Be Breathe Ease | CJ

Be Breathe Ease

Be Breathe Ease


சுலபமாக சுவாசம் செய்!




காயத்தை அறிந்து கொள்ளாமல்

காதலோடு வலுப் படுத்தாமல்

காசுபணம் புகழ்தேடி அலைந்து

காலத்தை வீணே போக்கிவிட்டு

காற்றுக்கு காத்திருக்கும் காலமேனோ?!


காயம் என்றால் அது உடலை குறிக்கும். காயமே இது பொய்யடா என்று தொடங்கும் சித்தர் பாடல் உங்களுக்கு ஞாபகம் வரக்கூடும். இந்த உடல் இருக்குமட்டுமே நமக்கான வாழ்க்கை இங்கே, இந்த புவியில் அமைகிறது. உடலுக்குள் உயிர் இருக்கும் வரையில் நாமும் இருப்போம் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.


இந்நிலையில் இந்த உடலை நாம் வாழும் காலம் வரையில், நமக்கு இறப்பு எப்பொழுது என்று நிச்சயமாக தெரியாது எனினும், அதுவரையில் உடலை நன்கு பராமரிக்க வேண்டும். எப்படி நமக்கு விருப்பமான ஒரு பொருளை பாதுக்காக்கிறோமே, அதுபோலவே இந்த உடலை பாதுகாக்க வேண்டும். 

இந்த உடல் இயக்கம் என்பது என்ன? 

எப்படி அதை இயக்கி வலுப்படுத்த வேண்டும்?

உடற்பயிற்சிகள் என்னென்ன?

மூச்சுப்பயிற்சிகள் என்னென்ன?

உடல் அசைவுகள் எப்படி உடலை சுறுசுறுப்பாக்குகின்றன?

என்ற வகையில் பயிற்சிகள் தொடர்ந்து செய்து, உடலை எப்போதும் சுறுசுறுப்பான தன்மையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். உடல் வலுப்பெற்றால் உயிர், மனம் பாதுகாக்கப்படும். எளிதில் நோய்வாய்ப்படும் தன்மை குறையும். எதிர்ப்புத்திறன் கிடைக்கும்.  மிகச்சரியான தூக்கமும், அதிகாலை விழிப்பும் வசப்படும். என்றென்றும் உற்சாகம் இருக்கும். மன மகிழ்ச்சிக்கு வெளியே தேடி அலையவேண்டிய அவசியமிருக்காது.


அதை விடுத்து, உடல் அக்கறை இல்லாது, மகிழ்ச்சி வேண்டும், அதை அடைய பணம் வேண்டும், பிறரைப்போல பணக்காரர் ஆகவேண்டும். அவரைப்போல வீடு கட்டவேண்டும், அவர்வைத்திருக்கும் கார் போல வாங்கவேண்டும், அவரைப்போல புகழ் பெற வேண்டும் இப்படி, தன்னிலை மறந்து, தன் வாழ்வையும், தன் மனதையும், தன் உடலையும் கெடுத்துக்கொள்கின்றனர். இதனால் மதிப்பு வாய்ந்த வாழ்க்கை வீணாகிறது. உடலை அதன் போக்கில் கட்டமைக்க நமக்கு கிடைத்த நேரங்கள், பணம், புகழ் தேடலில் கழிந்துவிடுகிறது. இதனால் உடல் தன் முழுமையை இழக்கிறது. உடல் பலமின்றி, பல வகையான நோய்தாக்குதலுக்கு ஆளாகிறது. இறப்பும் நேரிடுகிறது.


இந்த கரோனா நோய்தொற்று காலத்தில், நன்றாக சுவாசம் பழகி, நுரையீரலின் எல்லா பகுதிகளையும் இயக்கும் திறன் இல்லாததால், Oxygen என்கிற பிராணவாயு கிடைக்காமல் அவதியுறுகின்றனர். நாம் பிறந்தது முதலே சுவாசம் செய்கிறோம். ஆனால் அது இயற்கையின் ஒத்த இயல்பில், தானாக இயங்குவதால், அது குறித்து நம் வாழ்நாள் முழுக்க நாம் கவனம் கொள்வதில்லை.  முக்கியமாக அதன் இயல்பான சுவாச ஒழுங்கை, நம் தவறான வழக்க பழக்கங்களினால் கெடுத்துவிடுகிறோம் என்பதே உண்மை. 


ஒருபங்கு காற்றை இழுத்து, மூன்று பங்கு காற்றை வெளியேற்ற வேண்டும் என்பது முறை. ஆனால் ஒருபங்கு கலவையான காற்றை இழுத்து, அதில் ஆக்ஸிஜன் (O2) பிரித்தெடுத்து வைத்துக்கொண்டு, கார்பன் - டை- ஆக்ஸைடை  (CO2) வெளியே தள்ளும் முறைதான் சுவாசம் ஆகும். இதில் CO2 அதிகபட்சமாக உள்ளேயே தங்கிவிட்டால், மூச்சுத்திணறல் வந்துவிடும். ஆனால் மிக எளிமையான உடற்பயிற்சிகள் இக்குறையை போக்கி, சரியான சுவாசத்தை வழங்கும் என்பதை மறந்துவிடுகிறோம். காலக்கடைசியில் நமக்காக, ஒரு சுவாச இயந்திரம் செயல்படும் நிலைக்கு கீழிறிங்கி விடுகிறோம். அந்த சுவாச இயந்திரம் இயங்குவதற்கு, ஆக்ஸிஜன் வேண்டும், அதோடு அதற்கு மின்சாரமும் வேண்டும். இன்றோ அந்த ஆக்ஸிஜனுக்கும் தட்டுப்பாடு. இயற்கையாக, சும்மா கிடைக்கும் ஒன்றின் மதிப்பறியாமல், வீணாக்கி விட்டு, உயிரை பலியாக்கும் நிலையில் இருந்து மாறலாமே?!


திருத்தம் நம்மிடம் இருக்கும்பொழுது, கிடைத்த வாய்ப்பை இழக்கலாமா? இந்த உண்மையை, நீங்கள் அறிந்து மாற்றம் கொண்டுவாருங்கள். பிறருக்கும் அறிவுறுத்துங்கள். நோய்தொற்றிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 


வாழ்க வளமுடன்.


--------

Photo thanks to: bruce mars