சூரியக்கதிர் மாத இதழுக்கு நேர்காணல் கேள்விகளும், பதில்களும்
பகுதி 02
8. நீங்கள் விரும்பிய கேலிச் சித்திரம், அதை வரைந்தவர்கள் என 5 நபர்களைப் பற்றி குறிப்பிடுங்களேன்.
Jack Davis - இவரை ஏற்கனவே பார்த்தோம், தன் 90 வயதில்தான் “நான் இப்போதும் வரையமுடியும், ஆனால் நான் எதிர்பார்த்ததுபோல் இல்லை” என்று சொல்லியவர், தன் பென்சிலுக்கு ஓய்வு கொடுத்துள்ளார்.
Magesh - கேரளாவை சேர்ந்தவர் - வழக்கமான ஓவிய முறை, கணிணி வழியாக ஓவியம் வரவதிலும் தேர்ந்தவர். அனிமேசன் நிறுவனத்தில் தலைமை பணியில் இருக்கிறார்.
Tiago Hoisel - சாவ் பாலோ, பிரேசில் நாட்டை சேர்ந்தவர்- ஓவியராகவும், தலைமை வடிவியலாளராகவும் பணியிலிருக்கிறார்
https://www.behance.net/hoisel
Lumen - க்ரெச்னயா பெடரிய, ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் - ஓவியராகவும், தலைமை வடிவியலாளராகவும், கார்டூனிஸ்டாகவும் பணியிலிருக்கிறார்
Anthony Geoffroy - லியோன், பிரான்சு நாட்டை சேர்ந்தவர். ஓவியராக பணியிலிருக்கிறார்
-----
9. அரசியல்வாதிகள், கேலிச்சித்திரம் குறித்த சுவையான விஷயங்கள் ஏதும் உள்ளனவா?
அரசியல் விமர்சன கேலிசித்திரங்களில் பொதுவாகவே நான் பயந்தாங்கொள்ளி... வீட்டிற்கு ஆட்டோவருமே அதனால்தான். சில பத்திரிக்கைகளில் அப்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், பத்திரிக்கைகளில் பணிபுரிந்தால் மட்டுமே “அப்படியான” ஓவியங்கள் தர இயலும் என்று சொல்லி தவிர்த்துவிட்டேன்.
கேரிகேச்சர், கார்ட்டூன் இவைகளையெல்லாம் இயல்பான, நகைச்சுவையாக புரிந்துகொள்ளும் தன்மை வட்டத்தலைவரிலிந்து, நாட்டின் முதல்குடிமகன் வரை இல்லை எனலாம். அதனால் அந்த “அதீத முயற்சி” இதுவரை செயததில்லை, இனி செய்யவும் ஆர்வமில்லை.
அதைப்போலவே சினிமா புகழ் மனிதர்களையும் நான் வரைவதில்லை. ஆனாலும் ரசிகர்களின் வற்புறுத்தலுக்கும், எனக்குப்பிடித்த நபர்களையும் நான் வரைந்திருக்கிறேன். அப்படி, திரு. பாலுமகேந்திரா அவர்களை வரைந்து வெளியிட்டபோது, என் நண்பர் திரு. சுகா, அந்த ஓவியத்தை திரு. பாலுமகேந்திரா அவர்களிடம் அழகாக, பரிசாக மாற்றி சேர்ப்பித்துள்ளார். இந்த ஓவியம்வரைந்தவரை பாராட்டியே தீரவேண்டும் என்று திரு. பாலுமகேந்திரா சொல்ல, நான் அந்த நேரங்களில் சுகாவிடம் கைபேசி என் பகிர்ந்துகொள்ளாததால், திரு. பாலுமகேந்திராவின் பாராட்டை ஒரு வீடியோவாகவே பதிந்து எனக்குத்தந்தார். எதிர்பாராத இந்த மிகப்பெரும் பாராட்டால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். என் ஓவியத்தின் மூலமாக தான் பெருமையடைவதாக திரு. பாலுமகேந்திரா சொல்லி வாழ்த்தினார்.
