக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் எழுகிறதோ, அந்த வயதே சிறந்தது. அந்த எண்ணம் எழுவதில், ஒரு காரணமும் இருக்கிறது. திருமணத்திற்கு முன்பே இதில் யோகம் அறிந்துகொண்டால், பிறக்கும் குழந்தை “கருவிலே திருவுடையார்” என மாறலாம்! ஆனால் 60 ஆகியும், நான் இந்த உலகியலில் இயங்கிக்கொண்டே இருப்பேன் என்பது தவறல்ல. ஆனால் உண்மை உணராமல் இருக்கிறீர்களே?! 

இறந்ததும், பிறர் நினைவுகளால் வாழ்வது, இறவாமல் வாழ்வது வேறு. கடந்து உள்ளே அறிந்து, பிறப்புமின்றி, இறப்புமின்றி, எந்நாளும் அழிவின்றி இருப்பது எதுவோ, அதை தன்னிலே அறிந்து இருப்பதும் வேறு. எது உங்கள் தேர்வு?!

------

Photos thanks to: istockphotos, 123RF,  Dreamstime  

Greet Your Children for their Greatness


உங்கள் குழந்தைகளின் மேன்மைக்காக, அவர்களை வாழ்த்துங்கள்!


 
உங்கள் அன்புக்குழந்தை தூங்கும்போது, அருகில் சென்று, மெலிதான குரலில், அன்பாக, திருத்தமாக சொல்லுங்கள். 


ஓவ்வொரு நாளும் திரும்பத்திரும்ப, தினமும் சொல்லுங்கள். அவளது ஆல்ஃபா மன நிலை அதனை ஏற்று, அக்குழந்தையின் ஆழ்மனம் தூண்டப்படும். ஆழ்மனம் தூண்டப்பட்டால் படிப்படியாக படிப்படியாக மாற்றங்கள் நிகழும். உடன்பாட்டு சூழல் தோன்றும். இதை சொல்லச்சொல்ல உங்கள் கண்ணோட்டமும் மாறும். அக்குழந்தையின் மீது உங்களுக்கு நம்பிக்கை உருவாகும். 


உங்கள் பேச்சும், தொனியுமே மாறும். சூழல் மாறும். உங்களின் உயர்ந்த எண்ண அலைகள் அக்குழந்தையை தழுவி அன்பு செய்யும். மனம் மாறும், மாற்றங்கள் நிகழும். வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும். தொடர்ந்து வாழ்த்தி வாழ்த்தி மகிழுங்கள். மாற்றத்தை விரைவில் உணர்வீர்கள். வாழ்க வளமுடன். 



உங்கள் அன்பு மகளுக்கான வாழ்த்து!

---

என் மகளே, நீ வாழ்க. நீ நல்ல முயற்சி உடையவளாக இருக்கிறாய். உடல்நலம் மிக்கவளாக இருக்கிறாய். நல்ல சூழலைப் பெற்றவளாக இருக்கிறாய். நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்.


நன்கு உழைப்பவளாக நீ வளர்கிறாய், வாழ்வில் வெற்றி பெறுகிற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கிறாய். நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பியிருக்கிறது. உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது. நீ அருளாற்றல் பெற்றவளாக நல்லறிவுடனும், நலத்துடனும் வாழ்க வளமுடன்.

----


உங்கள் அன்பு மகனுக்கான வாழ்த்து!

---

என் மகனே, நீ வாழ்க. நீ நல்ல முயற்சி உடையவளாக இருக்கிறாய். உடல்நலம் மிக்கவனாக இருக்கிறாய். நல்ல சூழலைப் பெற்றவனாக இருக்கிறாய். நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்.


நன்கு உழைப்பவனாக நீ வளர்கிறாய், வாழ்வில் வெற்றி பெறுகிற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கிறாய். நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பியிருக்கிறது. உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது. நீ அருளாற்றல் பெற்றவனாக நல்லறிவுடனும், நலத்துடனும் வாழ்க வளமுடன்

---


இவ் வாழ்த்துகளை தினமுமே சொல்லலாம். கூடுமானவரை தொடர்ந்து ஒரு வாரம் (ஏழு நாட்கள்) சொல்லுங்கள். இப்படி வாழ்த்துவதை மாதத்திற்கு ஒருமுறை என்றும் வைத்துக்கொள்ளலாம். உங்கள் செல்லங்களின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தை தரும். நிச்சயமாக பலன் அளிக்கும் உண்மை இது. வாழ்க வளமுடன். 

----

காணொளி வாயிலாக அறியலாம்!

----

Photos thanks to: @Kevin Keith