My Vote Goes to | CJ

My Vote Goes to

My Vote Goes to


 என் ஓட்டு யாருக்கு?


முதல் ஓட்டு அனுபவம்

நான் 18 வயது நிரம்பி, புதிய “மனிதனாக” மாறிய நாட்களில், ஓட்டுசீட்டில் என் பெயர் ஏறிக்கொண்டது. ஓவ்வொரு கட்சி வாக்கு படிவத்திலும் என் பெயரை படித்துப்பார்த்து, வாக்குச்சாவடி சீட்டு வாங்கு வைத்துக்கொள்ளும் பொழுது பெருமையாகவே இருந்தது. என்வீட்டில் மொத்தம் என்னையும் சேர்த்து எட்டு ஓட்டுகள் கிடைக்கும். எங்கள் பகுதி குறிப்பிட்ட கட்சிக்குரியது என்றெல்லாம் இல்லை எனினும்,  திமுக, அதிமுக, ஆர்வமுள்ளவர்களே அதிகம். ஆங்காங்கே சிலர் காங்கிரஸ். சிலர் இ.கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வதும் உண்டு. எல்லோருமே கண்ணைப்பறிக்கும் புனிதமான வெள்ளை ஆடைகளில் “தங்களை” மறைத்திருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நானும் என் அம்மாவும், அருகே இருந்த வாக்குச்சாவடியாக மாற்றப்பட்ட பள்ளிக்கு நடந்துசென்றோம். பக்கம் என்பதால், நடந்தே சில தெரு மாறி செல்கையில், ஒரு காங்கிரஸ்காரர் வீட்டில் பல குதிரை வண்டிகள் நின்றிருந்தன. எங்களைப்பார்த்த அவர்,

“ஓட்டு சாவடிக்குத்தானேம்மா, இருங்க. வண்டி வைக்கிறேன்” என்றார்.

“வேணாண்ணா. நடந்துடறோம்” அம்மா

“அட, இருங்க போவோம். தம்பிக்கி கன்னி ஓட்டா? டேய் தம்பி எந்த கட்சிக்கு ஓட்டு போடனும் தெரியுமா?”

“தெரியும் சார்” நான்

“@க்கு போட்டுடு என்னா!” என்றார் சிரித்துக்கொண்டே.

இவ்வளவு சத்தமாக சொல்லுகிறாரே என்று நினைத்துக்கொண்டேன். அவர் வீட்டில், எப்போதாவது அந்தவீட்டின் அருகே, கடந்துவருகையில் ஏறக்குறைய என்வயதை ஒட்டிய கான்வெண்ட் பள்ளி மாணவியை பார்த்திருக்கிறேன். என்னை விட அழகாகவும் இருப்பாள். அது அவர் மகளா, பேத்தியா என்பது கூட தெரியாது. இந்த நேரத்தில் என் கண்கள், பருவ வயதின் ஆர்வத்தில், அந்த மாணவியை தேடத்தான் செய்தன. வேறு வழியின்றி, எங்கள் வீட்டிலிருந்து 800 மீட்டர் தூரமிருந்த பள்ளிக்கு, ஒரு 500 மீட்டர் தூரத்திற்கு குதிரை வண்டி பயணம். வாக்கு சாவடியில் என் பெயரையும் என்னையும் சரிபார்த்து, விரலில் மைவைத்து, 

“தம்பி, ஒரு தடவைதான், ஒரு பெயரில்தான், ஒரு சின்னத்தில் தான் குத்தனும் சரியா?”

ஓ அப்போ மூணு தடவை குத்தனுமா?! என்று கிண்டலடிக்கும் அளவிற்கு நான் வளரவில்லை. 

வேட்பாளர் பெயர், சின்னம் பட்டியல் கொடுத்து அனுப்பிவைக்க, ஒதுக்கப்பட்டிருந்த அட்டை மறைவுக்கு பின்னே, ஸ்வத்திக் சின்னம் மை தொட்டு அழுத்தி, பதித்தேன். 


