Incomplete Birth-debt on Life | CJ

Incomplete Birth-debt on Life

Incomplete Birth-debt on Life


பிறவிக்கடன் தீர்க்காத வாழ்க்கை


அன்பர்களே, என்னுடைய இணைதள பத்திரிக்கை தேடுதல் என்பது எப்போதாவதுதான் நடக்கும். ஏனென்றால், இத்தளங்களை பார்த்து செய்தியை வாசிப்பது என்பது, தற்போதைய இணையம், அந்தக்கால, மொட்டையான ஆர்வத்தை தூண்டும் துண்டு தலைப்புக்களை போல எழுதி, மீன் புழுவுக்கு ஆசைப்பட்டு கொக்கியில் மாட்டி சிக்கி தவிப்பது போல, நாமும் அந்த இணையதளத்தில் சிக்கி விடுவோம். ஆனால் சில நல்ல தகவல்களும் தருகிறார்கள் என்றும் சொல்லலாம். 


ஓய்வில் உழைப்பு

கடந்த மாதத்தில் அப்படி படித்த, ஒரு இணைதள பத்திரிக்கை ஒரு கட்டுரை படித்தேன். அதில் கிடைத்த செய்தியோடு, என் சிந்தனையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். கோயம்புத்தூரில் இருக்கும், முதியோர் இல்லத்தில், அங்கே இருந்து வாழக்கூடிய பணிஓய்வு பெற்றோர்  ஒரு குழுவாக இணைந்து, பண்பலை வானொலி நடத்திவருகிறார்கள். இதன் மூலமாக அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று அவர்களே சொல்லுகிறார்கள்.

எங்கள் வாழ்க்கை, இப்பொழுது வெறுமனே கழிவதில்லை, எல்லோருக்கும் பயன்படும்வகையில் நாங்கள், ஓவ்வொருவருமே செயல்படுகிறோம்.

இதுவரையில் எங்களின் வாழ்வில், எங்களுக்கு விருப்பமானதை செய்யமுடியாது இருந்தோம், இப்பொழுது அப்படி இல்லை.

எங்களுக்கு பிடித்த விசயத்தை செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் இல்லாமலிருந்தது. தற்பொழுது அதை செய்கிறோம்.

ஓவ்வொருவருக்கும் உள்ள திறமைகளை, வெளிக்காட்ட முடியாமல் அடைத்திருந்தோம். அதை செய்ய தள்ளிப்போட்டோம், அதற்கான கால அவகாசம் இல்லாமலிருந்தோம். கால ஓட்டத்தில் பிறரின் பார்வைக்காக செய்ய தயங்கினோம். இன்று ஓவ்வொருவரும் அத்திறமைகளை வெளியே தருகிறோம். திருப்தியாக இருக்கிறோம்.

இன்று எங்கள் பிள்ளைகளுக்கே, இதுவரை தெரியாத ஒரு முகத்தை அவர்களுக்கு காட்டியுள்ளோம். அவர்களும் பாராட்டுகிறார்கள்.

எங்களைப்போல உள்ள ஓய்வு இல்லத்தில் இருப்பவருக்கும், பணி ஓய்வுக்குப்பிறகு வாழ்க்கை இல்லை என்போருக்கும் உதாரணமாக இருக்கிறோம். சொல்லப்போனால் இளையோருக்கும் உத்வேகமாக இருக்கிறோம்.


எத்தனை கேள்விகள்?!

இந்த உலக வாழ்வியலில் இப்படியான அனுபவ வார்த்தைகள் மிகச்சரியானது என்றுதான் தோன்றும். ஆனால், ஒரு மனிதர் எத்தனை காலம்தான் இப்படியான மிகை உணர்ச்சிகளுக்கும், ஏதேனும் சாதிக்க வேண்டும் என்றும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்? வாழ்நாளில் என்றைக்கேனும் “அமைதி” எனும் நிலை நாட வேண்டாமா? எதுவுமே செய்யாமல், உள்முக ஆராய்ச்சியிலேயே அந்த ஆழ்ந்த அமைதி கிடைக்கிறதே அது வேண்டாமா? உங்களுக்காகவும், உங்கள் குழந்தைக்காகவும், பிறருக்காகவும் வாழ்கிறீர்களே, உங்களை யார் என்று அறிந்தீர்களா? “நான் யார்” என்ற கேள்விக்கான பதிலை தேட முயற்சித்தீர்களா?

ஏன் இந்த பூமியில் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? என்ன நோக்கம் கொண்டு என்னை பெற்றெடுத்தார்கள்? என்ன தேடுதலுக்காக நான் வாழ்ந்தேன்? ஏன் இறை? எது இறை? கோவிலிலா? வீட்டிலா? மலைகளிலா? மலைச்சிகரங்களிலா? எங்கே இறை? நான் யார்? இளமையின் வளர்ச்சியில் நான் ஏன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தேன்? அவர் ஏன் என்வாழ்வில் இணைந்தார்? எங்களுக்கும் ஏன் குழந்தைகள் பிறந்தன? அவர்கள் யார்? எதற்காக பிறந்தார்கள்? இப்படி நீண்டு செல்லும் ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தேட முனைந்தீர்களா?

