Let Do Art | CJ

Let Do Art

Let Do Art


ஓவியர் அரஸ்

Click the Image, See Bigger View

என் பதின்ம வயதுகளில் தன் ஓவியங்களால் என்னை வசீகரித்தவர். அழகாக வளைந்து நெளியும் கோடுகளாலும்,  வண்ணங்களை வீசி மேலும் அழகு சேர்த்து, கதைக்கு மேலும் மெருகூட்டி அக்கதையை படிக்கத்தூண்டுவார்...

எத்தனை எத்தனை ஓவியங்கள் இன்னமும் என் கண்ணுக்குள்ளே சுழன்றோடுகின்றன. இவர் ஓவியங்களில் ஆண்கள் ஏறக்குறைய “ரஜினி”சாயலிலும், பெண்கள் “ராதா” சாயலிலும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்...

அந்தக்காலம் என்பது சற்றேறக்குறைய முப்பதாண்டு காலம் முன்னேதான். ஒரு ரசிகன் தூர நின்றுதான் தன்னை தன் மனம் கவர்ந்தவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள இயலும், சில வேளைகளில் அதும் நிறைவேறாது... என் வாழ்வில் அப்படி யாரையும் நான் நேரடியாக சந்தித்தது இல்லை... பேஸ்புக், டிவீட்டர் வந்தது... கொஞ்சம் நெருங்கி நான் உங்கள் ரசிகன் என்று அவர்களுக்கு தெரியப்படுத்த முடிகிறது.

நான் முழுநேர ஓவியனாக மாறுவதற்கு முன்னால், சில அடிப்படை ஓவியம் பழக “அரஸ்” அவர்களின் ஓவியங்களை பார்த்து வரைந்திருக்கிறேன். வண்ணங்களும் நிறைத்து பழகியிருக்கிறேன்... ஆனால் எனக்கென நினைத்தபோக்கில்...  ஒரு ஓவியனின் கடினகாலப்பகுதி தனக்கென ஒரு பாணி உருவாக்கும் காலமே... பழகும் காலத்திலேயே இதை கவனத்தில் கொண்டால் சீக்கிரமே தன் பாணியை தக்கவைக்கலாம்...

அந்த பதின்வயதுகளில் நான் ஓவியத்தை பொழுதுபோக்காகவும், நண்பர்களுக்கு வரைந்து தருவதாகவும், சிறு குழந்தைகளை மகிழ்விப்பதற்க்காகவுமே நான் ஓவியம் வரைந்துகொண்டிருந்தேன்... நான் முழுநேர ஓவியனாக மாறிப்போனது அதிசயமே...

நான் அதிசயித்த ஒரு ஓவியரை, நான் வரைந்து என்னை அறிமுகப்படுத்துகொள்வென் என்பதும் ஒரு அதிசய நிகழ்வே...

நான் வருத்தப்படும் நிலை ஒன்றை இங்கே தெரியப்படுத்துகிறேன்... கிட்டதட்ட மூன்று தலைமுறைகள், என்காலத்தில் கிடைத்த ஓவிய அனுபவத்தை இழந்து திரிகின்றனர்... இது இந்தியாவின் சாபக்கேடு... ஓவியம் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு கூட மிகச்சரியாக ஓவியம் குறித்த அறிவும், அனுபவமும் இல்லாதிருக்கிறார்கள். தாத்தாவிற்கு ஓவிய அறிவில்லை, அதனால் பிள்ளைக்கும் இல்லை, பிள்ளைக்கு இல்லாததால் அவர் பேரனுக்கும் இல்லை... ஆக பேரனுக்கு இல்லாததால்...

வெளிநாடுகளில் 16 வயதிற்குள்ளாக இருக்கும் இளைஞர்கள், மிக திறமையாக ஓவியங்கள் கற்று தேர்ந்து, அதற்கான அறிவைப்பெற்று, அனுபவ ஓவியருக்கு நிகராக, ஓவியங்களை வரைந்து வெளியிட்டு, வேலையையும், விற்று பணத்தையும் பெற்று, தான் தனக்கு பிடித்தவேலையில் ஈடுபட்டு மிக நிறைவாக வாழ்வதை, கொஞ்சம் வலையில் தேடினால் கண்டுபிடிக்கலாம்...

மனம் நிறைவில்லாத நிலையில், பக்குவம் கிடைபதில்லை... எங்கே பார்த்தாலும் ஒரே சண்டைக்காடு... தானும் நிம்மதியின்றி பிறரையும் நிம்மதியின்றி கெடுத்து, கெட்டொழுகின்றனர்...

பிறக்கும் பொழுது எல்லோரும் ஓவியரே... ஆனால் அதை காப்பாற்றி தொடர்ந்து முயற்சி செய்பவரே ஓவியராகிறார்... நவீன ஓவிய பிதா “பிக்காசோ” சொன்னதாகும்...

உங்கள் பிள்ளைக்கு ஓவியம் பிடிக்கும், அவன் வரைகிறேன் என்று சொன்னால். அவனுக்கு ஒரு காகிதத்தையும், வரைகோலையும் கையில் கொடுங்கள்... உங்களுக்கு ஓவியம் தெரியுமென்றால், அவனுக்கு கற்றும் கொடுங்கள்... இல்லையேல் அவனிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்...