THE EVOLUTION OF ART BY CARICATURIST-03 | CJ

THE EVOLUTION OF ART BY CARICATURIST-03

THE EVOLUTION OF ART BY CARICATURIST-03


சூரியக்கதிர் மாத இதழுக்கு நேர்காணல் கேள்விகளும், பதில்களும்
பகுதி 03


17. அசலைப்போல ஓவியமா, அனுபவ ஓவியமா?

ஒரு ஓவியம் கற்கும் மாணவர் அசலைப்போலவே வரைந்துதருவதில் கற்றுத்தேர வேண்டியது அவசியம். ஆனால் அதில் தன் அனுபவத்தை காலப்போக்கில் இணைத்தே தரவேண்டும். இருப்பதை அப்படியே தர, இப்பொதெல்லாம் கேமரா முதற்கொண்டு, இயந்திரங்கள்கூட வந்துவிட்டன. அசலைப்போலவே வரைந்தால் மட்டுமே ஓவியன் என்றும், அதுவே தகுதியானது என்ற முட்டாள்தனம் இந்தியாவில் மட்டுமே காணக்கிடைக்கிறது. இப்படி எதிர்பார்த்தால் நூறு பேருக்கு ஒருவரே அப்படி வரையலாம். மற்றவர்கள் எல்லாம் இன்னும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஒரு போட்டோவை, நகல் எடுத்து வரைந்து அனுப்பினால் உலகநாடுகளில் மதிக்கவே மாட்டார்கள். இங்கேதான் ஆகா, ஓகோ என்று புகழ்ந்து அந்த ஓவியரை வளரவிடாமல் செய்கின்றனர். இதில் சிலர், தன் புகழுக்காக, போட்டோவையே சிற்சில வேலைகள் செய்து ஓவியமாக்கி ஏமாற்றவும் செய்கின்றனர்

ஆனால் ஓவியம் அப்படி அசலைப்பொல வரைவது மட்டுமல்ல. தன் அனுபவத்தை அந்த கோடுகளிலும், வண்ணங்களிலும் கொண்டுவருபவனே நல்ல ஓவியன்

-----

18. பொழுதுபோக்கு நிலையா, தொழில் பயன்பாடா? இதை சந்தைப்படுத்தி விற்பனை செய்யமுடிகிறதா?

ஓவியத்தை பொறுத்தவரை, பொழுதுபோக்காக கற்றுத்தேர்ந்து, தொழில்முறை ஓவியராகமாறி, சந்தைப்படுத்தவும் செய்கின்றனர். முக்கியமாக, தன் ஓவியம் உலக அளவில் கிடைக்கும் மேலான தகுதி கொண்டிருக்கிறதா, இல்லை இன்னும் சில அனுபவங்களை பெற வேண்டுமா என்பதை சோதனை செய்துகொள்ளவேண்டும். இப்போது இணையம் மூகமாக உலகம சுருங்கியிருக்கிறது. யார் எங்கிருந்தாலும், யாரோடும் தொழிலை, சந்தைப்படுத்துதலை செய்துகொள்ள இயலும். எனவே தொழிலாக செய்யும்பொருட்டு இதை சந்தைப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஓவியம் பிறரை கவருமானால், கண்டிப்பாக அது விலைபோகும். ஆனால் அந்த நிலைக்கு வர நாம் தொடர்ந்து முயற்சிக்கவேண்டியது அவசியம். 

-----

19.தானாக இதை கற்றுத்தேர முடியுமா? என்ன வழி?

நிச்சயமாக முடியும் என்றே சொல்லுவேன். தானாக கற்றுத்தேர அவசியான எல்லா விசயங்களையும், பிறரின் அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம். இந்த ஓவியத்துறையில் வல்லவர்கள் தங்கள் கட்டுரைகளை, ஓவிய நுணுக்கங்களை, பழகுவதற்கான வழிமுறைகளை, நூல்களாகவும், வீடியோவாகவும் தனியாக விற்பனைக்கும், இணையத்திலும் தருகின்றர். சிலர் இதை தொழிலாகக்கூட செய்கின்றனர். ஆனால் ஏமாற்றி பணம் செய்பவர்களை தவிர்த்து, உண்மையான ஓவியர்களை, அவர்களின் படைப்புக்களால் அடையாளம் கண்டு, கற்றுத்தேர்ந்து யார் ஒருவரும் சிறப்பிக்க இயலும். 

-----

20. ஓவியம் குறித்த மன நிலை உலகநாடுகள், இந்தியாவில் எப்படியிருக்கிறது? 

பாராட்டதகுந்த அளவில் இல்லை. நான் கிண்டலாக சொல்லுவேன். இந்தியர்கள் மட்டுமே எல்லாம் தெரிந்தவர்களாக காட்டிக்கொள்வார்கள். 
“இது நான் இசைத்த பாடல்” என்று சொன்னால், “இதென்ன, நானும் அந்த காலத்தில் இதை விட அருமையான பாடல் இசைத்திருக்கிறேன்” என்று சொல்லுவார்கள். “இது நான் சமைத்த உணவு, சுவை பாருங்கள்” என்றால். “இதென்ன விசயம், நான் இதைப்போல ஒன்றை செய்யும்போது... ” என்று பதில் வரும். “இது நான் எடுத்த ஒளிப்படம், எப்படி இருக்கிறது” என்றால். “நான் என் பழைய கேமராவில், இப்படி எடுத்திருக்கிறேன்... இதில் முக்கியமாக...” என்று அறிவுரை ஆரம்பித்துவிடுவார்கள். இதைப்பொலவே ஓவியம் முதலான எல்லாவற்றிலும்.... 

