Oh God, don't you have any mercy? Part 01
இறைவா, உனக்கு இரக்கமே இல்லையா?!
கடவுளே இல்லை என்ற மாற்றுக்கருத்து கொண்டவர்கள், இந்த கட்டுரையையும், எழுதுபவனையும் கூட புறம் தள்ளி விடலாம். அவர்களுக்கு இந்த விளக்கம் அவசியமற்றது. ஒரு வார்த்தைக்காக, ‘இறைவனே’ என்று எழுதினால் கூட, ஆண்பாலாக சொல்லுகிறாய், இதை எதற்கு நான் படிக்கவேண்டும் என்று தூர தள்ளும் ‘அதி மேதாவிகளுக்கும்’ இக்கட்டுரை தேவையில்லை. அப்படியானால் யார் படிக்கலாம்? இறை என்பது என்ன? என்ற தேடுதலும், அதன் உண்மை அறிய விருப்பம் உள்ளவர்களும், யோகத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்களும் வருக, நீங்கள் தொடரலாம்.
உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது இந்த வார்த்தையை சொல்லி இருக்கிறீர்களா? இல்லவே இல்லை என்று மறுத்தால், உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தகூடும். எனவே பிறர் அறியாமல், ஏற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லை. ஏன்? இப்படியான வார்த்தையை, இறையை நோக்கி, வானத்தை நோக்கி, ‘என்மேல் இரக்கமே இல்லையா?’ என்று கேட்க ஆரம்பிக்கிறோம்? கவனிக்கலாமா?
காலம் காலமாக, வழிவழியாக இறை என்ற தெய்வீக தன்மையை, நாம் அறிந்திருக்கிறோம். அறிந்து என்பதை விட தெரிந்து வைத்திருக்கிறோம் என்று சொல்லலாம். நம்முடைய தாய் தந்தை வழியாக, தாத்தா பாட்டி வழியாக நிச்சயமாக வந்துவிடும். ஆனால், தமிழ்நாட்டில், ஒவ்வொரு குடும்பத்திலும் கிட்டதட்ட மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக, இந்த இறை நம்பிக்கை அவசியமற்று போய்விட்டது. அதனால் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற மாற்றத்தையும் நாம் அனுபவித்துக் கொண்டுதான் வருகிறோம்.
ஒரு குடும்பத்தின் பரம்பரை உறுப்பினர்கள் வழியாக, பக்தியும், வழிபாடும், அதில் ஒழுங்கும், ஒழுக்கமும் குழந்தை பருவத்தில் இருந்தே கிடைக்கிறது. பக்தி தேவையா? என்று கேட்டால், வேதாத்திரி மகரிஷி ‘அவசியம்’ என்றுதான் சொல்லுகிறார். காரணம், குழந்தையை அதன் இயற்கை தன்மையோடு பொருந்தி வளர்வதற்கும், சமூகத்தின் நன்மைக்கும், உயர்வுக்குமான வழக்க பழக்கங்களை பெற்று, தனக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிக்காத விழிப்புணர்விக்கும் ‘பக்தி’ அவசியமே என்று சொல்லுகிறார். ஆனால், அங்கே இன்னொரு தொடர் விளக்கத்தை தருவதை மறந்துவிடக்கூடாது.
எதுவரை பக்தி அவசியம்? இறை என்பது என்ன? என்ற கேள்வி எழும்வரை அவசியமானது. இந்த இறை என்பது என்ன என்று தேடவேண்டுமானால், யோகத்திற்கு வந்துவிட வேண்டும். ஆனால், நம்முடைய வாழ்நாள் முழுவதும் நமக்கு பழக்க தோசத்தில், பக்தியே போதுமானதாக இருந்துவிடுகிறது. யோகத்திற்கு வருவதற்கு நிறைய முட்டுக்கடைகள், தடைகள், தடுமாற்றம், யோசனைகள் உண்டாகிவிடுகிறது. எளியமுறை குண்டலினி யோகம் இருப்பதையும் மறந்துவிடுகிறோம். ஆனால் வேதாத்திரியர்கள் அப்படியல்ல. தானாக யோகத்தில் ஆர்வம் கொண்டு பயணிப்போரும் அப்படியல்ல.
என்றாலும் கூட, பக்தி என்ற பழக்கதோசம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவிடவில்லை என்பது தான் உண்மை. என்னய்யா, இப்படி சொல்லுகிறாயே? என்று நீங்கள் கேட்கலாம். மறுக்கலாம். ஆனால் உண்மையாகவே சொல்லுகிறேன். இன்னும் பக்தியின் மயக்கம் நமக்கு, நம்மை விட்டு நீங்கிவிடவில்லை. இதில் ஆரம்பகால வேதாத்திரி மகரிஷியும் சிக்கித்தான் இருந்தார். ஆனால், பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் வழியாக, அந்த மயக்கத்தில் இருந்து விடுபட்டு, உண்மை தெளிந்தார் என்பதை ‘ஞானக்களஞ்சியம்’ கவிதைகள் வழியாக நாம் தெரிந்துகொள்ள முடியும்.
‘சரிய்யா, இப்போ அதுல என்ன பிரச்சனை? அதைச்சொல்லு’ என்கிறீர்களா? எழுகின்ற பிரச்சனைக்கே நாம் தான் காரணம் என்கிறேன் நான். ஆனால் நாம் அதை நம்பத் தயாராகாமல், இறை மேல் பழியைப் போட்டு. ‘ஏன்னையா இப்படி என்னை சோதிக்கிறாய்? உனக்கு இரக்கமே இல்லையா?!’ என்று இங்கேதான் ஆரம்பிக்கிறோம். சரியா? உண்மைதானே?
‘ஏன்னையா இப்படி என்னை சோதிக்கிறாய்? உனக்கு இரக்கமே இல்லையா?!’
என்று நம்மிடமிருந்து ஒரு கதறல், புலம்பல், வேதனை வந்தால் என்ன அர்த்தம்? அதில் இருக்கும் உண்மை என்ன? விளக்கம் என்ன? என்று அறியலாமா? அடுத்த பதிவில் அறியலாமே!
