Appreciation-from-Legend-Mr-Balumahendra-2 | CJ

Appreciation-from-Legend-Mr-Balumahendra-2

Appreciation-from-Legend-Mr-Balumahendra-2


Appreciation from Legend Mr. Balumahendra - Part - 2

முந்தைய பதிவின் தொடர்ச்சி...
முந்தைய பதிவிற்கு செல்ல: பகுதி-1

பிரபலங்களின் மறுமொழி

எனக்குப்பிடித்த, என்னை நட்புப்பட்டியலில் இணைத்த, என் நட்புப்பட்டியலில் இணைந்த பேஸ்புக் நண்பர்களுக்கு நான் கேரிகேசர் வரைந்து தந்திருக்கிறேன், தந்துகொண்டும் இருக்கிறேன்... அவர்கள் யார், யார் என்று பட்டியலிட எனக்கு ஆசையில்லை... அவர்களின் பிரபலத்தை நான் வியாபாரமாக்க விருப்பமில்லாததே காரணம்.

அவர்களின் பாராட்டுக்களை நான் பெற்றுக்கொள்வதோடு சரி, இவர் என்னை பாராட்டினார் என்று நான், என்னை வெளியிட்டுக்கொண்டதில்லை... என்றாலும் வெளிப்படையான, அழகான பாராட்டுக்களை, அந்த நபர்களின் எளிமையை கருத்தில் நினைத்து மகிழ்ந்து, என் வளைத்தளங்களில் பகிர்ந்துகொள்வதுண்டு...


பாலுமகேந்திரா

எனக்குப்பாராட்டும், நன்றியும் சொன்னவ பிரபலங்களின் பட்டியல் நீண்டதுதான். ஆனாலும் எதிர்பாராது ஒரு காணொளி மூலமாக நான் வரைந்துகொடுத்த ஓவியத்திற்கும் எனக்கும் பாராட்டு சொன்னதை நான் நம்ப முடியாமலிருந்தேன். அதும் நான் ரசிக்கும், மதிக்கும் திரு.பாலுமகேந்திரா அவர்களிடமிருந்து...

வழக்கமாக தினம் ஒரு ஓவியம் என்பது என் வாடிக்கை... ஒருநாளில் திருச்சியில், சாகித்ய அகாதமிவழங்கிய தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு கலந்துரையாடல் விழாவில் என் பாரீசு நண்பர் சாம் விஜய் கலந்து கொண்டிருந்தார்... இரண்டாவதுமுறையாக அவரைக்காண நான் சென்றிருந்தேன். நிகழ்வின் இடைவேளையில் விற்பனைக்கான புத்தங்களை காணச்சென்றபோது, அருகில் தமிழ் தொடர்பான குறுந்தட்டுக்கள் விற்பனைக்கும் வைத்திருந்தனர். அதோடு பாலுமகேந்திராவின் “கதை நேரம்” குறுந்தட்டும் இருந்தது. அது தொடராக சென்னை தூர்தர்ஷன் தொலைகாட்சியில் வெளிவந்தபோது எங்கள் வீட்டில் தொலைகாட்சியே இல்லை. அதனால் வாங்கினேன்.

அன்று இரவே அந்த குறுந்தட்டை என் கணிணியில் ஓடவிடேன்... என் நினைவுகள் பின்னோக்கி பாய்ந்தன. நண்பர் சுகா தன் பதிவுகளில் பாலுமகேந்திரா அவர்களை தன் நினைவுகூர்வார்... தன் மூங்கில் மூச்சு கட்டுரையிலும் சொல்லியிருப்பார்...

சங்கராபரணம் ஒளிப்பதிவாளர், திரு. பாலுமகேந்திரா என்று தெரியாமல் அவரிடமே அந்த படத்தின் கதை, இயக்குனரின் திறமை, காட்சி அமைப்பு, காமெரா கோணம் இவற்றை சொன்னதும், அதற்கு திரு. பாலுமகேந்திரா "நீ சொல்றதெல்லாம் சரிதான்... Feel Good Movie, You know? அந்த படத்துக்கு நான் தான் கேமரா மேனா பணியாற்றினேன்” என்று மறுமொழி தந்ததும்...

