Finding Life in the MARS
செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கைத்தேடல்
இத்தனை பெரிய அண்டத்தில்
கிட்டிய அரிய வையத்தில்
அத்தனை இன்பம் கெடுத்துவைத்தாய்
உந்தனை நீ திருத்தியுயர்த்தாமல்
எத்தனை கிரகம் கிடைத்தென்ன?
இந்த பிரபஞ்சம் பெரியது என்பது நமக்கு தெரியும். எவ்வளவு பெரிது என்றால் அதற்கு பதில் இல்லை. கூடவே இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள், தூரத்தில் தெரியும் நட்சத்திரங்களின் நகர்வை வைத்து ஆராய்ச்சி செய்து அதன் அடிப்படையில். இத்தனை நட்சத்திரங்களின், சூரியன்களின் இடையே, நம் சூரிய குடும்பத்தில் ஒன்றாக “பூமி” அமைந்து அதில் உயிர் வாழ்க்கை சூழல் அமைந்து நாம் மனிதர்களாகி நிறைவு பெற்றிருக்கிறோம்.
இன்னும் இதுபோல் பிறிதொரு “பூமி” இருக்கிறதா? என்ற ஆராய்ச்சியும் இங்குள்ள அறிவியலாளர்களால் ஆராயப்பட்டு வருகிறது. இது நீண்ட பயணம், விடை என்று கிடைக்கும் என்பதும் தெரியாது.
ஆனாலும், நமக்கு கிட்டதட்ட 6 கோடி மைல் தொலைவிலிருக்கும், செவ்வாய் என்ற கிரகத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் திட்டத்தில், மிகப்பெரும் முன்னேற்றத்தில் முதல் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று சொல்லலாம். செவ்வாய் கிரகத்தில். “உயிர் வாழ்க்கை சூழல்” இருந்ததா? இருக்கிறதா? அல்லது இருக்கப்போகிறதா? என்பது குறித்து, தற்பொழுது ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த பிரபஞ்சத்தில். இயற்கையாக் மலர்ந்த “பூமி”யில் வாழ்ந்து, பலவகைகளிலும் கெடுத்து விட்டு, இதற்கு மாற்றாக “மனிதனே” தானாக ஒரு பூமியை, இன்னொரு கிரகத்தில் அமைக்க நினைக்கிறான். இதற்கிடையே, மனிதனுக்குள் எழுந்த, அல்லது அடக்கிவைக்கப்பட்டிருந்த “மண்” ஆசை, அந்த செவ்வாய் என்கின்ற மண் கிரகத்திற்கே ஆசைப்பட்டு விட்டான்.
கையிலிருப்பதை தவறவிட்டு, இன்னொன்றுக்கு ஏங்குவதில் மனிதனைத் தவிர ஏது உயிரினமும் இல்லை. பூமியை இப்போதிருக்கும் செவ்வாயாக மாற்றிவிட்டு, செவ்வாயை தற்போதுள்ள பூமியாக மாற்றும் வித்தை மனிதனுக்கு மட்டுமே தெரியுமோ?! விந்தையோ விந்தை.
இவனுக்கு செவ்வாயும் பத்தாது என்பதை விளக்கியாகவேண்டும். முதலில் மனிதன், தன்னை உணர்ந்து, இயற்கையை உணர்ந்து, தான் இந்த இயற்கையின் வளர்ச்சியில், பரிணாமத்தில் வந்த முழுமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொருவரோடு ஒருவர், இயற்கையாகவே பிணைக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள வேண்டும்.
மனதை ஆராய்ச்சி செய்து விளக்கிக்கொள்ளாமல், கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் ஒரு பலனும் இருக்கப்போவதில்லை. இந்த மனம் அவ்வளவு புதையலை வைத்துக்கொண்டிடுக்கிறது. அதில் மனிதாபமானமும் உண்டு, கூரான பற்களை நீட்டிக்கொண்டு கழுத்தைக்கடிக்கும் மிருகத்தனமும் உண்டு, பாதம் கடித்து விஷத்தை செலுத்தும் விஷப்பல்லும் உண்டு.
தனக்குள்ளிருக்கும் பழமையை அறுத்தெடுக்காமல், எத்தனை உயரமடைந்தாலும் ஒரு பலனும் முழுமையாக கிடைக்கப்போவதில்லை. அனுபவத்திற்கும் வரப்போவதில்லை. எத்தனை பிறவி எடுத்தாலும், பூமியின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், செவ்வாய் போன்ற இன்னொரு கிரகத்தில் வாழ்ந்தாலும், மனிதத்தன்மையை உணர்ந்து, அறிந்து, தெளிந்து, மனம் இதனாக, மனிதனாக முழுமையடையாமல் ஒரு பலனும் அடையப்போவதில்லை.
மனிதனாக முழுமையடைந்தால், செவ்வாய் கிரமென்ன, இந்த பிரபஞ்சமே அவனுக்கு சொந்தமானதாக இருப்பதை உணர்வான்.
வாழ்க வளமுடன்
------
Photos Thanks to: Google and copyright their owners