Ask a boon | CJ

Ask a boon

Ask a boon


சென்னையிலிருந்து பல்லவன் தொடர் வண்டியில் திருச்சி வந்துகொண்டிருக்கிறேன். மதிய வேளையில் கிளம்பி இரவு திருச்சி வந்து பின்னிரவில் காரைக்குடி வரை செல்லுமாறு நீடிக்கப்பட்டிருக்கிறது... எப்பொதும் நான் தேர்வு செய்வது சாளரம் சார்ந்த இருக்கை... வண்டியின் விரைவில் முகத்தில் மோதிதள்ளும் காற்று தரும் அனுபவம் விட்டுவிட முடியுமா?

என் இருக்கைக்கு அருகே, ஒரு இளைஞன் (டி சர்ட், ஜீன்ஸ்), எதிரே ஒரு பெண் (மடிப்பு பிசகாத சேலை), ஆண் (பேண்ட், முழுக்கை சட்டை).. இடதுபக்கம் நடைபாதைக்கு அப்புறத்தில் இரு பெண்கள் (சாதா பட்டு சேலை), அவர்களுக்கு எதிர் இருக்கையில் இரண்டு ஆண்கள் (கதர் சட்டை வேட்டி). பெண்கள் இருவரும் கிட்டதட்ட ஐம்பதை நெருங்குபவர்களாக இருக்கும். ஆண்கள் அறுபது தொடக்கமாக இருக்கலாம்,

நானாக பேச்சை தொடங்கும் வழக்கம் எனக்கில்லை என்பதால்... என்னை ஆளைவிடுங்கப்பா என்று நினைத்து, என் ஓவிய காகிதங்கள் எடுத்து வெறுமனே வரைந்து பழக ஆரம்பித்தேன். கதர் சட்டை வேட்டியில், கனத்த ஒருவர் “யாரையடா கலாய்க்கலாம்” என்றபடி துறுதுறுத்தது எனக்கு புரிந்தது... தங்களுக்கிடையேயான வியாபாரம் குறித்து இன்னொரு கதர் சட்டை வேட்டியிடம் புலம்பியவாறு வந்தார். இடையே தொடர்வண்டி ஊழியர்கள் விற்கும் சில திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுக்கொண்டனர். அதை எங்கள் எல்லோருக்கும் பகிர நினைக்கையில் எல்லோரும் மறுத்துவிட்டோம்.

தொடர்வண்டி வேகமெடுத்திருந்தது... “என்னாய்யா இது, என்னமோ விழுந்த வீடு மாதிரியா ஊருக்கு போறது, கலகலன்னு பேசி சிரிச்சிக்க வேணாமா?” என்று பேசிக்கொண்டே... என் அருகில் இருந்த இளைஞரை கேட்டார்...
 “என்ன திருச்சிக்கா தம்பி?”
 “ஆமாங்க”
 “படிக்கிறீங்களா?”
 “இல்ல, வேலைக்கி போயிட்டுருக்கேன்... லீவ்க்கு ஊருக்குபோறேன்”
 “எவ்வளோ சம்பளம்?”
நான் குரலாக கேட்டுக்கொண்டிருக்க, எல்லோரும் அந்த உரையாடலை கவனிப்பது புரிந்தது...
 “மாசம் 7500 ரூபாய்”
 “போதுமா?”
 “பத்தாதுதான்... இனி போகப்போக ஏறும்”
 “நம்பலாமா”
 “அப்படித்தான் சொல்லிருக்காங்க”
 “என்ன படிச்சீங்க?”
 “இஞ்ஜினியரிங்”
 “எவ்வளவு செலவாச்சு?”
 “கிட்டதட்ட ஐந்து லட்சரூபா”
 “ஹ்ம். பேசாம அத பேங்கல் போட்டு, நீ தள்ளுவண்டி தள்ளி சம்பாதிச்சா கூட மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கலாமே?!”
 கேட்ட எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்... இளைஞனின் முகமோ தொங்கிப்போக, இந்த ஆள் கிட்ட எதுக்குடா வாய் கொடுத்தோம் என்றிருந்தது...
கதர் சட்டை வேட்டி, எல்லோரையும் பார்த்து...
 “ஏங்க, சிரிக்கிறதுக்காக இத சொல்லலீங்க... நிலவரத்தை சொன்னேன், தம்பி தப்பா நினைக்காத, நாங்கல்லாம் வியாபாரிங்க, எங்களுக்கு காசு போட்டா, காசு வரணும் அவ்வோளோதான் தெரியும்... நல்லா நீயும் யோசிச்சாகூட இதுல இருக்கிற உண்மை புரியும்... அப்புறம், நீங்களும் திருச்சி  தானா?”
 எதிரே அமர்ந்திருந்த இருபெண்களை நோக்கி கேட்டார்.
 “நாங்க ஸ்ரீரங்கம்”
 “அதென்னா, அதும் திருச்சீலதானே இருக்கு”
 மீண்டும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்...

