You-are-sexiest
முதன்மையாக பேஸ்புக்... எனக்கு இரண்டு பெயர்களில் கணக்கு இருக்கிறது. Caricaturist Sugumarje, Sugumarje Caricaturist என்று மட்டுமே. என் ஓவியங்களும், என் கருத்துக்களும், பின்னூட்டங்களும் இதில் வலம் வந்துகொண்டிருக்கிறது... எனக்குப்பிடித்த கருத்துக்கள் இருந்தால் அதை என் பக்கங்களில் பகிர்ந்துகொள்வதும் உண்டு... நான் ஓவியன் என்பதால், என் ஓவிய நண்பர்கள், வளரும் ஓவியர்கள் எனக்கு தன் ஓவியங்களை தெரிவிப்பார்கள். அதில் என் கருத்துக்கள் இடம்பெறும்.
66A தீவிரமாக்கப்பட்ட பிறகு என் கருத்துக்களை பல முறை சோதனை செய்தபிறகே பதிப்பது வழக்கம். நான் ஓவியராக இருந்தபோதும் அரசியல், தனிமனித நையாண்டி தவிர்த்துவருகிறேன்... பொதுவாகவே சிரிப்பை மறந்த நம் மனிதர்களுக்காக, மனதை பாதிக்காத வகையில் கேலி, கிண்டல் செய்து பின்னூட்டமும், தகவலும் தருவது என் வழக்கம். ஆனபோதிலும் அதை தவறாக சுட்டிக்காட்டினால் அதை அழித்துவிடவும் தயங்குவதில்லை.
சமூக வலை என்பதால், எந்த நாட்டினரும் நம் நண்பராகும் சாத்தியம் நிறைவேறுகிறது. அப்படி சில பெண் நண்பர்களும் என் நட்புவட்டத்தில் இருக்கிறார்கள். பாலுணர்வை தூண்டும் எந்த பதிவையும் நான் செய்ததில்லை. சில் நண்பர்கள் ஒருசில அரைகுறை பதிவு போட்டால் அதையும் அவர்கள் பக்கமே கேலி செய்வதுண்டு. முரண்பாடான படங்களோ, கருத்தோ என் நட்புக்களில் காணப்பட்டால், என்னை தொடரும் பெண் நண்பர்களுக்கும் பாதிக்குமே என்பதால், அதை சுட்டிக்காட்டி திருத்தமுயல்வேன். இல்லையேல் என் நட்புவட்டத்திலிருந்து நீக்கிவிடுவேன். அப்படியான ஒருவரை என் நட்பாக இணைப்பதும் இல்லை.
ஒரு பெண் நண்பர் தன் ஒளிப்படங்களை பதிவிட்டபோது, வழக்கம்போலவே வேடிக்கையாக...
“உங்கள் முகம் தெளிவில்லாமல் இருக்கிறது?!”
“நீங்கள் ஏன் நல்ல போட்டோகிராபரை தேர்ந்தெடுக்க கூடாது?”
“இதில் அழகாக இருக்கிறீர்கள்!”
“இந்த போட்டொவில் இருப்பது நீங்களா? அடையாளமே தெரியவில்லை”
இப்படியெல்லாம் பின்னூட்டமிட்டிருந்தேன்... இந்த வாரத்தின் முதல்நாள் அந்த பெண் நண்பர் தன் பக்கத்தில் பதிக்கிறார்...
“சிலர் என் ஒளிப்படத்தில் எனக்குப்பிடிக்காத சிலவற்றை பின்னூட்டமிடுகின்றனர். எது சொன்னாலும் சந்தேகம் அவர்களுக்கு... நான் இறைவனை வணங்குகிறேன்... இனிமேல் அவர்கள் என் ஒளிப்படங்களின் மீது ***** ***** நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இனிமேல் இப்படி செய்தால் அவர்களை நீக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. என் தனிவாழ்க்கையில் நுழைய இவர்கள் யார்?
**** ***
இப்படி சொன்னதிற்கு மன்னிக்கவும்!”
இதற்கு நான் “இப்படி செய்வது வருந்ததக்க ஒன்று... அவர்களை நீக்கிவிடுங்கள்” என்றேன்..
அதற்கு அவர் “இந்த கூட்டத்தில் நீயும்தான் இருக்கிறாய்... இதை சொல்ல வருத்தமாக இருக்கிறது” என்றார்.
இதை படித்தவுடன், நான் “சரி, இனி இவரிடமிருந்து விலகிக்கொள்ளலாம்” என்று முடிவு செய்து, அந்தப்பக்கம் இனி போகக்கூடாது என்று முடிவெடுத்தேன்...
ஒரு அரைமணிக்குப்பிறகு என் தகவல் பலகைக்கு, அந்த பெண் நண்பரே பேச ஆரம்பித்தார்...
என் மீது குற்றச்சாட்டை அடுக்க ஆரம்பித்தார்.... கடைசியாக... “நட்பாக இருப்பதென்றால் இரு, இல்லையேல் வெளியேறு” என்றார்...
“சரி. இனிமேல், இந்த நொடிமுதல் நான் உங்கள் நண்பரில்லை. வணக்கம்” சொல்லிவிட்டு அவரை எந்தகாரண,கருத்தும் சொல்லாது என் நட்புவட்டத்திலிருந்து நீக்கிவிட்டேன்....
கடைசியாக அவர் சொன்னது இதுதான் - “You are a Sexiest!"