அரசு + இயல் = அரசியல்

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் வாழ்க்கை வளம், கல்வி, பொருளாதாரம், எதிர்கால சந்ததியினருக்கான வழி இவற்றை, இயல்பாக, அரசால் வழிநடத்துவதற்கு அமைவதுதான் அரசு. ஒரு காலத்தில் “மன்னர் பரம்பரை வழியிலில் இருந்து” மக்களால் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு மாறிவிட்டது. இது காலப்போக்கில், தலைவர், தலைவர் மகன், தலைவரின் பேரன், தலைவரின் கொள்ளுப்பேரன் என்று நீண்டுக்கொண்டே போய் மறுபடி “தலைவர் பரம்பரை வழிக்கு” மாறிவிட்டது, அத்தலைவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு கிடைத்த சாபக்கேடு.

என்றைக்கு அரசியலில் இருந்துகொண்டு, அதை, தன்னை, தன் குடும்பத்தை உயர்த்துவதற்கு ஒரு தொழிலாக நினைக்க ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே இந்த நாட்டிற்கான மலர்ச்சியில் தடை வந்துவிட்டது. இன்னொன்று, சமூகத்தில் தனக்கு கிடைக்கும் மரியாதை, பதவியின் அதிகாரம் இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு மிகுந்த தேவையாகியது. மக்களுக்கான, நாட்டிற்கான சேவைதான் “அரசியல்” என்பது பொய்யாக போனது. 

உன்னால் நான், என்னால் நீ என்று இருகட்சியினருக்கும் இருக்கும் பொது தன்மையில், யாரும், யாரையும் காட்டிக்கொடுக்காமல் “இன்றுவரை” வளர்ந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.  


குரங்கும் பகிர்வுகளும்

குரங்குகள் மட்டுமே அதிகமாக வாழும் அந்த சிறு காட்டுப்பகுதியில்,  உணவு கிடைக்காது வாடின. நல்ல உள்ளம் கொண்ட அந்த கிராமத்து மக்கள், தங்கள் தோட்டங்களில் கிடைத்த மாம்பழங்களை, ஒரு பெட்டியில் போட்டு, அந்த குரங்குகள் இருக்கும் இடங்களில் வைத்தனர். முதலில் குரங்குகள் அப்பெட்டியில் இருந்த மாம்பழங்களை பார்த்தாலும், கிட்டே வராமல் தள்ளியே நின்றன. நம்மை விட விலங்குகளுக்கு “வாசனை உணர்வு” மிக அதிகம். ஆனாலும் கிட்டே வரவில்லை. சில பெரிய வயதான குரங்குகள் கொஞ்சம் கிட்டே வந்தன. ஆர்வத்தில் நெருங்கப்போன குட்டி குரங்குகளை, அதன் தாய்கள்,  வாலைப்பிடித்து இழுத்து நிப்பாட்டின. 

வயதான குரங்குகள் பெட்டியை பாதுகாப்பாக தட்டி பார்த்துக்கொண்டு, பழத்தை எடுத்தன. சாப்பிட்டன. உடனே மற்ற குரங்குள் அனைத்தும் கிட்டே நெருங்கி, ஒரு குரங்கு, பழத்தை எடுத்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு நகர, அடுத்த குரங்கு பழத்தை எடுத்து அதுவும் பாதுகாப்பாக நகர்ந்துவிட இப்படியே எல்லா குரங்குகளும், மாம்பழத்தை எடுத்துக்கொண்டன. 

இந்த நிகழ்வில்,

1) ஒரு சில குரங்குகள் ஒரு பழம் மட்டுமே எடுத்துக்கொண்டன.

2) சில குரங்குகள் இரண்டு கைகளிலும் இரண்டு பழங்களை எடுத்துக்கொண்டன.

3) எந்த குரங்கும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி, இடித்துக்கொண்டு பழங்களை எடுக்க போட்டி போடவில்லை.

4) ஒன்றை ஒன்று தள்ளிவிட்டோ, தலைக்கு மேலே ஏறியே பழத்தை எடுக்கவில்லை

5) தனக்கு கிடைக்கவில்லை என்று எந்த குரங்கும், இன்னொரு குரங்கின் மேல் பாய்ந்து சண்டைக்கு செல்லவில்லை.

6) தனக்கு கிடைக்காது யாருக்கும் கிடைக்க கூடாது என்று பெட்டியை தள்ளி உருட்டிவிடவில்லை.

7) தன்னால் முடிந்த அளவில் மாம்பழம் வேண்டும் என்று நிறைய எடுத்துக்கொள்ளவில்லை.

