June 2014 | CJ

June 2014

Day after Woe


இனிமேல் என் நண்பரின் தாயாரிடம்,  பேசுவதற்கும், என் தோல்வி வெற்றிகளை பகிர்ந்துகொள்ளவும் இனி இயலாது. தன் மகனின் கூட்டாளியாக இருந்தாலும், தன் மகன்களில் ஒருவனாக பொதுவாக நடத்தி, கண்டித்து, அறிவுரை சொல்லி, ஆலோசனை கேட்டு தன் சோகங்களைகளை இறக்கிவைத்தும் வந்தவர் ஒரு புதன்கிழமை தன் உடலை விடுத்துப்போனார்.  
கடந்த வாரத்தில் நிகழ்ந்த இந்த சோகத்தை ஆற்றுப்படுத்த மெனக்கெட வேண்டியிருந்தது. அதற்கு மூன்று நாள்முன்புதான் ஒரு திருமண நிச்சயத்திற்கு சென்றவன், உடல் நலமில்லாதிருந்த அவரை பார்த்து பேசிவிட்டு வந்தேன். அவர் இனி இல்லை, இல்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு மேல் என் வீட்டில் இருந்ததை விட என் நண்பரின் வீட்டில்தான் என் ஓய்வு நேரங்களை கழித்திருக்கிறேன். சில நாட்களில் அங்கெயே தங்கி மறுநாள் கூட என் இல்லம் சென்றிருக்கிறேன். என் பெற்றோரைத்தவிர, இவர்களையும் என் அம்மா, அப்பா என்றேதான் அழைத்துவருகிறேன். என் நண்பரின் இல்லம் அது என்று எனக்குத்தான் எண்ணம் ஓடுமே தவிர நண்பரோ, அவரின் பெற்றோரோ எந்த வித்தியாசமும் செய்துகொள்வதில்லை. அந்த வீடு எப்போதும் நண்பர்களால் சூழப்பட வீடு. கேலிக்கும், விளையாட்டுக்கும், பரபரப்புக்கும் என்றுமே குறையிருந்ததில்லை.

“எங்கே இவன்?” என்று யாராவது என்னை என் வீட்டாரிடம் கேட்டால்,
“அவன்” வீட்டுக்கு போயிருப்பான் என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் சுட்டிக்காட்டக்கூடிய நிலையில் என் நடவடிக்கை இருந்துவந்திருக்கிறது...

வாழ்வில் பொருள் தேடலும், சமூக கடமைகளும் ஓவ்வொருவராக தூக்கியடிக்க, நண்பர்கள் திசைக்கொன்றாக சிதறிப்போயினர். நானும் கூடவே! அந்த இல்லம் நீண்டகாலம் அமைதியாக இருந்தது. நண்பரின் தாயாரும், தகப்பனாருமாக இருவர்மட்டுமே இருந்தனர். விருந்தும், சில விழாக்காலங்களும் தன் பிள்ளைகளோ, அவர்களின் நண்பர்களோ வந்துபோகும் இடமாக மாறியிருந்தது. கால சுழற்ச்சியில் வயோதிகமும்வர தமக்குத்தாமே உதவியாக வாழ்ந்துவந்தனர்...

