2022 | CJ

2022

Positions of the human mind in the world!


 உலகியலில் மனித மன நிலைப்பாடுகள்!

தானும் தனதும்!

பற்றுக பற்றற்றான் பற்றினை -  என்பது ஆசான் திருவள்ளுவர் வாக்கு. பொதுவாகவே மனிதருக்கு, தான் என்ற அதிகார பற்றும், தனது என்ற பொருள்பற்றும் உண்டு. இந்த குறள் சொல்லும் காலமே, இரண்டாயிரம் ஆண்டுகள் என்றால், அதற்கு முன்பே, ‘தான் தனது’ என்ற பற்று இருந்திருக்கிறது என்பதும் அர்த்தமாகிறது அல்லவா?

வேதாத்திரி மகரிசி அவர்கள், தான் தனது என்பதை, தம்பதிகள் என்று சொல்லிவிட்டு, இவர்களுக்கு பிறந்ததே பேராசை, சினம், கடும்பற்று, உயர்வுதாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால்கவர்ச்சி, வஞ்சம் என ஆறு குழந்தைகள் என்றும் சொல்லுவார்.

இந்த ஆறு களங்களும் நம்மிடமிருந்து நீக்கிடவே, தற்சோதனை என்ற பயிற்சியையும் வேதாத்திரியத்தில் இணைத்து தந்திருக்கிறார். யோக வாழ்வில் சிறக்க இந்த தெளிவு அவசியமாகிறது!


பற்று

வேதாத்திரிய அன்பர்கள் ஓரளவேனும் இந்த விளக்கங்களை பெற்று, தன்னை தன் தற்சோதனை மூலமாக தங்களை காத்துக் கொள்வார்கள் என்று நம்பலாம். ஆனால் உலகில் பெரும்பாலோர் இதில் மூழ்கி தத்தளிக்கிறார்கள் என்றால் மிகையில்லை. தானும், தனதும் தவறல்லவே என்று அவர்கள் நம்மோடு வாதிடவும் செய்வார்கள். மேலும் இது மனிதனுடைய இயல்பு என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். 

தான் தனது என்ற பற்றா மனிதனுக்கான இயல்பு? இல்லவே இல்லை. ஆனால் அதை அறியமுடியாத மயக்கத்தில் மனிதமனம் இருக்கிறது, அப்படியே வாழ்ந்து கொண்டும் வருகிறது.


பற்றில்லாமல் வாழமுடியுமா?

உலகவாழ்வில், இருப்பதையெல்லாம் கொடுக்கும் பரந்த மனப்பான்மையில் யாருமே வாழமுடியாது. வாழும் எல்லோருக்கும், வாழும் காலம் முடியும் வரை எல்லாமும் வேண்டும். ஆனால் ஒன்றை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அது, தேவைக்கும் மேலாக சேர்த்து வைப்பதில் பிரயோஜனமில்லை!

அடிப்படை தேவை என்ன? எவ்வளவு எனக்கும் என் குடும்பத்திற்கும் வேண்டும்? அடுத்தடுத்த பிரச்சனை எழுமானல் இது போதுமானதா? என்ற தெளிந்த அறிவில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, வெறுமனே சேமிக்காமல், அதில் மிகைப்பற்று இல்லாமல், பகிர்ந்தளிப்பது நல்லது தானே?! ஆனால் உடனடியாக யாருமே இந்தக் கருத்துக்கு உடன்பட மாட்டார்கள் என்பது உண்மை!

இந்த உலகில் வரும்போது கொண்டு வருவதுமில்லை, போகும் பொழுது கொண்டு செல்வதும் இல்லை. ஆனால் நம்மோடு, நம் ஆன்மாவோடு எப்போது வந்துகொண்டே இருப்பது, நம்முடைய கர்ம வினை. அவ்வினைகளின் சுமையால் பிறந்தோம். வினை தீர்த்தால் முழுமையில் சரணடைகிறோம். ஆனால், வினை தீர்க்க யோகத்தை அண்டாது, வழக்கம்போல் தான் தனது பற்றில் மூழ்கினால், சுமை கூடுமே தவிர குறைக்க வழி உண்டா?


உழைக்காமல் ஏதுமில்லை!

இந்த உலகில், யாருமே யாரிடமும் கையேந்த மாட்டார்கள் என்பது உறுதியானது. காட்டில் வாழும் மனிதனுக்கு பசியெடுத்தால், மரத்தின் கனிகளை பறிப்பானேயன்றி, கையேந்த மாட்டான். ஆனால் காட்டை அழித்து நகர அல்லது நரக வாழ்க்கைக்கு வந்துவிட்டபிறகு, காடும், வனமும், வயலும், மரமும் அடுத்தவர்களின் சொத்தாகிவிட்டதே. இன்னும் சிலர் எத்தகைய ஏழ்மை நிலையில் இருந்தாலும் கூட, தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வார்களே தவிர ஏதும் கேட்கமாட்டார்கள். 

ஒருவித இயலாமை என்ற சூழல் வருத்தமில்லாமல், அடுத்தவரை எதிர்பார்க்கும் நிலைக்கு வரவே மாட்டார்கள். தன்னுடைய உடலை விட மனம் அவர்களுக்கு பெரும் பாரமாக இருக்க, யாரேனும் எனக்கு உதவ முடியுமா என்று வாய்திறக்காமல், கண்களால் கூட பேசக்கூடும். 

ஆனால், மிக முக்கியமாக, இந்த உலகில் உழைக்காமல் ஏதும் உனக்கு கிடைக்காது என்ற அறிவுறுத்தல் பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டு விட்டது. ஏதாவது உனக்கு வேண்டுமென்றால் உழைத்து அதை கூலியாக பெற்றுக்கொள் என்று அறிவுறுத்தப்பட்டுவிட்டது. இதனால் உலகில் சோம்பேறிகள் இருக்கமாட்டார்கள் என்பது மேற்கத்திய பாலபாடம்!

ஆனால், குழந்தைமுதல் 14 வயது பாலகர்களும், 60 வயதைக் கடந்த முதியவர்களும் என்ன செய்வார்கள்? இவர்களுக்கு உழைக்கும் வலு உள்ளவர்கள் உறுதுணையாக அல்லவா இருக்கவேண்டும்? ஆனாலும் எப்படியோ குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோரால் ஆதரவு கிடைத்துவிடும் என்பது உண்மைதான்.

ஆனால், மனிதர்களில் ஓவ்வொருவரும், தனித்தனியாக திறமை பெற்றவர்கள் அல்லவா? ஒரு நிறுவனத்தின் கார் போல, கைபேசி போல ஒரே மாதிரி இயங்கும் தன்மை இல்லையே?! அதேபோல, அவர்களின் உடலும், வலுவும், ஆர்வமும் வித்தியாசமானதே. இவர்களை எப்படி ஒருமுகப்படுத்தி உழைக்க வைக்கமுடியும்? மேற்கத்திய நாடுகளின் கல்வி அவர்களை ஒரே வடிவான தன்மைக்கு கொண்டுவருகிறது. ஆனாலும் கல்விக்குப்பிறகு, பொதுவாழ்வில் வரும்பொழுது ‘அது’ வேலை செய்வதில்லை என்பது உண்மை.


சுயம் - தன்மானம்

நான் உழைக்காமல் எதும் பெற மாட்டேன் என்பது சிலரின் நிலைப்பாடு. என்னால் முடிந்ததை செய்கிறேன், பெறுவதை பெறுகிறேன் என்பது சிலரின் நிலைப்பாடு. இதுதான் என்னால் முடியும், ஏதேனும் கொடு என்பது சிலரின் நிலைப்பாடு. என்னால் முடியாத சூழ்நிலை, அதை அறிந்து ஏதேனும் கொடு என்பதும் சிலரின் நிலைப்பாடு. உழைக்கின்ற எண்ணமே இல்லாதவனின் நிலைப்பாடு இருப்பதை தட்டிப்பறிப்பது. 

தட்டிப்பறிப்பதுகூட தானாக வரவில்லை, அப்படியான நிலைக்கு அவனை தள்ளிவிட்டதில், முந்தைய சமூகத்திற்கு பொறுப்பு உண்டு என்று வேதாத்தி மகரிசி தன்னுடைய,

‘குற்றவாளி பாவியென்று ஏதுமில்லை உலகிலே, குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்’

என கவியில் சொல்லியுள்ளார்.


யாருக்கு பகிரலாம்?!

தன் தேவை போக,  நிறைவில் இருக்குமானால், உண்மையிலேயே யாருக்கு தேவை என்ற நிலையில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பகிர்ந்தளிக்கலாம். பொருள் இல்லாதோரின் வருத்தம், எவ்வகையிலேனும் உங்களையும், இந்த சமூகத்தையும் பாதிக்கும் என்பது இயற்கையின் விதியே! 

இருப்பதை கொடுப்பது தேவையில்லை. உங்களுக்கே பற்றாக்குறை என்றால் கொடுக்க வேண்டாம். ஆனால் மிகையை தருவதில், தன்னளவில் இது போதும் என்றால், மீதியை கொடுக்கலாமே?

ஆனாலும் இன்னும் வேண்டும், வேண்டும் என பெற்றுக்கொள்ளும் மனநிலையில், இருப்பவர்களுக்கு, பகிர்ந்து கொடுப்பதற்கு ஆர்வம் எழுவதே இல்லை!


