I am just standing in the dark | CJ

I am just standing in the dark

I am just standing in the dark



நானும்தான் இருட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். 

இன்று மாலை மணி 5.25 , என் வீட்டின் மூன்றாவது தள மாடிக்கு வந்து நடந்துகொண்டிருந்தேன்.  வீட்டிற்குள்ளேயே “எளிய முறை உடற்பயிற்சி” செய்வதால், நடைபயணத்திற்கு செல்வதில்லை. என்றேனும் சூரியனின் மறைவு காட்சியை காண்பதற்காகவே, மாடிக்கு செல்வதுண்டு.

பாதி சூரியன் அடிவான மேகத்தால் மறைந்தும், கொஞ்சம் வெளிக்காட்டியும், மஞ்சளும் ஆரஞ்சும் கலந்து அடிக்கும் அந்த வண்ணக் கலவைக்காகவே, கண் இமைக்காது பார்த்துக்கொண்டே இருக்கலாம். மாலை சூரியன், வேகமாக பூமிக்கடியில் புதைவது போல தோன்றுவது ஒருவகை மாயைதான். சூரியன் மறைந்துகொண்டிருக்கும் அதேவேளையில் எதிர் கிழக்குவானில் மேகக்கூட்டங்கள் அதே வண்ணக்கலவையை கடன் வாங்கி பூசிக்கொண்டு மிளிரும் காட்சி அற்புதமானது. 

வடமேற்கிலிருந்து மிகப்பெரிய அம்பின் நுனிவிளிம்பு மட்டும் பாய்ந்து வருவதுபோல பறவைகள் கூட்டம், ஒரு கருப்பு கோடுகளாக தெரிகிறது, அருகில் வர வர, ஒரே அடுக்காக, ஒவ்வொரு பறவைக்கும் இதுதான் இடைவெளி என்று வகுத்துக்கொண்டு அந்த அளவு மாறாமல், ஒரு கீச்சும் இல்லாமல் என் தலைக்குமேல் என்னை கடந்து செல்கிறது. 



பார்த்துக்கொண்டே வியக்கிறேன்.  இவைகள் எங்கிருந்தன, இப்போது எங்கு செல்கின்றன என யோசிக்கிறேன்.  அடுத்தடுத்து இப்படி நான்கு பறவைகூட்டங்களை கண்டேன். சில கூட்டங்களில் அந்த அம்புநுனி விளிம்புக்கு முன்பு வழிகாட்டியாக சில பறவைகள் முன்சென்றதையும் கவனித்தேன்.

எப்படியான வாழ்வு இவைகளுக்கு? எப்படியான சுதந்திரம் இவைகளுக்கு? காலையும் மாலையும் இப்படியான ஊர்வலம். மனிதர்களைப்போல இவைகளும் “தினம்” இருக்கிறது. நட்பு, காதல், ஒற்றுமை, ஒழுங்கு, அறிவு எல்லாம் இருக்கிறது. பறவைகளுக்கு ஐந்தறிவுதான், இருக்கலாம். ஆனால் மனிதன் அதினினும் சிற்றறிவாக இருக்கிறானே? 

இவைகளைப்போல ஒரு மனிதனால், ஒரு தனி மனிதாகக்கூட வாழ முடியாத மனிதசமுதாயம் நாம் பெற்றிருக்கிறோம். வாழ வழி இல்லையென்றால் செத்துப்போ என்று முடிவுசெய்கிற அல்லது தூற்றுகிற மனிதம் இங்கே?! 

தன் காலடித்தடத்தை வானில் பதிக்காத பறவையினங்கள், விதைக்கவும் தெரியாத, அறுவடையும் செய்யாத நிலையிலும், அவைகளுக்கான வாழ்வு இந்தபுவியில் இருக்கிறதே! ஓவ்வொரு உயிரினமும் தனக்கென இருக்கின்ற வாழ்வை வாழ்கின்றன. முக்கியமாக இயற்கையோடு தன்னை இணைத்துக் கொள்கின்றன. தனக்கு விதிக்கப்பட்டது எது என ஆராயும் அறிவு அவைகளுக்கு இல்லை என்றாலும், எதனோடும் எல்லை மீறுவதற்கு கூட தெரியாது. 

மனிதனுக்குத்தான் எத்தனை பிணக்குகள்?! தன்னோடும் பிறரோடும், இந்த உலக மக்களோடும், இத்தனைக்கும் மேலாக இந்த இயற்கையின் மீதும்?! ஏன்? ஏன் இப்படி சிக்கிக்கொண்டான்? கண்ணுக்குத்தெரியாத காப்புகளை தானே எடுத்து பூட்டிகொண்டான். எல்லாம் நிறைவாக இருக்கும் இந்த உலகில், ஏன் வறுமையும், செழுமையும் எதிரெதிராக? 

சூரியன் மறைந்தபிறகும் மேற்குவானம் சிவந்து, பின் நீலமும், கருநீலமுமாக இருள் படரத்துவங்குவது வரை பார்த்துக்கொண்டே இருக்கலாம். இதோ ஒரு நாள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது, நாட்காட்டியில் ஒரு தாள் கிழிக்கப்படும், நம் வாழ்வில் ஒரு நாள் கழிக்கப்படும். 

சிந்தித்துக்கொண்டிருக்கையில், என்மீதும் இருள்படர ஆரம்பித்தது. நானும்தான் இருட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். 

-----------------------

Thanks to image: My mobile photos