திரு ஏபிஜெ. அப்துல்கலாம், குடியரசு தலைவராக இருந்தநாட்களில், அவரின் ஓவியமும், கவிதையும் அனுப்பிவைத்ததற்கு, பாராட்டி கடிதம் அனுப்பினார். அதுபோலவே அமெரிக்க குடியரசு தலைவராக திரு. பில் கிளிண்டன் இருந்தநாட்களில், என் ஓவியத்தைபாராட்டி அவரின் பாராட்டுக்கடிதம் கிடைத்தது.
----
10. உங்கள் கேலிச்சித்திர அனுபவத்தில் நீங்கள் ரசித்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எதேனும் ஒரு நிகழ்ச்சியில், நேரடியாக நபர்களை கேரிகேச்சராக வரைந்துதரும்பொழுதுமட்டுமே அவர்களின் ரசனைகளை உடனுக்குடன் அறியமுடியும். அப்படி நிறைய உண்டு.
ஒரு திருமண நிகழ்வில் வரைகிறேன். அந்த திருமண சடங்கில் தலைமை புரோகிதர், தன் வேலைக்களுக்கு இடையில் என்னை கவனித்திருக்கிறார். சடங்கு முடிந்தவுடன் என் அருகில் நின்றுகொண்டு நான் வரைவதை பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு.. “ஆஹா. என்ன அற்புதமாக வரைகிறீர்கள்?!” என்று சொல்லியவாறே என் கைகளை தன் கைகளோடு இணைத்து குலுக்கி, என் கைகளுக்கு முத்தம் கொடுத்தார். “சரஸ்வதி குடியிருக்கா” என்று சொல்லிக்கொண்டார். அதோடு தன்னை வரையச்சொல்லி எதிரில் அமர்ந்தார். வரைந்து கொடுத்ததும், அவரின் சீடர்களோடு தன் ஓவியத்தை காட்டி சந்தோசத்தை பகிர்ந்துகொண்டு எனக்கு நூறு ரூபாய் அன்பளிப்பாக தந்தார். நான் இப்படியான நிகழ்வுகளில் இதைஎல்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே உங்கள் அன்புபோதும் என்றேன். மிகுந்த வற்புறுத்தலினாலும், விழாவிற்கு அழைத்தவரும் “இதெல்லாம் கொடுப்பிணை சார், வாங்கிக்கங்க” என்று சொன்னபிறகே பெற்றுக்கொண்டேன்.
ஒரு இல்லத்தில் நிகழ்ந்த திருமண வரவேற்பு நிகழ்வில், குழந்தைகளுக்கு கேரிகேச்சர் வரைந்து தந்துகொண்டிருந்தேன். எல்லோருமெ தன்னுடைய கேரிகேச்சரை கையில் வைத்துகொண்டு சிரித்து, கேலி, கிண்டல் செய்துகொண்டிருப்பதைகண்ட ஒரு பெண் (ஐம்பது வயதிற்கு மேலாக இருக்கலாம்) தயங்கியவாறே என்னிடம் வந்து எனக்கும் வரைந்து தருவீர்களா? என்று கேட்டார்... “இப்படிகேட்கவே தேவையில்லை, உடனே அமருங்கள்” என சொல்லி எதிரே அமரவைத்து கேரிகேச்சர் ஓவியம் தந்தேன். மிகுந்த மகிழ்ச்சியோடு வாங்கிச்சென்றார்.