இயற்கை நீதி

ஒருவகையில் உங்கள் தேவையை நிறைவேற்றியதில், உங்கள் உழைப்பு இருந்தது எனினும், அதை தந்ததில் இயற்கையின் நீதியும் உண்டு. சரியான உழைப்புக்கு சரியானதும், தவறான உழைப்புக்கு தவறான நீதியும் அமைவதுண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல, நீங்கள் ஒருவருக்கு பகிர்ந்தளிக்கும் பொழுது, அதுவும் இயற்கை நீதியில் வரவு வைத்துக்கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் ஒரு சூழலில் அது திருப்பி அளிக்கப்படுவதும் உண்டு என்பதை மறவாதீர்கள்!


இரட்டை மன நிலை!

நம் வேதாத்திரிய சானலில், கடந்த இரண்டு நாட்களாக, தினமும் நடத்தும் வாக்குப்பதிவில் கிடைத்த பதில்கள் பார்க்கலாமா?!

உங்களிடம் பணம் இருக்கும் பொழுது உங்கள் நிலை; போனா போகுது என்று பத்து ரூபாய் கொடுப்பேன் 58%

அதே பணம் என்னிடம் இருக்கும் பொழுது உங்கள் நிலை; எப்படியும் 50 ரூபாய் தந்தால் எனக்கு நல்லது 60%

இது எப்படி இருக்கிறதென்றால், உனக்கு வந்தா தக்காளி சட்னி, எனக்கு வந்தா ரத்தம்! என்று வேடிக்கையாக சொல்லுவதைப்போல உள்ளது. என்னிடமிருப்பதை நான் ஏதோ கொஞ்சம் தருவேன், ஆனால் உன்னிடமிருப்பதில் பாதி எனக்கு வேண்டும் என்பதாக அன்பர்களின் கருத்து இருக்கிறது!


ஆய்வின் முடிவில்!

பாவமும், புண்ணியமும் இக்காலத்தில் கட்டுக்கதை ஆகிவிட்டது. யார் எப்படிவேண்டுமானலும் வாழமுடியும், வாழலாம் வாழ்நாள் முடியும்வரை என்ற பெரும்போக்கான மனநிலை சூழ்ந்த காலம் இது!

சிலர் இயற்கை எனக்கு என்னதருமோ அதை ஏற்பேன் என்றும், நானே உழைத்து பெறுவேனே தவிர கேட்டுப்பெறவோ, தருவதைப்பெறவோ மாட்டேன் என்றும் பதில் தந்திருக்கிறார்கள். 1) இயற்கை எப்படித்தரும்? ஏற்கனவே நீங்கள் கொடுத்திருந்தால் தானே கொடுக்கும்?! 2) நீங்கள் நல்ல நிலையில் இருக்கும் பொழுது சரி, உடல் வளு இழந்த நிலையில் என்ன செய்வீர்கள்?

உலக நாடுகள் பலவும், முதியோர்க்கு சலுகைகள் வழங்குவதற்கு என்ன காரணம்? அவர்களின் தள்ளாமை உணர்ந்து தானே? ஆனாலும் சில முதியவர்கள் உழைக்கத்தான் செய்கிறார்கள். எப்படி? இந்த சமூகம் முன்னேற தாங்கள், வாழ்ந்து கண்ட அனுபவ அறிவின் அடிப்படையில், ஆலோசனை சொல்லி உதவுகிறார்கள் அல்லவா? அதுவே அவர்களின் உழைப்பு.

இருப்பதை பகிர்ந்தளிப்பது என்ற உண்மையை, மனிதர்களை விடவும், ஐந்தறிவு விலங்குகள் மிகச்சரியாக வெளிப்படுத்துகின்றன. காகம் ஒன்று உதாரணம் போதுமே?!


சப்பைக்கட்டு!

சிலர் மிக மோசமான புரிதலில், ஆனால் திடமாக, பொருளாதார நிபுணராக வாதிடுவார்கள்! அதெல்லாம் சரிதான், ஆனால் பற்றில்லாமல் வாழவே முடியாதே, நான் எதற்காக பிறருக்கு பகிரனும், கொடுக்கனும்? என்றுதான் மல்லுக்கு நிற்பார்கள். இவர்கள் தான், எனக்கு ஒன்று, என்வீட்டு ஆளுக்கு ஒன்று என இரண்டாக, முதலில் எடுத்துச் செல்வார்கள்!

இத்தகைய, உழைக்காமல் ஏதும் வராது, நாங்கள் கொடுக்கமாட்டோம். பகிரமாட்டோம் என்ற கருத்து கொண்ட மக்கள்தான், அக்காலம் முதல் இருந்து வந்த, திண்ணை வீடுகளை ஒழித்தார்கள். தண்ணீர் பந்தலை அகற்றினார்கள். சத்திரம் சாவடிகளை இடித்தார்கள். அன்னதானத்தை சிற்றுண்டியகம் ஆக்கிவிட்டார்கள். 

பூகம்பம் ஏற்பட்டு வீடிழந்த மக்களுக்கும், வெள்ளத்தில் மூழ்கி வாழ்க்கைத் தொலைத்த மக்களுக்கும், புயலால், சுனாமியால், இப்படி பலப்பல இயற்கை பாதிப்பினால் பாதிக்கப்பட்டோர்க்கு, தீடீரென கருணைக் கைகள் முளைத்து உதவி செய்யும். ஆக, இவர்களை பொறுத்தவரை, தாங்கள் ஏதேனும் செய்யவேண்டும் என்றால், பிறர் குறிப்பிட்ட சூழலில் இருந்தாக வேண்டும். அதுவரை நாங்கள், தான் தனது என்ற பற்றில்தான் இருப்போம். பகிரத்தயாராக மாட்டோம் என்ற நிலைப்பாடுகளில் இருக்கிறார்கள்!


முடிவுரை

அன்பர்களே, இது சிந்தனைக் கருத்துக்கான கட்டுரையே, எந்தவகையிலும் இது முடிவான கருத்தாக இருக்கவேண்டும் என்பதில்லை. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். மேலும் அலசுவோம்!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Service Guru Thakshina Fund Fees Donate


 சேவை, குரு காணிக்கை, நன்கொடை, பணம் சேகரிப்பு, கட்டணம்

அன்பர்களே,

வேதாத்திரிய சானல், வேறெந்த அமைப்பையும், அறக்கட்டளையையும், சங்கத்தையும் சார்ந்தது அல்ல. எங்களின் நேரத்தில் பெரும் பகுதியை செலவு செய்து ஓவ்வொரு பதிவுகளாக, “சொந்தமாக” தந்து கொண்டிருக்கிறோம். வெறுமனே எல்லோரையும் போல, குரு புகழ் பாடிக்கொண்டிருபவர்களும் நாங்கள் அல்ல. நம் வேதாத்திரி மகரிசியே அதை விரும்பியதும் இல்லை. தானாகவே தனக்கு ஒரு மதிப்பும் அளித்துக் கொள்ளாதவர். மற்றவர் தருவதையும் விரும்பாதவர். தன்னை குரு என்று கூட சொல்லாமல், பேராற்றலே எல்லோருக்கும் குரு என்ற சொல்லியவர்.

நம் குருமகான் வேதாத்திரி மகரிசி, உணர்ந்து ஓதியதை, நாங்கள் ஓதி உணர்ந்து 34 ஆண்டுகள் வேதாத்திரிய பயணத்தில், நாங்களும் உணர்ந்து ஓதுபவர்களானோம். அதைத்தான் 2018 முதல் வேதாத்திரிய சானல் வழியாக தந்து கொண்டிருக்கிறேன். அதில் என் நண்பரும் இணைந்து கொண்டார். 

குரு மகான் வேதாத்திரி புகழ்பாடுவதும், அவர் பதிவுகளை தருவதும் சரி, ஆனால் நீ என்ன கற்று உணர்ந்தாய்? என்பது எல்லோருக்கும் எழும் பொதுவான கேள்வியே. அந்த கேள்விக்கான பதில்தான் எங்களது பதிவுகள். 

ஒருவர், தன் குருவின் புகழ் பாடினால், அவர் தன்னளவில் வளர்ச்சி இல்லாமல், குருவோடு நின்றுவிட்டார் என்றுதான் அர்த்தம். அவர் சரணாகதியே ஆனாலும் கூட, அவருக்கென்று தனி கருத்து ஏதுமில்லை. எல்லாமே குரு, குருதான் எல்லாமே. இதில் தவறில்லை. ஆனால் இந்த அன்பர், தன் கருத்தாக எதையுமே சொல்ல முடியாது. சொன்னாலும் மாட்டிக்கொள்வார். குரு மகான் வேதாத்திரி இப்படிப்பட்ட அன்பர்களை ஏற்படுத்தியது இல்லை. என்னைப்போல நீயும் மாறுக என்றுதான் வாழ்த்தியிருக்கிறார்.

நாங்களும், குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களை சரணாகதி அடைந்தவர்கள் தான். ஆனால் அவரளவில் நிற்காமல், எங்கள் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை ஆராய்ந்து தெளிந்தோம். உண்மை அறிந்தோம். அதை வார்த்தையால் விளக்குவது கடினம். 

-

* இதுவரை எங்களை புரிந்துகொள்ளாத அன்பர்களுக்கு நாங்கள் வாய்ப்பு தருகிறோம். நீங்கள் விரும்பினால் எங்களை, உங்கள் அறிவாட்சித்தரத்தால் அளந்து பார்க்கலாம். நாங்கள் தயார்.

