THE EVOLUTION OF ART BY CARICATURIST-01 | CJ

THE EVOLUTION OF ART BY CARICATURIST-01

THE EVOLUTION OF ART BY CARICATURIST-01


கடந்த நவம்பர் மாதம் 2015ல், சூரியகதிர் மாத இதழில் வெளியான எனது பேட்டியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்... இதில் பிரசுரமாகாத சில கேள்வி-பதில்களும் இணைந்திருக்கின்றன.

சூரிய கதிர் இதழ் ஆசிரியருக்கும், கேள்விகளால் எனக்குள் என்னைத்தேடச்செய்து பதில்களை தரச்செய்த கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் திருமதி. மதுமிதா அவர்களுக்கும் நன்றி.

சூரியக்கதிர் மாத இதழுக்கு நேர்காணல் கேள்விகளும், பதில்களும்
பகுதி 01

1. ஓவியம் வரைதல் என்பதை எந்த வயதில் ஆரம்பித்தீர்கள்? நீங்கள் வரைந்த முதல் ஓவியம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 

என் ஆறுவயதுகளில் யானை வரைந்தது நினைவில் நிலைத்திருக்கிறது என்பதால், அதற்கு முன்பே கூட வரைய முயற்சித்திருக்க வாய்ப்புள்ளது. என் தந்தை பொழுதுபோக்காக சில ஓவியங்கள் வரைவதை கண்டு இந்த ஆர்வம் வந்திருக்கலாம். காலப்போக்கில், ஒவியத்தில் நான் ஆர்வமாயிருந்ததைக்கண்டு, எந்ததடையும் செய்யாது, அவரே சில திருத்தங்கள் சொல்லித்தந்ததும் உண்டு. ஆனாலும் நான் தனித்து நிற்க முயற்சித்த காலங்களிலேயே அவர் இல்லை.

நான் என் இளமைக்காலம் முதலே மிகச்சுதந்திரமாக உணர்ந்தேன். என் ஒரு சகோதரிகள். என் சகோதர் என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தியது இல்லை. இதனால் என் எல்லா ஆர்வங்களுக்கும் நல்ல தீனி கிடைத்தது... ஓவியத்தில் ஒரு முழுமை கிடைக்க உதவியது.

-----

2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்னும் பழமொழிப்படி, ஆர்வம் இல்லையென்றாலும் வரைய வரைய தான் சித்திரம் வருமா, வரையும் ஆர்வம் இருந்தாலே தானாக ஓவியம் வரைய வந்துவிடுமா?

நாம் எந்த மொழியிலும் எழுதுகிற எழுத்துக்கெல்லாம் ஓவியமே ஆதாரம். அந்த ஓவியத்தின் இன்னொரு பரிணாமம் தான் எழுத்தாக உருமாறியிருக்கிறது. இன்னமும் சீன, பாரசீக, ஜப்பான எழுத்துக்களில் வினைச்சொல்லுக்கு ஆதாரமாக எழுத்துருவை காணமுடியும். ஆக நன்றாக எழுதுபவரே கூட ஓவியம் வரையவும் முடியும். நாம் பொதுவாகவே மிக தெளிவாக, கசங்களில்லாத, உயிர்ப்பாக வரைவதுதான் ஓவியம் என்ற முடிவுக்கு வருகிறோம். அப்படியில்லவே இல்லை. ஒரு ஓவியத்திற்கான வரையறை எதுவுமே கிடையாது. குழந்தையின் கிறுக்கலும் ஓவியமே. அந்த கிறுக்கல் உருவமாக மாற்றமடைவது பயிற்சியினால் கிடைக்கும். அந்த பயிற்சி ஆர்வமிருந்தால் மட்டுமே கிடைக்கும்.

சில கலைகள் சொல்லிக்கொடுக்காமல் வரும், அதில் ஓவியம் முதன்மையானது. தானாக கற்று, தனித்து நின்று ஓவியராக வெளிப்படுவர்கள் அதிகம். நானும்கூட அதில் ஒருவனே...

பிக்காசோ சொன்னது போல, பிறக்கும் நிலையில் எல்லோருக்குள்ளும் ஓவியனிருக்கிறான், ஆனால் தன்னை ஓவியனாக நிலை நிறுத்துவது தொடர்ந்த பயிற்சிகளால் மட்டுமே.

