Corona Prevention Game | CJ

Corona Prevention Game

Corona Prevention Game


 கரோனாக்கு எதிரான தடுப்பாட்டம்



தடுப்பாட்டம்

அன்பர்களே, கரோனா நோய் தொற்றுக்கு எதிராக நாம் தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறோம். இதில் தனக்கு தெரியாமலேயே சிக்கி, தன்னையே இரையாக கொடுத்தவர்கள் நமக்கு பாடம் புகட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களை இழந்து தவித்தபடியும், தற்காப்பு செய்துகொண்டும் இரண்டாவது அலையில் சிக்கியுள்ளோம். 

கரோனா இயற்கையின் முரண் என்று சொல்லுவதற்கில்லை. ஏனென்றால் எப்போதோ நாம் இந்த இயற்கையை பழித்ததின் விளைவாக வெகுண்ட இயற்கை, இப்படி நோய் தொற்றாக எழுவதுண்டு. நோயும் ஒருவகையில் நமக்கு நன்மை பயப்பதுதான், எப்படியெனில், குப்பையிலும், மண்ணிலும் விளையாடும் குழந்தை ஒருவித நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்த்துக் கொள்கிறது. இந்த கரோனா நோய்தொற்று அப்படியானதுதான், ஆனால் அதை தாங்கி, திருப்பித்தாக்கும் வலிமையை நாம் இழந்துவிட்டோமோ என்று கருதவேண்டியுள்ளது. 


அன்றும் ஆடினோம்

கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால், இன்று நாம் உயிரோடு இருப்பது நிஜம் என்றால், இந்த மனித உயிரினம் தோன்றி, இத்தனை ஆண்டுக் காலமாக எந்தவித நோய்க்கும், நோய்தொற்றுக்கும் ஆளாகாமல், தப்பித்து தொடர் தொடராக, தாய் தந்தை வழியாக பிறந்து வந்திருக்கிறோம் என்பது உண்மைதானே?! பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளால் நாம் தடுப்பாட்டம் ஆடித்தான் உயிர் பிழைத்திருக்கிறோம். எனவே கவலைப்படாதீர்கள். கரோனா தொற்றுக்கு எதிராகவும் சரியான தடுப்பாட்டம் ஆடுவோம் என்பது உறுதி. நம்பிக்கை இழக்காதீர். அதேநேரத்தில் அசட்டு தைரியம் கொள்ளாதீர்.



இறப்பும் பிறப்பும்

வேதாத்திரி மகரிசி சொல்லுவார், “இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும், இரண்டு கடவுட்சீட்டு தரப்பட்டுள்ளது. ஒன்றில் நம் வந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொன்றில் தேதி குறிப்பிடப்படவில்லை. அந்த திரும்பும்சீட்டை யாருமே நீக்க முடியவில்லை, இந்த தேதிதான் என்று நாம் குறிப்பிடவும் முடியாது. பயணத்தை ரத்து செய்யவும் முடியாது”

உண்மைதானே?! நாம் பிறந்தபோதே, இறப்பு நிச்சயம் என்று தெரியாது போனாலும், நாம் வாழும் காலத்தில், நம்மை சுற்றி நிகழும் இறப்பின் வாயிலாக, இறப்பு நிச்சயம் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். மிக நெருக்கமானவர் இறந்தாலும், காலப்போக்கில் அதை, அந்த இழப்பை இயல்பாக்கிக்கொண்டு சராசரி வாழ்வுக்கும் வந்துவிடுகிறோம். அவர் இறந்துவிட்டாரே, நான் ஏன் வாழவேண்டும் என்று நாமும் உயிரை மாய்த்துக் கொள்வதில்லை. (சில ஜோடிகள் விதிவிலக்கு)

இறப்பு வரும்போது வரட்டுமே, என்று மனதை தேற்றிகொண்டு “மரண பயமின்றி” வாழ்க்கை கடன்களை செய்துவருவோம். அதுபோலவே கரோனாவும் பிறரின் உயிரைபறித்தாலும் நமக்கு பயமில்லை என்று சொல்லிக்கொண்டு வாழ்ந்துவருகிறோம்.


கரோனாவின் அறிவு மற்றும் வலிமை

கரோனா தனக்கென்று அறிவு கொண்டுள்ளது. எந்த பொருளுக்குமே உள்ளடக்கமாக அறிவு என்பது உண்டு. அது கல் ஆகட்டும், கல்கண்டு ஆகட்டும், ஆப்பிள் ஆகட்டும், ஆரஞ்சு ஆகட்டும் அறிவு உண்டுதான். கரோனாவிலிருக்கும் அறிவு தன்னை, ஓவ்வொரு சூழலிலும் தன்னை மேம்படுத்துகிறது என்பதை நுண்கிருமி ஆய்வாளார்களும், மருத்துவர்களும் சொல்லுகிறார்கள். குறிப்பாக நுரையீரல் சுவாசம் தொடர்பான மருத்துவர்கள் மிக விளக்கமாக கரோனாவின் செயல்பாடுகளை சொல்லுகிறார்கள்.

