Day after Woe | CJ

Day after Woe

Day after Woe


இனிமேல் என் நண்பரின் தாயாரிடம்,  பேசுவதற்கும், என் தோல்வி வெற்றிகளை பகிர்ந்துகொள்ளவும் இனி இயலாது. தன் மகனின் கூட்டாளியாக இருந்தாலும், தன் மகன்களில் ஒருவனாக பொதுவாக நடத்தி, கண்டித்து, அறிவுரை சொல்லி, ஆலோசனை கேட்டு தன் சோகங்களைகளை இறக்கிவைத்தும் வந்தவர் ஒரு புதன்கிழமை தன் உடலை விடுத்துப்போனார்.  
கடந்த வாரத்தில் நிகழ்ந்த இந்த சோகத்தை ஆற்றுப்படுத்த மெனக்கெட வேண்டியிருந்தது. அதற்கு மூன்று நாள்முன்புதான் ஒரு திருமண நிச்சயத்திற்கு சென்றவன், உடல் நலமில்லாதிருந்த அவரை பார்த்து பேசிவிட்டு வந்தேன். அவர் இனி இல்லை, இல்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு மேல் என் வீட்டில் இருந்ததை விட என் நண்பரின் வீட்டில்தான் என் ஓய்வு நேரங்களை கழித்திருக்கிறேன். சில நாட்களில் அங்கெயே தங்கி மறுநாள் கூட என் இல்லம் சென்றிருக்கிறேன். என் பெற்றோரைத்தவிர, இவர்களையும் என் அம்மா, அப்பா என்றேதான் அழைத்துவருகிறேன். என் நண்பரின் இல்லம் அது என்று எனக்குத்தான் எண்ணம் ஓடுமே தவிர நண்பரோ, அவரின் பெற்றோரோ எந்த வித்தியாசமும் செய்துகொள்வதில்லை. அந்த வீடு எப்போதும் நண்பர்களால் சூழப்பட வீடு. கேலிக்கும், விளையாட்டுக்கும், பரபரப்புக்கும் என்றுமே குறையிருந்ததில்லை.

“எங்கே இவன்?” என்று யாராவது என்னை என் வீட்டாரிடம் கேட்டால்,
“அவன்” வீட்டுக்கு போயிருப்பான் என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் சுட்டிக்காட்டக்கூடிய நிலையில் என் நடவடிக்கை இருந்துவந்திருக்கிறது...

வாழ்வில் பொருள் தேடலும், சமூக கடமைகளும் ஓவ்வொருவராக தூக்கியடிக்க, நண்பர்கள் திசைக்கொன்றாக சிதறிப்போயினர். நானும் கூடவே! அந்த இல்லம் நீண்டகாலம் அமைதியாக இருந்தது. நண்பரின் தாயாரும், தகப்பனாருமாக இருவர்மட்டுமே இருந்தனர். விருந்தும், சில விழாக்காலங்களும் தன் பிள்ளைகளோ, அவர்களின் நண்பர்களோ வந்துபோகும் இடமாக மாறியிருந்தது. கால சுழற்ச்சியில் வயோதிகமும்வர தமக்குத்தாமே உதவியாக வாழ்ந்துவந்தனர்...