-

குரு மகான் வேதாத்திரி மகரிசியிடமே, உங்களுடைய சிஷ்யர்கள் உங்களை மாதிரி இல்லை, அவர்களை எப்படி தரத்தில், உண்மை உணர்ந்தவர்களாக ஏற்றுக்கொள்வது? அப்படி ஒருவரை காட்டுங்கள், நான் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறேன் என்றார். அதற்கு மகரிசி அவர்கள் “உங்கள் அறிவாட்சித் தரத்தின்படிதான் அவர்களை பார்க்கிறீர்கள். எந்த அளவைக்கொண்டு அப்படி சொல்லமுடியும்? அதோடு உங்கள் வணக்கத்தை எதிர்பார்த்தும் அவர்கள் இல்லை, உங்களை உயர்த்திக்கொள்ள என்ன வழியோ அதைப்பாருங்கள், குறைகாண்பது வேண்டாம்” என்று சொல்லியுள்ளார்.

அதுபோலவே வேதாத்திரிய சானலில், 07/10/2022 அன்று நான் பதிவிட்ட ஒரு பதிவிற்கு அப்படியான வாதம் வந்துவிட்டது. 

-

அங்கே பதிவிட்டது இதுதான்!

-

அன்பர்களே, ஜூம்  (zoom) இணையம் வழியாக, கேள்வி & பதில், சந்தேகம் & விளக்கம், தனித்தனி நபருக்கும் கிடைக்கும். யோகம், தவம், பொதுவாழ்க்கை, மனக்குழப்பம், இறை விளக்கம் ஆகிய, இதன் தொடர்பான உண்மைகள் பெறலாம்.

1) குரு காணிக்கையாக ஒருநாளைக்கு ரூபாய் 300 GPay வழியாக செலுத்தவேண்டும்.

2) 90 நிமிடங்கள் (இரண்டு பிரிவுகளாக) ஒருநாள் மட்டும் விளக்கம் கிடைக்கும்.

3) எந்த நேரம் உங்களுக்கு தேவை என்ற விபரம் தெரிவிக்கலாம்

3) பணம் செலுத்திய உடன், ஜூம் இணைப்பு வழங்கப்படும்

பணம் அனுப்ப GPay ID  xxxxxxxxxxxxxx

-

இதற்கு ஒருவர் பின்னூட்டமிட்டார்.

பின்னூட்டம் X: இந்தத் தொகை SKY டிரஸ்டுக்கு செல்லுமா?

என்னுடைய பின்னூட்டம்: இந்த சேவை வழங்குவது WCSC, SKY Trust இல்லை


இன்னொருவர் பின்னூட்டமிட்டார்.

பின்னூட்டம் Y: குரு காணிக்கை என்றால் ஸ்கை ஆழியாருக்குத்தான் வழங்க முடியும். வேறு யாரும் நன்கொடை கேட்பதை ஏற்கமாட்டோம்

என்னுடைய பின்னூட்டம்: சரி அப்படியானல் வருந்துகிறேன். பணம் செலுத்தாதவர்களுக்கு சேவை வழங்க முடியாது. வாழ்க வளமுடன்.

சிறிது நேரத்தில் இதை நான் அழித்துவிட்டேன், முதல் கோணல் முற்றும் கோணலாக மாறிவிடும் என்பதால்!

-

நான் மறுபடியும் ஒரு பதிவிட்டேன்.

அன்பர்களே, ஜூம்  (zoom) இணையம் வழியாக, கேள்வி & பதில், சந்தேகம் & விளக்கம், தனித்தனி நபருக்கும் கிடைக்கும். யோகம், தவம், பொதுவாழ்க்கை, மனக்குழப்பம், இறை விளக்கம் ஆகிய, இதன் தொடர்பான உண்மைகள் பெறலாம் என்று பதிவிட்டிருந்தோம். அதற்காக வருந்துகிறோம்,

இவை எங்கே கிடைக்குமோ, அங்கேயே நீங்கள் பெற்றுக் கொள்ளவும். 

வாழ்க வளமுடன்!

-

இதற்கு என்னமாதிரியான வாதங்கள் நிகழ்ந்தது என்பதை நான் இங்கேயும் தருகிறேன்.

பின்னூட்டம் A: Super இப்போது தான் நீங்கள் சரியாக பதிவிட்டு இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன் வேதாத்திரியம் வியாபாரமாக்கப் படுகிறதே என்று வருத்தமாக இருந்தது

எனது பின்னூட்டம்:  நன்றி, ஓவ்வொரு அன்பருக்கும் அவரவர் வினைப்பதிவு செயல்படுகிறது. மெய்யுணர்ந்த ஆசிரியரின் சேவையை ஏற்கும் பக்குவமில்லை. வாழ்க வளமுடன்!

பின்னூட்டம் A: எதிர்பார்ப்பு இன்றி செய்வதே சேவை அல்லவா?

எனது பின்னூட்டம்: அதுதான் வழக்கமாக கொடுப்பதாயிற்றே, அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் பதில், “தனித்தனி நபருக்கும்  கிடைக்கும்” என்ற வார்த்தை பதிவிடப்படிருப்பதை கவனிக்க மறந்தீர்போலும். நல்லது. இதுவும் எனக்கு இறை கொடுத்த பாடமே என்பதை உணர்ந்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

பின்னூட்டம் B: வணக்கம்  தனித்தனியாக என்பதை  கவனித்தால்தான்  வேதாத்திரி மகரிஷியின்  அனுபவ விரிவை  புரிந்துகொண்டு  விளக்கம் அளிப்பீர்களா  அல்லது  தங்களது  நான் யார்  என்ற முழுமையின்  உச்சபட்சஅறிவின்  உணர்வின் தெளிவில்  உங்கள் விளக்கம் இருக்குமா?

எனது பின்னூட்டம்: அன்பரே, உங்களுக்காக தனியே பதில், கிழே தந்திருக்கிறேன்.

பின்னூட்டம் B: இவை எங்கே கிடைக்குமோ அங்கே சென்று  பெற்றுக் கொள்ளுங்கள்  என்று  பதிவில் உள்ளதை  கண்டு சேர்த்து கவனித்தால்தான்  உங்கள் விளக்கத்தை வேண்டி விரும்பினேன்   உங்கள் பதில்   வாழ்க வளமுடன்

பின்னூட்டம் A: ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இனிப்பை சுவைக்க எறும்புக்கு, விளம்பரம் தேவை இல்லை. இனிப்பு இருந்தால் எறும்பு தானாக வரும் .மேலும் ...மேலும் சுயநலம் கருதாமல் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பிரதிபலன் பாராமல் உழைத்து இறைத்தொண்டாற்றிய  மகான்கள் பலர் ..... புரிந்து கொண்டு செயல்படுங்கள்.. 

எனது பின்னூட்டம் :  உங்கள் அக்கறைக்கும் ஆலோசனைக்கும் நன்றி,  ஆனாலும் தாயானவள் வலிந்து உணவு ஊட்டவில்லையானல் குழந்தை வளர்ச்சி குன்றிப்போய்விடும். வாழ்க வளமுடன்.

பின்னூட்டம் C: சரியான முடிவு.நீங்கள் அப்படி ஆலோசனை தருவீர்கள் என்றால்.1 நாள் மட்டும் இலவசமாக தந்திருக்க வேண்டும்.

எனது பின்னூட்டம்:  நல்லது, இனிமேல் திருத்திக் கொள்ளலாம். வாழ்க வளமுடன்

-

பின்னூட்டம் B: என் குருநாதர் வேதாத்திரி மகரிஷியின்  அவர் முகம் காணா மாணவன் நான்  அவரின் உன்னத செயலுக்கு இழுக்காக இருக்கிறது உங்கள் பதிவு   வேதாத்திரியத்தை படித்து  ஆசிரியர் பணி  செய்பவர்கள்  இறைவனுக்கே  பணி செய்பவர்கள் ஆகிறார்கள்  இதை சற்று புரிந்து கொள்ளுங்கள்  பாடத்தை மனப்பாடம் செய்வதால் மட்டும்  புரியும் நிலை இருந்தாலும்  புரிந்ததாகாது  உணர்ந்தால் மட்டுமே   அது முழுமையாக. உணர்ந்துகொண்டதாக ஆகும்  அப்படியிருக்கையில்  பயிற்சியின்போது   அனுபவத்தில்  சில நிலைகளை  உணர்ந்தவர்  மேலும் தெளிவு பெற படித்த உங்களிடம்  விளக்கம் கேட்டால்  உங்கள் நிலைப்பாடு என்ன. படித்த அறிவில்  உங்கள் பதில் இருக்குமா  அல்லது  அனுபவ உண்மையை உணர்ந்த நிலையில் இருக்குமா ???

எனது பின்னூட்டம்: வணக்கம், இந்த மாதிரியான வாதத்திற்கும், கேள்விகளுக்குமே நான் காத்திருந்தேன் என்பது உண்மை. ஏனென்றால் அப்போதுதானே நானும் சில உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

நீங்கள் என்னுடைய அனுபவ உரைபதிவுகளை பார்க்க, கேட்கவில்லை என்றே கருதுகிறேன். நம் வேதாத்திரி மகரிசி சொன்னது போலவே, நான் உணர்ந்து ஓதுகிறேனா இல்லையா என்பதை, இங்கே பகிரும் பதிவுகளே சொல்லும். இந்த வேதாத்திரிய சானலில் இருக்கும் 533 பதிவுகளில், ஒரு சில பதிவுகள்தான் நேரடியாக, நம் வேதாத்திரி மகரிசி குரலில் இருக்கும். மற்ற எல்லா பதிவுகளும், குருமகான் சொன்னதை, நாங்கள் புரிந்து கொண்டவிதத்தில், அதன் சாரம் மாறாமல் நாங்கள் தந்தவையே. இதற்கு 13450 பகிர்வார்களே சாட்சி.

