What do the planets do to me?! - 02
கிரகங்கள் என்னை என்ன செய்கிறது? - 02
இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்க:
இங்கே படிக்கலாம்
கிரக ஆராய்ச்சி - நவீன வரலாறு
உலகில் வாழும் எல்லோருக்குமே ஒரளவு ஜோதிடம் குறித்த அறிவு இந்நாளில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. ஜோதிடத்தை மறுத்துப்பேசும் ஆட்களும் அதற்கேற்பவே இருக்கிறார்கள் என்பதும் உண்மை. இதில் அணுவியல், அறிவியல் வளர்க்கும், வளர்ந்த மேற்கத்திய நாடு மக்களும் விதிவிலக்கல்ல. விண்வெளியில், பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில், ஒரு கால்பந்து விளையாட்டு மைதானம் நீள அகல அமைப்பில், ஆனால் ஒரு பெரிய ஆங்கில எழுத்து H போல மிதந்து, ஒரு நாளைக்கு 16 முறை பூமியை வலம் வரும், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இருக்கும் காலத்திலும், சோதிடம் சக்கைபோடு போடுகிறது.
சூரினின் வெப்பக்கதிர்களை ஆராய்ச்சி செய்யும் துணைக்கோள் அணுப்பிவைத்து, சூரியப்புயலை படம் எடுத்து அனுப்பிவிட்டது, அந்த படங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். சூரியகுடும்பத்தை விட்டு வெளியே போய்விட்டது ஒரு தொலைநோக்கி துணைக்கோள், அதன் வழியாகவே பிரபஞ்சம் எவ்வளவு பெரிது என்பதற்கான யூகத்திற்கு, சான்றுகள் கிடைத்தது. இப்பொழுது புதிதாக, இந்த பிரபஞ்சம் உருவாவதர்கு காரணமாக சொல்லப்படும் பெரும் வெடிப்பு குறித்த ஆராய்ச்சிக்காக, முற்றிலும் பெரிய நவீன தொலைநோக்கு துணைக்கோளும் அனுப்பியாகி விட்டது.
கடந்த வருடத்தில், செவ்வாய் கிரகம் நோக்கி, ஆராய்ச்சிக்காக அனுப்பிவைக்கப்பட்ட துணைக்கோளும், ட்ரோனும், மண், நில பரிசோதனை வண்டியும் கூட, செவ்வாயில் வெற்றிகரமாக இறங்கி, அதன் அதன் வேலைகளை செய்து, அதன் மாதிரி படங்களை, செய்திகளை பூமிக்கு தந்துகொண்டு இருக்கிறது. தனுசு ராசிக்கட்டத்தில் அமைந்திருக்கும், இப்போதைக்கு பெரிதாக காணப்படும், கருந்துளையையும், உலகின் பல இடங்களில் அமைந்திருக்கும், நவீன வானியல் தொலைநோக்கி வழியாக, பகுதி பகுதியாக படம் எடுத்து, இணைத்து, அக்கருந்துளையின் உண்மை வடிவத்தையும் உலகுக்கு அறிவித்து விட்டார்கள். இப்படியாக விஞ்ஞானம் ஒருபக்கம், அந்த கிரங்களையே துளைத்துக் கொண்டிருக்கையில், ஜோதிடம் குறித்தான நம்பிக்கை மாறவே இல்லை என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம்.
ஜோதிடம் வழி எது?