-----

3. ஓவியத்தின் வகைகளில் இயற்கை, பூக்கள், விலங்குகள், மனிதர்கள்  என சித்திரம் தீட்ட எத்தனையோ பிரிவுகள் இருக்கையில்,  ஒரு ஓவியருக்கு ஒரு பிரிவைத் தேர்ந்தெடுக்கத் தோன்றுவது அவரின் ஆர்வம், விருப்பம் சார்ந்த விஷயம் மட்டுமா? அல்லது இயற்கை பிறவியில் அவருக்கு அளித்த கொடையாக அதைப் பார்க்க வேண்டுமா?

ஓவியம், அடிப்படை ஓவியம், காண்பதை அப்படியே வரைதல், தன் அனுபவத்தை அதி ல் சேர்த்தல், கருப்பொருளாக வரைதல், மனதில் தோன்றும் உணர்வுகளின் அடிப்படையில் வரைதல் இப்படி பல பிரிவுகளில் ஒருவர் கற்றுத்தேரவேண்டிவரும். அந்தந்த வயது, அனுபவம், சொல்லித்தரும் ஓவிய ஆசிரியர் இப்படியும் அவர்களின் ஆர்வம் தூண்டப்படும், தன் ஓவிய வெளிப்பாடுகளில், எளிதான, வேகமான, தெளிவான கருத்தை சொல்லும் ஓவியங்களை வகைப்படுத்தி, இது எனக்கு நன்றாக செய்ய முடிகிறது என்ற நிலையிலேயே தன் பாணியை தேர்ந்தெடுக்கின்றனர்.

உலகின் பொருளாதார நிலையில் ஓவியன் நிலைமை, கொஞ்சம் கடினமானதே. இதனாலும் தான் நினைத்ததை, தனக்கு தன் பிழைப்புக்கு உதவும் வகையிலும் பாணியை தயார்படுத்திக்கொள்கின்றனர். நான் கேரிகேச்சர் எடுத்துக்கொண்டதற்கு, இதை யாரும் அதிகமாக இங்கே இந்தியாவில் செய்யாததும், எனக்கு இது சுலபமாக கைவரப்பெற்றதும் காரணமாகும். பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்தது என் வயிற்றுபாட்டுக்கு உதவும் நிலைக்கு உயர்ந்தது. இன்று இந்த கேரிகேச்சர் ஓவியத்தொழிலே என் முழு நேர பணியாகும்.

இயற்கையாகவும் குறிப்பிட்ட சிலவகை பாணியை கொண்ட ஓவியர்களும் உள்ளனர். இது அவர்களின் மூதாதையரின் ஆர்வத்தால், அவர்களுக்குள் விளைந்த நிலையாகும்.

-----

4. சித்திரம் தீட்டுதல் என்பது பல பிரிவுகளைக் கொண்டதாக இருக்கையில் நீங்கள் கேலிச் சித்திரம் வரைவதை எப்படி ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

2006 ம் ஆண்டு வரை, பார்ப்பதை அப்படியே வரைவதையே செய்துவந்தேன். கிடைக்கும் காகிதத்தில் வரைந்து நண்பர்களிடம் காட்டி பெருமைசெய்துகொள்வதைத்தவிர ஏதும் செய்ததில்லை. சிலருக்கு அன்பளிப்பாக அந்த ஓவியங்களை தந்துவிடுவதும் உண்டு, ஓவிய சந்தை இருப்பது தெரிந்தாலும் அதில் நுழைய சில தயக்கங்கள் இருந்தது. இதனால் எனக்கு கிடைத்த கணிணி வரைகலை மட்டுமே ஆரம்ப நாட்களில் தொழிலாக செய்துவந்தேன்.

ஆனாலும் வேலைகளோடு 2001ம் ஆண்டுமுதலே இணையம் எனக்கு அறிமுகமாகி, 2003ம் ஆண்டுகளில் இணையத்தில் அதிக நேரம்  வேலையோடு வேலையாக செலவிட வாய்ப்பு வந்தது. மேற்கு நாடுகள் எப்போதும் நம்மை விட எந்த நிலைகளிலும் ஒரிரு ஆண்டுகள் முன்னிலையிலேயே இருப்பார்கள். அப்படி காண்கையில் கார்டூன் போல், ஆனால் வித்தியாசமாக, ஒரு மனிதரின் அடையாளங்களை மாற்றாது, கொஞ்சம் மிகைப்படுத்தி, கேலியை மையமாகக்கொண்ட ஒரு ஓவியத்தை ஆங்கில இணைய பத்திரிக்கைகளில் காணமுடிந்தது. அதன் கேலி எனக்கு பிடித்திருந்தது.