தற்போது வந்திருக்கும் இரண்டாம் அலை கரோனா, மறைந்திருந்து தாக்குகிறது என்று “எதிரி ராணுவத்தினரை” சொல்லி விளக்குவது போல விளக்குகிறார்கள். எந்த தடயமும் இல்லாமல் அல்லது தடயத்தை மாற்றி மாற்றி தன்னை பரப்பிக்கொள்கிறது என்கிறார்கள்.


தடுப்பாட்டம் பலன் தருமா?

இந்திய அரசின் கோவாக்சின், கோவிட்ஷீல்ட் இரண்டும் போதுமான அளவில் தாக்குதலை தடுக்கும் ஆற்றலை மேம்படுத்தி தருகிறது என்கிறார்கள். முற்றிலும் கரோனாவை தடுக்கும் தடுப்பு மருந்துகள் இன்னும் ஆராய்ச்சியில்தான் உள்ளது. காலத்தாலும், ஆராய்ச்சியாளர்களின் முயற்சியாலும் சீக்கிரம் உலக மக்களுக்கு கிடைக்கவேண்டும். அதை நாம் இந்த இயற்கையிடமே வேண்டுவோம்.

இதற்கிடையில், நாம் ஒருவகையில் இந்த இயற்கையிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மனிதனும் இயற்கையின் பிரதிதான். ஆனால் மனிதனுக்காக இயற்கை படைக்கப்பட்டது எனும் “தன்முனைப்பு” மிக அதிகமாகிவிட்டது. எந்தவகையிலாவது இயற்கையை கெடுத்துக்கொண்டே இருப்பது என்பது மனிதனுக்கு வழக்கமாகிவிட்டது. 


இயற்கைக்கு முன் நாம் ஒன்றுமே இல்லை. மனிதனுக்காக (?!) இயற்கை பணியும் என்பது அர்த்தமில்லாதது. தன்னை முன்னிறுத்தி தன்னையே இல்லாதது ஆக்கிவிடும் பெரும் சக்தி அதனிடம் உண்டு. கொஞ்சமாவது இயற்கையின் முன் நான் அற்பம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.



முன்னெச்சரிக்கை

எப்படியாயினும், எங்கே சென்றாலும், யாரோடு சென்றாலும் முக கவசம் அணிந்து பழகுங்கள். மூக்கையும், வாயையும் மூடவேண்டுமே தவிர, உங்கள் தாடையை மூடவேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எதிரிலிருப்பவர் நண்பராக இருந்தாலும், காதலராக இருந்தாலும் முகமுடி தேவையில்லாது பழகுங்கள் ஆனால் முக கவசம் மறக்காதீர்கள்.

கண்ட இடங்களில் கைவைத்து, கைபிடித்து நடக்காதீர்கள், தேவையற்ற பொருட்களை தொடாதீர்கள். கடையில் பொருட்கள், காய்கறிகள், அசைவ வகைகள் நேரடியாக கை பட்டால் உடனே, அவ்வப்பொழுது 20 நொடி “கை கழுவும்” நீரால் கழுவிக்கொள்ளுங்கள். கையோடு அந்த பாட்டிலையும் எடுத்துச்செல்வது நல்லதே.

தேவையற்ற பயணம், பொழுதுபோக்கு, ஆட்டம், ஆர்ப்பாட்டம் தவிர்த்து விடுங்கள். உங்களுக்கும் பிறருக்குமான இடைவெளி மூன்று அடிதூரம் வைத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சமாக ஒரு அடியாவது தள்ளி நில்லுங்கள்.

வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்குள் வந்தவுடன் கை கால்களை மீண்டும் அதே 20 நொடி கழுவிக்கொள்ளுங்கள். பிறகு ஆடைகளை தனி அறையில் வைத்துவிட்டு, புதிய ஆடைகள் உடுத்திக்கொண்ட பிறகே யாரோடு அருகிலும் செல்லுங்கள். குறிப்பாக வளர்ப்பு பிராணிகளிடமும் இந்த பாதுகாப்பு பிறகே கொஞ்சுங்கள். 

கவனம், கவனம், கவனம்!


உடலும் இயற்கையே

எப்போதும், தூங்கும் நேரம் தவிர இந்த உடலுக்கும், மனதிற்கும், புலன்களுக்கும் வேலை அளித்துக்கொண்டே இருப்பது மிகக் கொடுமையானது. சுழற்றிய சக்கரம் தானாக நின்றாலும் கூட ஒடு, ஓடு என்று உதைத்து தள்ளிக்கொண்டே இருந்தால் எப்படி? 99% மக்களின் வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கிறது. “அது யார்யா அந்த 1% சதவீகிதம்?” என்று கேட்டால் அதை பிறகு சொல்லுகிறேன். 

இந்த உடலும் நீங்களும் தனித்தனிதான் என்பதை இனிமேலாவது புரிந்துகொள்வீர்களா? இந்த உடலை எவ்வளவு கவனமாக, உங்கள் காதலரைவிடவும் மேலாக, வாழ்க்கை துணைவரை விடவும் மேலாகவும், உங்கள் செல்லத்தை விடவும் மேலாகவும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை எப்போது உணர்வீர்கள்?