8) யாருக்கு கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? என்று எந்த ஒரு குரங்கும், பெட்டியோடு மாம்பழத்தை தூக்கிக்கொண்டு ஓடவில்லை.

9) தனக்கு மாம்பழம் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை, சினம் கொள்ளவில்லை, ஆத்திரப்படவில்லை

10) எந்தக்குரங்கும் சாப்பிட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்து மாம்பழத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

குரங்குகளுக்கு கட்சி இல்லை, கொள்கைகள் இல்லை, அரசியல் ஆர்ப்பாட்டமும் இல்லை, தலைவர்கள் இல்லை, தொண்டர்கள் இல்லை. இப்படி இல்லாததினால் அவைகள் தாழ்ந்து போகவும் இல்லை. 


#குரங்கிலிருந்து மனிதன் வந்தானா? இல்லையா என்ற கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.


வாழ்த்தெரியார் ஆளத்தெரியாதோர்

வாழ்த் தெரியாதோர் பெரும்பாலும் வாழ்நாட்டில்

     ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்

கோழை, கயவர், கொலைஞர், தடியர்கள்,

    ஏழை, நோயுற்றோர் எங்குமே காட்சியாம்.

இந்த கவியை, குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் 1958ம் ஆண்டு எழுதியிருக்கிறார். (ஞானக்களஞ்சியம் நூல் ஒன்று, 129ம் கவி)


மன்னிப்போம் மறப்போம்

மக்களிடையே பொய்யுரைகள், வெறுப்புரைகள், வெற்றுவாக்குறுதிகள் கொடுத்து, மக்களை தன் வசம் திருப்பும் கலையை, எல்லா கட்சி தலைவர்களும் கற்றிருக்கிறார்கள். தாங்கள் பிறர் மூலமாக தங்களை உயர்வாக சொல்லி, புகழ்பரப்பிக்கொள்ளும் தன்மையும் அவர்களுக்கு உண்டு. வேண்டுமென்றால் காலில் விழவும் தயங்குவதில்லை. அந்த அளவிற்கு “அதிகார போதையில்” ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். உண்மை உரக்கச்சொல்வோம் என்ற செய்தித்துறைகள் கூட, பூசி மழுப்பிக்கொண்டிருக்கின்றன, அதுவும் ஒரு கட்சி சார்பாகவே.

நாங்கள் தப்புசெய்திருக்கிலாம். நாங்கள் திருத்திக்கொள்கிறோம். என்று “சும்மா” கேட்டாலும், “பணம்” கொடுத்து கேட்டாலும், மக்கள் “மன்னிப்போம் மறப்போம்” என்று கடந்த ஆட்சிக்காலத்தில் தாங்கள் பெற்ற எல்லா கொடுமைகளையும் கடந்து, மீண்டும் அதே அரசை வரவேற்கின்றனர்.

குடும்ப பரம்பரை என்பதுப்போலவே, தனி மனித சிந்தனையும், அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையும் பலருக்கு இல்லை. கூடவே தனது “இந்த வளர்ச்சிக்கு” காரணம் இந்த அரசுக்கு ஓட்டு போட்டதால்தான், அதனால் நீயும் போடு என்று பிள்ளைக்கும் ஊட்டி வளர்க்கினர். 

இவர்களிடம் பணம் வாங்கிவிட்டேன். அதை செலவும் செய்துவிட்டேன். தின்ன காசுக்கு, நியாயமா “இவங்களுக்குத்தான் ஓட்டு போடனும்” என்று வாக்கு அளித்து விடுகின்றனர். பணம் பெற்று ஓட்டு போட்டால், அடுத்த அந்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கான தீர்வை எப்படி கொடுப்பார்கள்?!

“யோவ், நீதான் அன்னைக்கே காசு வாங்கிட்டேயேயா? இப்ப என்ன இதுக்கு வந்து இங்க நிக்கிற?!” என்று கேட்க மாட்டார்களா? 


கட்சியற்ற ஆட்சி

மனிதனின் அடிப்படையான தேவைகள் மூன்று,

1) உணவு 2) உடை 3) இருப்பிடம்

மேலும், அடுத்ததாக கல்வி, மருத்துவ உதவி, தொழில்வாய்ப்பு, மக்களின் பாதுகாப்பு ஆகிய அடுத்த நான்கு தேவைகள் போதுமானதாக இருக்கும்.  ஆனால் தனிப்பட்ட தேவைகள் என்றால் ஆளாளுக்கு மாறுபடும் எனவே தனித்தேவைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எந்த ஒரு அரசும் இந்த முக்கிய அடிப்படை முன்றும், அடுத்த நான்கும் நிறைவேற்ற முடிவு செய்தாலே போதுமானதுதான்.