கிட்டதட்ட 300 கவிதைகள் எழுதியிருக்கிறேன். நம் மகரிசியின் மாக்கோலம் கவிதைகள் விளக்கம் ஒரு பாகம் எழுதியிருக்கிறேன், மூன்று உடல், மன நலன் குறித்த கட்டுரை எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் அமேசான் கிண்டில் நூலாக விற்பனைக்கு கிடைக்கிறது. தற்பொழுதும் எண்ணம் குறித்த கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதை எல்லாம் எந்த மாதிரியானது என்பதை நீங்களே ஆராயுங்கள்.

என் வயது 53, என்னுடைய 18 வயதில் தீட்சை எடுத்துக்கொண்டேன். 34 ஆண்டுகால வேதாத்திரிய பயணத்தில் நான் பெற்ற உண்மைகள்தான் இங்கே பதிவுகளாக 2018 ஆண்டு முதல் மலர்ந்திருக்கிறது.

என் ஓவியங்களுக்காக இரண்டு முறை, நேரடியாக குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களை சந்தித்ததும், அவரின் கையொப்பம் கேட்டு வாங்கியதும் என் அனுபவங்கள்.

உங்களிடம் இருக்கும் அளவுகோலில் என் அறிவையும் தெளிவையும் அளந்து கொள்ளலாம். தவறேதும் கருதமாட்டேன். வாழ்க வளமுடன்.

-

இதோடு இன்றைய வாதம் நின்றிருக்கிறது, இது தொடருமா என்பது நாளை தெரியும். பார்க்கலாம்.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

The World Community Network


 அன்பர்களே,



கேள்வியில் தொடங்குகிறேன்

உங்களிடம்,  “இப்பொழுது நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள்?” என்று கேட்கிறேன். உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்பதை ஒரு காகித்தலோ / கைபேசி குறிப்பிலோ எழுதி வைத்துக்கொள்க. இதை நானாக புரிந்துகொண்டவகையில் சில பதில்களை இங்கே தந்து இந்த கட்டுரையை துவங்குகிறேன். அந்த பதில்கள் என்ன?

1) இன்றைய நாளும் பொழுதும் நன்றாக இருக்கிறது

2) ஏன் இன்றைக்கு ஏதோ சோகமாக உணர்கிறேன்?

3) இந்தவேலைக்கு ஏன் வந்தேனோ, ஒரே இம்சையடா!

4) எதிர்பார்த்த மாதிரி பண வரவு இல்லையே என்ன செய்வது?

5) வாங்கிய கடனுக்கான வட்டி ஏறிக்கொண்டே இருக்கே, பிரச்சனை ஆகிடுமோ?

6) கொடுத்த காசை திருப்பித்தராம எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!

7) பூர்வீக வீட்டு பிரச்சனை எப்போதான் தீருமோ தெரியலையே?

8) இந்த சொந்தக்காரங்களுக்கு பதில் சொல்லியே உயிர் போகுது!

இன்னும் இன்னும், ஆயிரம் மனிதர்களின் பதில்களும் ஒரே மாதிரி இல்லாமல், தனித்தனியாகவே அமைந்திருக்கும். இதுதான் மனிதனின் இயல்பு. ஆணும் பெண்ணும் இருவரும், பொருளாதார வாழ்வில் சமமாக இருக்கும் காலம் இது. எனவே ஆணுக்கு என்னவகையான பிரச்சனைகள் எழுமோ, அதே அளவிலான பிரச்சனைகள் பெண்ணுக்கும் உண்டு.


வேற்றுமையில் ஒற்றுமை

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தன்னளவில் இருந்தாலும், உலகம் சுருங்கிய இந்த காலத்தில் இன்னொன்றை கவனிக்க வேண்டும். அது சமூகம் தொடர்பானது. சமூகம் என்றால் நீங்கள், உங்கள் இனம், குழு என்று சொல்லுவதற்கில்லை. அதெல்லாம் அந்தக்காலம். 

இப்பொழுது சமூகம் என்றால், இந்த உலகமே சமூகம் என்றாகிவிட்டது. காரணம், எல்லைகளைக் கடந்த தொடர்புகள். ஆம் தகவல் தொடர்பு,  இணையம் வழியாகவும், கைபேசி வழியாகவும் இந்த உலகத்தையே ஓர் சமூகமாக மாற்றிவிட்டது. இதனால எண்ணற்ற பயன்கள் உண்டு. அதை நாமும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் அந்த அனுபவத்தில் நன்மைகளுக்குப் பதிலாக, நிறைவாக வாழ்வதற்குப் பதிலாக, துன்பத்தையும், நிம்மதி இன்மையையும் அனுபவிக்கிறோமே அது சரியா?

அத்தகைய உலக சமூகம், தகவல் தொடர்பால் தரும் துன்பத்தையும், நிம்மதியின்மையையும், தன்னளவில் தனித்தனியாக பிரச்சனைகளை சந்திக்கும் ஆயிரமாயிரம் மனிதர்கள், ஒருசேர ஒற்றுமையாக ஒரே அளவில் அனுபவிக்கிறார்களே! இது சரியா? இதில் நானுமே ஒருவன், நானும் கூட தப்பிவிடுவதில்லை. 


இதில் நல்லது என்ன?

உலகம் சமூகமாகிவிட்டாலும், அங்கே சுயநலமும், தான் என்ற அகங்காரமும், தனது என்ற அதிகாரத்தை அமைக்க விரும்புவதும், குழப்பதை ஏற்படுத்தி மக்கள் நிம்மதியை கெடுத்தலும், நாட்டை அபகரித்தலும், எதிரிகளை கூட்டாக அழிக்க விரும்புவதும், அரசை கைபற்ற நினைப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேவேளையில் நடக்கும் நல்லது என்ன?

ஆங்காங்கே, மக்கள் ஒன்றுபட்டு நல்ல அரசை அமைக்க விரும்புவதும், தங்கள் பிரச்சனையை தாங்களே கேட்டுப்பெறுவதும், நாட்டின் இறையான்மையை காப்பதும் நிகழ்கிறது. அவற்றை முன்னெடுத்து நடத்திச் செல்லும் நல்ல தலைவர்களையும் அடையாளம் காணமுடிகிறது. நாடு என்ற அளவில், மொழி, மத, இன அடையாளங்கள் மறந்து ஒற்றுமையான மக்களை உருவாக்குகிறது.


நீங்களும், உங்கள் நிலையும்!

இந்த உலகில், இந்த காலகட்டத்தில் வாழ்வதால் நீங்களும், இந்த உலக சமூகத்தில் ஓர் உறுப்பினர். நீங்கள் ஏற்றாலும், மறுத்தாலும் கூட அந்த பாதிப்பையும், நன்மையையும் நீங்கள் பெறுவீர்கள். சில நேரம் மறுக்கலாம், ஆனாலும் எல்லோரும் ஏற்கும் பொழுது நீங்கள் மட்டும் மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை. மீறினால தண்டிக்கவும்படுவீர்கள்.

இதில் உங்கள் நிலை என்ன என்பது, உங்களை வந்தடையும் உலக சமூக பிரச்சனை / நல்லது இவற்றைப்பொறுத்துத்தான் அமையும். அதில் சந்தேகமே இல்லை. அது நல்லதா, கெட்டதா என்பதை, உங்களை வந்தடையும் நேரத்தில் கணிக்கவும் முடியாததாக இருக்கலாம். மேலும் உங்களையும் தன்பக்கம் இழுக்கக்கூடிய, உங்களுக்கு நன்மை தரதக்க ஒன்றாகவும் இருக்கலாம். முற்றாக உங்களுக்கு அவசியமற்ற, உங்கள் வாழ்க்கையும் பறிக்கலாம், நீங்கள் இந்த உலகில் வாழ்வதற்கான உரிமையையும் பறிக்கலாம்.


உங்கள் வீடும், குப்பைகளும்!

இந்த உலகத்திலேயே மன நிம்மதி தரும் இடம் என்றால், உங்கள் வீடுதான். அந்த வீடு ஆடம்பரம் இல்லாமல் இருக்கலாம். 1BKH முதல் 6BHK வரைகூட இருக்கலாம். நேற்று உடுத்திய துணிகள் எங்கும் பரவிகிடக்கலாம், வீடெங்கும் குப்பைகள் நிறைந்திருக்கலாம். ஆனாலும் அது உங்கள் வீடு, உங்களுக்கு அமைதிதரும் வீடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இப்பொழுது உங்கள் வாசல், எப்படி இருக்கிறது என்ற கவலை உங்களுக்கு இல்லை. என் வீடு என்வாசல் எப்படி இருந்தாலும் எனக்கு சரிதான் என்ற நிலைதான் உங்களுக்கு. நல்லதுதான். ஆனால் யாரோ உங்கள் வாசலில், வந்து குப்பையை கொட்டிவிட்டு போகிறார்கள் என்றால், என்ன ஆகும்?

நீங்கள் வெகுண்டு எழுந்து, “எவண்டா அது என்வீட்டு வாசலில் குப்பையை கொட்டுகிறவன்?” என்று வீட்டை விட்டு, வாசலில் நின்று கொண்டு சத்தம் போடுவீர்கள். பக்கத்தில் இருக்கும் நான் உங்களிடம் “சரி, விடப்பா, எவனோ போட்டுட்டு போயிட்டான், நீ நிம்மதியா இரு” என்று சொன்னாலும், “அதெப்படிங்க, என் வீட்டு வாசலில் எவனோ ஒருத்தன் குப்பை கொட்டலாம், இது நியாயமா?” என்று என்னிடம் சொல்லுவீர்கள். அதற்கு மேல் நான் பேசினால், நம் இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிடும். கடைசியில் நான் தான் குப்பையை கொட்டினேன் என்று திருப்பிவிடவும் வாய்ப்புக்கள் அதிகம்.

