Why stopped to draw human faces - Part 01 | CJ

Why stopped to draw human faces - Part 01

Why stopped to draw human faces - Part 01


 மனித முகங்களை வரைவது மற்றெல்லாவகை ஓவிய நுணுக்கங்களைவிட கடினமானது. அது எனக்கும் அவ்வளவு இயல்பாக வந்துவிடவில்லை.

Pen Art_Sugumarje (6)
(பள்ளிக்காலத்தில் பேனாவால் வரைந்த ஓவியங்கள்)

ஆனால்  சிறுவயது முதல், ஒருவருடைய முகத்தை அதில் அமைந்திருக்கிற வடிவங்களை கவனிப்பேன். இவருடைய காது நீண்டு இருக்கிறது, யானைக்காது போல இருக்கிறது. முகத்திற்கு, வழக்கத்தைவிட வெளியே தள்ளி அமைந்திருக்கிறது, இவருடைய மூக்கு ஊசி முனை, இந்த மூக்கு மிக விரிந்தது, நுனி மேல் தூக்கி நிற்கிறது,  மூக்கின் மேலே இரண்டு வளைவுகள் இருக்கின்றன, கண்கள் சுருங்கியுள்ளது, விரிந்து முட்டைக்கண்ணாக உள்ளது, நெற்றி இவ்வளவு அகலமா? நெற்றிக்கு முன்பே இவ்வளவு முடி இருக்கிறதே என்று இப்படியெல்லாம் பார்த்து மனதிற்குள்ளாக குறிப்பெடுத்துக் கொள்வேன். 


இன்னொரு முக்கிய விசயமாக, ஒரு கணவன் மனைவி என்று எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு இடையே இருக்கிற முக ஒற்றுமையை கவனிக்கமுடியும். கூடுதலாக அவர்களின் குழந்தைக்கு, தாயின் முகமா, தந்தை முகமா, தாய்வழி பெற்றோர், தந்தைவழி பெற்றோர் முகமா என்றெல்லாம் ஆராய்ச்சியும் செய்யலாம்.  

சிறுவயதில் இருந்தே யாரோடும் பேசும் பிள்ளை அல்ல நான். முக அறியாத மனிதரோடு பேச தயக்கம் கொண்டவனும் அல்ல. யாராவது எதேனும் கேட்டால், எனக்குத்தெரிந்த அதற்கான பதிலைசொல்லுவேன். என்வீட்டிலேயும் “ரொம்ப அமைதியான பையன்”. ஆனால் என் மனஓட்டம் மிக சிந்தனைக்குறியதாக இருக்கும். என் நேரத்தை எனக்குள்ளாக சிந்தனைகளாக ஓட்டிக்கொண்டிருப்பதே என் அன்றாட நடவடிக்கையாக இருக்கும். ஒருவேளை அது கற்பனை கோட்டையாகவும் இருக்கலாம், ஆனால் நான் கற்பனையில் பறந்தாலும், தரையில் நிற்பதை மறக்கமாட்டேன், அந்த சிறுவயதிலேயே. போதும் சுயபுராணம் என்றாலும், இந்தக்கட்டுரையில் சொல்லித்தான் ஆகவேண்டும்.


ஒரு செவ்வகம் போட்டு அதன் அடிப்படையில் எம்ஜியார் அவர்களை வரைவதுதான் என் ஆரம்பகால முகம். என் சகோதரன் அப்படி வரைந்து காட்டியதை நான் பழக முயற்சித்தேன். ஆனாலும் பின்னாளில் நான் அவரைவிட பொறுமை பெற்றிருந்ததால், இன்றுவரையிலும் ஓவியனாக நிற்க முடிந்திருக்கிறது. அந்த எம்ஜியார் “நல்ல நேரம்” திரைப்பட தோற்ற கொண்டவர். அதோடு அப்போது எங்களுக்கு படிக்க கிடைத்த, வார, மாத தமிழ் நூல்கள், அதில் இருந்த ஓவியங்கள் கூடுதலாக முகம் வரைவதற்கு பயிற்சி அளித்தன.  அந்த ஓவியர்களின் பெயர்கள், செல்லம், புஜ்ஜாய், ஆழி, மணியம், சில்பி, ஸ்ரீ தர், லதா, ராமு, மாருதி, கோபுலு, ஜெ, ஜி.கே. சங்கர், அரஸ், ம.செ., மதன், நடனம்,  (மன்னிக்கவும், சில பெயர்கள் ஞாபகமில்லை) இவர்கள் காலத்திற்குபிறகு ஸ்யாம் பிறகு கதைகளும் அதற்கான ஓவியங்களும் அருகிப்போகின.

