ராஜேஷ் வைத்தியா
திருச்சியில் ஒரு திருமண வரவேற்பு விழாவிற்கு ஒரு நண்பரின் அழைப்பின்பேரில் செல்ல நேர்ந்தது. வழக்கமான ஆடம்பர நிகழ்வு. உள்ளே நுழைந்ததுமே வீணைவாத்திய இசை ஒலித்தது. அரங்கு முழுதும் குளிர்பதனமிட்டிருந்ததால் வெளியே நிசப்தமாக இருந்திருக்கிறது.
வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யா சில திரைப்பாடல்களை வாசித்துக்கொண்டிருந்தார். இப்படியான ஒருவிழாவில் இசையை ரசிப்பதற்காகவும் ஒரு கூட்டம் வருமென்று நம்பி, நிறைய இருக்கைகள் போட்டிருக்க, அவற்றில் ஒரு சிலரே அமர்ந்து அந்த பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தனர். நானும் அதில் ஒருவனாக இருந்தேன்...
ஓவ்வொருபாடலாக நான் வரிசைப்படுத்தவில்லை. ஆனால் இந்த கட்டுரை எழுதத்தூண்டிய பாடலுக்கு முன்பு வாசித்தபாடல்களை மட்டும் சொல்லிவிடுகிறேன். தன் பாணியில்...
ஆறிலிருந்து அறுபதுவரை - திரைப்பட பாடலான ”கண்மணியே காதல் என்பது...”
அடுத்து
கரகாட்டகாரன் - திரைப்பாடலான “இந்தமான் உந்தன் சொந்தமான்...” இதனை அடுத்து... இசைத்த அந்த பாடலின் ஆரம்ப இசை, ராஜேஷ் வைத்தியாவின் கீபோர்ட் கலைஞர் வாசிக்க ஆரம்பித்ததும், எனக்கு சிலிர்ப்பாகியது... கிட்டதட்ட மறந்துவிட்ட அந்தபாடல், அதோடு கூடிய நினைவலைகளை எனக்குள் மீட்டியது... ராஜேஷ் வைத்தியாவின் வீணை இசை.
வெள்ளைரோஜா - 1983
“வாவ்” மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். அந்தப்பாடலை கேட்டதும் வேறெதும் தோன்றாமல் வெறுமனே அந்த இசையை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்... அந்தபாடல் இதுதான்....
“சோலைப்பூவில் மாலை தென்றல் பாடும் நேரம்...” எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி ஆகியோர் பாடிய பாடல்...
ராஜேஷ் வைத்தியா அதற்குபிறகு என்னை அந்த 1983 ஆண்டுக்கு அனுப்பிவைத்துவிட்டார்... நிகழ்வில் என்ன அடுத்துவாசித்தார் என்பது நினைவிலில்லை.
வெள்ளை ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் அது. மறுநாளே இந்தபாடல் குறித்து கூகுளில் தேடினேன், உடனே யூடியுப் சென்று, அந்த பாடல் காட்சியை இயக்கினேன். நடிகை ராதாவும், நடிகர் சுரேஷும் ஒரு பூங்காவில் இந்தபாடலை பாட தயாராகினர். சட்டென நிறுத்தி, இந்த பாடலின் ஒலி வடிவம் இருக்குமா என்று தேடி, அதை என் கணிணிக்கு எடுத்துக்கொண்டேன். நல்லவேளையாக இந்த திரைப்படம் அந்த 1983 லேயே நான் பார்க்கவில்லை. இந்த காட்சியையும் பார்த்து என் உன்னத கற்பனையை அழித்துக்கொள்ள விரும்பவில்லை.
இன்றும் அந்தபாடல் பற்றிய தகவல்கள் முழுமையாக இல்லை எனினும் எனக்கு கிடைத்த தகவல் இது.... பாடலாசிரியர் வாலி. இயக்குனர் ஏ. ஜெகன்நாதன், அந்தக்கால இலங்கை வானொலி தமிழ்ச்சேவை ஒன்றும், இரண்டும் இந்த திரைப்பாடல்களையும், வசனங்களையும் ஒலிபரப்பிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
பாடலை படிக்கவிரும்புவோர் இங்கேசெல்லவும்
http://thenkinnam.blogspot.in/2011/02/blog-post_2688.html
1983ல் நான்...
