Rahu and Ketu - Part 02 | CJ

Rahu and Ketu - Part 02

Rahu and Ketu - Part 02


 ராகுவும் கேதுவும் - பகுதி 2


ராகு கேது என்ற நிழல் கிரகங்கள் ஜாதகனுக்கு என்ன சொல்ல வருகிறது? கடந்த பகுதியில் இந்த கேள்வியோடு முடித்திருந்தோம்...

உன்னுடைய பிறப்பின் நிலை

ராகு கேது என்ற இரண்டு கிரகங்களும் சாயா கிரகங்கள். நிழலாக இருப்பவை ஆனால் தோற்றத்திற்கு சிக்காதவை. என்றாகும் தனக்குள் சிக்கும் கிரகங்களின் சக்தியை தனதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டவை. 12 ராசி கட்டத்தில் எந்த நட்சத்திர கூட்டத்தின் சக்தியை தாங்கி நிற்கிறது என்பதின் வழிகாகவும், எந்த கிரகத்தோடு நின்று, அக்கிரகத்தின் வலுவை குறைக்கிறது என்பதை கண்டால், இந்தப் பிறவியில் நம்முடைய நிலை புரியவரும்!

அதாவது, இந்த பிறவியில் நாம் செய்ய முடிந்தது என்ன? எந்தமாதிரியான வாழ்க்கை முறை என்பதும், என்னமாதிரியான தொழில், வியாபாரம், சேவை செய்து பிழைக்கமுடியும் என்பதும், அது நிலைக்குமா? உயர்த்துமா? நஷ்டத்தை தருமா? நல்ல பெயர் மட்டும் வாங்கித்தருமா? என்பதை அறிந்துகொள்ளலாம்!


பிறப்பின் முந்தைய நிலை

உங்களுடைய முற்பிறவி என்றால், பயப்படாதீர்கள் உங்கள் தாயும், தந்தையும்தான். அவர்களுக்கு முற்பிறவி, உங்கள் தாத்தாவும், பாட்டியும்தான். தனித்த நீங்களே முன்னாடியும் பிறந்ததில்லை, இனிமேலும் பிறக்கப்போவதில்லை. ஆனாலும் ஜென்ம வாசனை என்ற ஒன்று, உங்கள் தாத்தா பாட்டி வழியாகவும், தாய் தந்தை வழியாகவும் உங்களோடு ஒட்டிக்கொண்டு வரும். சிலருக்கு வெளிப்படையாக தெரியும், சிலருக்கு உள்பூர்வமாக இருக்கும் அவ்வளவுதான்.

தாத்தா கர்நாடக சங்கீதம் அறிந்தவரானால், பேத்திக்கு இயல்பாக ராகங்கள் புரிந்துவிடும் என்பது இப்படித்தான். 

இப்படியான நிலையை, அதாவது தொக்கி நிற்கிற நிலையை ஒரு ஜாதகனுக்கு ராகு கேது கிரகங்கள் காட்டுகிறது. தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் உங்களுக்கும் முரண்பாடா? பாட்டிக்கும் தாயாருக்கும் உங்களுக்கும் ஒட்டுறவா? அதையும் தெளிவாக காட்டும்.


நண்பர் கூட்டும், வாழ்க்கை துணையும்

உலகில் பிறந்த உங்களுக்கு, துணையாக இருப்பவர்கள் என்றால், முதலில் இருப்பவர்கள் உங்களுக்கு முன்னே, பின்னே பிறந்த சகோதர சகோதரிகள் ஆவார்கள். அவர்களுடன் உங்கள் உறவு எப்படி என்பதும் ராகு கேது காட்டும்!

வீட்டைக்கடந்த துணை என்றால் பள்ளித்தோழமையும், பக்கத்துவீட்டு நண்பர்களும் ஆகும். அவர்களோடு உங்கள் உறவு என்ன என்பதும் ராகு கேது காட்டும்.

இந்த நவீன கால, முகம்பாரா நட்பாக மலரும், சமூக வலைத்தள நட்பும், அவை நல்லதோ, கெட்டதோ என்றாலும் கூட இந்த ராகு கேது அந்தந்த இடங்களில் நின்று காட்டிடும் என்பதே உண்மை.

உங்கள் பிற்கால வாழ்க்கை முழுவதும், திருமணம் வழியாக இணையும் துணை எப்படிப்பட்டவர்? எத்தகைய வாழ்வுக்கு துணை இருப்பார்? அவரால் உயர்வா? தாழ்வா? பிரச்சனைகளா? தீர்வுகளா? என்பதையும் இந்த ராகு கேது கிரகங்கள் காட்டுகின்றன!


ராகு கேது வலிமையாக உள்ளதா?

சூரியன் நமக்கு ஆத்மகாரகன். சூரியனாலேயே உலகம் தோன்றி, உயிர்களும் மலர்ந்தது. இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அத்தகைய சூரியனையே சூழும் ராகுவும் கேதுவும், சூரியனின் சக்தியை பிடிங்கிக்கொண்டு விடுகிறதே?!

