Get ready to live now - Part 02
வாழ்வதற்கு தயாராகுக - இரண்டு
கடந்த பதிவின் தொடர்ச்சி!
பொய் சூழ்நிலை
பிறக்கும்பொழுதே சில குழந்தைகள், தாயின் ஊட்டசத்து குறைபாடால், தசை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இக்குழந்தைகளால் நிற்க முடியாது, ஒரே இடத்தில் உட்காரவும் முடியாது, நாம் தூக்கி வைத்துக்கொள்ளவும் முடியாது. ஏனென்றால் கொஞ்ச நேரத்தில் அவர்களின் தசை இறுகி அல்லது தளர்ந்து மிகப்பெரும் வலியை கொடுக்கும். இப்படியான குழந்தைகளுக்கு இயற்கை முறையில் சில சிகிச்சைகள் வழங்குவதுண்டு. அதில் முக்கியமான ஒன்று, மணலில் பள்ளம் தோண்டி, அக்குழந்தைகளை அதில் நிற்க வைத்து அல்லது உட்காரவைத்து, தலை தவிர்த்து மற்ற உடல் பாகங்களை எல்லாம் மண்ணால் மூடி விடுதல். சிறிது நேரம் கழித்து அவர்களை விடுவித்துவிடலாம். இதில் என்ன நடக்கிறது என்றால், மண்ணில் இருக்கக்கூடிய சில சத்துக்களும், பாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகளும் உடலில் கலக்கின்றன. உடலை, சதையை பலப்படுத்துகின்றன. கூடவே எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. இந்த நவீன காலத்தில் மண்ணைத்தொட்டுப் பார்த்த குழந்தைகளை, விரல் விட்டு எண்ணி விடலாம்.
எதைத்தொட்டாலும் நோய் வரும் என்று பயந்து பயந்து வளர்த்து, அது கரோனாவால் உண்மையாகிப்போனதுதான் மிச்சம். இயல்பான எதிர்ப்பு உடலில் இல்லாமல் போய்விட்டது.
வருடம் முழுதும் சாராசரி வெப்பமான ஒரு நகரில், எந்நேரமும் சென்டர்லைஸ்ட் ஏர்கண்டிசனிங் வீட்டில், பளிங்கு தரையில், செருப்புக்காலோடு சிலர் வாழ்ந்துவருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன ஒரு இயற்கை முரண்பாடு?! இந்த உடலுகென்று ஒரு வெப்ப நிலை இருக்கிறது. அதை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு இந்த உடல்படும் பாடு நமக்குத்தெரியாது. நமக்குத்தான் என்றைக்குமே உள்முக பார்வை இல்லையே. ஏற்கனவே தொழிற்சாலை, வாகன புகைகளால் குழப்பமடைந்த இயற்கை மனிதர்களின் சராசரி வெப்பத்தை தாக்கிக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிப்பதாக நினைத்துக்கொண்டு, தற்காலிக செயற்கை குளிருக்குள் அடங்குகிறார்கள். இது நிச்சயமாக உங்கள் உடலையும், உயிரையும் கெடுக்கும். இயல்பாக இந்த உடல், தனக்கு ஏற்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு, தகவமைத்துகொள்வதில் நீங்கள் வாய்ப்பு கொடுக்காமல் தவிர்க்கிறீர்கள். இதனால் உங்கள் உடல் தேவையில்லாது தடுமாறுகிறது. அதுவே எல்லா நோய்க்கும் காரணமாகிறது.
தீப்பெட்டி வீடுகள்
நமது தமிழ்நாட்டில் இருக்கிற வீடு கட்டிடக்கலை நிபுணர்கள், மேஸ்திரிகள், கொத்தனார்கள் இவர்களை கூட்டி வந்து “எப்படி வீடுகட்டுவது?” என்று யாராவது மறுபடி பாடம் நடத்தினால் நல்லது. ஏனென்றால் இவர்கள் கட்டுகிற எந்த வீட்டிலும்,
1) வெளிக்காற்று உள்ளே வராது. உள்காற்று வெளியே போகாது.
2) வீட்டின் எந்த அறையிலும் வெளிச்சம் வர வாய்ப்பு இருக்காது.
3) அறையின் வெப்பக்காற்று வெளியேற எந்த வழியும் தரப்பட்டிருக்காது.
4) ஓவ்வொரு அறையிலும் மேற்சுவற்றின் வழியாக வெப்பம் இறங்கும்
5) கதவு, ஜன்னல்களில் கண்ணாடி பதிக்கப்பட்டு, அதீத வெளிச்சமும், அதீத வெப்பம் வீட்டிற்குள் வரும்.
6) சமையல் அறையில் புகை, வெப்பம் வெளியேபோக முடியாது. மிளகாய், கடுகு தாளித்தால் வீட்டிலிருக்கிற எல்லோருக்கும் “காரத் தும்மல்” இலவசம்
7) ஜன்னலுக்கு வெளிப்புறம், மழை, வெயில் தடுப்பு வழியாகவும், தண்ணீர் வீட்டிற்குள் வரும், வெயிலும் வரும்.
8) வயிமுட்ட சாப்பிட்டு எழுந்து கை கழுவ நடக்க முடியாது என்பதால், அருகிலேயே கைகழுவும் தொட்டி இருக்கும், அவ்வப்பொழுது அது அடைத்து துர்நாற்றமும் தரும்.
9) குளியலறையும், கழிவறையும், சமயலறைக்கு அருகில் இருக்கும் அல்லது சாப்பாடு பரிமாறும் அறைக்கு அருகில் இருக்கும்.