எப்போதும் ஒரு வித்தியாசமே, புதிய கவனத்தை உருவாக்கும். அதனால் அந்த கேரிகேச்சரை எப்படி செய்திருக்கிறார்கள் என்று ஆராயமுனைந்தேன். மேலும், மேலும் இந்த கேரிகேச்சர் குறித்து பார்த்தும், அதைப்போல வரைந்தும் சோதனை செய்துகொண்டேன். என் ஆரம்பகால கேரிகேச்சர்களில், நானே சில சோதனைகள் செய்து பார்த்துக்கொள்வேன். அதில் விகாரம் அதிகமாக இருப்பதை காணலாம், பற்கள் வரிசை, உதடுகள், காதுகள், மூக்கு, கண்கள் பெரிதாக வரைந்து தள்ளினேன்.

ஆனால் ஒரு ஒளிப்படம் எடுத்தாலே “இது என்னை மாதிரி இல்லை” என்று புறந்தள்ளும் “ஓவிய ஆர்வலர்கள்” மத்தியில் இது எடுபடாது என்பதை நான் உணர்ந்து,  கேலி செய்தாலும், அவர்களுக்கு பிடிக்கும் வகையில், அவர்களை சற்றே மிகைபடுத்தும் நிலைக்கு பழகி அதுவே என் பாணியாக வைத்து பயணிக்கிறேன். சந்தைப்படுத்துகிறேன்.

-----

5. தன்னைப் போன்ற அழகான ஓவியத்தை விரும்பும் மக்கள், போட்டோ எடுப்பதை விடவும் ஓவியம் வரைந்து பெற்றுக் கொள்வதில் ஆர்வமாகவும், தன்னுடைய அழகிய முகத்தை கேலிச்சித்திரமாக மாற்றிப் பார்ப்பதில் விருப்புடன் இருக்கிறார்களா?

வழக்கமாக நான் சொல்வதுண்டு, “எல்லோருக்கும் கேரிகேச்சர் ரொம்ப பிடிக்கும், அதில் தன் முகம் இல்லையென்றால் மட்டும்”.

முந்தைய பதிலில் சொன்னதுபோல, ஓவ்வொருவிதமான ஒளியில், ஓவ்வொருவிதமான பிண்ணனியில், வெவ்வேறு வகை லென்சுகளில் எடுக்கும் ஒளிப்படங்களில், நிச்சயமாகவே ஒருவரின் முகம் வெவ்வேறு தோற்றத்தில் இருக்கும். சப்ஜெக்ட், கேமரா, கேமராமென் என்ற பினைப்பு இருப்பதால் இது நான்தான் என்று வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்வார். சில திருமண போட்டோ ஆல்பம் பார்த்துவிட்டு, போட்டோகிராபரை ஏசும், அடிக்கக்கூட வரும் முட்டாள் கூட்டங்கள் உண்டு. அப்படி இருக்கையில் கையால் வரையும் ஓவியத்தை குறை சொல்லாமல் வாங்குபவர் பத்துக்கு ஐவர் என்று சொல்லலாம்.

ஒரு கண்காட்சியில் நான் நேரடியாக நபர்களை ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன். ஒரு பெண் வந்து, “சார், என்னை எவ்வளவு கிண்டல் செய்ய முடியுமோ அவ்வளவு கிண்டல் செய்து வரைந்துகொடுங்கள்” என்றார்... வரைந்துமுடித்ததும் “வாவ்” என்று சந்தோச கூச்சலிட்டு மகிழ்ச்சியோடு விடைபெற்றார். இந்த அளவுக்கு ஆர்வமாக இருப்பவரும் உண்டு. இந்த சந்தோசத்தைப்பார்த்த என் நண்பர்... “நானும் உங்களைப்போல ஓவியம் கற்று. இப்படி மக்களை சந்தோசப்படச்செய்யவேண்டும், கற்றுக்கொடுங்கள்” என்றார்...

