Why today spiritual world is crowed by Masters?
மாணவர்களை விட ஆசிரியர்கள் நிறைந்திருக்கின்ற வகுப்பறை போல ஆகிவிட்டதே இந்த ஆன்மீகம்? சரிதானா?
வாழ்க வளமுடன் ஐயா! மாணவர்களை விட ஆசிரியர்கள் நிறைந்திருக்கின்ற வகுப்பறை போல ஆகிவிட்டதே இந்த ஆன்மீகம்? சரிதானா?
பதில்:
ஒருவகையில், இப்போதைய சூழல், நீங்கள் சொல்வதைபோலத்தான் இருக்கிறது. ஒருவகையிலி இது நல்லதுதான். அந்த அளவிற்கு, நம் மக்களுக்கு வழிகாட்டக்கூடிய, நம்பிக்கை அளிக்கக்கூடிய அன்பர்கள் இருக்கிறார்கள் என்பதும், அவர்களின் தேவை சராசரி மக்களுக்கு உதவவும் கூடும் என்பது உண்மைதானே? இதில் சிக்கல் என்னவென்றால், எது சரியானது? என்பதை தேர்ந்தெடுப்பதுதான்.
பொதுவாகவே, நாம் விளம்பரங்களால் கவரப்படுவோம். விளக்கின் நெருப்பை, ஒளியென்று கருதி தேடிச்செல்லும் விட்டில் பூச்சிகள் போலவே. அதில் தப்பி வரவும் பெரும் முயற்சி தேவைப்படும். என்னுடைய அனுபவத்தில், ஒரு அன்பர் சொன்னதை அப்படியே தருகிறேன். அந்த அன்பர், தன்னுடைய பள்ளிக் காலங்கங்களியே, கடவுள், தெய்வம், இறைவன் என்பதில் நல்ல தெளிவான விளக்கம் பெற்றிருக்கிறார். கோவிலுக்கும், ஆலயங்களுக்கும் சென்று, வழிபட்டு கேட்டால் மட்டும் எதுவும் கிடைத்துவிடாது என்ற கருத்தில், உண்மையாக இருந்திருக்கிறார். அதை பிறரிடம் சொல்லியும் இருக்கிறார். ஆனால், இறை என்ற ஒன்று இருக்கிறது என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதை நம்புகிறார். பகுத்தறிவு வாதம் என்று சொல்லி, இல்லவே இல்லை என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. இறையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இந்த வேண்டுதல், வழிபாடு, கொண்டாட்டம், திருவிழா இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அவசியமில்லை என்பது அவரின் சொந்தக் கருத்து.
இந்த நிலையில், விவேகானந்தர், அவரின் குரு ராமகிருஷ்ணர், சாரதாதேவி அம்மையார் இப்படி பலரின் யோக வாழ்வையும் படித்தும், சொல்லக்கேட்டும் அறிந்துகொள்கிறார். இந்த வரிசையில், பல யோகிகளையும், மகான்களையும் அறிகிறார். நம்முடைய குரு வேதாத்திரி மகரிஷியையும் கூட. ஆனால் உடனடியாக ஏற்கவில்லை. பத்தோடு பதினொன்றான போலிச்சாமியாரா? என்று ஆராய்கிறார். சிலரிடம் கேட்டும் தெரிந்து கொள்கிறார். வேதாத்திரி மகரிஷி எழுதிய நூல்களையும் வாசிக்கிறார். நல்ல ஆராய்ச்சி முடிவுக்குப் பிறகுதான், சரி அவரின் அமைப்புக்கு போய்தான் பார்க்கலாமே? என்று ஒருநாள், மனவளக்கலை வகுப்புக்கு சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு கிடைத்த தகவல்களின் உண்மைத்தன்மையின், அடிப்படையில்தான், அங்கே உறுப்பினராக, அதுவும் உடனடியாக சேர்ந்து உயர்ந்திருக்கிறார்.
இப்படியான தெளிவான பார்வை, ஒவ்வொரு அன்பருக்கும் இருக்கவேண்டியது அவசியமாகும். இவர் சொன்னார், அவர் சொன்னார், இவர் இணைந்துவிட்டார், அவர் இணைந்துவிட்டார் என்று நாமும் சிக்கிக் கொள்ள அவசியமும் இல்லை. உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்லுகிறது? என்பதை நிதானித்து பிறகு முடிவு செய்யுங்கள். ஆன்மீகம் சொல்லுகிறேன் பேர்வழி என்று, இந்த வழவழா குளகுளா என்று கிராமங்களில் சொல்லிவார்களே அதுபோல, வழுக்கி தப்பிக்கிற ஆசாமிகளிடம் சிக்கிக் கொள்ளாத தெளிவு வேண்டும். உங்கள் முடிவே சரியானது.
ஒரு கேள்விக்கும், விளக்கத்திற்கும், மூன்று நிமிடத்திற்கு மேல், விசயத்திற்கு வராமல், எதை எதையோ மேற்கோள் காட்டிக்கொண்டே இருந்தால், நீங்கள் அந்த இடத்தில் இருப்பதில் அர்த்தமே இல்லை. இந்த நூலில் அப்படி இருக்கிறது, அந்த நூலில் அப்படி இருக்கிறது, இவர் அப்படி சொல்லியிருக்கிறார், அவர் இப்படி சொல்லி இருக்கிறார். என்று இழுத்துக்கொண்டே போகிற ஆசாமிகளின் கைகளில், நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். அவர் பிடித்தாலும் கையை எடுத்து விலக்கி விட்டு ஓடி வந்துவிடுங்கள். அவர் அனுபவத்தில் இருந்து, உங்களுக்கான பதிலும், விளக்கமும் தருகிறாரா? என்பது மிக முக்கியமானது. போலியான முகமுடியை போட்டுக்கொண்டு, உங்களை அணுகும் ஆசாமிகளை, இனம் கண்டு கொள்வதில் கவனமாக இருங்கள். அதுபோலவே, எப்போதுபார்த்தாலும் தன் குருவின் புகழ்பாடும் ஆசாமிகளும் பிரச்சனைக்குரியவர்களே! இவர்கள் சொந்தக்கருத்துக்கு இடம் கொடுக்கவே மாட்டார்கள். உங்களையும் தருவதற்கு இடம் கொடுக்கமாட்டார்கள்.
ஆனாலும், இன்றைய மக்களுக்கு புதிது புதிதாக ஏதேனும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்ற காரணத்தால், புதியது சிறப்பானது என்ற மயக்கம் வந்துவிட்டது. அந்த மயக்கம் அவர்களின் அனுபவத்தாலே விளக்கமாகும். நீங்கள் சிக்கிக் கொள்ளாமல், முன்னதாகவே ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள். எனினும், இத்தகைய ஆன்மீக வளர்ச்சியை நான், மனதார பாராட்டுகிறேன். விரும்புகிறேன்.
வாழ்க வளமுடன்.
-