May 2021 | CJ

May 2021

is coronavirus makes life emptiness?


வாழ்க்கையில் வெறுமை கரோனா தந்துவிட்டதா?


எச்சரிக்கை:

கரோனா நோய்த்தொற்றிலிருந்து உங்களை காத்துக்கொள்வதில் கவனம் கொள்க. உங்களுக்கு சராசரி வெப்பம் தாண்டி காய்ச்சல் வந்தாலும், தொடர்ந்த இருமல், இயல்பான சுவாசம் கடினமாக இருந்தால் தாமதிக்காமல், (நீங்களாகவே மருந்து எடுத்துகொண்டாலும் கூட) மருத்துவரின் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்துகொள்ளுங்கள். உயிர்வளி (O2) குறைந்திருக்கிறது என்றால் உடனடியாக அதற்கான ஆலோசனை பெற்றுக்கொள்க. 

இதுவரையிலும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன், தேவையான சமூக இடைவெளி பாதுகாக்கிறேன், முக கவசம் அணிகிறேன், கைகளை, உடலை தூய்மை செய்துகொள்கிறேன். சரியான உணவு, உழைப்பு, சுவாசப்பயிற்சி, உடற்பயிற்சி, தூக்கம் எடுத்துக்கொள்கிறேன் என்றால் நலமே, ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும்.  

சித்த, ஆயுர்வேத, தமிழ், உணவே மருந்தான மருந்துகள் இன்னமும் அலோபதி மருத்துவர்களால் உறுதிசெய்யப்படவில்லை என்பதால், வீண் பிடிவாதமின்றி, உடல் மாற்றம் உணர்ந்தால் மருத்துவமனையை நாடவும்.

கைவசம் அடிப்படையான மருந்துகளும், O2 அளவிடும் கருவியும் வைத்துக்கொள்ளவும். மருத்துவரின் அருகாமை அல்லது ஆலோசனைக்கு தயாராக இருக்கவும். 

தடுப்பூசிக்கான வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக, எடுத்துக்கொள்க. இரண்டு தவணை தடுப்பூசிக்குப்பிறகும் உடல் பாதிப்பை கவனிக்கவும். தேவையில்லாத பயணமோ, சமூக தொடர்போ செய்துகொள்ள வேண்டாம். மாற்றங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரின் ஆலோசனை கேட்டுக்கொள்க. 


அவரவர் முடிவே சரியானது

தடுப்பூசிக்கான பயமோ, கரோனா நோய்தொற்றுக்கான அலட்சியமோ இரண்டுமே தவறுதான். 18 வயதிலிருந்து அதற்கு மேலான அனைவருமே, தன் முடிவில் கவனம் கொள்வது முக்கியம்.  

நான் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டேன், நீயும் போடு என்று மற்றவரை கட்டாயப்படுத்துவதில் பலனில்லை. அதுபோலவே நான், எந்த தடுப்பூசியும் போட்டுக்கொள்ள மாட்டேன் அதனால் நீயும் போடாதே என்றும் மற்றவரை கட்டுப்படுத்துவதில் பலனில்லை. அவரவர் உடல் மாற்றங்கள் காட்டும் “கரோனா” நோய்தொற்றுக்கான நிலைகள் குறித்து அவரே முடிவெடுக்கட்டும். அதுவே சரியானது.


பாதிப்பும் அதன் தடுப்பும்

கிட்டதட்ட 16 மாதங்களாக, கரோனா நோய்த்தொற்று நம்மை, இல்லை இந்த உலக மக்கள் அனைவரையும் சூழ்ந்திருக்கிறது. விளையாட்டாக “பிறந்தநாள் கூட கொண்டாடப்பட்டது. சீனாவிலிருந்து பரவியது என்று அமெரிக்காவும், இல்லை அமெரிக்காவிலிருந்துதான் பரவியது என்று சீனாவும் விரல் சுட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் மக்களில் பலர், இந்த கரோனா நோய்த்தொற்று தாக்கத்தால் தங்கள் உயிரை இழந்துகொண்டிருக்கிறார்கள். 