உலக நாடுகளில் பெற்றோர்கள் குடும்ப சூழ்நிலைகேற்ற வேலை பார்த்தாலும், தங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அந்த விருப்பத்தின்படியே படிக்க ஆர்வமூட்டுகின்றனர். தான் நினைத்தை செய்யும் நிலை உலக நாடு குழந்தைகளுக்கு இருக்கிறது. இந்திய குழந்தைகளுக்கு, பெற்றோரின் ஆசைப்படி அவன்/அவள் ஒரு டாக்டராகவோ, ஒரு இஞ்சினியராகவோ மட்டுமே முடியும். தன் ஆசையை தன் குழந்தைமீது திணிக்கும் வன்முறைதான் இது. கேட்டால் பொருளாதார நிலையை சொல்லுவார்கள். பிடித்தவேலையை செய்தால் கிடைக்கும் நிம்மதியை தொலைத்துவிட்டு, கைபேசியிலும், இணையத்திலும், மது போதைகளிலும் தேடிக்கொண்டிருக்கும் இளைஞ தலைமுறைகளை நான் உதாரணம் காட்ட இயலும். 

குழந்தைகளுக்கு வழி காட்டுங்கள், பிடித்துதள்ளாதீர்கள் என்றே பெற்றோர்கள் கேட்டுக்கொள்கிறேன். 

-----

21. இந்த நிலை மாற என்ன செயலாம் என்று நினைக்கிறீர்கள்?

இந்த நிலைப்பாடுகளில் அரசு, நிர்வாகங்கள், தலைவர்களை எல்லாம் நான் குறைசொல்லி தப்பிக்க தயாரில்லை. இந்த உலகில் இன்னமும் பொழுபோக்கு எனும் மிகப்பெரும் தொழில் சிறந்து விழங்குகிறது. அதில் ஓவியமும் ஒன்றே. எந்த ஒரு விசயத்தையும் ஒரு ஓவியமாக தர, புரியாத ஒன்றையும் புரியவைக்கவும் இயலும். ஒரு திட்ட அறிக்கையை இன்னமும் ஒரு பென்சில், ஓவியம், காகிதம் இவற்றில் முடிக்காது, திட்டத்தில் இறங்க எந்த நிறுவனமும் தயாரில்லை. தன் நிறுவன ஊழியர்கள் மன அழுத்தத்திலிருந்துவிடுபட ஓவியம் கற்றுத்தரும் வகுப்புக்களை நடத்துகின்றனர். 

தொழில்முறை ஓவியராக மாற, ஓவியம் கற்றுத்தேர்தலின் பொழுது நிச்சயமாகவே கொஞ்சம் காலத்தை கொடுத்துத்தான் அனுபவத்தைபெற இயலும், ஆனால் மிக நிம்மதியான ஒரு வேலையாக, ஓவியம் இருப்பதை அறியலாம், அதை பிறருக்கு கற்றுத்தருவதையும் கூட தொழிலாக செய்யமுடியும். பெற்றோர்கள் தன் குழந்தையை பணம் செய்யும் கருவியாக மாற்றாது, அவனை/ அவளை, அவர்களின் தனித்தன்மையை மதித்து அவர்களுக்கான வழிகாட்டியாக இருக்கலாம். ஓவியத்தை தொழிலாக செய்யலாமா, வேண்டாமா என்பதை அவர்களே கூட முடிவு செய்யும் பக்குவத்திற்கு வர விடவேண்டும் என்பதும் என் வேண்டுகோள்.

-----

22. இந்த கேரிகேசர் கற்கும் மாணவர்களுக்கும், தொழில்சார் ஓவியர்களுக்கும் உங்கள் கருத்தாக என்ன சொல்லுவீர்கள்? 

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்று ஒளவை சொல்லிச்சென்றதுபோல கேரிகேச்சரில், உங்களை எல்லாவகைகளிலும் சோதனை செய்துபார்க்கும் கட்டுப்பாடற்ற நிலை உண்டு. நான் இப்படித்தான் வரைவேன் என்று வட்டம் போட்டுக்கொள்ளாமல், நான் இப்படியும் வரைவேன் என்று தன் நிலை மாற்றிகொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். ஆனால் நிச்சமாக உங்களின் பாணி மாறவே கூடாது. 
தயக்கமே இல்லாமல் ஒரு கோடு போட்டு பழகவேண்டும், அதில் நிச்சயமற்ற தன்மை இருக்கக்கூடாது. பிற ஓவியர்களோடு கருத்துவேறுபாடின்றி பழகி, ஓவிங்கள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவேண்டும். எப்போதுமே பயிற்சியையும், கற்றலையும் நிறுத்துதல் கூடாது. அப்படியிருந்தால்தான் தொழில்முறை ஓவியராகவும் சிறக்கமுடியும்.

------


பகுதி ஒன்று, இரண்டு முந்தைய பதிவுகளில் கிடைக்கும்.