Why stopped to draw human faces - Part 02 | CJ

Why stopped to draw human faces - Part 02

Why stopped to draw human faces - Part 02



ஒரு ஓவியன், கண்களால் பார்ப்பதைமட்டுமே வரைவதில்லை. அவனின் பார்வை அளவில் சிக்கிய, அவனுக்குமட்டுமே முக்கியமாகப்படும் விசயத்தையோ, பொருளையோ மையப்படுத்தி, இயல்பாக அங்கே கிடைக்கும் வெளிச்சம், நிழல் ஆகியவற்றை கவனித்து, அதில் கூடுதலாக ‘இன்னும் என்ன செய்யலாம்?’ என்ற சிந்தனை தெளிவோடு வரைவான்.

காட்சிப்பொருளை வரையாது, தன் மனதிற்குள் எழுவதை வரைகிறேன் என்ற, மாடர்ன் ஆர்ட் ஓவியர்கள் இதில் சிக்கமாட்டார்கள். அவர்கள் தனி உலகம்.

இத்தனை காலமாக, நான் ஒருபோதும் இயற்கை காட்சிகளையோ, தெரு, நகரம் இப்படியான காட்சிகளையோ வரைந்ததில்லை. அதில் நிறைய நுணுக்கங்களை சேர்க்கவேண்டியதிருக்கும் என்பதால், அதற்கான பொறுமை என்னிடமில்லை.  ஒரு ஓவியத்தை நீண்ட நாளாக வரைந்துகொண்டே இருக்கும் பழக்கமும் என்னிடமில்லை. அதோடு நாம் உழைத்தால், அதற்கான பலன் கிடைக்கவேண்டுமேயன்றி, சும்மா ‘எனக்கும் வரையத்தெரியும் என்பதற்கோ, இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வரைந்தேன்’ என்று பெருமையடித்துக்கொள்வதற்கும் நான் வரைவதில்லை. ஒரு ஓவியம் வரைந்தால் அது எனக்கு என்ன கொடுக்கும் என்பதில் எனக்கு அக்கறை உண்டு. எனவே, நான் ஒரு ஓவியன் என்பதை வெளிக்காட்டுவதற்காக வரைந்த ஓவியங்களைத்தவிர வேறெந்த ஓவியமும் நான் வரைந்து வைத்துக்கொள்வதில்லை. சில நண்பர்களுக்கு சும்மாவேணும் நட்புக்காக வரைந்து கொடுத்ததுண்டு, இன்னமும் அப்படி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இதனால், கேட்பதை வரைந்து தருகிறேன் என்றவகைக்கு வந்துவிட்டேன். ஒரு நிறுவனம் மூலமாக வரையும் வேலைகளும், தனி நபர் வேலைகளும் நீண்டகாலமாக செய்துவந்தேன். அவ்வப்போது அதற்கான வருமானமும் வந்துகொண்டிருந்தது. நீங்கள் யார்? என்றால் நான் ஒரு ஓவியர் என்று பதிலளிக்கமுடிந்தது. இதைத்தவிர வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள்? என்ற அர்த்தமில்லா கேள்விக்கு என்னால் புன்னகைக்க முடிந்தது.

நிறுவனம் மூலமாக கிடைக்கும் வேலைகளில் 10:2 என்ற அளவில் திருத்தங்கள் வரும். அந்த திருத்தங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால், திருத்திக்கொடுப்பதுண்டு. சில இப்படித்தான் அந்த ஓவியத்தில் வரையமுடியும் என்ற நியாயமான விசயத்தை சொல்லி புரியவைப்பதும் உண்டு. தனி நபர்களில், என் ஆரம்ப காலங்களில் வரைந்து தருவதை, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்கள் 50:50 மட்டுமே.

முக்கியமாக, தனி நபர் கேட்கும் திருத்தங்களை கவனித்தால், அவர்களுக்கு ஓவிய அறிவு கொஞ்சமும் இல்லை என்பது தெரியவரும். அடுத்தவருடைய ஓவியத்தைப்பார்த்து “அப்படியே நிஜமாக இருக்கு, அருமை” என்பவர்கள் தன் முகம் வரைந்தால்மட்டும் “வேறே யாரோ மாதிரி இருக்கு” என்று ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். அதோடு தோலின் நிறம், நிழலின் அடர்த்தி, வெளிச்சத்தின் பாதிப்பு இவைகளும் பெரும் குறையாக அவர்களுக்கு தோன்றும். 