இதுதான் வழி என்று இப்போதும்கூட உலக நாடுகள் ஒன்றுபடவில்லை. ஒரு நோய்த்தொற்று கிருமி சொல்லும் எல்லோரும் ஓரினம், எல்லைகளில்லா ஓர் உலகம் என்னும் “உலக சமாதான போக்கு” உலக தலைவர்களுக்கு பிடிபடவில்லை. விருப்பு வெறுப்புக்கள் அற்று, நோய்த்தொற்று கிருமி ஆராய்ச்சியாளர்கள் ஒருமித்த கருத்தோடு, “இதுதான் சரியான வழி” என்று சொல்வதற்கு முடியவில்லை. ஓவ்வொரு நாடும், தனித்தனியாக தன்மக்களை (மட்டும்) காக்க தடுப்பு மருந்து தயாரித்து, ஊசி வழியாக கரோனா நோய்த்தொற்றை தடுத்து, முறியடித்து, மக்கள் உயிரை காத்துக்கொண்டிருக்கிறார்கள்.


இதிலும் மருந்து, விலை போகிறது. இருக்கிறவன் வாங்கி போட்டுக்கொள், அரசை சாராதே என்றும் தடுப்பு மருந்தை வணிகமாக்குகிறது. சில நாட்டு அரசு இதை கண்டுகொள்வதில்லை. இந்திய அரசு, அத்தடுப்பு மருந்தை விலைக்கு வாங்கி, எல்லா மக்களுக்கும் இலவசமாக வழங்குகிறது. வேறு சில நாடுகளும் அவ்வாறே செய்கிறது, வாழ்த்துகள். விரும்பியவர்கள் பணம் செலுத்தியும் போட்டுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 

இதுவரையிலும் 10 கோடிக்கும் மேலான மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டதாக அறியமுடிகிறது. இந்தியாவின் 130 கோடிக்கும் மேலான மக்களுக்கும், சென்று சேரும் வகையில் இந்திய அரசு செயலாற்றி வருவது பாராட்டுக்குறியதே. பற்றாக்குறை தடுப்பூசிகளை விரைவாக உருவாக்கவும், தேவையான அளவை ரஷ்யா, அமெரிக்காவிடமிருந்து வாங்கிக்கொள்ளவும் முயற்சிகள் எடுத்தும் வருகிறது. 


நீயும் உன் யோசனையும்

இப்போதைய சூழலில் கொரோனா எங்கிருந்து பரவியதாக சந்தேகப்படுகிறோமோ, அவர்களிடமிருந்தே தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்ளலாம் அல்லவா? என்று கோரா - கேள்விக்கான பதில் எனும் வளைத்தளத்தில் கேட்டிருந்தேன். கரோனா நோய்த்தொற்று மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்ன மாதிரியான விளக்கம் பெற்றிருக்கிறார்கள் என்பதற்காகவே கேட்கப்பட்ட கேள்வி இதுவாகும். இதற்கு கிடைத்த பதில் என்ன?

கொடிய வியாதியை மனிதாபிமானம் இல்லாமல் உலகம் முழுவதும் பரவுவதற்கு காரணமாக இருந்த கொடிய அரக்கனிடமே இதற்கான தடுப்பு மருந்தை??? பெற்றுக் கொள்வதா??? உங்களின் அறிவுசார்ந்த அறிவுரைக்கு நடுவன் அரசு பத்மா அவார்ட்டுக்கு அனுப்பலாம். இல்லையெனில் ஐ.நா. தலைமை பதவி கொடுக்கலாம். அழிவுப் பாதையில் இப்படி சில நாடுகள் தனியாகவோ, கூட்டாகவோ வியாதி கிருமிகளை தயாரித்து, பரப்பி, சாகடித்து, தொழிலை முடக்கி, பிறகு அதே நாடு மருந்தையும் தயாரித்து விற்று பணம் சம்பாரிக்க, சுருட்ட, துணைபோகும் உங்களைபோல் அறிவுரை கூறும் அதிமேதைகளை வேறுநாட்டில் காணமுடியாது. இப்படியும் சிலர் நாட்டில் வாழ்கிறார்கள். இவர்களையும் இந்த பூமி தாங்கிக் கொண்டிருக்கிறது. இதற்க்குத்தான் நம் முன்னோர்கள் நல்ல நல்ல கருத்துக்களை கூறிச்சென்றார்கள். நல்ல கருத்துக்கள் நல்ல எண்ணங்களை விதைக்கும்.

மதுவை தவிர்ப்போம்

புகைப்பதை தவிர்ப்போம்.

கொரோனாவை ஒழிப்போம்.

