கேள்வி:
ஆன்மா எப்படி களங்கமடையும்? அது தூய்மையானது அல்லவா?
பதில்:
நான் யார்?
பொதுவாக ஆன்மா என்பதுகுறித்து அறியாவிட்டாலும், நாம் ஆன்மா என்று “எவ்வகையிலோ” அறிந்திருக்கிறோம். இதற்கு பல ஆன்மீக நூல்களும், ஆன்மீக தலைவர்களும், யோகிகளும், சித்தர்களும், குரு மகான்களும் துணை செய்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் சொன்னதை கேட்டதோடு சரி, தன்னை அறிவதற்கான “பாதையில்” செல்வதற்கு மட்டும் யாருக்கும் ஆர்வமில்லை என்பதுதான் உண்மை.
என்ன வித்தியாசம்?
பொருளியல் சார்ந்த இப்புவி வாழ்வில், தன்னையும், தன் பொருளாதர நிலையை உயர்த்தி, அதை தக்கவைப்பதற்கே பெரும்பாடாகி இருக்கின்ற நிலையில், தன்னை உணர்ந்தால் என்ன? உணராவிட்டால்தான் என்ன? என்றும்,
உணர்ந்தவன் மட்டும் என்ன, காலம் காலமாக நிலைத்து வாழ்ந்து விடுகிறாரோ? அவரும் நம்மைப்போல செத்துத்தானே போகிறார், சரித்தான், அவரும் போகிறார், நானும் போகிறேன் போ, போ. என்று சொல்லி, இறந்தும் வாழ்வது குறித்த உண்மை அறியாமல் பேசி, தன்னை அறியாமலேயே, மகத்தான இந்த வாழ்வை, இறை அறிவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தெரியாமல், இன்னும் பேரின்பமாக இந்த வாழ்வை ரசிக்கத் தெரியாமல், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
பேரின்பம்?!
என்ன? இறை உணர்ந்தால் பேரின்பமாக வாழலாமா? என்னாய்யா சொல்றீங்க? இறை உணர காட்டுக்கு போகனும், கல்யாணம் செய்யாம, பிரம்மச்சாரியா இருக்க வேண்டும், சுகங்கள் அனுபவிக்க கூடாது. சிற்றின்பமான உடலுறவு செய்யக்கூடாது, பச்சையாக சொன்னால் “விந்து” வெளியிடக்கூடாது, சில நேரம் நிர்வாணமா வாழவேண்டிவரும், இல்லையென்றால் காவி உடுத்த வேண்டும். மீசை, தாடி, மயிர் மழிக்க கூடாது, பிச்சை எடுத்து உண்ண வேண்டும். மொத்தத்திலே பரதேசி மாதிரி வாழனுமே?! நீ என்னமோ பேரின்பம்னு சொல்லுறியே?!
அப்படி சொன்னது யார்? உன்னை, தனிமனிதனை ஏமாற்றி, நீ உழைத்து சம்பாதித்த பொருளையும், பணத்தையும் பிடிங்கித் தின்று, தன் உயிர் வளர்க்கும் கூட்டமே. அவனுக்கு உழைக்க தெரியாது. நீ உழைத்தால் உன்னிடமிருந்து பிடிங்கிக்கொண்டால் அவனுக்கு சுலபம். அதனால் உன்னை அந்தப்பக்கம் போகாதே என்று சொல்லிவிட்டான்.
உண்மையாக, இந்த பூமியில், உனக்கு கிடைத்திருக்கும் பிறப்பு, இந்த உலக இன்பங்களை எல்லாம், அளவோடும், முறையோடும் பெற்று அனுபவித்து, இன்பம் அனுபவிப்பதற்கே. இன்பமாக இந்த இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால், இன்பம் மிகுந்து பேரின்பமாகும், அதன் தொடர்ச்சியாக அமைதியும் கிடைக்கும்.
அவன் யார் என்று எனக்கு சொல்லுங்களேன்?
உன்னை எமாற்றி பிழைத்து, உனது பொருள், சொத்து, பணம், உழைப்பு இப்படி எல்லாம் பறித்துக்கொண்டு, யார், தன் உயிரும், உடலும் வளர்க்கிறானோ அவனே அவன்.
இதற்கு பதில் என்ன?
ஐயா, இதை எழுதிய நான் கேட்கிறேன். ஒருவேளை நீங்கள் பரதேசி மாதிரி போகாமலும், வாழாமலும், உங்கள் இஷ்டப்படி இப்போது இந்த வாழ்க்கையில், நீங்கள் சுகவாசியாக வாழ்கிறீர்களா?
பதில் கிடைக்குமா?
மனிதனின் பரிணாமம்
ஒவ்வொரு மனிதனும், (மனிதன் என்றாலே, மனம்+இதன் என்று வேதாத்திரி மகரிசி அவர்கள் சொல்லியுள்ளார்) தனக்குள்ளாக நான்கு பரிணாமங்களை உள்ளடக்கியிருக்கிறான் (ள்). அம் மூன்று பரிணாமங்கள்...