ஓரளவு எனக்கு முகம் வரையபழகிய பிறகு, விதவிதமாக முகங்களை வரைந்து பழகிக்கொண்டேன். ஒருபக்கமாக திரும்பிய முகம், மேல்புறம் பார்க்கும் முகம், கீழே குனிந்த முகம், முக்கால் பாகம் முன்னால் தெரியும் முகம், முழு நேர்பார்வை முகம் இப்படியாக முகங்கள், முகங்கள். அதுவும் கை எடுக்காமலும் வரையும் வேகமும் உண்டு. சில நண்பர்கள், ஏதேனும் வரைந்து காட்டுங்களேன் என்று கேட்டால், உடனே எதேனும் ஒரு பெண்ணின் முகம் வரைவேன், அழகிய கூந்தலோடு, கொஞ்சம் மலர்கள் வைத்து காண்பிப்பேன். 

என் ஓவிய பாடசாலைக்கு, தன் தந்தையோடு வந்த ஒரு சிறுமி, 

“ஏன் அங்கிள், எப்போ சாம்பிள் வரையச்சொன்னாலும், கேர்ள்தான் வரையனுமா?”

“இல்லடா, அவங்கதானே பார்க்கவும் அழகா இருக்காங்க, ஓவியத்திலும் அழகா இருப்பாங்களே அதான்” என்று சமாளித்தேன்.

ஒரு ஆணுக்கு முதல் கவர்ச்சி பெண் தானே?! இதில் ஓவியன் விதிவிலக்கா? மேலும் வளைவு, நெளிவையும் ரசித்து கோடுகளிலும், வண்ணங்களிலும் பதிப்பவன் தானே ஓவ்வொரு ஓவியனும்.

எனக்கு சில தொழில்முறை ஓவியர்களின் பழக்கம் இருந்ததால், அவர்களிடம் நான் வரைந்த முக ஓவியங்களை காட்டி திருத்தங்கள் கேட்பேன். அவர்கள் சொல்லும் திருத்தம், வேண்டுமென்றே குறை சொல்லுவதுபோல தோன்றும். ஆனாலும் அந்த இடத்தில் பொறுமையாக கேட்டுக்கொண்டு, வழக்கமான என் பாணியிலே கொஞ்சம் மாற்றம் செய்துவருவேன். பள்ளியிலேயே, ஒரு நடிகை (சுஹாசினி) ஓளிப்படம் கொடுத்து இதை பென்சில் ஆர்ட்டாக கொடு என்று கேட்ட நண்பனிடம் பணம் (வாழ்வின் முதல் ஆர்டர்?!) பெற்று வரைந்துகொடுத்தேன். 


Girl_Sugumarje_Pencil (7)
(பள்ளிக்காலத்தில் பென்சிலால் வரைந்த ஓவியங்கள்)