என்று அமரகவி.ஜெ என்பவர் பதில் தந்துள்ளார். இதில் இருக்கும் அந்த தெளிவு எனக்கு மகிழ்வைத் தந்தது.


சுருங்கிய உலகம்

பெரும் வணிக போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. மனிதன் எந்த அளவுக்கு இந்த உலகை, நவீன தொழில் நுட்பங்களால் சுருக்கினானோ அதைவிடவும், சுருங்கி உன் அனுபவம் எல்லாம், ஒன்றுமே இல்லையடா என்று கரோனா நோய்த்தொற்று ஒரு காட்டு காட்டிவிட்டது. இன்னும் காட்டிக்கொண்டு இருக்கிறது. 

ஒரு நோய்தொற்றுக்கிருமி ஒரே கால இடைவெளியில், எல்லா நாடுகளுக்கும், எல்லா நாட்டு பருவநிலைக்கும், எல்லா மக்களுக்கும் பரவி பீடித்திருப்பது இதுவரையுலும் எதிர்பாராதது என்று நோய்தொற்றுக் கிருமி ஆய்வாளர்களும், மருத்துவர்களும் சொல்லியுள்ளனர். இந்த கூற்றின் காரணமாகவே இது, கிருமி ஆய்வுக்கூடத்தில் “உருவாக்கம்” செய்திருக்கலாம் என்ற முடிவெடுக்க வாய்ப்புத்தருகிறது என்றும் சொல்லுகிறார்கள். 


வீடடங்குதல்

மாலை இருள்சுழ, பறவைக்கூட்டங்கள் தங்கள் கூடு தேடி பறந்து அடங்குவதுபோல, கடந்த ஓராண்டாக, வீடடைந்து இருக்க பழகிவிட்டோம். கடந்த முறை கரோனா நோய்தொற்று பாதிப்பு ஏற்படுத்தினாலும், ஓரளவு இந்தியமக்களின் உடல் எதிர்ப்புசக்தி தடுத்துக்கொண்டது என்றுதான் சொன்னார்கள். ஆனால் சில பிரபலங்கள் இதில் சிக்கி இறந்தபிறகு கொஞ்சம் பயம் எட்டிப்பார்த்தது. கடந்த ஜுன் மாதத்திற்கு பிறகு கரோனா இல்லை என்றுசொல்லுமளவு பாதிப்பில்லை. ஆனால் மீண்டும் மறுசுழற்சியில், தன்னை மேம்படுத்திக்கொண்ட கரோனா, இம்முறை நம் நண்பர்களை, உறவினர்களை ஆட்கொண்டு நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. கூடவே நமக்கும் “கொஞ்சம்” மரணபயத்தை காட்டிக்கொண்டிருக்கிறது.

நல்லவேலையாக கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்தாலும், அதை சரியாக மக்களிடம் எடுத்துச்செல்லும் “எதிர்கட்சிகள்” இல்லாமல் தடங்கலாகிவிட்டது. இவர்களே மக்களிடம் தடுப்பூசி பற்றிய நம்பிக்கையை தகர்த்துவிட்டனர். ஆனால் அவர்கள் மட்டும் செலுத்துக்கொண்டார்கள். 

துரதிரஷ்டவசமாக, இந்த தடுப்பூசிகள் ஏற்கனவே உடல்நல குறைபாடுகள் மற்றும் அதற்கான மருந்து உட்கொண்டோரிடம் வேறுமாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது. அதில் சிலர் இறந்தும்போனார்கள்.

இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும், மக்கள் வீடடங்க தயாராகவில்லை. எதற்காகவோ வெளியே, வெளியே என்று அலைந்துகொண்டே இருக்கிறார்கள். சிலருக்கு நாவை கட்டுப்படுத்த முடியவில்லை, சிலருக்கு பழக்கங்களை மாற்ற முடியவில்லை, சிலருக்கு என்ன செய்வதென்ற வழியே தெரியவில்லை, சிலருக்கு வீடடங்கி பழக்கமே இல்லை இப்படி பலபேரும் வெளியில் திரிகின்றனர். இன்னும் சிலருக்கு பிழைப்பிற்கே வழியில்லை என்று புதிய வியாபரத்திற்காக வெளியே வந்துவிட்டனர். இவர்கள் சிறிதளவும் கூட கரோனா நோய்தொற்று குறித்த அச்சம் இல்லை. முக கவத்தையும், சமூக இடைவெளியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தன் மேல் அதீத நம்பிக்கை.