-----

6. மக்களிடையே கேலிச்சித்திரத்துக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

பத்தாண்டுகளுக்கு மேலான என் பயணத்தில், கேரிகேச்சருக்கான நிலை அற்புதமாக இருக்கிறது... இது இன்னும் சிறக்கும். இந்த ஓவியங்களில் ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு பாணியை கொண்டிருப்பதால் எது சிறந்தது என்று கூற இயலாது. தன்னால் முடிந்த சிறப்பை அந்த ஓவியத்தில் அளிக்கிறார்கள் என்பதே உண்மை. வாடிக்கையாளார்களுக்கு எது, எந்தவகையான பாணி பிடிக்கும் என்பதை பொறுத்து ஓவியர்களுக்கு வரவேற்பு கிடைக்கும். இந்த ஓவியங்களில் ஓவியத்திற்கான ஓவியரின் அனுபவம் மட்டுமே உயர்வாக இருக்கும். இதனால் அப்படியான ஓவியர்களின் ஓவியத்திற்கு தனித்த விலை இருக்கும். அந்தவிலை மிகசாதாரணருக்கு கடினமாக இருக்கும். இதனால் நகர்புறங்களில் மட்டுமே இது சிறப்பாகிறது,

ஆனாலும் இதன் கேலித்தன்மை எல்லோரையும் கவர்வதால் “எப்படியாயினும்” எங்களுக்கு இதுபோல ஓவியம் வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்பவர்களும் உண்டு. குறிப்பாக இளம் காதலர்கள், திருமணம் செய்யப்போகும் ஜோடிகள் தங்கள் திருமணத்திற்கு இத்தகைய கேரிகேச்சர்களை தங்கள் பத்திரிக்கைகளில் சேர்க்கவும், பெரிதாக தங்கள் இல்லங்களில் வைத்துக்கொள்ளவும் மிக ஆர்வமாக இருக்கின்றனர். என் ஆரம்ப காலங்களில் என் வாடிக்கையாளர்கள், கடல்கடந்த நாட்டிலிருந்து கிடைத்தனர். இப்பொதோ மிக அருகிலுள்ள நகரங்களில் இருந்தும் ஓவியங்கள் பெற்றுச்செல்கின்றனர்.

-----

7. கேலிச்சித்திரத்துக்கு உங்களுக்கு ஆதர்சமாக யாரைக் குறிப்பிடுவீர்கள்?

எல்லோருக்கும் அறிமுகமான லியானர்டோ டா வின்சி கேரிகேச்சருக்கு இணையான, சில விகாரமாக, இயல்புக்குமாறான தோற்றம் கொண்டவர்களை வரைந்திருப்பதான ஓவிய குறிப்புக்கள் இருக்கின்றன.

எனக்கு குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அமேரிக்க நாட்டிலிருந்து வெளியாகும் MAD (https://en.wikipedia.org/wiki/Mad_(magazine)) எனும் நகைச்சுவை பத்திரிக்கையில் 1952 ல் ஓவிய ஆசிரியராக பணியாற்றிய ஜேக் டேவிஸ் (Jack Davis) (https://en.wikipedia.org/wiki/Jack_Davis_(cartoonist)) அவர்களை சொல்வேன். நான் அப்போதெல்லாம் பிறந்திருக்கவில்லையாதலால், தற்காலத்தில் இணையம் வழியாக அவரின் படைப்புக்களை கண்டே அறிந்துகொண்டேன். இவரின் பாணி இப்போதைய காலத்தை ஒத்திருப்பதை அறியலாம்.


மேலும் விட்டிகிராபி (wittygraphy), பிகேன்ஸ் (Behance) என்னும் இணையதளகளில் நிறைய தொழில்முறை கேரிகேச்சர்கள் தங்கள் படைப்புகளை தந்துகொண்டிருந்தனர். அவர்களின் படைப்புகளிலிருந்தும் நான் கற்றுகொண்டு என் பாணியை வெகு சீக்கிரமே கண்டறிந்தேன். முக்கியமாக கேரிகேச்சரின் வெளிப்பாடு அந்த கதாபாத்திரத்தின் முக்கிய அடையாளங்களை கொண்டுவருவதான கேரிகேச்சர்களில் நான் கவனம் செலுத்துவேன். அப்படிப்பார்த்தால், என் ஆர்வத்திற்கு ஈடு கொடுத்தவர்களாக நிறைய ஓவியர்களை சொல்ல இயலும்...


பகுதி இரண்டும், மூன்றும் அடுத்த பதிவுகளில் கிடைக்கும்.