Still going on | CJ

Still going on

Still going on


இன்னும் தொடரும்...



எழுத்தும் நானும்

வழக்கமாக எப்பொழுதாவது கவிதை எழுதுவதுதான் என் வழக்கம். அதுவும் குறிப்பிட்ட நோக்கமின்றி, ஏதோ தோன்றும் கருத்தில் எழுதி வழங்குவது ஆகும். ஆனால் 2018ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து, எழுதியது எல்லாமே, வேதாத்திரியத்தின் அடிப்படையில் அமைவதாக வளர்ந்துவிட்டது. 

காரணம் 2015ம் ஆண்டின் ஆகஸ்டு மாதம் முதல் தொடர்ந்து, நீண்ட நேரம் வேதாத்திரிய இறை தத்துவ ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான் காரணம். அப்படியானால் அதற்கு முன்பு இல்லையா என்று கேட்டால், இருந்தது ஆனால் என்னுடைய ஓவிய பணிகளுக்கு இடையே, காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்து என் உடலை, மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டதோடு சரி, இறை குறித்தான ஆராய்ச்சியை தொடங்கவில்லை. புரிந்ததுபோலும், புரியாததுபோலும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருந்தேன். 


Please Take Diversion to வேதாத்திரியம்!

ஆனால், உனது இந்த ஓட்டம் சரியல்ல என்று இறையே எனக்கு கடிவாளம் போட்டு, நீ இப்படியாக திரும்பு என்று, “ஒரு விபத்து” நடத்தி என்னை திருப்பியது. சொல்லி கேட்கவில்லை என்றால், அனுபவித்துத்தான் கேட்க வேண்டும் அல்லவா? அப்படியான அந்த இருசக்கர வாகன விபத்து, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதுபோல, பிழைத்து எழுந்தேன். வாழ்க்கையின் நிலைதன்மை சொல்லும் உண்மை புரிந்துகொண்டேன். ஒரு நொடியில் சிறுகூறு போதும் நாம் இறந்துமடிவதற்கு.

அத்தகைய வாழ்விற்குள்ளாக, நான் யார்? என்பதை உணர்ந்து, வினைப்பயன் நீக்கி, பிறவிகடனாக தன் வாழ்வை தூய்மை செய்தல் மிக முக்கியம் என்பதை அன்றே உணர்ந்தேன். இனியும் காலம்போக்க வழியில்லை, பிழைத்தது கிடைத்தவாய்ப்பு அதற்கே என்று எண்ணி என்பாதையை நானும் “வேதாத்திரியத்தில்” திருப்பினேன்.

கிடைத்தபலன், என்னை முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த முழுமை எத்தகையது என்பதை, என் என்ணம், சொல், செயல்கள், பகிர்வுகள் மூலமாக நீங்களே அறிந்துகொள்ளலாம், நான் தனியாக சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அது முறையும் இல்லை.


திட்டமும் பகிர்வும்

இந்த சூழ்நிலை மாற்றத்தின் வழியாக, நான் எழுத நினைத்ததே, தினம் ஒரு கவிதை என்ற வகையில் onthisway.blogspot.com என்ற மூன்று பதிவுகளோடு நின்றிருந்த ஒரு வலைப்பூவை (Blog) தூசி தட்டி, புதிப்பித்து எழுதி வருகிறேன்.  2021, ஆகஸ்டு மாதம் 31 நாட்களும், தினம் ஒரு கவிதை எழுதியே தீருவது என்று முடிவு செய்தேன். ஆரம்பம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், எழுத எழுத தானாகவே வார்த்தைகள் வளர்ந்தது, கருத்தும் நிறைந்தது. 