ஒரு மருத்துவ கூட்டத்தில் வந்திருந்த மருத்துவர்களுக்கு, கேரிகேச்சர் வரைந்து தந்துகொண்டிருந்தேன். ஒரு மருத்துவர், விழா அமைப்பினர் வற்புறுத்தலுக்காக என் எதிர் அமர்ந்தார். என்னைப்போலவே முன் தலையில் அவருக்கு முடியில்லை, நீள் சதுர முகம், படர்ந்த மீசை, அடர்த்தியான புருவங்கள் இப்படி சில அடையாளங்களை கொண்டிருந்தார். இவரை உட்காரவைத்துவிட்டு அமைப்பாளர்கள் அடுத்த மருத்துவரிடம் பேசிக்கொண்ட்டிருக்க, நான் இவரை வரையும் முன்பே, “இயல்பாக இருங்கள், இது கேலிக்காக மட்டுமே வரையும் ஓவியம், இதிலிருக்கும் நகைச்சுவையை ரசியுங்கள்” என்று சொல்லிவிட்டு வரைய ஆரம்பித்தேன். முழுதும் வரைந்து அவரிடம் தந்ததும், ஓவியத்தைப்பார்த்து அவர் முகம் சுளித்ததை கண்டேன், அதோடு சட்டென எழுந்துவாறே அந்த ஓவியத்தை ஒரு கையால் நான் கவனிக்கமாட்டேன் என்ற நினைப்பில் “கசக்கி” தன் மறுகையில் மறைத்துக்கொண்டு போய்விட்டார். நிச்சயமாக அது அங்கே இருந்த குப்பைக்கூடைக்கு போயிருக்கலாம்.
-----
11. கேரிகேச்சரிஸ்ட் என்னும் சொல் நம் தமிழ் மக்களிடையே பரவலாகப் போய் சேர்ந்திருக்கிறதா?
கேரிகேச்சர், ஆர்டிஸ்ட் என்ற இணைப்பே கேரிகேச்சரிஸ்டாக வந்திருக்கின்றது. கார்டூன், கார்டூனிஸ்ட் என்ற நிலையில் இல்லாவிட்டாலும், இளையர்களிடம் கேரிகேச்சர் மிகுந்த ஆர்வத்தை ஏற்படித்தியிருக்கிறது. இந்திய அளவில் இப்போது இதை கற்க, வெளிப்படுத்த, சோதனை ஓவியங்கள் தர ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் இந்த கேரிகேச்சரிஸ்ட் என்னும் சொல்லும் பரவ ஆரம்பித்திருகிறது. மக்களுக்கு சுலபமாக சேர்க்கக்கூடிய நிலையிலிருக்கும் பத்திரிக்கைகள், வார இதழ்கள், தொலைக்காட்சிகள் கேரிகேச்சர் என்ற விசயத்தை சேர்த்துக்கொள்வதில்லை. ஒரே ஒரு இதழ் வாராவாரம் ஒரு கேரிகேசரை தந்து கொஞ்சம் தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறது.
நான் என் நண்பர்களுக்கு அன்பளிப்பாக கேரிகேச்சர் வரைந்து அதை இணையத்தில் பகிவர்தன் மூலம், நண்பர், அவர்தம் நண்பர் என்று பலபேருக்கு “இந்த கேரிகேச்சர், கேரிகேச்சரிஸ்ட்” சென்று சேர்கிறது. பேஸ்புக், டிவீட்டர் மூலமாக பரவலாகிவருகிறது.
எதாவது ஒரு தமிழ்சினிமாவில், ஒரு கதாநாயகன், “கேரிகேச்சரிஸ்டாக” நடித்தால் தமிழ்நாடெங்கும் புகழ்பெற்ற சொல்லாகிவிடும் என்று நினைக்கிறேன்.
-----
13. இப்போது சட்டென்று உங்களை ஒரு கேலிச்சித்திரம் வரையச் சொன்னால், வரைவதற்கு எந்த ஆளுமையைத் தேர்ந்தெடுப்பீர்கள்
என்னையே உதாரணமாகக்கொண்டு வரைந்துவிடுவேன். நான் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கூட நான்தான் எனக்கு பரிசோதனை எலி. பிறரை வரைந்தால் “இதென்ன இப்படி இருக்கு” “நானா இது?” “கொஞ்சம் இந்த மூக்கை திருத்துங்கள்” “கன்னம் ரொம்ப குண்டாயிருக்கு” “உதடு இன்னும் சிறுத்துவரவேண்டும்” என்று எனக்கு பாடம் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.