சென்றமாதத்தில் நண்பரின் தாயார் உடல் நிலை மிக மோசமான நிலையிலிருக்க, உடனடியாக மருத்துவ உதவிகிடைக்காமல்  தாமதமாகி, தற்செயலாக வந்த நண்பர்கள் மூலமாகவும், உறவினர்கள் மூலமாகவும், தன் அபாய கட்டத்தை தாண்டி வீட்டிற்குவந்தவரை சென்ற ஞாயிறு அன்று இல்லத்தில் சந்தித்தேன். வயோதிகம் எப்படியெல்லாம் ஆளைமாற்றுகிறது என்று மனதிற்குள் திகிலடித்தவாறே, தொண்டையிலிருந்து வார்த்தைவராமல்  விக்கித்து எதோ பேசுகிறேன்.
“ஒன்னும் முடியலை, எதோ பரவாயில்லை. ஆனா, சாப்பிட்டது எல்லாம் வாயில் எடுத்துவிடுகிறது” என்றார் அம்மா.
அப்பாவோ, “என்னப்பா செய்யறது. பாரு எனக்கும் இப்படி இருக்கவேண்டியதா இருக்கு” என்றார். அப்பாவுக்கும்கூட கடந்த வருடத்தில் அறுவை சிகிச்சை வரை சென்று, தப்பித்திருப்பதையும் சொல்லியாகவேண்டும். இப்படி கேட்டதும் என்னால் அங்கே நீண்ட நேரம் இருக்கமுடியவில்லை. மனம் முழுவதும் வேதனையும், சோகமும் அப்பியது. அப்போதும் நாங்கள் மேல் சிகிச்சைக்காக ஆட்டோ முலமாக, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டுத்தான் என் இல்லம் திரும்பினேன்.

புதன்கிழமை காலை என் நண்பர் அழைக்கிறார். வழக்கான தொழில்நுட்ப தகவலுக்காகவோ, கருத்துபரிமாற்றத்துக்கோ என்றெண்ணி அவரிடம் பேசுகிறேன்...
ஒரே வார்த்தையாக “அம்மா இறந்துட்டாங்க” என்று சொல்லி நிசப்தம் செய்தார். கையிலிருந்த எல்லாவேலைகளையும் அப்படியே வைத்துவிட்டு, மதிய உணவையும் தவிர்த்து, என் அலுவலக நண்பர்களிடம் தகவலை சொல்லிவிட்டு பேருந்தில் பயணிக்கிறேன்.

பேருந்து முன்னொக்கிச்சென்ற அந்த இரு மணி நேரமும், என் நினைவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கிச்சென்றன. வீடு சென்றடைகையில், ஒரு கண்ணாடி பெட்டிக்குள் அம்மா. அருகில் சோகமாக அப்பா அமர்ந்திருந்தார்.
சற்று நேரத்திற்கும் முன் இருந்தவரை, நான் “இரண்டு நாளுக்கு முன்தானே பார்த்து பேசிவிட்டுப்போனேன்” என்றும் முட்டாள்தனமாக பேசி கலங்கினேன்...

அடுத்தும் ஆகவேண்டிய வேலைகள் பிறரால் தயாராகின்றன. வாழ்வில் ஒரு இறப்பு, நம் கன்னத்தில் அறைந்துவிட்டு “போடா போ, ஆகவேண்டியது நிறைய இருக்கு” என்று முதுகில் தட்டியும் கொடுக்கும். அன்றைய நாளோடு இறந்த, அவருக்கான இந்த வாழ்வின் அடையாங்கள் எல்லாமே முடிவுக்கு வந்துவிடுகிறது, இனி பிறரிடம் ஞாபகங்கள் மட்டுமே மிச்சமாயிருக்கும்.

வழக்கமான சடங்குகளுக்குப்பின் அம்மாவை அக்னிக்கு தின்னக்கொடுத்து வீடு திரும்புகிறோம். வீட்டில் விளக்கேற்றி வணங்கியபின் குளித்துவிட்டு, எல்லோருக்கும் உணவுபரிமாறுகிறார்கள். என்னையும் அழைக்கிறார்கள். நான் தவிர்க்கிறேன். தவிர்ப்பதைப்பார்த்து அப்பாவும் உண்ண அழைக்கிறார். அப்போதும் மறுக்கிறேன்.

“இந்த வீட்டில் அம்மா அல்லவா உணவுபறிமாரியாகவேண்டும்?!” எண்ணிக்கொண்டே, அப்பாவுக்குத்தெரியாமல் என் இன்னொரு நண்பரோடு பேருந்து நிலையம்வந்து என் இல்லம் திரும்புகிறேன்...

இனி என்ன?