யார் சொன்னதையும் கேட்பதில்லை, சொல்வதில் அர்த்தமிருக்கிறதா என்றும் சிந்திப்பதில்லை. பொறுப்பற்ற வகையில் “வதந்தி” பரப்புவர்களும் உண்டுதான் என்றாலும், கிடைக்கும் தகவலின் உண்மை உங்களுக்கு தெரியாதா என்ன? அக்காலம் முதல், உணவே மருந்து என்பது உள்ளது. 


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின். (குறள் 942) 


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.  (குறள் 941)


அறியாதவர்களா நீங்கள்? நாம்தான் தாத்தா பாட்டியை எல்லாம் ஓரம்கட்டி வைத்து விட்டோமே? மேற்குலக வெள்ளை ஆராய்ச்சி அறிஞர்கள் சொன்னால்தானே எல்லாம் நம்புவோம்?! அப்படித்தானே?!

உணவு முறை, உணவுப்பொருட்கள், உணவு பழக்க வழக்கம் மாற்றத்தொடங்குக. உடலை பழக்கினால், எந்த நோய்த்தொற்றுக்கும் நீங்கள் தடுப்பாட்டம் ஆடவேண்டாம். உங்களுக்காக உங்கள் உடலே ஆடிக்கொள்ளும்.


சுவாசம் சுருங்கிட்டது?!

இந்த பொருளாதார உலகில் நீங்கள் மற்றவர்களைபார்த்து, பெருமூச்சு விட்டு விட்டே பழகிக்கொண்டீர்கள். அந்த பெருமூச்சை மட்டும் எப்படியோ கற்றுக்கொண்டீர்கள். ஆனால் எப்படி மூச்சு விடுவது? சுவாசிப்பது என்பதை மறந்தே விட்டீர்கள். அதனால்தான் கரோனா நோய்தொற்று காலத்தில், உங்களுக்குப்பதிலாக, இரு இயந்திரக்கருவிகள் சுவாசிக்கின்றன. இந்தக்கொடுமை உங்களுக்கு தேவைதானா?

உள்ளே இழுத்த மூச்சு ஒன்று என்றால் வெளியிடும் மூச்சு மூன்று என்ற அளவில் இருந்தால்தான் அது மிகச்சரியான சுவாசம்.  நுரையீரல் மட்டும் சுவாசம் என்பதில்லை, உதரவிதானம் என்ற வயிற்றின் மேல்பகுதி, ஏறி இறங்கி, காற்றை உள்ளிழுத்து வெளியே தள்ள வேண்டும். 

கை தூக்குக எத்தனை பேர் இப்படியான சுவாசம் செய்கிறீர்கள் என்று!

எல்லா குறைகளையும் நாம் செய்துகொண்டு இயற்கையை பழிப்பதில் ஏதும் அர்த்தமில்லை.


வந்தவேலை என்ன?

இந்த உலகில் பிறந்த நமக்கு வந்த வேலை என்ன என்று தெரியுமா? உங்கள் தாத்தாவைப்போல, அப்பாவைப்போல இருமடங்கு சொத்து சேர்ப்பதா? அல்லது ஏழையாக பிறந்த நீங்கள் கோடீஸ்வரனாக மிளிர்வதா? இல்லவே இல்லை. வாழ்க்கைக்கு பொருள் தேடல் மிகமிக அவசியமே. தேவை என்ற அளவில் நின்றால் போதுமானது. பொருள் தேடலில் வாழ்க்கை வீணடித்தால், எப்போது இன்பமாக வாழ்வீர்கள்?

உங்கள் கண்களால், அடுத்தவரின் வாழ்க்கையை பார்த்து அளவீடு செய்யாதிருங்கள். உங்கள் அடிப்படை தேவை போதுமானதா என்று சிந்தனை செய்யுங்கள். அடுத்தபடியாக உங்கள் வாழ்வை கொண்டாடி வாழ பழகுங்கள். 

நமக்கு வந்த வேலை இரண்டு. 1) தன்னை அறிதல் 2) இன்புற்று வாழ்தல் 

இந்த இரண்டையும் நாம் விட்டுவிட்டோம். ஆனால் இன்புற்று வாழ்வதற்காகத்தான் நான் உழைத்துக்கொண்டே இருக்கிறேன் என்று பதில் தருவார்கள் என்பதே உண்மை.


எப்படி இறப்பது?

வேதாத்திரி மகரிசி “உங்களை அறியாமல் உங்கள் உயிர் போகக்கூடாது என்பது சித்தர்களின் வாக்கு” என்று சொல்லுகிறார். அதாவது, எப்படி நீங்கள் தூங்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, படுக்கையில் தன்னை மறந்து தூங்குகிறீர்களோ அப்படித்தான் நீங்கள் இறக்கவும் வேண்டும்.


உங்களால் முடியுமா?

அதற்கு என்ன வழி? 

சிந்தனை செய்க! வாழ்க வளமுடன்!! 


 -----------------


Photo thanks to: Fusion Medical Animation & News Cn