இத்தனை சித்தர்களும், ஞானியர்களும், மகான்களும் வாழ்ந்து சொல்லிச்சென்றதெல்லாம் பொய்யா? இத்தனை குழப்பங்களுக்குப் பிறகும் மேற்குலகம், மன அமைதியை தேடி இந்தியாவுக்கே வருகிறார்களே அதிலெல்லாம் அர்த்தமில்லையா? சில ஆன்மீக, யோக தலைவர்கள் வெளிநாடு சென்று, அங்குள்ள மக்களுக்கு கற்பிக்கிறார்களே அதெல்லாம் விசயமே இல்லையா?


கட உள் என்பதற்கு கூடவா அர்த்தமில்லை?!

இந்த உலகை, இந்த வாழ்க்கையை, இந்த உலக இன்பங்களை, நட்புக்களை, மனிதர்களை புரிந்துகொள்ள அல்லது உங்களை இந்த உலகுக்கு வெளிக்காட்ட, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் வேண்டும்?! இறக்கும் வரையிலும் “இவள்/ன்” உழைத்தான், திறமையோடு இருந்தான். உதாரண மனிதராக வாழ்ந்தார் என்று சொல்லவேண்டுமா? அந்த வார்த்தைகளை பெறுவதனால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? உங்கள் பகிர்வாக இவற்றைத்தான் உங்கள் பங்காக, இந்த உலகில் விட்டுச்செல்ல வேண்டுமா?



பொதுவான வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கிறது?

நம் எல்லோருக்குமே, நம் பெற்றோர் ஏழையோ, நடுத்தரமோ, பணக்காரரோ என்றாலும், பொதுவான ஒரு வாழ்வு உண்டு. 14 வயதுவரை கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் உண்டு. அதற்கு பிறகு, விளையாட்டுத்தனம் மறைந்து, குடும்ப சூழல் அறிந்து, கல்வி, வேலை, தொழில், வியாபாரம், கடல் கடந்த வேலை அல்லது வணிகள் என்றபடி, நம் எல்லை எல்லைகள் விரிந்துவிடும். கல்வியில் பெற்றோர் துணை செய்தாலும் கூட, வேலை தேடுதல் அவரராகவே தேர்ந்தெடுக்கவேண்டியது இருக்கும்.  பிறகு, வேலை, தொழிலில், வணிகத்தில் ஓரளவு சம்பாத்தியத்தில் நிறைவு பெற்றால், காதல் வழி, திருமணம் வழி வாழ்க்கைத் துணைவர் கிடைத்து விடுவார்கள். சம்பாத்திய நிறைவு இல்லாத காதல் எப்படி இருக்கும் என்று நான் தனியாக சொல்ல  வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இதற்குள் அல்லது இதற்கிடையில் பெற்றோரின் மறைவு, அவர்களை தன்னோடு வீட்டில் வைத்துக்கொள்ளுதல் உண்டு.


ஓய்வை நோக்கி!

இந்த திருப்தி, அதிருப்தி தம்பதியர் கால வாழ்வில், குழந்தைகள் வந்துவிடுவர், பிறகு அவர்களின் வளர்ப்பு, பராமரிப்புக்கு ஆளில்லாமல் கஷ்டம், தன்னுடைய ஓய்வின்மைக்கு நடுவே அக்குழந்தைகளுக்கு கல்வி, உயர்கல்வி, அவர்களுக்கான வேலை தேடுதல், ஆம். இப்போதெல்லாம் பெற்றோர்கள்தான் பிள்ளைக்காக வேலை தேடுகின்றனர். பிறகு அவர்களுக்கான மணமகன், மணமகள் தேடுதல் என்று பரபரப்பாகி வாழ்க்கை ஓடும். இதற்குள் தன் வயது கிட்டதட்ட 55க்கும் மேலே வந்துவிடும். அதாவது பணிஓய்வு (Retirement) நெருங்கிக் கொண்டிருக்கிறது. 


நம் ஓய்வு வாழ்க்கை!

நம் பெற்றோரை நாம் பார்த்ததுப் போன்ற அன்பும், அக்கறையும் இப்போது இருப்பதில்லை. 58/60 வயதில் பணிஓய்வுக்குப் பிறகு, ஓய்வுகால ஊதியம் வந்தால் அவர்பாடு சுகம். இல்லையேல் அவதி. அதோடு இப்பொதெல்லாம் வெகு சீக்கிரமே உடல்நல குறைபாடுகள் தலைதூக்குகின்றன. அதுவும் சிரமமே. இதனால் தன் பிள்ளைகளுக்கு சுமையாக?! மாறிவிடும் வாய்ப்புக்கள் அதிகம். தற்போதைய பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பணிஓய்வுக்கு பிறகு, தன் பிள்ளைகளுக்கு தொந்தரவு தராமல், நல்ல முதியோர் இல்லங்களில், தாங்களாகவே பணம் கட்டி சேர்ந்துவிடுகின்றனர். அங்கே ஏற்கனவே வந்து தங்கி இருக்ககூடிய மற்றவர்களோடு “நல்ல நண்பர்களாக” வாழத் துவங்கின்றனர்.



materialistic vs spiritual

இப்படியான பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்ப வாழ்க்கைதான், பொருள்முதல்வாத உலகியல் வாழ்வு (Materialistic Life) என்று அழைக்கப்படுகிறது. இந்த வாழ்க்கை முறையில் என்ன இழக்கிறோம் என்றால், நாம் இந்த பூமியில் பிறந்ததற்கான காரணம், பிறப்பின் கடமை, நான் யார் என்ற தேடல் ஆகியவை நிறைவு பெறவில்லை. 