பலப்பல வகையில், ஜோதிடம் நம் வாழ்நாளில் கலந்து பிண்ணிக் கொண்டது. இதை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்ற ஆராய்ச்சி தேவையில்லை. இதில் வியாபார, வணிக பிண்ணனி உண்டா என்று ஆராய்ந்தாலும் அதுவும் சரியாக இல்லை. ஏனென்றால் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது அரசர்கள் நாடாண்ட காலங்கள் வரை, ஜோதிடர்கள் காசுக்காக ஜோதிடம் பார்க்கவில்லை. ஆனால் ஒரு ஜாதகன் மனம் உவந்து கொடுப்பதை வாங்கிக்கொள்ள மறுக்கமாட்டார்கள். மேலும் ஜோதிடம் ஒரு கலையாக மதிக்கப்பட்டதால், மற்ற கலைஞர்களோடு, ஜோதிடர்களும் சமூகத்தில் மதிக்கப்பட்டார்கள். மேலும் அரசர்களின் ஆலோசகர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்பட்டது.அந்த வழியாக வளர்ந்த ஜோதிடமே, தற்காலத்தில் பணத்திற்காக, வாழ்வாதாரமாக மாறி தொழிலாகவே எங்கும் பரவலாகிவிட்டது. மேலும் கூர்ந்த அறிவுள்ள யார்வேண்டுமானாலும் கற்றுத்தேர்ந்து, ஜோதிடத்தை தொழிலாக செய்யலாம் என்றும் மாறிவிட்டது.
ஊன்றிபோனது
ஜோதிடம் மக்களிடம் மிகுந்த சிறப்பு அடைந்ததற்கு முக்கிய காரணம், தன் குடும்பம், தொழில், வறுமை நிலை மாறுமா என்ற கேள்வியில்தான். எப்போதுமே நல்ல பொருள், பணம், நிலம், வீடு, வசதி என்று வாழ்பவன், நிச்சயமாக ஜோதிடத்தை நம்ப மறுப்பான். சிலர் கடவுளையே கூட நம்ப மறுப்பான் என்பதும் உண்மை. ஒரு ஏழை தனக்கு பிறக்கும் குழந்தை வழியாக, தன் நிலைமையும், குடும்ப வறுமையும் மாறிவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான், பிறந்த அந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதி, அதற்கான பலன் பார்க்கிறான். இந்த பழக்கமே தொடர்ந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கிறது.
அலைத்தொடர்பு
கிரகங்கள் எப்போதும், தன் சுழற்சியினால் அலைகளை இந்த பிரபஞ்சம் முழுவதும் வீசிக் கொண்டிருக்கின்றன. அந்த அலைகளில் நேரடியாக நாம் வாழும் பூமியை வந்தடைவதில்லை. அந்த அலைகள் வரும் வழியில் வேறென்ன கிரகங்கள் இருக்கிறதோ அதனுடைய அலைகளையும் இணைத்துக் கொண்டே வருகிறது. மொத்தமாக மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களோடும், உயிரற்ற பொருட்களோடும் தொடர்புகொண்டு, பூமியின் மையம் நோக்கி நகர்ந்தும் அல்லது பூமியைக்கடந்தும் செல்கிறது. இது ஓவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.
அந்த அலைகள், மனித மனதோடு பெரும்பகுதியும், உடல் உறுப்புக்களோடு பிற பகுதியும் செயல்படுகிறது. உதாரணமாக உடல் உறுப்புக்களில்
கிரகம் | உறுப்பு | |
---|---|---|
சூரியன் | எலும்புகள் | |
புதன் | தோல் | |
சுக்கிரன் | ஜீவசக்தி | |
சந்திரன் | இரத்த ஓட்டம் | |
செவ்வாய் | மஜ்ஜை | |
குரு | மூளைச் செல்கள் | |
சனி | நரம்புகள் | |
ராகு-கேது | ஓஜஸ் எனும் உயிர்சக்தி |
அந்த அலைகள் எவ்வாறு செயல்படுகிறது என்ற உண்மையையே, கிரகங்கள் என்னை என்ன செய்கிறது? என்ற தலைப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு விதை மண்ணில் விதைக்கிறோம், அல்லது தானாகவே மரத்தின் விதைகள் மண்ணில் விழுகிறது என்றும் வைத்துக் கொள்ளலாம். அந்த விதை ஈர மண்ணில் விழுந்தால் தானாகவே வேர் பிடித்துக் கொள்ளும் அல்லது மழைக்காக காத்திருக்கும். நாம் விதைத்தால் நாமே தண்ணீர் ஊற்றி காப்போம்.