ஒருவருடைய முகத்தை வரைய பல நுட்பமான வழிகள் உள்ளன. இதில் கணித சமன்பாடுகளைக்கூட உபயோகப்படுத்தலாம். நான் அதிலும் சில வழிகளை தேர்ந்தெடுத்தே, கோட்டு ஓவியம் வரைந்து, அவர்களிடம் காட்டி, உங்கள் முகம் போல இருக்கிறதா? என்று கேட்டுவிட்டே அடுத்த நிலைக்கு செல்வது வழக்கம்.  கோட்டு ஓவியம் அருமை என்று பதில் தந்துவிட்டு, கடைசியில் என் முகம் இல்லை என்று சண்டைபோடுவது பெரும்பாலோரின் வழக்கம். சரி, எனக்கு இது பிழைப்பு, நீ பணம் தருகிறாய் எனவே, திருத்தங்கள் தருகிறேன் என்று அவர்கள் சொல்லுகிறவகையில் திருத்தி வரைந்து அனுப்பிவைப்பேன்.

ஒரு முகம், வெளிச்சத்தில் ஒருமாதிரியும், அதிகவெளிச்சத்தில் ஒருமாதிரியும், லேசான வெளிச்சத்தில் ஒருமாதிரியும் இருப்பது உண்மை. எனக்கு அவர்கள் அனுப்பிவைக்கும் ஒளிப்படத்தைக்கொண்டே, மாதிரி எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. எனவே அதில் என்ன அளவில் ஒளியும், நிழலும் இருக்கிறதோ அதைத்தான் ஓவியத்தில் கொண்டுவர முடியும், ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்வதில்லை. 

ஓவியத்தில் எல்லாம் முடித்தபிறகு, இன்னொடு ஒளிப்படத்தை உடனே அனுப்பி “இதைபாருங்கள், நான் இப்படித்தான் இருப்பேன், நீங்கள் வரைந்தது நான் அல்ல” என்பார்கள். அப்படியானால் முந்தைய ஒளிப்படத்தில் இருப்பது நீ இல்லையா? பிறகு ஏன் அந்த ஒளிப்படத்தை எனக்கு அனுப்பினாய்? இந்த ஒளிப்படத்தை முன்னதாகவே அனுப்பியிருக்கலாமே? என்று கேட்டால் பதில் வராது.

இதில் இன்னும் சிலர், பக்கவாட்டில் முகம் திரும்பிய ஒளிப்படத்தை அனுப்பிவிட்டு, நேராக பார்க்கிறமாதிரி வரைந்துகொடுங்கள் என்று கேட்பார்கள். “ஐயா, எனக்கு இறைவன் அந்த வரத்தை தரவில்லை, என்னால் முடியாது” என்று சொல்லிவிடுவேன்.

எனக்குத்தெரிந்து, கிட்டதட்ட நான்கு தலைமுறைகள், ஓவியம் குறித்த அறிவே இல்லாது வந்துவிட்டார்கள் என்று நம்புகிறேன்.இந்நிலை இந்தியா முழுதும் என்று என்னால் சொல்லமுடியும். அவர்களுக்கு ஒரு ஓவியன், விளக்கி சொன்னாலும் கூட புரிந்து கேட்டுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு இல்லை. 

முக்கியமாக ஒளிப்படத்தில் இருக்கிற குறைகளையும், அவர்கள் முகத்தில் இருக்கிற குறைகளையும் சரி செய்துதான் ஓவியன் வரைவான். அதாவது மேலும் அழகுபடுத்துவான். கேரிகேச்சர் (இருப்பதை மிகைப்படுத்தும் கலை) என்று வரைந்தாலும் கூட, நான் குறைகளை மிகைப்படுத்துவதில்லை. 

சரி, இருப்பதை அப்படியே வரைவதற்கு ஓவியன் தேவையா? ஒரு கேமரா மூலமாகவே அதை செய்துவிடலாமே? அதோடு ஓவியன் கற்றுத்தேர்ந்ததையும் இணைத்துத்தானே தருவான். அவன் என்ன இயந்திரமா? அப்படியே நகலெடுக்க? 