சக்தி இழந்த சூரியன் உச்சமானலும், ஆட்சியானாலும் ஜாதகனுக்கு உதவ முடிவதில்லையே? ஜாதகனின் தந்தையை பழிவாங்குகிறதே? அப்பனுக்கும் மகனுக்கும் இடையில் நல்ல உறவு தரமறுக்கிறதே? ஜாதகனின் தொழிலை, வியாபாரத்தை கெடுக்கிறதே? அரசனாக இருக்கும் சூரியனுக்கே தடைபோடும் நிலையில், மற்றகிரங்கள் பற்றி சொல்லவா வேண்டும்?


ராகு கேதுவின் இத்தகைய வலிமைக்கு காரணம் என்ன?

ராகுவும் கேதுவும் வலிமையானதே, காரணம், ராகுவும் கேதுவும் “மூலத்தில் இருந்து” வந்தவை. எது இந்த சூரியனையும், பூலோகம் உட்பட எல்லா கிரகங்களையும், நட்சத்திர கூட்டங்களையும் தாங்கி நிற்கிறதோ அத்தகைய மூலத்தின் ஒரு சிறு இயக்க பகுதிதான் இந்த ராகுவும், கேதுவும். ஏன் இயங்குகிறது என்றால், இயங்கிக்கொண்டிருக்கிற சூரியனில் இருந்துதான் ராகுவும் கேதும் இயங்குகிறது என்ற உண்மை தெரியவரும்! சிலருக்கு புதிதாக இருக்கலாம் ஆனாலும் உண்மை இதுவே!


ராகு கேதுவின் வீச்சு என்ன?

நிச்சயமாக அளவிடமுடியாத நிலையில்தான் இந்த ராகு கேது கிரகங்களின் வீச்சு இருந்து கொண்டிருக்கிறது. ஓரிடத்திலிருந்து கிளம்பி, இந்த பிரபஞ்சம் முழுதும் கூட, அப்பிரதக்‌ஷிணமாக அதாவது கடிகார சுற்றுக்கு எதிர்திசை சுற்றாக சுழன்று வருகிறது! நீளமாக இருப்பதை குறிப்பிட “கயிறு” என்று சொல்லுவார்கள். அந்த கயிருக்கு உயிர் வந்தால் அசையுமே? அதனால் அதை “பாம்பு” “நாகம்” என்று நமக்கு முன்னோர்கள் குறிப்பால் உணர்த்தினார்கள். 

யாராலும், எதனாலும் கட்டுப்படுத்த முடியாத தன்மையை கொண்டது இந்த ராகு கேது கிரகங்கள். இவற்றோடு ஒரு ஜாதகன், மோதுவதும், திருப்தி செய்வதும், பரிகாரம் செய்வதும் பலன் தராது. ஒரே வழி சரணாகதி தான்!


ஒரே வார்த்தையில் ஜாதகனின் நிலை!

ஒரு ஜாதகனின் கட்டத்தில், கிரக நிலைகளை ஆராய்ந்து, அவை நின்ற சாரபலன் தேடி, உபசார பலன் தேடி, பல கணக்குகள் போட்டு, பாட்டாக பாடி பலன் சொல்லுவதை விட, ராகு கேது ஆகிய இரண்டு கிரங்களின் நிலை அறிந்து, இந்த ஜாதகனுக்கு, இந்த உலகில் பிறந்தற்கான தேவை என்ன? என்ன செய்யப்போகிறான்? எப்படி பிழைக்கப்போகிறான்? என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியும்!


மனித பிறப்பின் ரகசியம் அறிவோம்!

இந்த உலகில் மனிதப்பிறப்பு ஒரே ஒரு முறை நிகழ்வதுதான். ஆனால் ஏன் ஜென்ம வாசனையை பெற்றுக்கொண்டு, கர்மா என்கிற வினைப்பதிவை தாங்கிக்கொண்டு பிறந்து வாழ்கிறோம்? இன்பமே நிறைந்த இவ்வுலகில், திருப்தி இல்லாமல், எல்லாவகையிலும் துன்பப்பட்டு, உயர்ந்தும், தாழ்ந்தும் வாழ்ந்து மடிவதின் அர்த்தம் என்ன?

மனிதன் தன் மூலம் மறந்துவிட்டான். “நான் யார்?” என்ற தேடலை தொலைத்துவிட்டான். பிறவிக்கடமையை மறந்து வாழ்ந்து கொண்டிருப்பதின் மூலம், பிரச்சனைகளை தன் முதுகில் ஏற்றிக்கொண்டான். இறக்கிவைக்க முடியவில்லை. தாத்தா, அப்பன், மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று இத்தனை வடிவம் எடுத்தும் “நான் யார்?” என்று கேட்பதற்கு அவகாசம் இல்லை.

நீயாக கேட்கிறாயா? அல்லது கேட்கவைக்கட்டுமா? என்பது தான் ராகு கேது ஆகிய கிரகங்களின் பாணி! உங்களுக்கு புரிகிறதா? புரிந்தால் எனக்கும் மகிழ்ச்சி!

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்!