ஒரு விதைக்குள் மரம் ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்தது தானே? மரம் உள்ளே இருக்கிறது என்பதர்காக, விதைத்த உடனே மரமாகிவிடுவதில்லை. அதற்கென்று காலம் தேவைப்படுகிறது. ஒரு விதை மரமாக வேண்டும் என்பதற்கான வழிமுறை, (கணிணி மென்பொருள் போல அல்லது வீடு கட்ட உதவும் மாதிரி படம் போல) அந்த விதைக்குள் இருக்கிறது. அந்த வழிமுறையை அவ்வப்பொழுது தூண்டுவதற்கு இந்த கிரகங்கள் உதவுகின்றன. ஏனென்றால் காலம் என்பது கிரங்கங்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டதுதானே?! அப்படியானால் ஒரு விதைக்கும், மரத்திற்கும் ஜாதகம் எழுதலாமா என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. எழுதலாம் தவறில்லையே!
மனிதனுக்குள் தூண்டுதல்
இதைப்போலவேதான், மனிதனும் அவனின் வளர்ச்சி, வாழ்க்கை முறை, நடவடிக்கை, அவனின் முன்வினைபயனாக இனி செய்யவிருப்பது, பெற இருப்பது என்பதாக அவனுக்குள் வழிமுறை அமைந்திருக்கிறது. அது அவன் வாழும் காலத்தில் தானாகவே வெளிப்படும் என்பதும் உறுதி. அல்லது அவன் அவனுடைய எண்ணங்களாலும், சொல்லாலும், செயலாலும் வரவழைத்துக் கொள்வான். ஏற்கனவே தாயின் வயிற்றில் கரு, உடலாக மாறிடும் பொழுதே, கிரகங்களின் ஆளுமை பார்த்தோம். குழந்தையாக வளர்ந்து, பிறந்து வெளி வரும் காலத்தில், தனித்த உயிராக மாறிவிடுவதால், தனியான ஜாதக குறிப்பும் அமைந்து விடுகிறது.
அந்த ஜாதக குறிப்பின் படியே, அந்த குழந்தையின் உடல், மன, உயிர் நிலைமை, பெற்றோரிடம், பெரியவர்களிடம் நடந்துகொள்ளும் முறை, வெளியிடம் சமூகத்தில் நடந்துகொள்ளும் முறை, நட்பு, பகை, ஆர்வம், சிறப்பு, பொருளீட்டும் வாய்ப்பு, எதிர்பாலின கவர்ச்சி, அரசு உதவி, தெய்வ உதவி, ஆயுள் இப்படி பலப்பல தலைப்புக்களில் ஜோதிடர்கள் ஆராய்ந்து பலன் சொல்ல துவங்குகிறார்கள். இந்த குறிப்பின்படி சொல்லுவதெல்லாம் அப்படியே சிறப்பாக அமைந்துவிடுமா என்றால் அங்கேதான், இந்த இயற்கை ஒரு தடுப்பு வைக்கிறது.
நடந்தது, நடப்பது, நடக்கப்போவது
ஒரு ஜோதிடர் எந்த மனிதருக்கும், அவனின் ஜோதிடத்தை ஆராய்வாரானால், நடந்ததும், நடப்பதும் ஏறக்குறைய சரியாக அமைவது போல இருக்கும். நீ இப்படிப்பட்டவன், உனக்கு இந்த இடத்தில் நோய் வந்திருக்கும். நீ பிறந்த பொழுதே குடும்பத்தில் வறுமை, தகப்பனோடு ஒற்றுமையில்லை, ஊரெல்லாம் கடன் வாங்கிவிட்டாய், திருமணம் தள்ளிப்போகிறது. குலதெய்வம் வழி விடவில்லை. குழந்தை தாமதம், தொழிலில் சிறப்பில்லை. கடல் கடந்துபோய் சம்பாரித்தால்தான் நல்லது. இப்பொழுது வீடு, நிலம் வாங்க வழியில்லை. நட்பு சரியில்லை, திருட்டுத்தனம் செய்யாதே மாட்டிக்கொள்வீர், அரசோடு மோதாதே என்றெல்லாம் சொன்னால் ஆமாங்க, சரிங்க என்ற பதில்தான் ஜாதகர் தருவார்.