மறுநாள், உங்கள் வீட்டிற்குள்ளேயே குப்பையை யாரோ கொட்டிவிட்டார்கள். இப்பொழுது என்ன நடக்கும்? பார்த்த உடனே, கெட்டவார்த்தையில் கூட யாரையோ திட்டிக்கொண்டே வாசல் வரை வந்து கத்துவீர்கள். இன்றோ நானும் உங்களிடம் ஒருகருத்தும் சொல்லவில்லை. நான் வெளியே வரவேஇல்லை. நீங்களாகவே கொஞ்சம் கத்திவிட்டு அடங்கிவிட்டீர்கள்.

மூன்றாவது நாள், நீங்கள் அறியாமல், உங்கள் படுக்கை அறையிலேயே யாரோ ஒருவர் குப்பையை கொட்டுவிட்டார். அவ்வளவுதான், உங்கள் சினம் எந்த அளவுக்கு எகிரும் என்பதை அளவிடவே முடியாது என்பதுதான் உண்மை. 

கூட்டி அள்ளி வெளியில், போட்டுவிடுகின்ற குப்பைக்கு இவ்வளவு கோபம் உங்களுக்கு வருமென்றால்... அடுத்த தலைப்பையும் படியுங்கள்!


உங்கள் மனமும், குப்பையும்!

உலக சமூகம், தகவல் தொடர்பில் மிக எளிதாக எல்லோரையும் ஒரே கயிறில் கட்டி இணைத்துவிட்டது. யார் எங்கே இருந்தாலும், யாரோடு யாரும் பேசலாம், பழகலாம், விரும்பலாம், இணையலாம், கூடலாம், விலகலாம், எதிர்க்கலாம், சண்டையும் போடலாம், பழியும் வாங்கலாம் என்றாகிவிட்டது தானே?!

மேலும் தினம் தினம், இணையம் வழியாக, கைபேசி வழியாக, யார் யாரோ குப்பைகளை, உங்கள் மனதில் கொட்டி விட்டு போகிறார்களே? உங்கள் மனம், நீங்கள் வாழுகின்ற வீட்டை விட கேவலமானதா? ஏகப்பட்ட குப்பைகளோடு வாழ்ந்து பழகி, இன்னும் பல மடங்கு குப்பைகளை ஏற்றுக்கொள்ளும் மனதைத்தான் நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? ஒரு போதும் நீங்களாக, உங்கள் குப்பைகளை சரிசெய்ததில்லை அப்படியே வாழ்ந்து பழகிவிட்டீர்கள் என்றால், யார் யாரோ போடும் குப்பைகளை ஏற்றுக்கொள்ளவும் செய்வீர்களா? அந்த குப்பைகளோடும்  உங்கள் வாழ்க்கையை தொடர்வீர்களா?

உங்கள் பதிலும், நிலையும் என்ன?

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

The solution for you, in your horoscope!


உங்களுக்கான தீர்வு, உங்கள் ஜாதகத்தில்!


Thanks to Times Now

வாழ்க்கை முறையும், துன்பங்களும்

அன்பர்களே, சமீபமாக பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறை உயர்ந்த அளவிற்கு சமமாகவே அவர்கள் படுகின்ற துன்பங்களும் உயர்ந்திருக்கிறதோ என்று கருதவேண்டியுள்ளது. அந்த துன்பங்களை களைய ஒரு நல்ல அறிவார்ந்த ஒரு மனிதர் அவர்களுக்கு கிடைக்கவில்லை. 

அப்படி கிடைத்தாலும் தெளிவில்லாத பதில்களை கொடுத்து, தன் காரியம் சாதிக்கும் மனிதராகத்தான் கிடைக்கிறார். இதனால் அவர்கள் இன்னும் குழம்பிப்போய், முன்னே இருந்த நிலையே பரவாயில்லை எனும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். நல்ல நண்பரும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவரும், இவர்களோடு ஒன்றாகத்தானே இருக்கிறார். அதாவது அவருக்கும் ஏகப்பட்ட துன்பங்கள் இருக்கின்றன. 


அந்த அறிவார்ந்த மனிதர் யார்?

நீங்கள் என்னைக் கருதக்கூடும். ஆனால் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் நானும் நீங்களும் ஒன்றுதான். எனக்கென்று தனிப்பட்ட ஏதும் இல்லை. ஆனால் என் வாழ்வின் அனுபவங்கள் வழியாக, எனக்கு கிடைத்த குருவின் ஆசியினாலும், அவரின் அறிவுரைகளாலும், எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள், நடத்திய ஆராய்ச்சிகள் வழியாக வாழ்க்கை குறித்த விளக்கங்கள் தெளிவாகின. 

மனிதன் ஏன்? எதற்கான பிறந்தான்? ஏன் வழி பிறழ்ந்தான்? ஏன் துன்பம்? எங்கே இருக்கிறது பேரின்பம்? என்பதற்கான விடைகள் என் குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் வழங்கிய யோக சாதனையால் கிடைத்தது. அது உங்களுக்கும் கிடைக்கும். இப்போது கிடைக்கவில்லை எனினும், இன்னும் கொஞ்ச காலம் கழித்து கிடைக்கலாம். அறிதலில், அனுபவத்தில் முன்னே பின்னே தானே தவிர உயர்வு தாழ்வு ஏதுமில்லை. 

மேலும் நான் அறிந்ததை, அதன் வழியே எனக்கு கிடைக்கும் விசயங்களைத்தான் உங்களுக்கும் தர முயற்சிக்கிறேன். தனியாக வேறொன்றும் இல்லை!


துன்பம், இதன் காரணம் என்ன?

கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், மனிதனின் வாழ்க்கைத்தரம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்ற வித்தியாசத்தை உணரலாம். அறிவியல், நவீன உபயோக கருவிகள், பயண நேர குறைப்பு, ஆராய்ச்சி என்று உயர உயர போய்க்கொண்டே இருக்கிற முன்னேற்றம் நடந்துகொண்டிருக்கிறது, ஏன் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.

இதற்குச் சமமாக மனிதன்,  மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ளவில்லை. வாழ்க்கைத்தரம், தொழில், பண வரவு, செல்வாக்கு என்ற வாழ்வு அடிப்படை நோக்கத்தில் உயர்வு பெற்றிருந்தாலும், தான் தன் மனம், அறிவு என்ற இயற்கையின் கொடையில் அவன் உயர்வு பெறவில்லை என்பது உறுதி.

பதின்ம வயதுக்கான சட்டையை, 30 வயதிலும் போட்டுக்கொள்ள முயற்சித்து, அது எனக்கு பொருந்தவில்லையா, நான் அதற்கு பொருந்தவில்லையா என்பதே புரியாமல், வாழ்க்கை சிக்கலிலும் துன்பத்திலும் உழல்கிறான். 


கிரகங்களும் ஜாதகமும்

பல கட்டுரைகளில் நாம் ஏற்கனவே கலந்து பேசியதுதான் என்றாலும் கூட, மீண்டும் சில முக்கிய கருத்துக்களை தருகிறேன். ஒவ்வொரு கிரகமும், கோள்களும் மிகமிகப் பெரியன. கருத்துக்குக் கூட எட்டாத பெரியன, அவ்வளவு பெரிய கிரகங்களில் இருந்து வரும் அலைகள் ஏற்படுத்துகிற தாக்கமே, ஜாதகத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது ஒரு புளு பிரிண்ட், அடிப்படை வரைகலை என்று சொல்லலாம்.

பிறந்தபோது இருந்த கிரக நிலை, அவற்றின் தாக்கம், ஒரு தகுந்த ஜோதிடரால் கணிக்கப் பெற்றிருந்தால், ஜாதக கட்டத்தில் கிரகங்கள் நிலையும், இப்போதைய கிரக சஞ்சார நிலைகளும் கொண்டு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஊகித்து அறியலாம். ஆனால் ஒரே ஜாதகத்திற்கு, ஒரே மாதிரியான பலன்களை யாருமே தர முடிவதில்லை. அத்தகைய நிலை அந்தக்காலம் முதற்கொண்டே உள்ளது.

மாற்றுவழி, யோகம், பரிகார பார்வை, இடமாறுதல், வீடுகொடுத்தல், பாவம் பாகை என்று பல வழிகளில் பலன்கள் மாறிவர இடமிருக்கிறது.


மூலம் என்ன?

இந்த கிரகங்களால் பாதிக்கப்படுவது யார்? மனிதன். ஏன்? அவனுக்குத்தானே மனம் என்ற அற்புதக்கருவி இயற்கை கொடுத்திருக்கிறது. மன+இதன் தானே மனிதன். இந்த மனம் மனிதனைத்தாண்டி விரிந்து கொண்டே இருக்கிறதே? அதற்கு எல்லைதான் எது? அப்படி விரிந்து விரிந்து தானே, இப்பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா கிரகங்களின், நட்சத்திரங்களின் பலாபலன்களை பெற்றுக்கொண்டு இன்பமோ துன்பமோ அனுபவிக்கிறது. அம்மனதின் வழியாக மனிதனும் அனுபவிக்கிறான்.


இதற்கு வழி என்ன?

