Appreciation from Legend Mr. Balumahendra -1 | CJ

Appreciation from Legend Mr. Balumahendra -1

Appreciation from Legend Mr. Balumahendra -1


Appreciation from Legend Mr. Balumahendra - Part - 1

கேரிகேச்சர்

கேரிகேச்சர் ஒவியங்கள் தனிமனிதனின் அடையாளத்தை அப்படியே மிகைபடுத்துவதாக அமையும்... இந்தமாதிரியான ஓவியங்களை நீங்கள் பார்த்து அனுபவிக்கவேண்டுமென்றால்,
1) அதை ரசிப்பதற்கும் ஒரு தன்மை
2) இப்படியான ஓவியங்களை பார்த்து பழகிய அனுபவம்
3) புதிதாக தரும் விசயத்தை ஒரு ஆர்வத்தோடு பார்த்தல்
4) ஓஷோ சொன்னதுபோல அதன் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காது அதை மட்டுமே ரசித்தல்
5) கேலித்தனமும், அதிமேதாவித்தனமும் இல்லாதிருத்தல்
6) எங்கே குறையிருக்கிறது என்று பகுக்காதிருத்தல்
7) படைப்பாளி பற்றிய விபரத்தை அந்த படைப்பில் இணைக்காதிருத்தல்

இப்படியான ஏழு அம்சங்கள் (இன்னும் சில) தேவைப்படுகிறது...


கார்டூன்

நண்பர் ஒருவர் அரசியல் தொடர்பான கார்டூன் கேட்டார்... நான் கார்டூன் வரைந்து தந்தேன். அவர் அதை பார்த்துவிட்டு...

“எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா நான் கேட்ட “அவரைக்காணோமே” என்றார்.

அவர் அந்த தலைவரின் அடையாளங்களை சரியாக கவனிப்பதில்லை என்று தெரிந்துகொண்டேன். அவரை குறைசொல்லி பயனில்லை. ஒரு கார்டூன் எப்படியிருக்கும் என்று புரியவைக்கவும் எனக்கு நேரமில்லை... சில நேரம் இப்படியான அவர்களுக்கு புரியவைக்கும் அளவுக்கு, எனக்கு அறிவில்லாதது கவலை அளிக்கும்.

“ஐயா, நான் கேரிகேச்சரிஸ்ட்... நீங்க நினைக்கிற அளவுக்கு எனக்கு கார்ட்டூன் வராது... இவ்வளவுதான் இயலும்” என்றேன்...

கண்டிப்பாக “இதை முதலிலேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே” என்று மனதுக்குள் நிச்சயமாக என்னை திட்டியிருப்பார்.

அதற்குப்பிறகு அந்த கார்ட்டூன் அவருக்கு எந்த உபயோகமும் இல்லாது என் தொகுப்புக்கு வந்துவிட்டது... நேரமும், உழைப்பும் அந்தமனிதருக்காக வெறுமனே செலவானதுதான் மிச்சம்...

இந்த விசயத்தில் கலையும் பணமும் போட்டிபோட, கலையைவிட பணம்தான் வெற்றிபெறுகிறது, உயர்ந்ததாகவும் இருக்கிறது...


வெகுமதி

ஒரு ஓவியத்திற்கு ஒருவரும் வெகுமதி தரவேண்டிய அவசியமில்லை, அதை அந்த ஓவியன் (நானுமே கூட) எதிர்பார்ப்பதில்லை. அந்த ஓவியத்தில் அவன் கற்ற, கற்றுக்கொண்டிருக்கிற திறமை, ஆர்வம், சந்தோசம் அடங்கி, அவை கோடுகளாகவும், வண்ணங்களாகவும் பரிணாமம் அடைந்திருப்பதே அவனுக்கு (ஒவியனுக்கு) போதுமானது...


தொழில்

நான் இந்த கேரிகேச்சரை தொழில்முறை ஓவியமாக தேர்ந்தெடுத்தன் காரணத்தில் ஒரு சுயநலமும் சேர்ந்திருக்கிறது... “ஒரு மனிதரை மிகைப்படுத்து வரைவதின்மூலமாக நான் மகிழ்கிறேன்” என்பதுதான். இதை பார்க்கும் இன்னொரு மனிதரும் அதே மகிழ்ச்சியை பெறுகிறார் என்பதும் உண்மை... எனவே அதை என்னிடமிருந்து எதிர்பார்க்கும் அன்பர்களுக்கு அவர்களை கேரிகேச்சர் ஓவியமாக வரைந்து அதற்காக சிறு தொகையும் வாங்குகிறேன். இதுவே எனக்கான பிழைப்பாகவும் இருக்கிறது... எனக்கும், என் மனைவிக்கும் என்னைச்சார்ந்தோருக்கும் பசியாற்றுகிறது...


சமூக வலைகளில்

கிட்டதட்ட 7 ஆண்டுகளாக கேரிகேச்சர் தொடந்து செய்துவருகிறேன். அவற்றில் எனக்குப்பிடித்த ஓவியங்களை வலைத்தளங்களில் பதிவேற்றியும் வருகிறேன். ஆரம்பகாலமுதலே, ஏற்கனவே பிரபலமான மனிதர்களை ஓவியமாக வரைவதை தவிர்த்துவந்தேன்.. ஆனாலும் இந்த கேரிகேச்சரை மக்களிடம் கொண்டுசெல்ல ஏற்கனவே பரிச்சயமான முகங்கள் தேவை என்ற வரிசையில், சில அரசியல் தலைவர்களும், சில நடிகர்களும், நடிகைகளும் என் ஓவியத்தில் வந்தனர். ஆனாலும் அவர்களைத்தவிர்ப்பது தொடந்தேன்...