-----
14. உங்கள் கேரிகேச்சர் ஓவியங்களில் மாற்றங்களை ஏற்றுக்கொள்வீர்களா? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
நான் நிகழ்ச்சிகளில் நேரடியாக நபர்களை வரையும் கேரிகேச்சர்களில் திருத்தங்கள் சொன்னால் “இது அப்படித்தான் இருக்கும்” என்று சொல்லிவிடுவேன். அந்த திருத்தங்கள் சொல்பவருக்கு “கேரிகேச்சர்” பற்றிய விழிப்பு இல்லாதிருக்கும், அதுதான் உண்மை. சிலர் “எனக்கு இந்த கேலி வேண்டாம் சாதரணமாக வரைந்துதாருங்களேன்” என்று கேட்டால் அதுபடி வரைந்துகொடுத்து அவர்களை திருப்திபடுத்துவேன். குறைசொல்லும் நிலையில் இதுவரையிலும் நான் கோபம் கொண்டதில்லை. “கேரிகேச்சர்”குறித்து விளக்கமளித்து, அது ஏன் இப்படி வரையப்படுகிறது என்று புரியவைப்பேன்.
ஒரு நண்பர் என்மீது மிகுந்த கோபத்தில் “ஒரு படைப்பை குறை சொல்லும் மனிதர்களோடு எதற்கு வேலை செய்வது? பணத்தை திருப்பி கொடுத்துவிடவேண்டியதுதானே. நான் அப்படித்தான், குறை சொன்னால் பொறுத்துக்கொள்ளமாட்டேன்” என்றார். ஆங்கிலத்தில், சில குறை சொல்லும் மனிதர்களை மற்றவர்கள் திருத்தும் நிலைக்கு, “அவனுக்கு கற்றுக்கொடுத்தேன்” என்பார்கள். அதுபோலவே தெரியாத ஒன்றை தெரியப்படுத்தி விளக்கமளித்தலும், சரி செய்தலும் நிச்சயம் வேண்டும்
தொழில்சார்ந்த கேரிகேச்சர்களிலும், இப்படி நடக்கும். பலமுறை திருத்தங்கள் கேட்டு பெறுவார்கள். இதனால் இந்த திருத்தங்களுக்கும் தனி விலை சேர்க்கும் நிலையும் இருக்கிறது. அவர்கள் பணம் கொடுத்துவாங்குவதால் அந்த திருத்தங்களை நாம் செய்யவேண்டியிருப்பது உண்மை. இத்தகைய திருத்தங்களால் ஓவியன் குறைபட்டுபோவதில்லை மாறாக அனுபவமே பெறுகிறான்.
-----
15. இப்போதும் கேலிச்சித்திரம் வரையக் கற்றுக்கொள்ளும் விருப்பில் மக்கள் இருக்கின்றனரா? கேலிச் சித்திரம் வரையக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்? நீங்கள் வகுப்பு எடுக்கிறீர்களா?