மிக எளியவழி இருக்கிறது. அது தன்னை அறிதல்தான்.  “நான் யார்?” என்ற கேள்வில் தொடங்கும் பயணம் எங்கே முடிவடைகிறதோ, அங்கே இவன் யார்? கிரகங்கள் யார்? என்ற வித்தியாசம் இல்லாத ஒற்றைத்தன்மை வந்துவிடுகிறதே? அந்த மாற்றமே இதற்கான வழி!

ஆனால் அதையும் நாம் உடனடியாக பெறுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லையே. ஏன் அப்படி? நாம் பெற்றிருக்கிற கர்மா என்ற வினைப்பதிவே காரணமாகிறது!

அதுவும் கூட நம் ஜாதகத்தில் கிரகங்கள் காட்டுக்கொடுக்கிறதே?!


சிறிய சேவையாக

என் வழியாக சிலருக்கு உதவும் நோக்கத்தில், ஜாதக பலன் தரலாம் என்று விரும்புகிறேன். எப்போதுமே ஜாதகம் பார்ப்பதை, கணித்துத் தருவதை தொழிலாக பார்க்கும் எண்ணம் இருந்ததில்லை. ஏனென்றால் எனக்கு ஜாதகம், ஜாதக நூல்கள் அறிமுகமான காலம் முதலே, அதைத்தாண்டிய ஒரு விளக்கம் என்னுள் விதைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அடிப்படை அறிவுக்காக பார்க்கவும், கணிக்கவும் பாடம் படித்தேன். ஆராய்ச்சிகள் தொடர்ந்தன, தொடர்கின்றன ஆனாலும் அதை தொழில்படுத்தவில்லை. 

வரும் 21ம் (21/09/2022) தேதி முதல், இந்த ஜோதிட சேவை தொடங்குகிறேன். ஒரு ஜாதகம் தருகிற பொதுப்பலனும், ஆன்மீக, யோக முன்னேற்றங்களும், கர்மா என்ற வினைப்பதிகளின்  நிலை, தீர்க்கும் வழி, கால மாற்ற நிலை, தீர்வு ஆகியன அறிந்துகொள்ள சேவை நன்கொடை:

2500 INR (இந்திய மதிப்பில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் / Two Thousand Five Hundred Indian Rupees) 

UPI இணைய வழி மூலமாக பணம் அனுப்பிவைக்கலாம்: 

அதற்கான சுட்டி:

9442783450@UPI

Hi, You can send me money using this BHIM QR or using my UPI ID 9442783450@upi. Use BHIM or any other UPI App to make transactions.


உங்கள் ஜாதக குறிப்பை போட்டோ காப்பி செய்து மின்னஞ்சலில் அனுப்பலாம். ஜாதகம் எழுதப்படவில்லை என்றால் 1) பெயர் 2) பாலினம் 3) பிறந்த ஊர் 4) நேரம் 5)  பிறந்த நாள் 6) தாயின் பெயர் 7) தந்தையின் பெயர் 8) பூர்வீக ஊர் 9) தற்போதைய வசிப்பிடம் 10) கல்வித்தகுதி 11) வேலை 12) ஆர்வமான சில விசயங்கள் ஆகியன எழுதி அனுப்புக! 
அதற்கான மின்னஞ்சல் முகவரி இதோ:

checkmyhoroscope@gmail.com

(மின்னஞ்சலில் பணம் செலுத்தியதற்கான காட்சிப்பதிவை இணைத்து அனுப்பிவைக்கவும்)

(ஆராய்ச்சி விளக்கம் பெற்றுக்கொண்ட பிறகு) உங்கள் தனிப்பட்ட கேள்விகள் 7 கேட்கலாம். 

பலன்கள் பெற குறைந்தபட்சமாக 7 நாட்களும் அதிகபட்சமாக 15 நாட்களும் ஆகலாம்! 

பலன்கள் அதன் விபர குறிப்புக்கள் அனைத்தும், மின்னஞ்சல் வழியாகவே எழுத்து வடிவில் அனுப்பி வைக்கப்படும். குரல் பதிவாகவும் கிடைக்கும். (Results will be send by text note via email only and  Voice over audio also available)

-

குறிப்பு: 

பணம் செலுத்தாத, பணம் செலுத்திய விபரக்குறிப்பாக காட்சிப்பதிவு இணைக்காத மின்னஞ்சல், அதில் வரும் ஜாதக குறிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது! (அதை மறுபடி தெளிவு செய்யவும்)

இது இலவச சேவை அல்ல

வழக்கமாக தொழில் ரீதியிலான ஜோதிட முறைகளுக்கு மாறுதலானது. எனவே அதைப்போலான பரிகாரம் என்றெல்லாம் இதில் சொல்லப்படாது!

இச்சேவை குறித்து தனித்து என் கைபேசிக்கு அழைப்பு வந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது, மன்னிக்கவும்!

பணம் செலுத்தியவர்கள் மட்டும், வாட்சப் வழியாக தங்கள் பலன்கள் குறித்த சந்தேகங்கள் கேட்டுக்கொள்ளலாம்!

இந்த சேவை, குறிப்பிட்ட காலத்திற்குள், பணம் செலுத்திய அனைவருக்கும் சேவை முடிந்தபிறகு, முடிவுக்கு வரும்!

-

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்!


Rahu and Ketu - Part 02


 ராகுவும் கேதுவும் - பகுதி 2


ராகு கேது என்ற நிழல் கிரகங்கள் ஜாதகனுக்கு என்ன சொல்ல வருகிறது? கடந்த பகுதியில் இந்த கேள்வியோடு முடித்திருந்தோம்...

உன்னுடைய பிறப்பின் நிலை

ராகு கேது என்ற இரண்டு கிரகங்களும் சாயா கிரகங்கள். நிழலாக இருப்பவை ஆனால் தோற்றத்திற்கு சிக்காதவை. என்றாகும் தனக்குள் சிக்கும் கிரகங்களின் சக்தியை தனதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டவை. 12 ராசி கட்டத்தில் எந்த நட்சத்திர கூட்டத்தின் சக்தியை தாங்கி நிற்கிறது என்பதின் வழிகாகவும், எந்த கிரகத்தோடு நின்று, அக்கிரகத்தின் வலுவை குறைக்கிறது என்பதை கண்டால், இந்தப் பிறவியில் நம்முடைய நிலை புரியவரும்!

அதாவது, இந்த பிறவியில் நாம் செய்ய முடிந்தது என்ன? எந்தமாதிரியான வாழ்க்கை முறை என்பதும், என்னமாதிரியான தொழில், வியாபாரம், சேவை செய்து பிழைக்கமுடியும் என்பதும், அது நிலைக்குமா? உயர்த்துமா? நஷ்டத்தை தருமா? நல்ல பெயர் மட்டும் வாங்கித்தருமா? என்பதை அறிந்துகொள்ளலாம்!


பிறப்பின் முந்தைய நிலை

உங்களுடைய முற்பிறவி என்றால், பயப்படாதீர்கள் உங்கள் தாயும், தந்தையும்தான். அவர்களுக்கு முற்பிறவி, உங்கள் தாத்தாவும், பாட்டியும்தான். தனித்த நீங்களே முன்னாடியும் பிறந்ததில்லை, இனிமேலும் பிறக்கப்போவதில்லை. ஆனாலும் ஜென்ம வாசனை என்ற ஒன்று, உங்கள் தாத்தா பாட்டி வழியாகவும், தாய் தந்தை வழியாகவும் உங்களோடு ஒட்டிக்கொண்டு வரும். சிலருக்கு வெளிப்படையாக தெரியும், சிலருக்கு உள்பூர்வமாக இருக்கும் அவ்வளவுதான்.

தாத்தா கர்நாடக சங்கீதம் அறிந்தவரானால், பேத்திக்கு இயல்பாக ராகங்கள் புரிந்துவிடும் என்பது இப்படித்தான். 

இப்படியான நிலையை, அதாவது தொக்கி நிற்கிற நிலையை ஒரு ஜாதகனுக்கு ராகு கேது கிரகங்கள் காட்டுகிறது. தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் உங்களுக்கும் முரண்பாடா? பாட்டிக்கும் தாயாருக்கும் உங்களுக்கும் ஒட்டுறவா? அதையும் தெளிவாக காட்டும்.


நண்பர் கூட்டும், வாழ்க்கை துணையும்

உலகில் பிறந்த உங்களுக்கு, துணையாக இருப்பவர்கள் என்றால், முதலில் இருப்பவர்கள் உங்களுக்கு முன்னே, பின்னே பிறந்த சகோதர சகோதரிகள் ஆவார்கள். அவர்களுடன் உங்கள் உறவு எப்படி என்பதும் ராகு கேது காட்டும்!

வீட்டைக்கடந்த துணை என்றால் பள்ளித்தோழமையும், பக்கத்துவீட்டு நண்பர்களும் ஆகும். அவர்களோடு உங்கள் உறவு என்ன என்பதும் ராகு கேது காட்டும்.

இந்த நவீன கால, முகம்பாரா நட்பாக மலரும், சமூக வலைத்தள நட்பும், அவை நல்லதோ, கெட்டதோ என்றாலும் கூட இந்த ராகு கேது அந்தந்த இடங்களில் நின்று காட்டிடும் என்பதே உண்மை.

உங்கள் பிற்கால வாழ்க்கை முழுவதும், திருமணம் வழியாக இணையும் துணை எப்படிப்பட்டவர்? எத்தகைய வாழ்வுக்கு துணை இருப்பார்? அவரால் உயர்வா? தாழ்வா? பிரச்சனைகளா? தீர்வுகளா? என்பதையும் இந்த ராகு கேது கிரகங்கள் காட்டுகின்றன!


ராகு கேது வலிமையாக உள்ளதா?