பிரபஞ்ச மனம்

ஒரு உண்மை உங்களுக்கு தெரியுமா? ஒரு படைப்பாளி, மனம் ஒன்றி செயல்பட்டால், இந்த பிரபஞ்சமே அவனுடைய மனமாக மாறிவிடும். இதை நம் குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களும் மெய்பித்திருக்கிறார். அப்படியான சிறப்புபெற்றது இந்த இயற்கை. ஆனால் உங்கள் மனம் எந்த நிலையில், இந்த பிரபஞ்ச மனதோடு தொடர்புகொள்கிறது என்பதும் கட்டாயம். முக்கியமாக, தன் நலம் சார்ந்த எண்ணங்களுக்கு, ஒருபோதும் பிரபஞ்ச மனம் உதவாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அப்படி விரும்பினால் வரும் விளைவுகளை நீங்கள் தாங்கிக்கொள்ளவும் வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 


வெற்றிகரமாக!

இந்த பதிவை எழுதும் இந்த நாளோடு, வெற்றிகரமாக 31 நாட்களுக்கு 31 தலைப்பிலான கவிதைகளும், அக்கவிதையின் விளக்கங்களும் எழுதி வெளியிட்டு முடிந்தாயிற்று. அடுத்து எழுதுவேனா என்று என்னை நானே கேட்டுக்கொள்கையில், ஆம் என்று தான் பதில் தர விரும்புகிறேன். ஏனென்றால், ஒரு வலைப்பூவை படிப்பது என்பதும், படிக்கவைப்பது என்பதும் இருபது ஆண்டுக்காலத்திற்கு முன்பு அவ்வளவு வரவேற்பை தரும். ஆனால் நம் காலைசுற்றி ஏகப்பட்ட இணைய வலைப்பின்னல்களில் சிக்கிவிடாமல், இப்போதும் ஆர்வமாக குறைந்தபட்சமாக 200 அன்பர்கள், அதிகபட்சமாக 1500 அன்பர்கள் படித்து இன்புறும் வகையிலும், இக்கவிதை பதிவுகள் வரவேற்று பெற்றிருக்கிறது. இதுவே என் மகிழ்ச்சிக்கு காரணம். அன்பர்களின் ஊக்கமும், ஆதரவும் மேலும் என்னை எழுத்தூண்டுகிறது என்பது உண்மையே.

இந்த கவிதைகள் பலவழிகளில் பலருக்கு பகிரப்பட்டிருக்கலாம், அந்த வழியில் யாரேனும் ஒருவருக்காவது, இக்கவிதைகளில் உள்ளார்ந்த உண்மை, அவர்கள் மனதில் ஒளிபரவச்செய்தால் இன்னும் மகிழ்வேன். இக்கவிதைகளின் உள்நோக்கம், வேதாத்திரிய வழியில், அன்பர்களை இறை உணரச்செய்வதே ஆகும். 


எல்லாம் இறையின் வெளிப்பாடே!

எல்லாமே இறையாகவே பரிணமித்து மலர்ந்திருப்பதால், எந்த வகையில் எழுதினாலும் அது இறையுணர்வை விளக்குவதாகவே அமைந்திருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். நம் குரு வேதாத்திரி மகரிசி அவர்களே இதற்கு சான்று. மகரிசியின் தத்துவங்களை, விளக்கங்களை, ஞானக்கவிகளை, தத்துவ சொற்பொழிவுகளை படிக்கும் பொழுதும், கேட்கும்பொழுதும், அவர் இறைநிலையில் இருந்தே, இறையாகவே சொல்லுவதை நாம் உணரலாம்.


இன்னும் என்ன?

கூடுதலாக, மனம் குறித்து வேதாத்திரியத்தின் வழியே நான் அறிந்ததை விளக்கமாக தர விரும்புகிறேன். வானியல், கோள்கள் இவற்றில் மனிதனுக்கு உண்டாகும் மாற்றங்களின் தொடர்பு என்ன? அவற்றை எப்படி சாதகமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விளக்கங்களையும் தொடர்ந்து தருவேன். வேதாத்திரிய தத்துவங்களை, மகரிசி என்ன கொடுத்தாரோ அதே முறையில், மாறாத தன்மையில் தரவும் விரும்புக்கிறேன். இவை அடுத்ததடுத்த நாட்களில் நிகழும் என்று நம்புகிறேன். 

அன்பர்களே, நீங்கள் அனைவரும், அருட்பேராற்றலின் கருணையினால், உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.