Sixth and below!
ஆறும் அதற்கு கீழும்!
பதுங்குதல்
பெரும்பாலும் என் வீட்டில் சிறு பூச்சி, சிறிய வகை சிலந்தி, கரப்பான் பூச்சி, எறும்பு, பல்லி மற்றும் தூசி தொந்தரவுகள் உண்டு. இந்த வீட்டின் மனிதர்கள் எப்போதடா விளக்கை நிறுத்திவிட்டு படுப்பார்கள் என்று காத்திருந்து வெளியே நடமாடுவது போல இருக்கும். நான் முன்பு குடியிருந்த வீட்டில், பாம்பு எல்லாம் சாதாரணம். பகலில் கூட வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக வெளியே பார்த்தால், பாம்பு தென்படுகிறது என்று என் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் சொல்லியிருக்கிறார்.
ஒருமுறை கூட நான் அப்படி பார்த்ததில்லை. இத்தகைய உயிரிங்களின் போக்கு, இரவில்தான் அதிகமாக இருக்கும் என்பது உண்மை. அதாவது மனிதர்களின் அசைவு, உடல் அதிர்வு, குரல் அதிர்வு, ஒலி ஒளி தாக்குதல், வெப்பம் குளுமை பாதிப்பு இதெல்லாம் குறைந்த பிறகு அல்லது நின்றுவிட்ட பிறகு தான், தன் இரை தேடி வெளியே கிளம்புகின்றன. ஆம் அந்த உயிரினக்களுக்கு உணவின் பொருட்டுத்தான் வீட்டிலும் தங்குகின்றன. அதுவரை மற்றெல்லா பொழுதுகளும் பதுங்கியே இருக்கின்றன.
உதாரணமாக, ஏதேனும் சிறு பூச்சியை நீங்கள் விரட்டி அடிக்க முயற்சித்தால் அவை உடனடியாக ஏதேனும் ஒரு இருட்டுப்பகுதியை நோக்கி பறக்கும் அல்லது ஓடும். ஏனென்றால் அப்போதைக்கு அவைகளுக்கு பாதுகாப்பு அந்த இருட்டு இடங்களே! சிலவேளை தரையில் ஓடும் பூச்சி, பல்லி இவற்றை விரட்டினால், அவை உங்களை நோக்கிவரும் போது, உங்கள் உள்ளங்காலுக்கு அடிப்பகுதியில் கூட தங்குவதற்கு முயற்சிக்கும். ஏனென்றால் அங்கேயும் இருட்டு இருக்கிறதே! நீங்கள் ஐயய்யோ என்று அலறி, காலை உதறி ஓடுவது எனக்கு காட்சியாகிறது.
வாழ்விடம்
இந்த உயிரினங்கள் எல்லாமே ஏன் மனிதர் வாழும் இடங்களில் இருக்கிறது? இருங்க, இருங்க! நீங்களும் நானும்தான், அத்தகைய உயிரினங்கள் வாழும் இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், நாம் உரிமை எடுத்துக்கொண்டு, உனக்கு இங்கே இடமில்லை என்று விரட்டியும் விட்டு, அந்த உயிரினங்களுக்கு நவீன வாழ்வியல் மூலமாக, தொந்தரவுகளையும் கொடுக்கிறோம்.
அந்த சிறு உயிரினங்களுக்கான உணவுச் சங்கிலியையும் அறுத்த பெருமை நமக்கு உண்டு. கூடவே நம்முடைய சோம்பேறி தனத்தாலும், சுத்தத்தில் அக்கறை இன்மையாலும் வெளியே இருக்கக்கூடிய உயிரினங்களை நாமே வருக, வருக என்று வரவேற்கவும் செய்கிறோம்.
விட்டு விலகி விட்டோம்
எங்கள் வீட்டில் சில பாம்புகள் வரும் என்று சொன்னேன் அல்லவா? அவை ஒருபோதும் வீட்டிற்குள் வந்ததில்லை. ஒரு நேரம் வாசல்படி ஏறிவந்த பாம்பு, யாரோ வருகிறார்கள் என்று தெரிந்தவுடனே, வெளிவாசல் வழியே படி இறங்கி ஓடி மறைந்துவிட்டது. ஆனால் குளியலறையிலும், வீட்டு சுற்றுச்சுவருக்கு உள்ளேயும் வந்துவிட்ட பாம்பை அடிக்காமல், விரட்டி இருக்கிறோம். பாம்பை கொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு விசம் இருக்கலாம் ஆனால், சிறு அதிர்வு இருந்தாலே மிக விரைவாக ஓடி ஒளிந்துகொள்ளும் தன்மை கொண்டது. லாவகமாக அதை விரட்டி விட வாய்ப்பு உள்ளது. ஆனால் நமக்கு பழக்கம் இல்லை என்பதுதான் பொதுவான விசயம்.
எப்படி விவசாயத்தை விட்டு மிக நீண்ட பாதையில் விலகிவிட்டோமோ, அதுபோலவே பிற உயிரினங்களோடு கூடிய தடுப்பு, விலக்கல், பாதுகாப்பு இவற்றிலும் விலகிவிட்டோம். காலம் கடந்து செல்லச்செல்ல, இத்தகைய உயிரினங்கள் குறித்த தகவல்களைச் சொல்லும் பெருசுகளையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது மிக முக்கியமான குறிப்பு. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி சொல்லிக்கொண்டே, அந்த ஏட்டுச்சுரைக்காயை கறிக்கு உயயோகப்படுத்த பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
வாழ்தல் கேள்விக்குறி?!
ஒரு சுண்டெலியைப்போல உங்களால் வேகமாக திட்டமிட முடியுமா? ஒரு எறும்புபோல எங்கோ மறைந்த சர்க்கரையை தேடி எடுக்க முடியுமா? கரப்பான் பூச்சியைப்போல எந்த சூழலிலும் வாழ்ந்து பழக உங்களால் முடியுமா? என்று பலப்பல கேள்விகளை வரிசையாக கேட்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் நாமெல்லாம் ஆறறவு பெற்ற மனித உயிரினம் அல்லவா? இருக்கட்டும்.
ஆனால், இந்த உயிரினங்களும், பிறக்கின்றன, வளர்கின்றன, இணையோடு கூடி களிக்கின்றன. முட்டைகள், குஞ்சுகள், குட்டிகள் இடுகின்றன. தேவையான நேரத்தில் உணவு தேடி தின்கின்றன. அமைதியாகின்றன, காலத்தில் இறந்தும் போகின்றன. நாம் ஆறறவு என்று நமக்கு தற்பெருமை இருக்கிறது, ஆனால் எங்கேயோ வாழ்க்கையை தொலைத்துவிட்ட யோசனை உள்ளுக்குள் எழுகிறதா இல்லையா?
யோசிப்பதற்குக்கூட நமக்கு நிறைய நேரம் இல்லைதான். ஆனால் கொஞ்சம் முயற்சிக்கலாம்.