ஆனால் நடக்கப்போவதை கணித்து சொன்னால், அம்மனிதர் வாய்பிளந்து கேட்டு சந்தோசம் செய்து, ஜோதிடர் கேட்ட பணத்தை அல்லது அதற்கு மேலாக கொடுத்து வீட்டிற்கு திரும்புவார். ஆனால் ஜோதிடர் சொன்ன காலம் வரும்பொழுது, சில பலன்கள் தலைகீழாக நடக்கும் அல்லது நடக்காது. ஏன்?
மனம் கிரகத்தை தொடர்புகொள்ளுமா?
மனிதன் தன்னுடைய மனதால் வாழ்கிறான். அப்போதும், இப்போதும், எப்போதும் அப்படித்தான். இதில் மாற்றத்திற்கு இடமே இல்லை. ஏற்கனவே கிரகங்கள் மனித மனதோடு தொடர்பு கொள்ளும் என்றும் கண்டோம் அல்லவா? அது உண்மையானால், மனமும் கிரகங்களோடு தொடர்பு கொள்ளுமே!
தனக்கு நிகழ்ந்த பிரச்சனைகளின் அடிப்படையில்தான், அம்மனிதன் தன்னுடைய ஜாதக ஆராச்சியை தொடங்குகிறான். அந்த நொடியே அவனுடைய மனம், கிரங்களை நோக்கி கவனம் கொண்டு விடுகிறது. அந்த எண்ணமேதான், ஒரு ஜோதிடரை பார்க்கும்படி அவனை தூண்டுகிறது. ஜாதக பலன் பார்க்கிறான். ஜோதிடர் சொல்லும் கருத்துக்களை கேட்கிறான். அவர் சொன்ன விளக்கம், வழிமுறைகள் கேட்டுக் கொள்கிறான். இப்பொழுது அவனுக்குள், அவனுடைய ஜாதக்கபடி, தனக்கு நல்லது செய்யும் கிரகம், கெட்டது செய்யும் கிரகம் என்று வகைப்படுத்திக் கொள்கிறான். ஒரு எச்சரிக்கையை அமைத்துக் கொள்கிறான். ஆனால் அதே கவனம் நீண்ட நாளைக்கு இருப்பதில்லை மறந்தும் விடுவான். பிறகு வழக்கம்போலவே ஜாதக பலன்களையே மறந்துவிடுவான். எல்லாம் என் தலையெழுத்து, அதுதானே நடக்கும் என்று தனக்குள் சொல்லிக்கொள்வான்.
தூண்டுதல்
இந்த நிலையில்தான் கிரங்கள் எப்போதும் செய்வதை செய்கின்றன. அது என்ன? தூண்டுகின்றன. ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஆரம்ப காரணியாக கிரகங்கள் இருக்கின்றன. ஒரு மனிதன் அதைக் குறித்து கவனம் வைத்தாலும், வைத்துக்கொள்ளா விட்டாலும் அவனுக்குள் அக்கிரகங்கள் தூண்டுதலைத் தருகின்றன. ஆமாம், பிரபஞ்சம் முழுதும் இருக்கும் கிரகங்கள், மனிதனை தூண்டுகின்றன.
கட்டுரை இந்த பகுதியோடு முடிகிறது.
வாழ்க வளமுடன்!
Present by:
Thanks to Images to: Internet source copyright to it's owners