ஆனால் நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் ஓவ்வொரு கொள்கைகள், அதிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள். சேவை மக்களுக்கானது என்றால் “ஒரே மாதிரிதானே இருக்க வேண்டும்?!” எத்தனை கட்சிகள் அரசாள வந்தாலும், 1) கடன் 2) வறுமை 3) கல்வியின்மை ஆகிய மூன்றும் இன்றுவரை தீர்க்கப்படவே இல்லையே?!

எனவே கட்சிகளற்ற ஆட்சிதான் நன்மை தரும் என்றும், வேதாத்திரி மகரிசி அவர்கள் தீர்வு (ஆண்டு 1961) தருகிறார்.


இன்னும் சில வார்த்தைகள்

வேதாத்திரி மகரிசி அவர்கள் “அரசியல், ஆட்சி, தலைவர்கள்” குறித்து இன்னும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே.

1) அரசியலே மக்களை அடக்கிடவும், உறிஞ்சிடவும் ஏற்றவழி என்பதை தலைவர்கள் அறிந்துகொண்டனர்.

2) அரசியலே முரடர்களின் சொத்தாய் மாறும் அவலநிலையை முதலில் மாற்றவேண்டும்.

3) தெளிவற்ற மக்களிடம் சுயநலத்தோர், தேச, மத, ஜாதி, இன வெறியூட்டி, தெரிந்தால்போல நடித்து புகழ் பெறும் நடிகராக, அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்


வாழவைக்கும் ஆட்சி

கடன் வறுமை கல்வியின்மை என்ற மூன்று

களங்கங்கள் உலகினிலே மறைய வேண்டும்

உடன்பிறந்தார் போலஉள்ளம் ஒன்றி மக்கள்

உயர்நிலையில் வாழ வைக்கும் ஆட்சி வேண்டும்.

என்று வேதாத்திரி மகரிசி அவர்கள், ஆட்சியாளார்களை வரவேற்கிறார்.


வாக்கு தேர்வு

யாரோ சொல்கிறார்கள், என் நண்பர் சொல்கிறார். என் தந்தை சொல்கிறார், என் வாழ்க்கைதுணை சொல்கிறார். சமூக வலைத்தளங்களில் சொல்லுகிறார்கள். செய்தி தொலைகாட்சியில் சொல்லுகிறார்கள். தொண்டரே சொல்கிறார். தலைவரே சொல்கிறார் என்றெல்லாம் “ஒரு சார்பு” நிலை எடுத்து உங்கள் வாக்கை வீணடிக்காதீர்கள்.

ஆட்சியாளர்களின் கடந்த கால நிலையை அலசுங்கள், இப்போது சொல்லும் வாக்குறுதிகளை கேளுங்கள். இரண்டையும் ஒப்பிட்டுப்பாருங்கள். கடந்த ஆட்சியை நிறைவேறாமல், நிறைவேற்றப்படாமல் போன காரணமென்ன என்பதை சிந்தியுங்கள். அது அந்த அரசின் அலட்சியம் என்றால், அவர்களுக்கு மறுவாய்ப்பு தருவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். எளிய தலைவர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் நண்பரோ, அறிமுகமானவரோ இருந்தால் அவர்களுக்கு வாக்களியுங்கள். கட்சி என்ற பாசம், ஒட்டுதல் நிலையில், அவர்கள் நிறுத்தும் எந்த மனிதருக்கும், உணர்ச்சி வசத்தால் வாக்களிப்பதை தவிருங்கள்.

உங்கள் வாக்கும், உங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லும் எனவே, ஒரு நாள் பணத்திற்கு ஏமாறாதீர்கள். விரலோடு ஒட்டும் மையில், மொத்த வாழ்க்கையையும் இருட்டாக்காதீர்கள். உங்கள் வாக்கால், பிற மனிதரையும், சமூகத்தை அவதிக்குள்ளாக்காதீர்கள்.


வாழ்க வளமுடன். 


-----------------

Photo thanks to: Trac Vu @tracminhvu