குழந்தை பருவத்தில் எல்லா குழந்தைகளும் ஓவியம் வரைய ஆர்வமாகவே இருக்கிறார்கள். “இனிமே படம் வரைஞ்சே, கையை ஒடைச்சிபோடுவேன்”என்ற அம்மாவின் பயமுறுத்தலால், அந்த குழந்தை பென்சிலே எடுப்பதில்லை. ஸ்கேல்வைத்து கோடுகள் போடுவதை தவிர. அந்த கோடு போடவே, ஓவியம் கற்கலாம் என்பதும், ஸ்கேல் இல்லாமல் நேரான கோடுபோடும் அறிவை அதுதரும் என்பது அம்மாவிற்கு தெரிவதில்லை. காரணம், அவங்க அம்மாவும் அவங்களை அப்படித்தான் சொல்லியிருப்பார்கள். ஓவியம் படிப்பை கெடுப்பதாக ஒரு நினைப்பு அவர்களுக்கு. இதனாலேயே தனக்குப்பிடித்த விசயத்தைசெய்யவே குழந்தைகள் தயங்குகிறார்கள். காலப்போக்கில் தன் குழந்தை தவிர்த்துவிட்ட ஒன்றை, பள்ளியில் தரப்படும் ஓவியத்தை, தன் பிள்ளை ஒழுங்காகசெய்யவில்லையெ என்று கவலை கொண்டு, ஒரேநாளில் ஓவியம் கற்க, எங்களை மாதிரி ஓவியர்களிடம் அழைத்துவருகின்றனர்.
இந்தவயதிலும் நான், சக ஓவியர்களில் படைப்புக்களிலிருந்து ஓவியம் கற்றுத்கொண்டுதான் வருகிறேன். இப்படி இருக்கையில் உடனெ ஓவியம் கற்றுக்கொள்ளுதல் முடியாத ஒன்று. பள்ளி மேல்நிலை இறுதிமுடித்தவர்கள். சென்னை, கும்பகோணம் ஓவிய கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். இதில் ஆராய்ச்சி பட்டபடிப்புவரை செல்லமுடியும். ஆனால் இதற்கு அவர்கள் நடத்தும் ஓவிய பரிட்சையில் தகுதி பெறவேண்டும்.
கேரிகேசர், கார்டூன் போன்ற கேலிசித்திர வகுப்புகள் தனியாக நடத்தப்படுவாதாக தெரியவில்லை. ஆனால் ஒருநாள், இரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்படுகின்றன. ஓரளவுக்கு ஓவியம் படைக்கத்தெரிந்தவர்களே இதில் கலந்துகொண்டு பயன்பெற முடியும். ஆனால் கேலிசித்திரம் குறித்த ஒரு அறிமுகத்திற்கு இது உதவும்.
நான் என் அலுவலகத்தில் அடிப்படை ஓவியங்கள் முதல் வண்ணக்கலவை ஓவியங்களை வரை கற்றுத்தருகிறோம். கூடுதலாக ஆர்கிடெக்ட் படிக்கதேவையான தகுதி தேர்வுக்கான (NATA) வழிமுறைகளும் கற்றுத்தருகிறோம்.
ஓவியம் கற்க மட்டுமல்ல. அதுதொடர்பான கேள்விகளுக்கும் பதில்தர என்னை யாவரும் தொடர்புகொள்ளலாம்.
-----
16. இந்த ஓவியவகை கற்றலில் அடுத்த நிலை என்ன?
கேரிகேச்சர் கற்றலில் சில அடிப்படை விசயங்கள் உள்ளன. ஏறக்குறைய அடிப்படை ஓவியம் கற்றலின் அதே பாடங்களே இதற்கும் போதும். ஆனால் அதை வெளிப்படுத்தும் நிலையில் மட்டுமே மாற்றம் கொண்டிருக்கிறது. இதை ஓவியமாக செய்யும் அதேவேளையில் தனக்குக்கிடைத்த ஓவ்வொரு முகங்களையும் வரைந்து பழகி, உதாரணமாக ஒரே முகத்தை ஒரு பத்துவிதமாக, என்னென்ன செய்தால் என்னென்ன மாற்றங்களை அந்த முகம் தருகிறது என்கிற முயற்சியில் ஈடுபட்டு அனுபவம் பெறவேண்டும். பிறர் கேரிகேச்சர் ஓவியங்களை கண்டும், அதில் அவர் தருகிற விசயங்களை பழகவேண்டும், ஒருபோதும் அதேபோல செய்யாது, தன் அனுபவத்தை அதில் தர வேண்டும். கற்றல் எல்லையில்லாதது.