1) உடல்
2) உயிர்
3) மனம்
4) ஆன்மா
ஆன்மா
நாம் கேள்விப்பட்டது போலவே, ஆன்மா நீரில் நனையாது, நெருப்பில் எரியாது, காற்றில் கரையாது என்பது உண்மைதான். ஆனால் ஆன்மாவை அம்மாபெரும் சுத்த வெளி என்கிற இறைதன்மையோடு ஒப்பிட முடியாது. அதோடு இரண்டும் வேறு, அதன் நிலைகளும் வேறு ஆகும்.
சுத்தவெளி தனைஅறிய நினைத்த பயணத்தில், ஆன்மாவாக மலர்ந்தது. ஆனால் தன்னை அறிந்துகொள்வதற்குள் பலகோடி உயிரினங்களாகவும், அதன் வழியில் மன இதனான, மனிதனாகவும் மலர்ந்தது. மனிதனுக்குள்ளாக, கருமையம் அமைந்து, தன் சரித்திரத்தை பதிந்துகொண்டும் விட்டது. அப்படியாக பிறவி, பிறவியாக ஆன்மாக்களாக வந்தவேளையில் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமிய வினைப்பதிவுகளை பெற்று, ஆன்மாக்களில் களங்கம் ஏற்பட்டுவிட்டது.
அதில் ஒருசில ஆன்மாக்கள் தன் வாழ்நாளில் தன் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமிய வினைப்பதிவுகளை தூய்மைசெய்து “இறை” உணர்ந்தன. பிற ஆன்மாக்கள் தன் வினைப்பதிவுகளை கழிப்பதற்காக மீண்டும் மீண்டும் பிறந்தன. இறை உணர்ந்தவர்கள், அதை, தன்னைச்சார்ந்த மனித குலத்தின்மீது அக்கறைகொண்டு, அவ்வழியை சொல்லியும் எழுதியும் வந்தனர். அவர்களில் நம் குருமகான் வேதாத்திரி மகரிசியும் ஒருவர்.
குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் உருவாக்கித்தந்த, உலக சமாதான சேவா சங்கம் வழங்கும், மனவளக்கலை பயிற்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அன்பர்கள் அனைவரும், இறை உணர, குருமகான் அவர்களை சரணடைந்து விட்டோம். இனி அவ் வினைப்பதிவுகளை தீர்த்து தூய்மை செய்துகொள்ள வேண்டும். அதுவே நாம் கடமை என்று வாழ்ந்து வருகின்றனர்.
இறை மற்றும் ஆன்மா
தாமரை இலை தண்ணீர் போல பாதிக்கப்படாதது சுத்தவெளி மட்டுமே. ஆனால் ஆன்மாவில் எல்லா களங்கங்களும் மையம் கொண்டு, வினைப்பதிவுகளாக பதிந்துவிடும். இதனால்தான் உள்ளத்தால் உள்ளலும் தீதே என்று திருவள்ளுவரும் சொல்லியுள்ளார்.
ஆனால், நான் என்ற கேள்வியோடு தன்னை அறிய வாய்ப்பில்லாமல், பிறவித் தொடர் வழியாக, ஓவொருவருக்கும் ஆன்மா களங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மனிதனுக்கு மறுபிறவி இல்லை என்பதை, அறிவியல் ரீதியாக ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் அவன் ஆவியை நம்புவான். அது நம்மை பழிவாங்கும் என்றும் சொல்லுவான். இறந்தவன் ஆவியாக இருப்பது ஏன் என்று கேட்டால் பதிலிருக்காது.
ஓவ்வொரு மனிதனுக்கும் மறுபிறவி தன் குழந்தைகளே, தான் இறை உணர முடியாத நிலையில்தான்,
1) உங்கள் பெற்றோர்கள் உங்களை பெற்றெடுத்தார்கள்
2) நீங்கள் உங்கள் குழந்தைகளை பெற்றெடுக்கிறீர்கள்
3) உங்கள் குழந்தைகள் உங்கள் பெயரன், பெயர்த்திகளை பெற்றெடுக்கிறார்கள்
ஆனால் யாரும் இறை உணர தயாராக இல்லை.
முடிவு?!
ஆன்மாவில் களங்கம் என்பதற்கு மட்டுமே இந்த பதிவு தரப்பட்டது. இது புரியவில்லை என்றால், முழுமையான விளக்கம் வேண்டுமென்றால், உங்கள் அருகில் உள்ள, வேதாத்திரி மகரிசி மனவளக்கலை மன்றங்களை அணுகலாம்.
அல்லது உங்களுக்கு கேள்விகள் இருந்தால் இங்கே, பின்னூட்டம் இடுங்கள், அதற்கான பதிலை அடுத்த பதிவுகளில் தருகிறேன். வாழ்க வளமுடன்.
-------------
Thanks to Image: Omid Armin @omidarmin