“முடிந்தது. இதோ சூரியன் மேற்கே நகர்ந்து கொண்டிருக்கிறான். நம்மால் செய்யமுடிந்தது ஏதுமில்லை” ஜி.கே!





Live Caricature at Chettinad


Recently I did Live Caricature for CARICATURELIVES at Nemathanpatti, a Chettinad Village, near Karaikudi. Everyone enjoyed with their caricature... Thanks for calling Che. Vijay for this wonderful Live Caricature Event!























if you need Caricature on your Event? visit: Caricaturelives for more Details

Life and Sin


ஒரு மாலை என் இல்லம் திரும்பிக்கொண்டிருக்கிறேன். திருச்சி உறையூரின் பகுதி வழியாகவே செல்வது வழக்கம். திருச்சியின் பரபரக்கும் தில்லைநகர் எம்.எஸ். மணி சாலை வழியாக நான் வருவதில்லை.

காரணம் எந்த ஒரு வாகன ஓட்டிக்கும் சாலைபோக்குவரவு, நடைபயணிகள் பற்றிய அறிவு அறவே இல்லை. இதை நான் சொல்வதுபோலவே எல்லா வாகன ஓட்டிகளும் சொல்லுவார்கள் என்பது நிச்சயமான உண்மை...  நான் முந்தி, நீ முந்தி என்றும், கிடைத்த இடைவெளியில் நீ போகிறாயா, இல்லை நான் போகவா என்ற ரீதியில் முன்னே செல்பரை வேகப்படுத்தி தான் விரைய தயாராகின்றனர். நேரம் சேமிப்பதாக எண்ணி, வரிசையாக செல்லாமல், ஆட்டுமந்தையை விட மோசமாக படர்ந்து, சாலையில் எதிர்பக்கம் வரும் வாகனங்களை நிறுத்தி, தனக்கும் வழிகிடைக்காமல் நின்று, எதிர்வரும் அந்தவாகனமும் தன்னை கடந்துசெல்லவிடாமல் பிரச்சனை ஏற்படுத்துகின்றனர். இதில் ஒருவருக்கும்ப்பின் செல்லும் ஒரு நல்ல மனிதனையும் ஏளனம் செய்து பிரச்சனையை உண்டாக்குகின்றனர்.

எல்லோருக்கும் “தலை போகிற” அவசரம். அநியாத்திற்கு நேரத்தை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று எஞ்சியிருக்கும் வாழ்க்கைக்கு முடிவுகட்டுகிறார்கள். இதிலே கைபேசி பேச்சும், தடவிக்கொண்டிருத்தலும் கூடவே.

சரி விசயத்திற்கு வரலாம்...



அப்படி என் வீட்டிற்கு வரும் வழியில் இரண்டு டாஸ்மாக் கடைகளிருப்பதால் நாம் கவனமாக வண்டியை செலுத்தவேண்டிவரும். இல்லையே யாரேனும் குடிமகன் மீது மோதவேண்டிவரும் அல்லது அவர்களே மோதிவிடக்கூடும். ஒரு கடை அகலமான சாலையில் இருப்பதால் இப்படியான சம்பவம் எனக்கு நேரவில்லை. இரண்டாவது கடை கொஞ்சம் குறுகலான தெருதான். அப்படிவருகையில் ஒருகுடிமகன் என்னை குறுக்கே கடக்க நினைத்தது கண்டு நான் என் வேகத்தை குறைத்து மெதுவாக செல்கிறேன். ஆனால் அந்த குடிமகன் மிக நிதானமாக குறுக்கே நடந்துசெல்கிறார். நான் அவரின் அருகே வந்துவிட்டதை கவனித்து....

“டேய்... நில்றா”அவர், அந்த குடிமகன்தான்!
நான் அப்படியே காலூன்றி நின்றேன்.  என்னை கடந்தும் சில வாகனஓட்டிகள் செல்ல நான் மட்டும் நின்றேன். அந்த குடிமகன் சாலை ஓரத்தில் வந்து, உறையூரின் வடக்குபக்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். நானும் மெல்ல நகர ஆரம்பித்தேன்...