சென்றமாதத்தில் நண்பரின் தாயார் உடல் நிலை மிக மோசமான நிலையிலிருக்க, உடனடியாக மருத்துவ உதவிகிடைக்காமல்  தாமதமாகி, தற்செயலாக வந்த நண்பர்கள் மூலமாகவும், உறவினர்கள் மூலமாகவும், தன் அபாய கட்டத்தை தாண்டி வீட்டிற்குவந்தவரை சென்ற ஞாயிறு அன்று இல்லத்தில் சந்தித்தேன். வயோதிகம் எப்படியெல்லாம் ஆளைமாற்றுகிறது என்று மனதிற்குள் திகிலடித்தவாறே, தொண்டையிலிருந்து வார்த்தைவராமல்  விக்கித்து எதோ பேசுகிறேன்.
“ஒன்னும் முடியலை, எதோ பரவாயில்லை. ஆனா, சாப்பிட்டது எல்லாம் வாயில் எடுத்துவிடுகிறது” என்றார் அம்மா.
அப்பாவோ, “என்னப்பா செய்யறது. பாரு எனக்கும் இப்படி இருக்கவேண்டியதா இருக்கு” என்றார். அப்பாவுக்கும்கூட கடந்த வருடத்தில் அறுவை சிகிச்சை வரை சென்று, தப்பித்திருப்பதையும் சொல்லியாகவேண்டும். இப்படி கேட்டதும் என்னால் அங்கே நீண்ட நேரம் இருக்கமுடியவில்லை. மனம் முழுவதும் வேதனையும், சோகமும் அப்பியது. அப்போதும் நாங்கள் மேல் சிகிச்சைக்காக ஆட்டோ முலமாக, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டுத்தான் என் இல்லம் திரும்பினேன்.

புதன்கிழமை காலை என் நண்பர் அழைக்கிறார். வழக்கான தொழில்நுட்ப தகவலுக்காகவோ, கருத்துபரிமாற்றத்துக்கோ என்றெண்ணி அவரிடம் பேசுகிறேன்...
ஒரே வார்த்தையாக “அம்மா இறந்துட்டாங்க” என்று சொல்லி நிசப்தம் செய்தார். கையிலிருந்த எல்லாவேலைகளையும் அப்படியே வைத்துவிட்டு, மதிய உணவையும் தவிர்த்து, என் அலுவலக நண்பர்களிடம் தகவலை சொல்லிவிட்டு பேருந்தில் பயணிக்கிறேன்.

பேருந்து முன்னொக்கிச்சென்ற அந்த இரு மணி நேரமும், என் நினைவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கிச்சென்றன. வீடு சென்றடைகையில், ஒரு கண்ணாடி பெட்டிக்குள் அம்மா. அருகில் சோகமாக அப்பா அமர்ந்திருந்தார்.
சற்று நேரத்திற்கும் முன் இருந்தவரை, நான் “இரண்டு நாளுக்கு முன்தானே பார்த்து பேசிவிட்டுப்போனேன்” என்றும் முட்டாள்தனமாக பேசி கலங்கினேன்...

அடுத்தும் ஆகவேண்டிய வேலைகள் பிறரால் தயாராகின்றன. வாழ்வில் ஒரு இறப்பு, நம் கன்னத்தில் அறைந்துவிட்டு “போடா போ, ஆகவேண்டியது நிறைய இருக்கு” என்று முதுகில் தட்டியும் கொடுக்கும். அன்றைய நாளோடு இறந்த, அவருக்கான இந்த வாழ்வின் அடையாங்கள் எல்லாமே முடிவுக்கு வந்துவிடுகிறது, இனி பிறரிடம் ஞாபகங்கள் மட்டுமே மிச்சமாயிருக்கும்.

வழக்கமான சடங்குகளுக்குப்பின் அம்மாவை அக்னிக்கு தின்னக்கொடுத்து வீடு திரும்புகிறோம். வீட்டில் விளக்கேற்றி வணங்கியபின் குளித்துவிட்டு, எல்லோருக்கும் உணவுபரிமாறுகிறார்கள். என்னையும் அழைக்கிறார்கள். நான் தவிர்க்கிறேன். தவிர்ப்பதைப்பார்த்து அப்பாவும் உண்ண அழைக்கிறார். அப்போதும் மறுக்கிறேன்.

“இந்த வீட்டில் அம்மா அல்லவா உணவுபறிமாரியாகவேண்டும்?!” எண்ணிக்கொண்டே, அப்பாவுக்குத்தெரியாமல் என் இன்னொரு நண்பரோடு பேருந்து நிலையம்வந்து என் இல்லம் திரும்புகிறேன்...

இனி என்ன?

“முடிந்தது. இதோ சூரியன் மேற்கே நகர்ந்து கொண்டிருக்கிறான். நம்மால் செய்யமுடிந்தது ஏதுமில்லை” ஜி.கே!