மாற்றத்தினை ஏற்றுக்கொள்க

உலகின் சூழல் இந்த கரோனா நோய்தொற்று காலத்தில் மிக பலவீனமாக உள்ளது. நமக்கு கிடைத்திருப்பது ஒருவாழ்க்கைதான். பிழைப்புக்காக தினம் செத்துப்பிழைக்கலாம். ஆனால் கரோனாவுக்கு அப்படி இல்லை. வாழ்க்கையும் வாழ்தலும் இனியது. அடங்கியிருங்கள், கரோனா நோய்தொற்று கிருமி தன்னில் தானே அடங்கக்கூடும் இனியும் தன்னை பரப்ப வழியின்றி. அத்தகைய இடைவெளியை நாம் உருவாக்கியே தீர வேண்டும். இந்த நேரத்தில், மனதில் வெறுமையை நிரப்பாதிருங்கள். 

இந்த சூழல் வழியாக, நம் சந்ததியினருக்கு ஒரு பாடத்தை கற்றுத்தருவோம்.

அமைதியாய் இருங்கள். கிடைத்த வாழ்வில் மகிழ்ச்சியை தக்கவையுங்கள். பெற்றோரோடும், வாழ்க்கை துணையோடும், பிள்ளைகளோடும், நண்பரோடும், உறவினர்களோடும், சொந்த பந்தங்களோடும், எளிய மக்களோடும் அன்பு பாராட்டுங்கள். இனியாவது அதை நன்றாகச் செய்வோம்.

நம்பிக்கையளிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் “அன்பால்” சூழ்ந்திருக்கிறார்கள். கரோனா நோய்தொற்றை வெல்வோம்!


---------
Photos thanks to Google with their owners

Be Breathe Ease


சுலபமாக சுவாசம் செய்!




காயத்தை அறிந்து கொள்ளாமல்

காதலோடு வலுப் படுத்தாமல்

காசுபணம் புகழ்தேடி அலைந்து

காலத்தை வீணே போக்கிவிட்டு

காற்றுக்கு காத்திருக்கும் காலமேனோ?!


காயம் என்றால் அது உடலை குறிக்கும். காயமே இது பொய்யடா என்று தொடங்கும் சித்தர் பாடல் உங்களுக்கு ஞாபகம் வரக்கூடும். இந்த உடல் இருக்குமட்டுமே நமக்கான வாழ்க்கை இங்கே, இந்த புவியில் அமைகிறது. உடலுக்குள் உயிர் இருக்கும் வரையில் நாமும் இருப்போம் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.


இந்நிலையில் இந்த உடலை நாம் வாழும் காலம் வரையில், நமக்கு இறப்பு எப்பொழுது என்று நிச்சயமாக தெரியாது எனினும், அதுவரையில் உடலை நன்கு பராமரிக்க வேண்டும். எப்படி நமக்கு விருப்பமான ஒரு பொருளை பாதுக்காக்கிறோமே, அதுபோலவே இந்த உடலை பாதுகாக்க வேண்டும். 

இந்த உடல் இயக்கம் என்பது என்ன? 

எப்படி அதை இயக்கி வலுப்படுத்த வேண்டும்?

உடற்பயிற்சிகள் என்னென்ன?

மூச்சுப்பயிற்சிகள் என்னென்ன?

உடல் அசைவுகள் எப்படி உடலை சுறுசுறுப்பாக்குகின்றன?

என்ற வகையில் பயிற்சிகள் தொடர்ந்து செய்து, உடலை எப்போதும் சுறுசுறுப்பான தன்மையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். உடல் வலுப்பெற்றால் உயிர், மனம் பாதுகாக்கப்படும். எளிதில் நோய்வாய்ப்படும் தன்மை குறையும். எதிர்ப்புத்திறன் கிடைக்கும்.  மிகச்சரியான தூக்கமும், அதிகாலை விழிப்பும் வசப்படும். என்றென்றும் உற்சாகம் இருக்கும். மன மகிழ்ச்சிக்கு வெளியே தேடி அலையவேண்டிய அவசியமிருக்காது.