கிட்டதட்ட 2005 ஆண்டு வரை, முகங்களை வரைவதும், அதை பாதுகாப்பதும், பிறகு அந்த ஓவியத்தை மறந்துவிடுவதுமாக,  ஓவியத்தைச் சாராத வேறு சில பணியில் இருந்ததால், நேரமிருந்தால் வரைவது என்றிருந்தேன். எந்த ஓவியத்தையும் கண்காட்சி வைத்ததும் இல்லை, விற்பனை செய்ததும் இல்லை. ஆனால் 2007 தனித்து இயங்க துவங்கியபொழுது, எனது யாகூ வெப் பேஜிலும் (Yahoo web page), கூகுள் சைட்டிலும் (Google site), பிறகு பிளாக்கிலும் (Blog) என் ஓவியங்களை கண்டு, எனக்கு ஓவியங்கள் வரைந்துதர இயலுமா? என்று சில வெளிநாட்டினர் கேட்க, இதற்கென இருக்கும் பெரிய சந்தையை அறிந்துகொண்டேன். அந்த சில வேலைகளுக்காகவே, உலகில் இருக்கக்கூடிய ஓவியர்களின் தரத்தை ஒத்த அளவில் நானும் என்னை, பல நாட்கள் வரைந்து புதிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, பத்திற்கு ஒன்பது தேர்ச்சி என்று அவர்களே பாராட்டும் அளவுக்கு உயர்ந்தேன். முக்கியமாக இன்னமும் கூட, புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களையும், புதிதாக ஓவியம் கற்றுவரும் இளைஞர்களின் ஓவியங்களையும் கூட கவனித்து, அவர்கள் தரும் நுணுக்கங்களை பழகிக்கொண்டுதான் வருகிறேன். இந்த மாற்றங்களை ஒரு ஓவியன் ஏற்று தேரவில்லை என்றால், அவன் காலத்தால் பின் தங்கிவிடுவான். ஓவியனின் கையை, மரணம் மட்டுமே நிறுத்தமுடியும் என்று நம்புகிறேன்.

இப்பொழுது ஒரு உண்மை தெரியவரும். ஒரு முகத்தை வரைவதற்கான சிரமமும், அதில் எத்தகைய தேர்ச்சியும் தேவையாக இருக்கிறது என்பதும். என் கையால் வருவதுதான் ஓவியம் என்று சும்மாவேனும் கிறுக்கித்தள்ள முடியாது. ஒரு ஓவியம் என்பது படைப்பு, அதில் மறைந்திருக்கும் செய்தியும் உண்டு, வெளிப்படையான காட்சிப்பொருளும் உண்டு. 

என் ஓவியங்கள், பார்ப்பதை வரைவது என்ற வகையை கொண்டது, அதிலும் மனிதர்களுக்கானது. அத்தேர்வு, ஓவியரின் மன நிலையையும், பண நிலையையும் சார்ந்தது. எனக்கோ இரண்டாம் நிலை. வரைந்து வைத்துக்கொண்டு, ஊர் ஊராய் தூக்கிக்கொண்டுபோய் காட்சிப்படுத்துவதில் எனக்கு ஆர்வமில்லை. வரைகிறோமா, வித்தோமா என்பது என்பாணி. 

Vethathri_Sugumarje_Pencil (1)
(18 வயதில் வரைந்த சில ஓவியங்கள்)

எனது மாணவர் 

“சார், உங்க வீட்டிற்கு வந்து உங்க ஓவியங்களை பார்க்கலாமா?”

“வீட்டில், பெரிய பெரிய கேன்வாசில் வரைந்து வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறாயா?”

“ஆமாம் சார்”

“அப்படியெல்லாம் ஒன்று கூட இல்லை, அப்படி வரைந்த ஓவியங்களைக்கூட பரிசாக பிறருக்கு தந்துவிட்டேன். என்னிடமிருப்பது, இந்த கணிணியில் இருக்கும் ஓவியங்கள் மட்டுமே. ஒரு சில பேப்பர் ஓவியங்கள் கைவசம் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் கற்றுக்கொள்ள வரைந்தவை, காட்சிப்படுத்தலுக்கு அல்ல”

கடைசிவரை அந்த மாணவர், நான் சொன்னதை நம்பவே இல்லை.

இப்படியாக, முகங்களை வரைந்து, காசாக்கிக் கொண்டிருந்த நான், கடந்த நவம்பர் 2019 முதல் இனி யார் ஓவியம் கேட்டாலும் வரைவதே இல்லை என்று சபதம் எடுத்தேன். என் வாட்சப்பில் கூட “We stopped new orders" என்று வாசகம் வைத்தேன். அது கரோனா (Covid-19) பாதிப்பால் அல்ல.


தொடரும்...