சதிலீலாவதி திரைப்படமாக்கம்போது, நீச்சல் குளத்தருகே, கமல் தன்னை தள்ளிவிட்டுவிடுவாரோ என்று சுகா பயந்ததும், திரு. பாலுமகேந்திரா சுகாவை அழைத்து “உனக்கு நீச்சல் தெரியுமாடா?”
“தெரியாது வாத்தியரே”
“உனக்கும்மாடா”
பதிலில் சுகா திருப்தியானதும் - படிக்க திகட்டாதவை

இதெல்லாமே என் நினைவுக்கு வந்து “இன்று திரு. பாலுமகேந்திரா வரைந்தால் என்ன?” யோசித்தபடி ஒரு பேப்பரில் பென்சிலால், திரு. பாலுமகேந்திரா கேரிகேச்சராக வரைய ஆரம்பித்தேன். வழக்கமான நேரத்தில் வரைந்துமுடித்தேன்... ஒரு கேரிகேச்சருக்கான என் வேகம் 90 வினாடிகள் மட்டுமே!


திரு. பாலுமகேந்திராவின் கேரிகேச்சர்



November 28, 2013 அன்று என் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டேன். சுகாவிற்கும் தெரியப்படுத்தினேன். ஒரு சந்தோச வெளிப்பாடாக... சுகா, அதை விரும்பி தானாகவே “இதை வாத்தியாரிடம் சேர்த்துவிடுகிறேன்” என்றார்... மிக்க மகிழ்ச்சியடைந்தேன்...

அடுத்த இரண்டு நாளில் November 30, 2013 நான் சற்றும் எதிர்பாரதவகையில் ஒரு காணொளியில் என் பெயரை இட்டு எனக்கு தெரிவித்தார்... நான் அதை இயக்கிய உடனே...
நான் வரைந்த திரு. பாலுமகேந்திரா கேரிகேச்சர் பெரிதாக்கப்பட்டு சட்டத்தில் அடைபட்டிருக்க, அது நகர்ந்து திரு. பாலுமகேந்திரா “சுகுமார்ஜி” எனறழைத்து நன்றி சொல்ல ஆரம்பித்தார்... நான் திடீரென மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்தேன்... அன்றைய நாளில் நான் எத்தனை தடவை பார்த்தேன் என்பதை சொன்னால் வேடிக்கையாக இருக்கும்... என்னை பாராட்டி, என் சினிமா ரசனையை பாராட்டி, என் ஓவிய திறமைபாராட்டி, ஓவியத்தையும் பாராட்டி, தன்னை, தன் சினிமாவை, தன் பயணத்தை வெளிப்படையாக சொன்னவிதம் மிகமிக அருமையாக இருந்தது... என்னவொரு அற்புதம்!



குரல் தளர்ந்து, அவரின் முதுமை வெளியே தெரிந்தது... அதை பார்த்தவேளை எனக்குள் லேசான சோகமும் கலந்தது... முள்ளும் மலரும் பாலுமகேந்திராவும், இப்போதைய பாலுமகேந்திராவும் என் கண்முன் நின்றனர்...

அந்த காணொளியை என் கணிணியிலும், என் கைபேசியிலும் பதிவேற்றி என் நண்பர்களிடம் காட்டி, சொல்லி மகிழ்ந்தேன்...

அந்த சந்தோசம் இன்றும் வடியாதநிலையிலும், திரு. பாலுமகேந்திரா தன்னை இயற்கையோடு February 13, 2014 அன்று காலை 11.00 க்கு இணைத்துக்கொண்டார்...


பாலுமகேந்திரா - தன் வலைப்பூவில்...

"சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு.

எனது ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு செட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி ..என முள்ளும் மலரும் படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும். ஆனால் ஒன்று.. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு.

எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல! ”


மரணமும் கொண்டாடப்படக்கூடியதுதான்

நான் வரைந்த திரு. பாலுமகேந்திரா ஓவியத்தையும், அவர் பாராட்டிய காணொளியையும் கண்ட என் நண்பர் ஜெயந்தன் நடராஜா என்னிடம் சொன்னது...

 “You did your last respect! Unforgettable blessing from a great artist! Your life will shine from now on!”

ஓசோ சொன்னதுபோல “மரணமும் கொண்டாடப்படக்கூடியதுதான்” என்பதை அவ்வளவு சுலபத்தில் கடைபிடிக்க முடிவதில்லை!