10) குளியறையில் கை தூக்கி, கை நீட்டி சோப்பு போட முடியாது ஏனென்றால் கை சுவரில் இடிக்கும்
11) கழிப்பறையில் கொஞ்சம் குண்டான ஆட்கள் உள்ளே நுழையவே முடியாது, நுழைந்தாலும் உடலை திருப்பி வெளியே வர முடியாது.
12) வெஸ்டர்ன் டாய்லெட் செட் தான் இருக்கும். நீங்களாக வயிறை முக்கினால், குடலிறக்க நோய் நிச்சய பரிசு உண்டு.
13) சரி, கால் மடக்கியாவது உட்காரலாம் என்றால், கீழே விழுமளவுக்கு பாத டைல்ஸ் பதிந்திருக்கும். பிடிக்கவும் ஏதும் வசதியிருக்காது.
14) ______________________________________ இதில் உங்க வீட்டை சுற்றிப்பார்த்து ஏதேனும் எழுதிக்கொள்ளவும்.
இப்படியான வீட்டில் மனுசன் குடியிருப்பானா? என்று கேட்கிறீர்களா? சரிதான்! இப்படி அரும், பெரும் வசதிகள் வீட்டில் இருந்தால், உடலும், மனமும் எப்படி நன்றாக இருக்கும்?!
நேரமில்லாத நிலை
குனிந்து நிமிரக்கூட நேரமில்லை என்பார்கள் பொதுவாக. நிஜமாகவே இக்காலத்தில் அப்படி ஆகிவிட்டதோ என்று எண்ணிவிடத்தோன்றுகிறது. எல்லோரும் தன்னை, கையடக்க கைபேசிக்குள் புதைத்துக்கொண்டுவிட்டார்கள். இவர்களாக எதுவுமே செய்வதில்லை. யாராவது சிரித்தால் சிரிக்கிறார்கள், யாராவது பாடினால் கேட்கிறார்கள், யாராவது அழுகாச்சி செய்தால் இவர்களும் அழுகிறார்கள், யாராது சண்டை போட்டால் குத்துடா, வெட்டுடா என்கிறார்கள். யாராவது உடற்பயிற்சி செய்தால் பார்த்து மகிழ்கிறார்கள். இப்படியாக எல்லாமே யாரோ அல்லது யாராவது செய்துகொண்டிருந்தால் இவர்களுக்கு போதுமானது. தானாக எதுவுமே செய்யமாட்டார்கள். உடற்பயிற்சி செய்வதா? அதற்கெல்லாம் நேரமில்லையே என்பதுதான் இவர்களின் பதில்.
கூட்டமாக இருக்காதீர்கள், தும்மும்போதும் இருமும்போதும் கைகளால் மறைத்து கொள்ளுங்கள் அல்லது துணி வைத்துக்கொள்ளுங்கள். எதையும் தேவையில்லாது தொடாதீர்கள், கைகளை 20 நொடி நன்றாக சோப்பு போட்டு கழுவுங்கள். மூக்கு, வாய், கண் அடிக்கடி தொடாதீர்கள். எங்கே சென்றாலும் முககவசம் அணியுங்கள், ஒரு அடி தள்ளி நின்றே பேசுங்கள். இப்படியெல்லாம் சொன்னால், யாருக்கோ சொல்வதாக நினைத்துக்கொண்டு, இந்த வழிமுறைகளை கடைபிடிப்பதே இல்லை, அதில் அக்கறை கொள்வதும் இல்லை. இப்படியான துயர் சூழலில் பழகிக்கொள்வதும் இல்லை
இப்படியானவர்களைக் கண்டால் கரோனாவுக்கு குஷி ஏற்படாதா என்ன?
தீர்வை நோக்கி
காலம் இன்னும் கடந்துவிடவில்லை. இன்று ஆரம்பித்தாலும்கூட நாளடைவில் உங்களை, உங்கள் உடலை பலப்படுத்திவிடலாம். உங்கள் தவறுகளிலிருந்து பாடம் படித்தது போதும். இனி அத்தவறுகளிலிருந்து விலகுங்கள். உங்களை, உங்கள் கவனத்தை திசை திருப்பும் எல்லாவற்றிலிருந்தும் வெளியே வாருங்கள். அடிப்படை தேவைகள் என்ன? எந்தெந்த வகையில் நான் என்னை திருத்திக்கொள்ள வேண்டும், திருத்திக்கொள்ள முடியும் என்பதை வகைப்படுத்துங்கள். காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். ஒரு நொடி கூட உங்களால் தக்கவைக்க முடியாது.
நீங்கள் இன்னும் வாழ வேண்டும் என்றால், தப்பிக்க நினைக்காதீர்கள், உங்களை திருத்தப்பாருங்கள். உடலை வளப்படுத்தாமல் ஒருபோதும் உங்களால் வாழ முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அடிக்கடி சொல்வது போல, இயற்கையின் உன்னத பரிசு இந்த உடல், அதை பாழாக்காதீர்கள்.
அல்லது உங்களுக்குள்ளாக நான் வாழ்ந்து முடித்துவிட்டேன், இனி வாழ்வில் ஒன்றுமில்லை என்ற நிறைவிலாவது திருப்தி கொள்ளுங்கள். உங்கள் மீத வாழ்க்கையை கரோனாவுக்கு கொடுத்து விடுங்கள் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
அந்நிலை வேண்டவே வேண்டும். இன்றே தீர்வை நோக்கி நகர்க,
வாழ்க வளமுடன்.
-----------------
Image Thanks to: Brooke Cagle and shutterstock