How can we understand that God and Brahmmam are? Does it really matter? Is it necessary to accept that?
இறை என்பதும் பிரம்மம் என்பதும் எப்படி விளங்கிக் கொள்வது? உண்மையாகவே இருக்கிறதா? அப்படி ஏற்றுக்கொள்வது அவசியம் தானா?
உங்கள் அடிப்படை சந்தேகத்தை விளக்கக்கூடிய கேள்வி என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் உதவக்கூடிய விளக்கமும் கிடைக்கும் என்பதும் உண்மை. ஏற்கனவே இந்த கேள்வியின் அடிப்படையில், விரிவாக விளக்கம் தந்துள்ளேன். அதை, இங்கே தேடிப்பார்த்து படித்து அறியலாம். இன்று கூடுதலாக, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி விளக்கித்தருகிறார் என்றும் பார்க்கலாம்.
இறைநிலை உணர்ந்த அறிவு, வாழும் எல்லா மனிதர்களுக்கும் வேண்டும். அது அவசியமும் கூட. காரணம், அதில் அவனுடைய பரிணாம எழுச்சியின் உண்மை மறைந்திருக்கிறது. மற்ற ஜீவன்களில் இருந்து, எந்த வகையில் அவன், ஆறாம் அறிவின் உன்னதத்தை பெற்றிருக்கிறான் என்ற காரணம் உள்ளடங்கி இருக்கிறது. அது அவனுடைய பிறவிக்கடமையாகவும், பிறவியின் நோக்கமாகவும் இருக்கிறது. இதை தெரிந்து கொள்ளாமல் போனாலும், உதாசீனப்படுத்தி விலகிக் கொண்டாலும், யாருக்கும் ஏதும் இழப்பு இல்லை. ஆனால், பிறந்த அந்த மனிதனின், பிறப்பு ‘வீணாகி விடுகிறது’. எனவே, அறிந்து உணராமல் மடிந்துவிடுவது, அவனுக்கே இழப்பாகிறது. அந்த இழப்பு, அவனுடைய வாரீசுகளுக்கும் தொடர்ந்தால் என்னாவது?
இந்த நிலையில், ஒரு மனிதன் அவனின், பிறவி நோக்கமும், பிறவிக்கடமையும் தெரிந்து கொண்டால் என்னவாகும்? ‘நான் யார்?’ என்று தெரிந்து கொண்ட பிறகு, கிடைக்கக்கூடிய அந்த ‘முழுமை இன்பம்’ அனுபவமாக மட்டுமே கிடைக்கக்கூடியது. ஒருபோதும் வார்த்தைகளால், எழுத்துக்களால் விளக்கித்தர முடியாது. எனினும், வேதாத்திரி மகரிஷி அதுகுறித்த விளக்கத்தை, உங்கள் அளவிற்கு தருவதை, இதோ காணலாம்.
பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீகக் கருவூலம் மனித பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப்போற்றப்படுகிறது. அதுவேதான், இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடையதாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.
இது விரைவு, பருமன், காலம், தூரம் எனும் நான்கு கணக்குகளுக்கும் உட்படாதது. இம்மாபெரும் ஆற்றலிலிருந்து தான் பரமாணுவெனும் நுண்ணியக்கத் தூள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்து பேரணு, செல்கள், பல உருவத் தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவுத் தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிணாமம் தான், ‘பிரம்மம்’ எனும் தெய்வீகப் பேரற்றாலின் சரித்திரம்.
மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற் பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளன. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாகக் காணக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் ஆகும். இத்தகைய அறிவுதான் இறைநிலையுணர்ந்த அறிவு. அறிவாகவும், அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்மஞானம் ஆகும்’ என்ற வகையில் உண்மை விளக்கமளிக்கிறார், வேதாத்திரி மகரிசி.
இந்த உண்மைகளை, தன் வாழ்நாளில் அறிந்து உணர்வதற்காகவே பிறவியெடுக்கிறான். ஆனால் பிறந்த பிறகும், வாழும் நிலையிலும், அதை மறந்துவிடுகிறான். எல்லாவற்றையும் மறுத்தும் விடுகிறான். அதோடு மடிந்தும் விடுகிறான்.
வாழ்க வளமுடன்.