அதை விடுத்து, உடல் அக்கறை இல்லாது, மகிழ்ச்சி வேண்டும், அதை அடைய பணம் வேண்டும், பிறரைப்போல பணக்காரர் ஆகவேண்டும். அவரைப்போல வீடு கட்டவேண்டும், அவர்வைத்திருக்கும் கார் போல வாங்கவேண்டும், அவரைப்போல புகழ் பெற வேண்டும் இப்படி, தன்னிலை மறந்து, தன் வாழ்வையும், தன் மனதையும், தன் உடலையும் கெடுத்துக்கொள்கின்றனர். இதனால் மதிப்பு வாய்ந்த வாழ்க்கை வீணாகிறது. உடலை அதன் போக்கில் கட்டமைக்க நமக்கு கிடைத்த நேரங்கள், பணம், புகழ் தேடலில் கழிந்துவிடுகிறது. இதனால் உடல் தன் முழுமையை இழக்கிறது. உடல் பலமின்றி, பல வகையான நோய்தாக்குதலுக்கு ஆளாகிறது. இறப்பும் நேரிடுகிறது.


இந்த கரோனா நோய்தொற்று காலத்தில், நன்றாக சுவாசம் பழகி, நுரையீரலின் எல்லா பகுதிகளையும் இயக்கும் திறன் இல்லாததால், Oxygen என்கிற பிராணவாயு கிடைக்காமல் அவதியுறுகின்றனர். நாம் பிறந்தது முதலே சுவாசம் செய்கிறோம். ஆனால் அது இயற்கையின் ஒத்த இயல்பில், தானாக இயங்குவதால், அது குறித்து நம் வாழ்நாள் முழுக்க நாம் கவனம் கொள்வதில்லை.  முக்கியமாக அதன் இயல்பான சுவாச ஒழுங்கை, நம் தவறான வழக்க பழக்கங்களினால் கெடுத்துவிடுகிறோம் என்பதே உண்மை. 


ஒருபங்கு காற்றை இழுத்து, மூன்று பங்கு காற்றை வெளியேற்ற வேண்டும் என்பது முறை. ஆனால் ஒருபங்கு கலவையான காற்றை இழுத்து, அதில் ஆக்ஸிஜன் (O2) பிரித்தெடுத்து வைத்துக்கொண்டு, கார்பன் - டை- ஆக்ஸைடை  (CO2) வெளியே தள்ளும் முறைதான் சுவாசம் ஆகும். இதில் CO2 அதிகபட்சமாக உள்ளேயே தங்கிவிட்டால், மூச்சுத்திணறல் வந்துவிடும். ஆனால் மிக எளிமையான உடற்பயிற்சிகள் இக்குறையை போக்கி, சரியான சுவாசத்தை வழங்கும் என்பதை மறந்துவிடுகிறோம். காலக்கடைசியில் நமக்காக, ஒரு சுவாச இயந்திரம் செயல்படும் நிலைக்கு கீழிறிங்கி விடுகிறோம். அந்த சுவாச இயந்திரம் இயங்குவதற்கு, ஆக்ஸிஜன் வேண்டும், அதோடு அதற்கு மின்சாரமும் வேண்டும். இன்றோ அந்த ஆக்ஸிஜனுக்கும் தட்டுப்பாடு. இயற்கையாக, சும்மா கிடைக்கும் ஒன்றின் மதிப்பறியாமல், வீணாக்கி விட்டு, உயிரை பலியாக்கும் நிலையில் இருந்து மாறலாமே?!


திருத்தம் நம்மிடம் இருக்கும்பொழுது, கிடைத்த வாய்ப்பை இழக்கலாமா? இந்த உண்மையை, நீங்கள் அறிந்து மாற்றம் கொண்டுவாருங்கள். பிறருக்கும் அறிவுறுத்துங்கள். நோய்தொற்றிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 


வாழ்க வளமுடன்.


--------

Photo thanks to: bruce mars


Finding Life in the MARS


 



செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கைத்தேடல்


இத்தனை பெரிய அண்டத்தில்

கிட்டிய அரிய வையத்தில்

அத்தனை இன்பம் கெடுத்துவைத்தாய்

உந்தனை நீ திருத்தியுயர்த்தாமல்

எத்தனை கிரகம் கிடைத்தென்ன?