1983... இந்த திரைப்படம் வெளிவந்த வருடத்தில் என்வயது 13, பள்ளி இறுதியாண்டு மாணவன். திரைப்படம் மட்டுமின்றி, கொஞ்சம் உலக விசயங்களும் அறிந்துகொண்டிந்த காலம் அது. தினத்தந்தி நாளிதழ் வழக்கமாகவும், தினமும் மாலை நூலகம் சென்று நூல்கள், கட்டுரை இதழ்கள், தனி விருப்ப உறுப்பினர் நூல்களும் படித்துக்கொண்டிந்தகாலம்.
இந்தபாடலோடு தொடர்புடைய, இதே திரைப்படபாடலான “தேவனின் கோவிலிலே யாவரும்..” நடிகர் திலகத்திற்காக, மலேசியா வாசுதேவன் பாடிய பாடலின், ஆரம்பத்தில்...
“உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்” வரிகள் தனிப்பாடலாக இருக்கும். நூலகத்தில் சில நூல்கள் தேடி புரட்டும் வேளையில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றிய அறிமுக நூல் ஒன்றும் கிடைத்தது. அதில் சில பாடல்களை அங்கேயே படித்துக்கொண்டிருந்தபொழுது இந்த பாடலின் வரிகள் காணக்கிடைத்ததில் மகிழ்ந்தேன். ஆனால் வேதாத்திரி மகரிஷின் முழுமை 1990ம் ஆண்டு இறுதிகளில்தான் எனக்கு கிடைத்தது
இளையராஜா...
இந்த 1980 ஆண்டுக்காலங்களில் இளையராஜாவின் இசை மிக உயரங்களை அடைவதாக இருந்தது.
இசை
இளையராஜா
என்று எங்கே தோன்றினாலும் கரவொலி ஒலிக்கும். இளையராஜாவின் பாடல்களில் இருக்கும் இசை நுணுக்கங்களை, சுகா, கலைச்செல்வன், விஜி கனெக்ட், இன்னும் பெயர் நினைவில்லாத பலர் சமூக வளைத்தளங்களில் குறிப்பிட்டுச்சொல்லும் பொழுது, இந்த நுணுக்கங்களையெல்லாம் அந்தந்த பாடல்கள் வெளிவந்த நாட்களிலேயே நானும், என் அரை, குறை காதுகளை வைத்து கேட்டு அனுபவித்திருக்கிறேன், இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை இங்கே நான் தெரியப்படுத்துக்கொள்கிறேன்.
இளையராஜாவின் இசைகுழுவிலிருக்கும் இசைகலைஞர்களையும் இப்பொழுது அறிந்துகொள்ள முடிகிறது. அவர்களில் சிலரை என் நண்பர்களாகக்கூட இணைத்திருக்கிறேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்று ஏற்புதந்திருக்கிறார்கள்... பேஸ்புக் என்ற சமூக வலைத்தளத்தில்....
இசை கேட்டல்
இந்த “சோலைப்பூவில் மாலை தென்றல் பாடும் நேரம்...” இன்று கேட்கும் பொழுது, இன்னமும் சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது. என் கணிணியில் பாடல் ஒலிக்க நிறைய பிளேயர்கள் இருந்தாலும் நான் தேர்வு செய்திருப்பது...
Jet Audio...
5.1 என்கிற நம்மைச்சுற்றி ஒலிக்கும் முறையிலிருந்து மாறி, வழக்கமான “ஸ்டீரியோ” வாக கேட்கவேண்டும் என்று அலைந்து, இறுதியாக
Edifier 2.1 மியூசிக் சிஸ்டம் முறைக்கு மாறி இந்த பாடலை கேட்கிறேன்.
வானொலி, டேப் ரிக்கார்டர், ஒற்றை, இரட்டை ஸ்பீக்கர்களில் நான் கேட்டு மகிழ்ந்த இந்த பாடல் இப்பொழுது வேறுமாதிரி ஒலிக்கிறது, காரணம் “Jet Audio” தரும் சிறப்பு ஒலி அமைப்பு. பாஸ்கிதார் மற்றும் பாஸ் தொடர்பான ஒலிகளை தனியே பிரித்து பெரிதுபடுத்தி தருவதாக அமைந்திருக்கிறது.
பாடல்
இந்த பாடலை இங்கே கேளுங்கள். உங்கள் வாழ்வின் முந்தைய காலகட்டத்திற்கு பைசா செலவில்லாமல் சென்றுவாருங்களேன்...
http://tamiltunes.com/ilayarajas-evergreen-hits-207-songs.html
இதன் தொடர்ச்சியாக அடுத்தும் எழுத நினைக்கிறேன்...