அடுத்ததாக, கிடைக்கின்ற மென்பொருள்களில், Photoshopல்  Smudge என்றெரு tool இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு, ஒளிப்படத்தையே, அப்படியும், இப்படியும் தேய்த்து மழுக்கி, லேயர் லேயராக வண்ணத்தை பரப்பிவிட்டு, டிஜிட்டல் ஆர்ட் என்று தடவும் டிஜிட்டல் ஆர்டிஸ்ட்கள் (Digital Art - Digital Artist) செய்கிற, இருப்பத்தை அப்படியே வரைந்து தரும் ஓவியம் என்ற திருட்டுத்தன வேலைகள், மக்களை மயக்குகின்றன. 

எனவே ஓவியவேலை தருபவர்கள், ஒரு ஓவியன் “அப்படியே, அப்படியே” வரைந்து தரவேண்டும். இல்லையேல் அவன் தேறாத ஓவியன், அனுபவமில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.  

நீ சும்மாவா கொடுக்கிறாய்? பணம் வாங்குகிறாய் அல்லவா? நான் கேட்பதை வரைந்து கொடுக்காமல் வேறெதாவது வரைந்து கொடுத்தால், வாங்குவதற்கு நான் முட்டாளா? எனக்கும் ஓவிய அறிவு இருக்கிறது(?!) என்று ஓவியனிடம் மல்லுகட்டுவார்கள். அதற்காகவே ஒரு ஓவியன் “குரங்காட்டம்” ஆடவேண்டிருக்கிறது.

முக்கியமாக, ஒரு படைப்பை திருத்துகிற உரிமை எவனுக்குமே இல்லை. மறு பதிப்பு என்பதுதான் நியதியே தவிர வேறெதுமில்லை. அந்தவகையில் கதை எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் இருக்கிற, துணிச்சலான, தைரியமான, நம்பகமான வெளிப்பாடு ஓவியனுக்கு இல்லை.  இன்னும் விளக்கமாக காசுவாங்கிக்கொண்டு வரைந்துதரும் ஓவியனுக்கு இல்லை என்று சொல்லலாமா?

இத்தகைய அறிவு எனக்கு உள்முகமாக வந்த பிறகு, முகம் வரைவதற்கான ஆர்வம் எனக்கில்லை. ஒரு ஓவியனாக மக்களிடம் தோற்கிறேன். நான் ஓவியன் என்று சொல்லுவதற்கு குறைபட்டதில்லை, ஆனால் ஒரு ஓவியம் வரைய என் கைகள் கூச ஆரம்பித்துவிட்டது. கூடவே கரோனா தொற்றும் வேலைகளை குறைக்க, சரி இதுதான் நல்ல சமயம் என்றெண்ணி, வரும் வேலைகளையும் “பார்க்க ஆளில்லை, வரைந்துதரவும் ஓவியர்களில்லை” என்று சொல்லி தடுத்து நிறுத்திவிட்டேன்.

அப்படியானால் வயிற்றுப்பாட்டு? நல்லவேலையாக எனக்கு தெரிந்த ஓவியமல்லாத வேறு சில வேலைகளை செய்துவந்ததினால் தப்பித்தேன். இன்றும்கூட அவைதான் என் வாழ்க்கைக்கு உதவுகின்றன. முக்கியமாக இந்த வேலைகளில், எந்த திருத்தமும் இல்லை. யாரும் குறைசொல்லும் வழியும் இல்லை. எனக்கு நேரடியாக வேலைக்கு பணம் வழக்கும் மக்களுமில்லை. அவர்களின் திருத்தங்களை கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. இதற்கு இவ்வளவா என்று கேட்டவர்களிடம் பேரம் பேசி அவர்களுக்கு புரியவைக்கும் வேலையும் இல்லை.

நிம்மதியாக, சுதந்திரமாக, தைரியமாக, உண்மையாக என்படைப்புக்களை தந்துகொண்டிருக்கிறேன். பலன் பெறுகிறேன்.  என் ஓவிய கைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. அது நல்லதுதான். 

பின்குறிப்பு: ஆனால் இன்னமும்  அங்கே  ஆர்டர்கள் பெறப்படும் என்று இருக்கிறதே? என்று கேட்டால், அதன் விலைப்பட்டியலை, தெளிவான விபரங்களை பார்த்துவிட்டு, முடிவுக்கு வரவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.