சூரியன் நமக்கு ஆத்மகாரகன். சூரியனாலேயே உலகம் தோன்றி, உயிர்களும் மலர்ந்தது. இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அத்தகைய சூரியனையே சூழும் ராகுவும் கேதுவும், சூரியனின் சக்தியை பிடிங்கிக்கொண்டு விடுகிறதே?!

சக்தி இழந்த சூரியன் உச்சமானலும், ஆட்சியானாலும் ஜாதகனுக்கு உதவ முடிவதில்லையே? ஜாதகனின் தந்தையை பழிவாங்குகிறதே? அப்பனுக்கும் மகனுக்கும் இடையில் நல்ல உறவு தரமறுக்கிறதே? ஜாதகனின் தொழிலை, வியாபாரத்தை கெடுக்கிறதே? அரசனாக இருக்கும் சூரியனுக்கே தடைபோடும் நிலையில், மற்றகிரங்கள் பற்றி சொல்லவா வேண்டும்?


ராகு கேதுவின் இத்தகைய வலிமைக்கு காரணம் என்ன?

ராகுவும் கேதுவும் வலிமையானதே, காரணம், ராகுவும் கேதுவும் “மூலத்தில் இருந்து” வந்தவை. எது இந்த சூரியனையும், பூலோகம் உட்பட எல்லா கிரகங்களையும், நட்சத்திர கூட்டங்களையும் தாங்கி நிற்கிறதோ அத்தகைய மூலத்தின் ஒரு சிறு இயக்க பகுதிதான் இந்த ராகுவும், கேதுவும். ஏன் இயங்குகிறது என்றால், இயங்கிக்கொண்டிருக்கிற சூரியனில் இருந்துதான் ராகுவும் கேதும் இயங்குகிறது என்ற உண்மை தெரியவரும்! சிலருக்கு புதிதாக இருக்கலாம் ஆனாலும் உண்மை இதுவே!


ராகு கேதுவின் வீச்சு என்ன?

நிச்சயமாக அளவிடமுடியாத நிலையில்தான் இந்த ராகு கேது கிரகங்களின் வீச்சு இருந்து கொண்டிருக்கிறது. ஓரிடத்திலிருந்து கிளம்பி, இந்த பிரபஞ்சம் முழுதும் கூட, அப்பிரதக்‌ஷிணமாக அதாவது கடிகார சுற்றுக்கு எதிர்திசை சுற்றாக சுழன்று வருகிறது! நீளமாக இருப்பதை குறிப்பிட “கயிறு” என்று சொல்லுவார்கள். அந்த கயிருக்கு உயிர் வந்தால் அசையுமே? அதனால் அதை “பாம்பு” “நாகம்” என்று நமக்கு முன்னோர்கள் குறிப்பால் உணர்த்தினார்கள். 

யாராலும், எதனாலும் கட்டுப்படுத்த முடியாத தன்மையை கொண்டது இந்த ராகு கேது கிரகங்கள். இவற்றோடு ஒரு ஜாதகன், மோதுவதும், திருப்தி செய்வதும், பரிகாரம் செய்வதும் பலன் தராது. ஒரே வழி சரணாகதி தான்!


ஒரே வார்த்தையில் ஜாதகனின் நிலை!

ஒரு ஜாதகனின் கட்டத்தில், கிரக நிலைகளை ஆராய்ந்து, அவை நின்ற சாரபலன் தேடி, உபசார பலன் தேடி, பல கணக்குகள் போட்டு, பாட்டாக பாடி பலன் சொல்லுவதை விட, ராகு கேது ஆகிய இரண்டு கிரங்களின் நிலை அறிந்து, இந்த ஜாதகனுக்கு, இந்த உலகில் பிறந்தற்கான தேவை என்ன? என்ன செய்யப்போகிறான்? எப்படி பிழைக்கப்போகிறான்? என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியும்!


மனித பிறப்பின் ரகசியம் அறிவோம்!

இந்த உலகில் மனிதப்பிறப்பு ஒரே ஒரு முறை நிகழ்வதுதான். ஆனால் ஏன் ஜென்ம வாசனையை பெற்றுக்கொண்டு, கர்மா என்கிற வினைப்பதிவை தாங்கிக்கொண்டு பிறந்து வாழ்கிறோம்? இன்பமே நிறைந்த இவ்வுலகில், திருப்தி இல்லாமல், எல்லாவகையிலும் துன்பப்பட்டு, உயர்ந்தும், தாழ்ந்தும் வாழ்ந்து மடிவதின் அர்த்தம் என்ன?

மனிதன் தன் மூலம் மறந்துவிட்டான். “நான் யார்?” என்ற தேடலை தொலைத்துவிட்டான். பிறவிக்கடமையை மறந்து வாழ்ந்து கொண்டிருப்பதின் மூலம், பிரச்சனைகளை தன் முதுகில் ஏற்றிக்கொண்டான். இறக்கிவைக்க முடியவில்லை. தாத்தா, அப்பன், மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று இத்தனை வடிவம் எடுத்தும் “நான் யார்?” என்று கேட்பதற்கு அவகாசம் இல்லை.

நீயாக கேட்கிறாயா? அல்லது கேட்கவைக்கட்டுமா? என்பது தான் ராகு கேது ஆகிய கிரகங்களின் பாணி! உங்களுக்கு புரிகிறதா? புரிந்தால் எனக்கும் மகிழ்ச்சி!

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்!



Raghu and Kethu - Part 01


 ராகுவும் கேதுவும் - பகுதி 01


ராகுபோல கொடுப்பாரும் இல்லை, கேதுபோல கெடுப்பாடும் இல்லை என்று பொதுவாக சொல்லுவார்கள். எப்போதும் போலவே இந்தக்கட்டுரை சோதிட ரீதியிலானது அல்ல. உண்மை விளக்கத்தின் அடிப்படையில், ஆராய்ச்சிக்கான கட்டுரை. 

பெரும்பாலான சோதிட அறிவு, கற்றலின் சாரத்தை ஒட்டியும், அவற்றை உடனடியாக ஞாபகத்தில் கொண்டுவருவதைக் கொண்டும் அமைவன. இதில் ஆராய்ச்சி என்றால், ஏற்கனவே கற்றதை, வேறு சில கருத்துக்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பது என்பதாகவே அமைகிறது. சில நம்பிக்கைகளின் அடிப்படையிலும் அமைகிறது. ஆனால் நேரடியாக அந்தந்த கிரகங்களின் தன்மையோடு, ஒத்துமையான அலைவரிசையோடு நின்று பெறப்படுவது இல்லை. ஆனால் அதற்கு சாத்தியம் உண்டு. யாரெனும் ஒரு சிலர் அப்படியான நிலையில், உண்மைகளை எடுத்துச் சொல்வதும் உண்டு. இந்தக்கட்டுரையில் உள்ள விளக்கங்கள், நேரடியாக கணக்குகள் அற்று, கிரகங்களின் தன்மையில் சொல்லப்படுவதாகும். எந்தஒரு மூல நூல், குறிப்பு இவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டது இல்லை. 

ராகு, கேது ஆகிய கிரங்களின் உருவாக்கம், தோற்றம், அமைப்பு ஆகிய கதைகள் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும். பொதுவாகவே நம் நாட்டில் 100 க்கு 99 நபர்கள் ஜோதிடம் அறிந்தவர்கள் எனலாம். அதை ஆய்வு செய்து ஆலோசனை சொல்லுபவர்கள் கிட்டதட்ட 51 நபர்கள் எனலாம். இதன்காரணமாக நேரடியாக நாம் கட்டுரைக்கு சென்றுவிடலாமே!

ராகு கேது என்ற நிழல் கிரகங்கள் ஜாதகனுக்கு என்ன சொல்ல வருகிறது? பார்ப்போம்!

வாழ்க வளமுடன்!

Medicine does not work - part 02


 வேலை செய்யாத மருந்து பகுதி 02



நேற்றைய பதிவில்,

ஞானியை தேடிச் சென்று யோகம் கற்பதற்கான தகுதி குறித்து கண்டோம். ஞானியோடு இணைந்து சென்றவன், தன்னை அவர்க்கு ஒப்படைத்திருந்தான் எனில், குருவிடம் அர்பணிப்பு என்ற வகையில், அவர், அவனுடைய தலையை ஆற்றில் மூழ்கடிக்கும் பொழுது, மூச்சடைக்கும் பொதுவான நேரமாவது அமைதியாக இருந்திருக்கலாம். (எப்படியும் சராசரி மனிதன் 10 முதல் 30 நொடிகள் வரை மூச்சை நிறுத்தி வைக்கலாம்) தன்னை தேடிவந்த ஒருவனை, ஒரு ஞானி, உயிர்க்கொலை செய்வாரா? என்று சிந்திருக்கலாம். ஆனால் அதற்கு அவகாசமில்லாமல், “நான் செத்துவிடுவோனோ” என்று திகைத்து, ஞானியின் பிடியிலிருந்து விலக முயற்சித்தான். 

பொதுவான மனித மனம் இப்படித்தான் திகைக்கிறது. யோகத்திற்கு சென்றால், நான் பரதேசி போல ஆகிவிடுவேன். பணம் சம்பாதிக்க முடியாது, சுகம் அனுபவிக்க முடியாது, இல்லறம் இல்லாது போய்விடும், பிச்சை எடுக்கவேண்டிவரும் என்றெல்லாம் ஏதேதோ “அந்தக்கால பொய்” நிரப்பி பயப்படுவார்கள். பரஞ்சோதி மகான் காலம் முதல், வேதாத்திரி மகரிசி காலம் வரை, இல்லறம் இல்லாத துறவறம் காலாவதி ஆகிவிட்டது. எனவே இனிமேல் திருமணமும், உலக வாழ்வியலும் யோகத்திற்கு ஒரு தடையும் இல்லை என்பது உண்மையாகி விட்டது. ஆனாலும் சிலரிடம் அந்தப் பொய்கள் நிலைத்திருக்கின்றன.


