Let's Give Up to Guru - Part 01 | CJ

Let's Give Up to Guru - Part 01

Let's Give Up to Guru - Part 01


 குருவை சரணடைவோம் - பாகம் 01


உலகின் சிறப்பு என்ன?

இந்த உலகின் சிறப்பே, நேற்றிருந்தோர் இன்றில்லை என்பதே என்றார் அய்யன் திருவள்ளுவர். ஒரு மனிதனின் வாழ்க்கை, சாராசரியாக அறுபது ஆண்டுக்காலம் என்று வைத்துக்கொண்டால். அந்த ஆண்டுகளில் இறை உணர்வு பெற்று, உண்மை விளக்கத்தோடு பிறப்பின் கடமையை முடித்துவிட முடிகிறதா என்றால், அது மிக அரிதாகவே நிகழ்கிறது. ஒரு சிலருக்கே நிகழ்கிறது என்பதும் உண்மை.


வாழும்காலம் போதவில்லையே?!

பெரும்பாலான மனிதர்களுக்கு, தான் பிறந்த குடும்பத்தில் இருக்கும் ஏழ்மையை தீர்க்கவே முழுகாலமும் செலவாகிறது. சிலருக்கு கல்வி கிடைப்பதில்லை, சிலருக்கு வேலை கிடைப்பதில்லை, வேலையும் தொழிலும் நிலைப்பதில்லை. வாழ்க்கையில் கிடைக்கும் கெட்ட நட்புக்கள், வழக்க பழக்கங்கள் இவற்றில் சிக்கி திசை மாறுதல் நடந்துவிடுகிறது. தன் தவறுகளால் சிக்கிக்கொள்ளுதல், தானாக, எதிர்பாரா விபத்தில் சிக்கி மரணமடைதல் உண்டு. சிலர், எதிர்கால பயம், குழப்பம் இவற்றால் தற்கொலை செய்து கொள்ளவும் செய்கின்றனர். சிலருக்கு தீடீரென வரும் நோய் அவற்றால் முடக்கம் அல்லது நோய்தொற்று இவற்றாலும் வாழ்க்கை பாதிக்கிறது. இப்படியாக வாழ்க்கையை முழுமையாக வாழக்கூட வழியில்லை.

இத்தகைய சூழலில், பிறப்பின் கடமையாக, தன்னை அறிதல், இறை உணர்தலுக்கு ஏது வழி? என்றுதான் பொதுவாக தோன்றும். உண்மையாகவே, இத்தனை குழப்பங்கள் உங்களை சூழ்வதே இறையாற்றலின் விளைவால்தான் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த புவியில் உங்களின் பிறப்பு நீங்கள் கேட்டு வாங்கவில்லையே? அது உண்மைதானே? அப்படியென்றால் உங்கள் பிறப்பின் உள் அர்த்தம், உண்மை என்னவாக இருக்கும்? 


உங்கள் பிறப்பின் ரகசியம்!

என்னையா இது? ஆண் பெண் சேர்ந்தால் ஒரு குழந்தை பிறக்காதா? என்று கேட்பீர்கள். எல்லா சேர்க்கையிலும் குழந்தை என்றால் இப்புவி தாங்காது. ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு காரணம், வினைப்பயனே ஆகும். கர்மா என்று வடமொழியில் சொல்வார்களே அதுவே. அவ்வினைகளை தீர்க்க, புதிய அவதாரமாகவே ஒரு குழந்தை இந்தபுவியில் பிறக்கிறது. ஏன் தீர்க்க வேண்டும்? அப்போதுதான் உங்கள் பிறவி முழுமை அடையும். பிறப்பது யார் என்பதும் தெரியும். ஆதிகால மனிதன் முதல் இக்கால மனிதன் வரை தன் வாழ்க்கையை, திசைமாற்றிக்கொண்டே பயணித்துக்கொண்டிருக்கிறான், தன் இலக்கை எதுவென்று தீர்மானிக்காமல்.


வழிகாட்ட வந்தவர்கள்!

அந்த இலக்கை சித்தர்கள், ஞானியர்கள், மகான்கள் சொல்லிச்சென்றார்கள். ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு முறையும் ஞானிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. பக்தி மார்க்கம் வணிகமாகி, வாழ்க்கையை சிறப்பிக்காத நிலையிலும், அதை விட்டு விலகினால், இறையின் சாபம் கிடைத்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். யோகமார்க்கத்தை விட பக்தி மார்க்கம் எளிதாக இருக்கிறது. ஏதோ மனிதனால் ஆன, வழிபாடு, பூஜை, படையல், தேங்காய் உடைத்தல், பொங்கல் படைத்தல், அம்மாவாசைக்கு பிண்டம் வைத்தல் என்று சுலபமாக செய்யமுடிகிறது, இது போதாதா? இறைவனையும், முன்னோர்களையும் குளிர்விக்க! இதெல்லாம் இந்து மதத்தில் மட்டுமா என்ன? எல்லா மதங்களிலும் கடவுளை குளிர்வித்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

 எத்தனையோ ஞானிகள் சொன்னாலும், வழி நடத்தினாலும்,  இவன் கேட்டபாடில்லை. நான் வாழப்பிறந்தேன், உண்ணப்பிறந்தேன், அனுபவிக்கப்பிறந்தேன் என்றே சொல்லிச்சொல்லி வாழ்க்கை சூழலில் சிக்கி சிதறடிக்கப்படுகிறார்கள். 

சரி கர்மா என்பது என்ன? அது என்ன தலைவிதியா அல்லது தலைஎழுத்தா? அடுத்த பதிவில் காண்போம். 

வாழ்க வளமுடன்.


Note: அடுத்த பதிவில் தொடர்கிறது