என்னைப்பார்த்து சொன்ன அந்த வார்த்தை என் நினைவுக்குள் சுழன்றது... இவ்வளவு வாகனங்கள் கடந்துசென்றபோதும் என்னை கைகாட்டி சொன்னதின் அர்த்தம் என்ன? புரியாதுபோனாலும், அந்த வசையை எந்தக்கோபமும் இல்லாமல் நான் ஏற்றுக்கொண்டதுகுறித்து ஆச்சரியமாகவும் இருந்தது.

புத்தர் சொன்னதுபோல “ஏற்பின்றி தீ அண்டாது” என்பதாகவும், வேதாத்திரி மகரிஷி சொன்னதுபோல எனக்கான பழி இப்படியான வசை பெற்றுக்கொள்வதால், மொத்த பழிபதிவுகளில் ஒன்று அதன் தன்மை மாறுவதாகவும் நினைத்துக்கொண்டேன். ஓஷோ சொல்வதைப்போல யாரோ செய்தபழிக்கு நீ காரணமில்லாத நிலையில் அதற்காக வருந்துவதிலும், அதை திருத்தநினைப்பதிலும் காலம்கடத்தவேண்டியதில்லை என்றாலும்... நம் வாழ்க்கையிலே, நாம் வாழும்காலத்திலேயே கூட பெற்ற பழியாக இருக்கவும்செய்யலாம் தானே!

தொடர்வேன்...

Mango and Me


நினைவுகளை மீட்டும் மாம்பழம்


Mango Tree - Snap from web

என் புதிய அலுவலகத்தில் (வனீசா ஆர்ட் அகாதமி) உயர்ந்த ஒரு மாமரம் உண்டு. தன் பருவத்தில் நிறைய மாங்காய் தருவதுண்டு. நான் சென்ற வருடமிருந்துதான் அதன் காய்களை சுவைத்துவருகிறேன். எங்களுக்கு முன்பாகவே, அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆட்களை வைத்து நீண்ட கம்பு (தொரட்டி) வைத்து மாங்காய்களை பறித்துக் கொண்டு விடுவார்கள். அதுபோக மீதமிருப்பது இங்கே கிடைக்கும்.

நான் பருவத்தில் அதிகபட்சமாக 10 மாங்காய் வாங்கினாலே அதிகம். சில மாங்காய் பச்சடிக்கும், சாம்பருக்கும் போக, சாப்பிடவும் தீர்ந்துவிடும். மாமரம் பூ பூக்க ஆரம்பித்தாலே, காற்றில் மா வாசனை ஆளை இழுக்கும்... என் இன்னொரு அலுவலகத்தின் அருகில் மாமரம் இருந்தாலும், அதன் கனிகளை பார்க்க இயலுமே தவிர பறிக்க இயலாது. இத்தனைக்கும் நான் இருப்பதும் இரண்டாம் மாடி, மரமும் அந்த உயரத்திற்கு வளர்ந்தாலும் என் அலுவலக ஜன்னல் ஓரமாக வரும் கிளைகள் கைக்கெட்டா தூரத்திலேயே வளர்ந்துவருவது கவலைக்குரிய விசயம்தான்.

சென்ற ஞாயிறு, நான் என் புதிய அலுவலகம் வந்ததும், அப்போதுதான் விழுந்த நிலையில் இரு மாங்காய் அங்கொன்றும், இங்கொன்றுமாக தரையில் விழுந்துகிடந்தன. எடுத்துப்பார்க்கையில் நல்ல பழுத்த நிலையில் இருந்தன. ஆனால் வெளிப்புறம் கொஞ்சமும் மஞ்சள் கலக்காத பச்சை நிறத்திலேயே இருந்தன. இரண்டையும் எடுத்து கழுவிவைத்துக்கொண்டேன். இனி மதியம் சாப்பாட்டிற்கு இதை சாப்பிடலாம் என்று நினைத்தேன்.