ஆனால், பெரும்பாலும் கடவுள் மறுப்பு மிகுந்த இக்காலத்தில் அந்த நாத்திகவாதிகளை விட்டுவிடலாம். சிலரே ஆத்திகவாதிகளாக பக்தி மார்க்கத்தில் திளைத்திருப்பார்கள். அதுகூட என்னால் உத்திரவாதமாக சொல்ல முடியவில்லை. நினைத்தது நடக்கவில்லை என்றால் பக்தி மார்க்கத்திலும் தொய்வு வந்துவிடும்.  அதோடு இந்த உலகில் “இறை வணிகம்” மிக நன்றாக நடக்கிறது. காவி உடுத்திய போலிச் சாமியார்களும் மலிந்துவிட்டனர். அதனால் அவர்கள் அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. 


எனக்கு அவசியமில்லை எனும் கருத்து!

இதில் முக்கியமாக கருதவேண்டியது, இயற்கை குறித்த விளக்கமில்லை என்பதால், இறையை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற சிந்தனைதான். வேதாத்திரி மகரிசி அடிக்கடி இரண்டு உதாரண கேள்விகள் கேட்பார்.

நீங்கள் பசியாற உணவு எடுத்துக் கொள்கிறீர்கள். உணவை எடுத்து வாயில்போட்டு, அரைத்து மென்று முழுங்குவதை தவிர உங்கள் வேலை ஏதும் இல்லை. அவ்வுணவை செரிமானம் செய்து, சக்தியாகவும், ரத்தமாகவும், தசையாகவும் மாற்றுவது யார்வேலை? நீங்கள் செய்தீர்களா? வேறு யாரேனும் செய்தார்களா? இல்லை அரசாங்கம் செய்ததா? சரி இந்த உலகில் மிகப்பெரும் அறிவியல் நிபுணர்களிடம் இரண்டு இட்லியை கொடுத்து, ரத்தமாக, தசையாக மாற்றித்தர கேட்டால், அவர்களாலும் முடியுமா?

இந்த பூமி எவ்வளவு எடை இருக்கும்? கணக்குப்போட்டால் 5.972 × 10^24 kg வரும். சூரியனின் எடை கணக்குப் போட்டால் 1.989 × 10^30 kg வரும். இப்படியே எல்லா கிரங்களுக்கும் போட்டுப்பாருங்கள். இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டிருப்பது எது?  ஒரு எடையுள்ள பொருளை ஒன்று, சும்மா தாங்கி, மிதக்க விட்டுக்கொண்டு இருக்கிறது என்றால், மிதக்கும் பொருள் வலிமையானதா? தாங்கும் பொருள் வலிமையானதா?   



இயற்கையும் இறையும்

இப்பொழுது சிந்தித்துப்பாருங்கள். இது அறிவியல், இயற்கை என்று நீங்கள் வாதிடலாம், இதைத்தான் ஞானிகள் “இறை” என்கிறார்கள். பொதுவாக சொல்லுவார்கள், உண்மையான குருவை தேடுதலில் நீங்கள் ஒரு அடி எடுத்துவைத்தால், அந்த குரு உங்களை நோக்கி இரண்டு அடிகள் எடுத்துவைப்பார். 

இறை சிந்தனையில் தெளிவு பெற, 18 வயது நிரம்பினால் போதுமானது. வாழ்வில் எப்போது நமக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் எழுகிறதோ, அந்த வயதே சிறந்தது. அந்த எண்ணம் எழுவதில், ஒரு காரணமும் இருக்கிறது. திருமணத்திற்கு முன்பே இதில் யோகம் அறிந்துகொண்டால், பிறக்கும் குழந்தை “கருவிலே திருவுடையார்” என மாறலாம்! ஆனால் 60 ஆகியும், நான் இந்த உலகியலில் இயங்கிக்கொண்டே இருப்பேன் என்பது தவறல்ல. ஆனால் உண்மை உணராமல் இருக்கிறீர்களே?! 

இறந்ததும், பிறர் நினைவுகளால் வாழ்வது, இறவாமல் வாழ்வது வேறு. கடந்து உள்ளே அறிந்து, பிறப்புமின்றி, இறப்புமின்றி, எந்நாளும் அழிவின்றி இருப்பது எதுவோ, அதை தன்னிலே அறிந்து இருப்பதும் வேறு. எது உங்கள் தேர்வு?!

------

Photos thanks to: istockphotos, 123RF,  Dreamstime