Life and Sin
காரணம் எந்த ஒரு வாகன ஓட்டிக்கும் சாலைபோக்குவரவு, நடைபயணிகள் பற்றிய அறிவு அறவே இல்லை. இதை நான் சொல்வதுபோலவே எல்லா வாகன ஓட்டிகளும் சொல்லுவார்கள் என்பது நிச்சயமான உண்மை... நான் முந்தி, நீ முந்தி என்றும், கிடைத்த இடைவெளியில் நீ போகிறாயா, இல்லை நான் போகவா என்ற ரீதியில் முன்னே செல்பரை வேகப்படுத்தி தான் விரைய தயாராகின்றனர். நேரம் சேமிப்பதாக எண்ணி, வரிசையாக செல்லாமல், ஆட்டுமந்தையை விட மோசமாக படர்ந்து, சாலையில் எதிர்பக்கம் வரும் வாகனங்களை நிறுத்தி, தனக்கும் வழிகிடைக்காமல் நின்று, எதிர்வரும் அந்தவாகனமும் தன்னை கடந்துசெல்லவிடாமல் பிரச்சனை ஏற்படுத்துகின்றனர். இதில் ஒருவருக்கும்ப்பின் செல்லும் ஒரு நல்ல மனிதனையும் ஏளனம் செய்து பிரச்சனையை உண்டாக்குகின்றனர்.
எல்லோருக்கும் “தலை போகிற” அவசரம். அநியாத்திற்கு நேரத்தை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று எஞ்சியிருக்கும் வாழ்க்கைக்கு முடிவுகட்டுகிறார்கள். இதிலே கைபேசி பேச்சும், தடவிக்கொண்டிருத்தலும் கூடவே.
சரி விசயத்திற்கு வரலாம்...
அப்படி என் வீட்டிற்கு வரும் வழியில் இரண்டு டாஸ்மாக் கடைகளிருப்பதால் நாம் கவனமாக வண்டியை செலுத்தவேண்டிவரும். இல்லையே யாரேனும் குடிமகன் மீது மோதவேண்டிவரும் அல்லது அவர்களே மோதிவிடக்கூடும். ஒரு கடை அகலமான சாலையில் இருப்பதால் இப்படியான சம்பவம் எனக்கு நேரவில்லை. இரண்டாவது கடை கொஞ்சம் குறுகலான தெருதான். அப்படிவருகையில் ஒருகுடிமகன் என்னை குறுக்கே கடக்க நினைத்தது கண்டு நான் என் வேகத்தை குறைத்து மெதுவாக செல்கிறேன். ஆனால் அந்த குடிமகன் மிக நிதானமாக குறுக்கே நடந்துசெல்கிறார். நான் அவரின் அருகே வந்துவிட்டதை கவனித்து....
“டேய்... நில்றா”அவர், அந்த குடிமகன்தான்!
நான் அப்படியே காலூன்றி நின்றேன். என்னை கடந்தும் சில வாகனஓட்டிகள் செல்ல நான் மட்டும் நின்றேன். அந்த குடிமகன் சாலை ஓரத்தில் வந்து, உறையூரின் வடக்குபக்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். நானும் மெல்ல நகர ஆரம்பித்தேன்...
என்னைப்பார்த்து சொன்ன அந்த வார்த்தை என் நினைவுக்குள் சுழன்றது... இவ்வளவு வாகனங்கள் கடந்துசென்றபோதும் என்னை கைகாட்டி சொன்னதின் அர்த்தம் என்ன? புரியாதுபோனாலும், அந்த வசையை எந்தக்கோபமும் இல்லாமல் நான் ஏற்றுக்கொண்டதுகுறித்து ஆச்சரியமாகவும் இருந்தது.
புத்தர் சொன்னதுபோல “ஏற்பின்றி தீ அண்டாது” என்பதாகவும், வேதாத்திரி மகரிஷி சொன்னதுபோல எனக்கான பழி இப்படியான வசை பெற்றுக்கொள்வதால், மொத்த பழிபதிவுகளில் ஒன்று அதன் தன்மை மாறுவதாகவும் நினைத்துக்கொண்டேன். ஓஷோ சொல்வதைப்போல யாரோ செய்தபழிக்கு நீ காரணமில்லாத நிலையில் அதற்காக வருந்துவதிலும், அதை திருத்தநினைப்பதிலும் காலம்கடத்தவேண்டியதில்லை என்றாலும்... நம் வாழ்க்கையிலே, நாம் வாழும்காலத்திலேயே கூட பெற்ற பழியாக இருக்கவும்செய்யலாம் தானே!
தொடர்வேன்...