அதுபோலவே அதை துண்டுகளாக்கி வைத்துக்கொண்டேன். மா கொட்டையும், அதை சுற்றிய தோலை அப்படியே விட்டுவிட்டேன். இது என்ன ரகம் என்று என்னால் வேறுபடுத்திப்பார்த்து எனக்கு பழக்கமில்லை. மாம்பழம் என்றால் மாம்பழம் என்றுதான் நான் பார்த்துக்கொள்வது வழக்கம். இதன் சுவை ஆஹா, அருமையாக இருந்தது. தானாக கனிந்த பழமல்லவா!. இந்த மாம்பழம் நான் சிறுவனாக இருந்தபொழுது, நான், என் தந்தை, சகோதரர், சகோதரிகள் ஆகியோரோடு இணைந்து தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட அந்த சூழலுக்கு என்னை கொண்டுசென்றது...

அதோடு, யாரோ ஒருவர் நட்டுவைத்த இந்த மாமரத்தின் கனியை நானும் உண்ணுகிறேன் என்ற எண்ணமும் எழாமலில்லை. இந்த உலகமே யாரோ செய்த உழைப்பின் பலனைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறது என்பது உண்மையோ உண்மை. இதனாலேயே நான் எனக்கான கடமையை சரியாக செய்யவேண்டியது அவசியமாகிறது. தானாக கிடைத்த இந்த மாம்பழத்தை ஆசீர்வாதமாகக்கூட நினைக்கத்தோன்றியது.


சில தகவல்கள்.
..

மாம்பழம் முன்னெல்லாம், மாங்காயாக வாங்கி ஒரு இருட்டு அறையில், வைக்கோல் புல்லுடன் சேர்த்துவைத்து, எதாவது வகையில் புகை மூட்டி வைத்து பழுக்கவைத்துத்தான் பார்த்திருக்கிறேன். மஞ்சளோடு, சிகப்பு, பச்சை கலந்து மாம்பழம் கூடையில் வைத்தோ, அழகாக அடுக்கியோ விற்பனைக்கு வைத்திருப்பார்கள். இப்பொதென்றால் கார்பைடு கட்டிகளை கட்டி மாங்காளோடு போட்டு செயற்கையாக, விபரீதமாக பழுக்க வைக்கிறார்கள். உடலுக்கு கேடுவிழைவிக்கும் முறை இது. பல ஆயிரம் கிலோ கணக்காக திருச்சியில் கூட, மாவட்ட ஆட்சியரே இதை கண்டுபிடித்து பறிமுதல் செய்து, குப்பையில் கொட்டி அழித்து, அவர்கள்மீது குற்றமும் சுமத்துகின்றனர், எனினும் இது ஓவ்வொரு பருவத்திலும் தொடர்கதையாகவே நிகழ்கிறது.

இந்த மாங்காய், மாம்பழம் தோல் உண்பதில் சிலருக்கு ஒவ்வாமை. மிக நேர்த்தியாக தோலைமட்டும் சிறு கத்தியால் சீவி எடுத்து, அதன் பிறகு துண்டுபோடு உணவுக்கு வைத்துக்கொள்வர். என் நண்பரின் இல்லத்தில் இது வழக்கமான ஒன்று. ஆனால் மா ஒரு சக்கை பழம். தோலோடு சாப்பிடும்பொழுது அது ஜீரணத்திற்கும், குடலுக்கும் உதவும். சிலர் கொட்டைகளை சாப்பிடுவதில்லை. அதை சுற்றி கத்தியாலேயே அதன் சதைகளை எடுத்துவிட்டு எறிந்துவிடுவர். ஆனால் மா கொட்டைகளை தனியே சாப்பிடுவதில் ஒரு தனிசுவை இருக்கும். என்ன, சாப்பிடும்பொழுது வாயின்பக்கமெல்லாம் மா சதைகள் ஒட்டி, அதன் சாறு ஒழுகவும் செய்யும். பெரும்பாலும் நான் இப்படி சாப்பிடுகையில் யாரையும் கிட்டவைத்துக்கொள்ளமாட்டேன்  :-)