பேஸ்புக் ல் நுழைந்தபிறகு, அந்த பெயருக்கேற்றபடியே நிறைய முகங்கள், முற்றிலும் புதியமுகங்கள் கிடைத்ததால் நான் இன்னும் ஆர்வமானேன்... என்னை நண்பர்களாக் ஏற்றுக்கொண்டவர்களுக்கு அன்பளிப்பாக, அவர்களின் பிறந்தநாளில்,  அவர்களையே கேரிகேசர் வரைந்து என் பக்கத்தில் வெளியிட்டேன்... மிக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டனர். ஒரு சிலர் வெட்கப்பட்டு அந்தபக்கவே எட்டிப்பார்க்காது போயினர். சிலர் என்னை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கினர்...

இதற்கெல்லாம் கலங்குவதா? இவர்களை வரைவதன் மூலமாக நான் கற்றுக்கொண்டல்லவா இருக்கிறேன். அந்த படிப்பை நான் விட்டுவிடமுடியுமா என்ன?


பாராட்டுக்கள்

பாராட்டு கள் போல போதைதருவதுதான்... பாராட்டுக்காக ஏங்காதோர் யார்? பாராட்டு என்பது ஒரு அங்கீகாரமும் கூட... கத்தல் கூட சங்கீதமாவது அங்கீகாரம் கிடைத்தபிறகுதானே... கோடுகளாய் தெரிந்தவை எல்லோருக்கும் ஓவியமாவது பாராட்டுக்குப்பிறகுதானே... இந்த பாராட்டு ஒரு பெரியபுள்ளியிடமிருந்து என்றால், அவரின் பிரபலத்தோடு சேர்ந்து, அந்த பாராட்டு மிகப்பெரிய அளவில் அந்த படைப்பாளியை உயரம் நோக்கிச்செலுத்தும் என்பது உண்மை.


கற்றல்

நான் என் திறமைகளை எப்படியாவது வெளிப்படுத்தவேண்டும் என்று விரும்புவன்... என் தோழன் கிருஷ்ணமூர்த்தி சொன்னதுபோல ஏகலைவன் சாரம் நான்... குரு இன்றி குருவை நினைத்து தனக்குத்தானே கற்றுக்கொள்பவன். தற்சோதனை செய்துகொள்பவன், முயற்சியிலும், தோல்வியிலும் கலக்கமில்லாதவன். இரவு,பகல் பாராதவன்...

என் வளர்ச்சியில் பகலைவிட இரவுக்கு மிகப்பெரும் பங்கிருக்கிறது... எல்லொரும் தூங்கிக்கொண்டிருக்கும் அந்தநேரத்தில் நான் இயங்கிக்கொண்டிருப்பது உண்மை... இதனாலே என் வளர்ச்சி அவர்களுக்கு தெரிவதில்லை... விழி எரிச்சலும், இருக்கை அழுத்தலும் என்னை கலங்கவைத்ததில்லை...


கேரிகேசருக்கான மறுமொழி

எனக்கு கிடைக்கும் வேலைகளில் பத்துக்கு எட்டு பழுதில்லாமல் தரும் திறமை கிடைக்கப்பெற்றது எதோ ஒரு புண்ணியம். அந்த இரண்டும் வேலை தந்தவரின் அனுபவகுறைவினாலே ஏற்பட்டதாகவே இருக்கும். இதை அவர்களுக்கு புரியும்படி திருத்துவதும், அல்லது அவர்கள் விருப்பபடி அதை மாற்றி அமைப்பதுமே அவர்களை திருப்திபடுத்தும்... எந்தவேலைக்கும் மறுமொழி நான் எதிர்பார்ப்பதில்லை...

சில நேரம் “நல்லாயிருக்கா?” என்று கேட்பதே விவகாரமாக போய்விடும் அபாயம் உண்டு. இதில் என் சம்பாத்தியம் அடங்கியிருப்பதால் நானும் வாய் அடங்கிவிடுவதுண்டு.


வாவ்...

ஒரு நேரடியாக நிழந்த ஒரு கேரிகேச்சர் நிழச்சியில், ஒரு பெண், எனக்கு கேரிகேச்சர் இப்படிவேண்டும், அப்படிவேண்டும் என்று கேட்டுவிட்டு என் எதிரில் அமர்ந்தார்...
“நீங்கள் சொன்னபடி நான் வரைய இயலாது, ஆனால் உங்களை நான் கேரிகேசராக வரைய இயலும்” என்றேன்...
சந்தோசமாக “சரி” என்றார்
வரைந்துமுடித்து காட்டியபொழுது மிகுந்த சப்தமாக “வாவ்” என்று அந்த சந்தோசத்தில் மிகுந்த ஆர்ப்பாட்டம் செய்தார்... என் ஓவியவகுப்பு மாணவர் அதைபார்த்துவிட்டு தனியாக என்னிடத்தில்...
“சார், ஓவியவகுப்பு போதும்... எனக்கு கேரிகேச்சரை கற்றுக்கொடுங்களேன். ஒரு ஓவியத்திற்கு இவ்வளவு சந்தோசமடைவார்கள் என்று இன்றுதான் நான் தெரிந்துகொண்டேன்” என்றார்


இந்த மறுமொழி நிலைகளில் நான் எந்த விமர்சனத்தையும் சாதாரணமாகவே ஏற்றுக்கொள்வேன்...

அடுத்தபதிவிலும் தொடர்கிறது...