Mango and Me | CJ

Mango and Me

Mango and Me


Mango Tree - Snap from web
என் புதிய அலுவலகத்தில் (வனீசா ஆர்ட் அகாதமி) உயர்ந்த ஒரு மாமரம் உண்டு. தன் பருவத்தில் நிறைய மாங்காய் தருவதுண்டு. நான் சென்ற வருடமிருந்துதான் அதன் காய்களை சுவைத்துவருகிறேன். எங்களுக்கு முன்பாகவே, அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆட்களை வைத்து நீண்ட கம்பு (தொரட்டி) வைத்து மாங்காய்களை பறித்துக்கொண்டுவிடுவார்கள். அதுபோக மீதமிருப்பது இங்கே கிடைக்கும்.

நான் பருவத்தில் அதிகபட்சமாக 10 மாங்காய் வாங்கினாலெ அதிகம். சில மாங்காய் பச்சடிக்கும், சாம்பருக்கும் போக, சாப்பிடவும் தீர்ந்துவிடும். மாமரம் பூ பூக்க ஆரம்பித்தாலே, காற்றில் மா வாசனை ஆளை இழுக்கும்... என் இன்னொரு அலுவலகத்தின் அருகில் மாமரம் இருந்தாலும், அதன் கனிகளை பார்க்க இயலுமே தவிர பறிக்க இயலாது. இத்தனைக்கும் நான் இருப்பதும் இரண்டாம் மாடி, மரமும் அந்த உயரத்திற்கு வளர்ந்தாலும் என் அலுவலக ஜன்னல் ஓரமாக வரும் கிளைகள் கைக்கெட்டா தூரத்திலேயே வளர்ந்துவருவது கவலைக்குரிய விசயம்தான்.

சென்ற ஞாயிறு, நான் என் புதிய அலுவலகம் வந்ததும், அப்போதுதான் விழுந்த நிலையில் இரு மாங்காய் அங்கொன்றும், இங்கொன்றுமாக தரையில் விழுந்துகிடந்தன. எடுத்துப்பார்க்கையில் நல்ல பழுத்த நிலையில் இருந்தன. ஆனால் வெளிப்புறம் கொஞ்சமும் மஞ்சள் கலக்காத பச்சை நிறத்திலேயே இருந்தன. இரண்டையும் எடுத்து கழுவிவைத்துக்கொண்டேன். இனி மதியம் சாப்பாட்டிற்கு இதை சாப்பிடலாம் என்று நினைத்தேன்.

அதுபோலவே அதை துண்டுகளாக்கி வைத்துக்கொண்டேன். மா கொட்டையும், அதை சுற்றிய தோலை அப்படியே விட்டுவிட்டேன். இது என்ன ரகம் என்று என்னால் வேறுபடுத்திப்பார்த்து எனக்கு பழக்கமில்லை. மாம்பழம் என்றால் மாம்பழம் என்றுதான் நான் பார்த்துக்கொள்வது வழக்கம். இதன் சுவை ஆஹா, அருமையாக இருந்தது. தானாக கனிந்த பழமல்லவா!. இந்த மாம்பழம் நான் சிறுவனாக இருந்தபொழுது, நான், என் தந்தை, சகோதரர், சகோதரிகள் ஆகியோரோடு இணைந்து தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட அந்த சூழலுக்கு என்னை கொண்டுசென்றது...

அதோடு, யாரோ ஒருவர் நட்டுவைத்த இந்த மாமரத்தின் கனியை நானும் உண்ணுகிறேன் என்ற எண்ணமும் எழாமலில்லை. இந்த உலகமே யாரோ செய்த உழைப்பின் பலனைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறது என்பது உண்மையோ உண்மை. இதனாலேயே நான் எனக்கான கடமையை சரியாக செய்யவேண்டியது அவசியமாகிறது. தானாக கிடைத்த இந்த மாம்பழத்தை ஆசீர்வாதமாகக்கூட நினைக்கத்தோன்றியது.



சில தகவல்கள்...

மாம்பழம் முன்னெல்லாம், மாங்காயாக வாங்கி ஒரு இருட்டு அறையில், வைக்கோல் புல்லுடன் சேர்த்துவைத்து, எதாவது வகையில் புகை மூட்டி வைத்து பழுக்கவைத்துத்தான் பார்த்திருக்கிறேன். மஞ்சளோடு, சிகப்பு, பச்சை கலந்து மாம்பழம் கூடையில் வைத்தோ, அழகாக அடுக்கியோ விற்பனைக்கு வைத்திருப்பார்கள். இப்பொதென்றால் கார்பைடு கட்டிகளை கட்டி மாங்காளோடு போட்டு செயற்கையாக, விபரீதமாக பழுக்கவைக்கிறார்கள். உடலுக்கு கேடுவிழைவிக்கும் முறை இது. பல ஆயிரம் கிலோ கணக்காக திருச்சியில் கூட, மாவட்ட ஆட்சியரே இதை கண்டுபிடித்து பறிமுதல் செய்து, குப்பையில் கொட்டி அழித்து, அவர்கள்மீது குற்றமும் சுமத்துகின்றனர், எனினும் இது ஓவ்வொரு பருவத்திலும் தொடர்கதையாகவே நிகழ்கிறது.

இந்த மாங்காய், மாம்பழம் தோல் உண்பதில் சிலருக்கு ஒவ்வாமை. மிக நேர்த்தியாக தோலைமட்டும் சிறு கத்தியால் சீவி எடுத்து, அதன் பிறகு துண்டுபோடு உணவுக்கு வைத்துக்கொள்வர். என் நண்பரின் இல்லத்தில் இது வழக்கமான ஒன்று. ஆனால் மா ஒரு சக்கை பழம். தோலோடு சாப்பிடும்பொழுது அது ஜீரணத்திற்கும், குடலுக்கும் உதவும். சிலர் கொட்டைகளை சாப்பிடுவதில்லை. அதை சுற்றி கத்தியாலேயே அதன் சதைகளை எடுத்துவிட்டு எறிந்துவிடுவர். ஆனால் மா கொட்டைகளை தனியே சாப்பிடுவதில் ஒரு தனிசுவை இருக்கும். என்ன, சாப்பிடும்பொழுது வாயின்பக்கமெல்லாம் மா சதைகள் ஒட்டி, அதன் சாறு ஒழுகவும் செய்யும். பெரும்பாலும் நான் இப்படி சாப்பிடுகையில் யாரையும் கிட்டவைத்துக்கொள்ளமாட்டேன்  :)

ஆனால் இந்த தலைமுறைதான் வெட்கமறியாமல், ஐஸ்கிரீம் வாங்கினால், பிசா வாங்கினால், கோக், ஆப்பி ஸ்ட்ரா போட்டு வாங்கினாலும் கைக்கும் வாய்க்கும் அசைத்தபடி வெளியே அலைகிறது... குழந்தைகளும் லேஸ், சாக்லெட் பார், ராப்பர் பார் என்றெலாம் வாயில் அதை ஒழுகவிட்டவாறே திரிகின்றனர். ஒருவரேனும் மாம்பழம் சுவைத்தபடி இல்லை...

ஒருவேளை ஒருவருக்கும் தெரியாமல் என்னைபோல சுவைத்து சாப்பிடுபவர்களாக இருக்கலாமோ!?


தொடர்வேன்...