இன்னொரு கதையை பார்க்கலாம்.

ஒரு திருமண தம்பதி, மாப்பிள்ளை பெரும் பணக்காரன். அவன் தன்னளவில் உயர்ந்த பெண்ணை திருமணம் செய்தால், தனக்கு அடங்கமாட்டாள் என்ற ஆணடிமைத்தனத்தில், ஓர் நடுத்தர வர்க்கப் பெண்ணை திருமணம் செய்தான். நல்லவிதமாக திருமணம் நடந்தது. முதலிரவு அறையில், தன் மனைவியிடம் சொன்னான்,

“இத்தனை நாள், நான் நன்றாக சாப்பிட  கூட முடியாமல் கஷ்டப்பட்டேன். இனி நீ வந்துவிட்டாய். எனக்கு கவலைவிட்டது. எனக்கு பிடித்தமான உணவை சமைத்துதருவாய் என்று நம்புகிறேன்”

“சரிங்க, அப்படியே செய்கிறேன். எனக்கு தெரிந்த அளவிலும், புதிதாக கற்று சமைக்கவும் நான் தயங்காமல் சமைத்துத் தருகிறேன். உங்க திருப்திதான் எனக்கு முக்கியம்” என்றாள் மனைவி.

மறுநாள் காலையிலேயே, மனைவி அடுப்படிக்குச் சென்று இருக்கிற பொருள் எல்லாம் சரிபார்த்து, காலை உணவுக்கு சிறந்த உணவாக, கொஞ்சம் கேசரி, பொங்கல், இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி, மெதுவடை என்று அமர்க்களமாக செய்து வைத்தாள். தன் கணவன் எழுந்து வருவதற்குள் இதை அவனுக்கு சாப்பிட தயாராக இருக்கவேண்டும் என நினைத்து, பரிமாறும் அறையிலும் அடுக்கி வைத்துவிட்டு. கணவனை எழுப்பி விட்டாள்.

“எல்லாம் தயாராக இருக்கு, இன்னைக்கு நீங்க திருப்தியா சாப்பிடலாம்” என்று புன்சிரிப்போடு ஆவலாக சொன்னாள்.

அவனோ சாவகாசமாக காலைக்கடன் முடித்து, குளித்து வந்து சாப்பிட அமர்ந்தான். தன் முன் பரப்பி இருந்த உணவுகளை ஒவ்வொன்றாக மூடி திறந்து பார்த்தான். அவன் மனைவி பரபரப்பாக, அவனுக்கு ஓர் இலையைப் போட்டு, அதன் மேல் நீர் தெளித்தாள். 

“நான் செய்துக்கிறேன்” என்றான் அவன்.

சுதாரித்துக்கொண்ட அவள். “கேசரி வைக்கட்டுமா?” என்றாள்.

“சரி கொஞ்சமாக வை” என்று ஒவ்வொன்றாக அவள் கேட்டு கேட்டு வைத்து அவன் முகத்தை ஆர்வமாக பார்த்தாள்.

அவனோ, ஒவ்வொன்றாக சாப்பிட்டுப்பார்த்து, உதட்டை பிதுக்கினான்.

“ஏங்க, பிடிக்கலையா?” என்று குரல் தேம்பிட கேட்டாள்.

“ஆமா, என்ன செஞ்சி வச்சிருக்க? ஒரு ருசியும் சரியில்லை, எனக்கு பிடிக்கவும் இல்லை”

அவள் ஏறக்குறைய அழுதிடும் நிலைக்குப் போய்விட்டாள்.

“இதிலே என்னென்ன குறைன்னு சொன்னா அதை சரி செய்துக்கிறேன். இல்லைன்னா உங்களுக்கு எப்படி, என்னென்ன பிடிக்கும்னு சொல்லுங்க, அதுபடிவேனா செய்துதரேன்”

“இங்கபார், அதலாம் எனக்கு தெரியாது, எனக்கு என்ன புடிக்கும்னு சொல்லவும் மாட்டேன், நீயே அதைக் கண்டுபுடி” என்று சொல்லிவிட்டு கை அலம்பிட எழுந்துவிட்டான். இலையில் எல்லாமே அப்படியே இருந்தன.

“மத்தியானமாவது எனக்கு புடிச்சதா நாலு நல்லது செய்துவை, சரியா?” என்றவாறு வெளியே கிளம்பிவிட்டான்.

புது மனைவிக்கு தலை இருண்டுவந்தது. 


நாளையும் தொடர்வோம் அன்பர்களே!

வாழ்க வளமுடன்.

----




Medicine that doesn't work?!


வேலை செய்யாத மருந்து?!



கேட்காமல் கொடுப்படும் எந்த மருந்தும் நன்கு பலன் அளிக்காது. இந்த வார்த்தையின் உண்மை என்னவென்றால், அந்த மருந்துக்கு மதிப்பிருக்காது, அதாவது நோயாளி, கேட்காமல் வைத்தியர் கொடுத்த மருந்து அல்லவா? அதனால் இது வேலை செய்வதில் சந்தேகம் கொண்டு, நோயாளி நம்பிக்கை இழப்பார். சில நேரம், வைத்தியரையே “ஆகாத” வைத்தியர் என்று நோயாளி நினைத்துவிடவும் வாய்ப்பு அதிகம்.

“ஐயோ என்னால், தாங்க முடியவில்லை. இந்த நோய் துன்பத்திலிருந்து என்னை விடுவியுங்கள்” என்றவாறு நோயாளி நொந்து, வைத்திரியரிடம் மருந்து கேட்டிருந்தால், வைத்தியர் எந்த மருந்தை கொடுத்திருந்தாலும் கூட, நோயாளியின் நம்பிக்கையில் குணமாகிவிட சாத்தியம் உண்டு. 

இந்த உதாரணங்களைப்போலவே, நவீன கால உலகில், YouTubeல், வேதாத்திரிய சானல் வழியாக யோக, தவ, இறை உண்மைகளை விளக்கும் காணொளிகளை நாங்கள் தருவதும், அதை அன்பர்கள் பார்ப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலான அன்பர்களின் ஆதரவு, வேதாத்திரிய சானலுக்கு உண்டு. அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். ஆனால் உண்மைகள் மிகுதியாக போய் சேரவில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு.

அன்பர்களே, இந்தக்கதையை கேளுங்கள்.

ஒரு ஞானியைக் கண்டு, ஒருவன் ,

“எனக்கும் யோகத்தில் ஆர்வமாக இருக்கிறது. கற்றுக்கொடுங்கள்”

“அப்படியா நாளைக்காலை என் ஆசிரமத்திற்கு வா”

“இன்றைய நாளிலேயே என்னை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?” என்றான் ஆர்வத்தில்.

“நாளைதான் உனக்கு பரிட்சை, அதில் தேர்ந்தால் ஏற்றுக்கொள்கிறேன்”

மறுநாள் அதிகாலை ஆசிரமம் சென்றுவிட்டான். ஞானி அப்பொழுதான் ஆற்றில் குளிக்க தயாராக நின்று கொண்டிருந்தார்.

“என்னோடு வா”

இவனும், ஞானியோடு கூட நடந்து ஆற்றை வந்தடைந்தான். ஞானி அவனின் கை பிடித்து இழுத்துக்கொண்டே, ஆற்றுக்கு நடுவில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டார். திடீரென, அவனின் கழுத்தை பிடித்து அழுத்தி, தலை முழுதும் நீருக்குள் இருக்குமாறு அழுத்தப்பிடித்து அமுக்கினார். பதறிப்போய் அவன் தன்னை விடுவித்துக்கொள்ள போராடினான். ஞானி தன் கைகளை விலக்கி அவனை மேலே எழச்செய்தார். அவனோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான்.

“இப்போது உனக்கு என்ன தேவையாக இருந்தது?” என்று ஞானி கேட்டார்.

“மூச்சுக்காற்று”

“அதுபோல உனக்கு எப்போது யோகம் தேவைப்படுகிறதோ அப்போது என்னிடம் வா” என்று சொல்லிவிட்டு, “என்னிடம் உன்னை ஒப்புவிக்க உன் மனம் எப்பொழுது தயாராகிறதோ அதுவரை காத்திரு” என்றார்.

சீடனாக வந்தவனுக்கு, அப்பொழுதான் ஒரு ஞானியிடம், யோகம் கற்பதற்கான தகுதி என்ன என்பதை உணர்ந்தான்.

நாளை இன்னொரு உதாரண கதையோடு தொடர்வோம் அன்பர்களே!

வாழ்க வளமுடன்!




Is the whole universe in astrology chart? Part 3


 முழு பிரபஞ்சமும் ஜோதிடத்தில் உள்ளதா?

மூன்றாம் பகுதி




copyright to dummies.com


copyright to people.com



copyright to blacktailsolarhomes





அன்பர்களே,

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PVN7GWG

-

Present by
Sugumarje

Is the whole universe in astrology chart? Part 2


முழு பிரபஞ்சமும் ஜோதிடத்தில் உள்ளதா?

இரண்டாம் பகுதி

copyright to www.istockphoto.com



copyright to it's owner


copyright to www.tamilsonline.com




அன்பர்களே,

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PVN7GWG

-

Present by
Sugumarje