ஆனால் இந்த தலைமுறைதான் வெட்கமறியாமல், ஐஸ்கிரீம் வாங்கினால், பிசா வாங்கினால், கோக், ஆப்பி, ஆகியவற்றை ஸ்ட்ரா போட்டு வாங்கினாலும் கைக்கும் வாய்க்கும் அசைத்தபடி வெளியே அலைகிறது... குழந்தைகளும் லேஸ், சாக்லெட் பார், ராப்பர் பார் என்றெலாம் வாயில் அதை ஒழுகவிட்டவாறே திரிகின்றனர். ஒருவரேனும் மாம்பழம் சுவைத்தபடி இல்லை...

ஒருவேளை ஒருவருக்கும் தெரியாமல் என்னைபோல சுவைத்து சாப்பிடுபவர்களாக இருக்கலாமோ!?


தொடர்வேன்...





Facebook and Duty


நீண்ட நாளுக்குப்பிறகு...

என் கேரிகேச்சர்லைவ்ஸ் (Caricaturelives - www.caricaturelives.com) நிறுவனத்திற்கான வலைத்தளம் மாற்றிஅமைக்கவேண்டியிருந்ததால் கொஞ்சம் இடைவெளி. கிடைக்கும் நேரத்திலும் பேஸ்புக்கில் ஆழ்ந்துவிடுவதாலும் இங்கே பதிவுகள் இடாமல்போயிற்று. பேஸ்புக்கின் வாயிலாக நம் நண்பர்களும், நிறைய ரசிகர்களும் எப்பொழுதும் இருப்பதால் நம் பதிவுகளுக்கான பாராட்டும், வசையும் அங்கேயே கிடைத்துவிடுகின்றன. ஓவ்வொரு நாளும் புதியநாளாக, புதுப்புது பதிவுகளோடு எல்லோரும் வலம் வருவதால் இந்த நாட்கள் அப்படியேவும் கடந்துவிடுகிறது.



ஆனால் சில ஆர்வக்கோளாறுகள், எளிதில் உணர்ச்சிவசப்படுவோர், எழுத்துமூலம் திடீர்விளம்பரம் தேடுவோர், சமய, மத, நாடு, இனம், சாதி, ஆண்பால், பெண்பால், நடிகர், நடிகை, திரைப்படம், அரசியல், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியம், இலக்கியவாதிகள் இப்படி கிடைக்கும் எல்லாவற்றிலும் புகுந்து, இவற்றிலான சண்டைகள் மூலம் தன்னை நிரூபிக்க நினைக்கும் சிலர், குழப்பம் விளைவிக்க நினைக்கும் சிலர் செய்யும் பதிவுகளாலும், விளம்பரங்களாலும் பேஸ்புக் நம்மை சோர்வடையவைப்பது உண்மைதான்.

என்னைப்போல சிலர் தொழில்ரீதியாகவும் செயல்படுகின்றனர். சிலர் ஓய்வுநேரத்தை பயன்படுத்தியும், சிலர் தன் அலுவலகத்தின் இடைஞ்சலுக்கு நடுவேயும் பேஸ்புக்கில் செயலாற்றி சந்தொசமோ, துக்கமோ அறுவடை செய்கின்றனர். வாழ்வில் இழந்த நட்பை அங்கே பெறமுடிகிறது, புதிதாக நட்புக்கொள்ளமுடிகிறது, நீண்டநாள் பழகிய நிலைக்கு சென்று அவர்களோடு கலந்துரையாடமுடிகிறது. இதுவே இன்னும் நம்மை பேஸ்புக்கில் ஒட்டவும், ஓடவும் வைத்துக்கொண்டிருக்கிறது.

தொடர்வேன்...