இந்த பிரபஞ்சம் பெரியது என்பது நமக்கு தெரியும். எவ்வளவு பெரிது என்றால் அதற்கு பதில் இல்லை. கூடவே இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள், தூரத்தில் தெரியும் நட்சத்திரங்களின் நகர்வை வைத்து ஆராய்ச்சி செய்து அதன் அடிப்படையில். இத்தனை நட்சத்திரங்களின், சூரியன்களின் இடையே, நம் சூரிய குடும்பத்தில் ஒன்றாக “பூமி” அமைந்து அதில் உயிர் வாழ்க்கை சூழல் அமைந்து நாம் மனிதர்களாகி நிறைவு பெற்றிருக்கிறோம்.


இன்னும் இதுபோல் பிறிதொரு “பூமி” இருக்கிறதா? என்ற ஆராய்ச்சியும் இங்குள்ள அறிவியலாளர்களால் ஆராயப்பட்டு வருகிறது. இது நீண்ட பயணம், விடை என்று கிடைக்கும் என்பதும் தெரியாது.



ஆனாலும், நமக்கு கிட்டதட்ட 6 கோடி மைல் தொலைவிலிருக்கும், செவ்வாய் என்ற கிரகத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் திட்டத்தில், மிகப்பெரும் முன்னேற்றத்தில் முதல் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று சொல்லலாம். செவ்வாய் கிரகத்தில். “உயிர் வாழ்க்கை சூழல்” இருந்ததா? இருக்கிறதா? அல்லது இருக்கப்போகிறதா? என்பது குறித்து, தற்பொழுது ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.


இந்த பிரபஞ்சத்தில். இயற்கையாக் மலர்ந்த “பூமி”யில் வாழ்ந்து, பலவகைகளிலும் கெடுத்து விட்டு, இதற்கு மாற்றாக “மனிதனே” தானாக ஒரு பூமியை, இன்னொரு கிரகத்தில் அமைக்க நினைக்கிறான். இதற்கிடையே, மனிதனுக்குள் எழுந்த, அல்லது அடக்கிவைக்கப்பட்டிருந்த “மண்” ஆசை, அந்த செவ்வாய் என்கின்ற மண் கிரகத்திற்கே ஆசைப்பட்டு விட்டான். 



கையிலிருப்பதை தவறவிட்டு, இன்னொன்றுக்கு ஏங்குவதில் மனிதனைத் தவிர ஏது உயிரினமும் இல்லை. பூமியை இப்போதிருக்கும் செவ்வாயாக மாற்றிவிட்டு, செவ்வாயை தற்போதுள்ள பூமியாக மாற்றும் வித்தை மனிதனுக்கு மட்டுமே தெரியுமோ?! விந்தையோ விந்தை.


இவனுக்கு செவ்வாயும் பத்தாது என்பதை விளக்கியாகவேண்டும். முதலில் மனிதன், தன்னை உணர்ந்து, இயற்கையை உணர்ந்து, தான் இந்த இயற்கையின் வளர்ச்சியில், பரிணாமத்தில் வந்த முழுமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொருவரோடு ஒருவர், இயற்கையாகவே பிணைக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள வேண்டும். 


மனதை ஆராய்ச்சி செய்து விளக்கிக்கொள்ளாமல், கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் ஒரு பலனும் இருக்கப்போவதில்லை. இந்த மனம் அவ்வளவு புதையலை வைத்துக்கொண்டிடுக்கிறது. அதில் மனிதாபமானமும் உண்டு, கூரான பற்களை நீட்டிக்கொண்டு கழுத்தைக்கடிக்கும் மிருகத்தனமும் உண்டு, பாதம் கடித்து விஷத்தை செலுத்தும் விஷப்பல்லும் உண்டு. 


தனக்குள்ளிருக்கும் பழமையை அறுத்தெடுக்காமல், எத்தனை உயரமடைந்தாலும் ஒரு பலனும் முழுமையாக கிடைக்கப்போவதில்லை. அனுபவத்திற்கும் வரப்போவதில்லை. எத்தனை பிறவி எடுத்தாலும், பூமியின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், செவ்வாய் போன்ற இன்னொரு கிரகத்தில் வாழ்ந்தாலும், மனிதத்தன்மையை உணர்ந்து, அறிந்து, தெளிந்து, மனம் இதனாக, மனிதனாக முழுமையடையாமல் ஒரு பலனும் அடையப்போவதில்லை.


மனிதனாக முழுமையடைந்தால், செவ்வாய் கிரமென்ன, இந்த பிரபஞ்சமே அவனுக்கு சொந்தமானதாக இருப்பதை உணர்வான்.


வாழ்க வளமுடன்

------

Photos Thanks to: Google and copyright their owners