நகைச்சுவை வழியாக பிறரை கவர்தல் என்பது அவருக்கு வாய் வந்த கலையாக இருக்கும் என்பது தெரிந்தது... இதற்கிடையில் அந்த இளைஞன், எழுந்து வாசல் அருகே நின்று ஓடுகிற மரங்களையும், மலைகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

ஓவொருவராக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே, என்னை நோக்கி, என்னிடம் அதே கேள்வியை கேட்டார்...
 “நான் ஓவியர்”
 “அதான் என்னை ஆளை விடுங்கடான்னு, அப்போ இருந்து என்னமோ பேப்பர்ல கிறுக்க  ஆரம்பிச்சிட்டீங்க, பார்த்தென்... தனி உலகத்திலே இருக்கிறவங்க ஆச்சே”
 நான் புன்னகைத்தேன்...
 “ஓவியம்ன்னா என்னமாதிரியான ஓவியம்?”
 “உங்களை வரைந்தே காட்டிவிடுகிறேன்”
 “பார்த்தீங்களா... நாமலாம் வாய் வலிக்க பேசினா, இவரு பேசாம, ஓவியம் வழியா பேச போறாரு”

கொண்டுவந்திருந்த ஓவிய அட்டையில், கரித்துண்டு (Charcoal) மூலமாக அவரை கேரிகேச்சராக (Caricature) செய்தேன்... ஒரு நிமிடத்திற்குள்ளாக வரைந்து அவரிடம் தந்தேன்.
 “நானா இது... எவனோ மாதிரி இருக்கு?!”
 “அப்படித்தான் உங்களுக்கே தோன்றும்”
 “ஓஹோ... சரி வரைஞ்சி கொடுத்திட்டீங்க... இதை வச்சி என்னா பன்றது?”
எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
 நானும் அவரை நோக்கி புன்னகைத்தேன்...

 மனதிற்குள் “நீங்கள் ஒரு கழுதையாக இருக்கும்பட்சத்தில் அந்த காகிதத்தை சாப்பிடலாம்” என்று சொல்லிக்கொண்டேன்.
 “ஒரு ஓவியத்தை என்ன செய்வது என்று கேட்பவருக்கு, நான் ஓவியம் தந்தது தப்புத்தான்... அதை கொடுங்க”
 “அட, ஏன் தம்பி கோச்சுகிறீங்க... உங்க ஞாபகமா வச்சிக்கிறேன்... நன்றி”
 “நல்லது”

 அதற்கடுத்த உரையாடல்களை கவனிக்காது, ஓவியத்தில் நான் கவனம் இழந்தேன். அடுத்து என்ன பேசினார் என்பது என் காதுகளை தூண்டவில்லை... இப்படி இருக்கும் சில சாமனியர்களுக்கு, அந்த கடவுளே கூட கண்ணுக்கு தெரிவதில்லை... ஆனாலும் இத்தகைய மனிதர்களை நான் குறை சொல்லுவதற்கில்லை...

நான் தியானம் கற்றுணர்ந்தபொழுது... அன்பொளி மாத இதழில் படித்தது...

வேதாத்திரி மகரிஷியிடம்...
 “ஐயா, பிறவிப்பயன் போக்க, தன் பிறப்பை உணர்ந்து, தவமியற்றி தன்னை தூய்மை செய்துகொள்ளும் வாய்ப்பாக நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். ஆனால் இது அறியாமல் வறுமையிலும், இது பற்றி ஒன்றுமே அறியாத ஒரு குடியானவன் இருக்கிறானே, சொன்னாலும் உதாசீனம் செய்கிறானே அவனை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது... என்ன செய்வது” என்று கேட்க...
 “இந்தபிறவியில் நீங்கள் உங்களை தூய்மை செய்துகொள்ளவேண்டும் என்பது உங்களுக்கு கிடைத்த வரம். அந்த குடியானவனுக்கு அது இன்னமும் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில் கிடைக்கலாம், அல்லது அவன் வழி வருவோருக்கு கிடைக்கலாம். அவனை அப்படியே விட்டுவிடுதல் நலமே”

நான் ஓவியத்தை மதிக்காதவர்களையும் அப்படியே விட்டுவிடுகிறேன்...