Perfect Judgement
நின்று கொல்லும் இறை
உலகில் எல்லோருக்குமே இறை உணர்வு எந்த வகையிலாவது கிடைத்துக் கொண்டிருக்கிறது. தான் உணர்ந்ததை பிறருக்கு தர வேண்டும் என்ற ஒரு மேம்போக்கான எண்ணம், உண்மை அறிந்தவர்களிடம் நிறைந்திருக்கும். அந்த வழியில்தான் நமக்கு முன்னே சித்தர்கள், ஞானிகள், மகான்கள் இந்த உலகுக்கு உண்மைகளை, அதை கண்டறியும் வழிகளையும் தந்தார்கள்.
சிலர் வெளிப்படையாக தந்தாலும், முக்கியமான உண்மைகளை, நீயே இந்த வழியாக தேடி எடுத்துக்கொள் என்று மறைத்தும் வைத்தார்கள். ஆனால் உண்மையை சொல்லாமல் விடவில்லை. ஏனென்றால், உண்மை என்பது சரியான நபருக்கு போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணம்.
இந்த உலகில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, இரட்டை எண்ணம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்கிறார்கள். எப்படியெனில், ஒன்றை இலவசமாக எதிர்பார்ப்பார்கள். வேண்டி வணங்கி, அழுது புரண்டு பெற்றுக்கொள்வார்கள். அதற்கு கைமாறாக எதும் செய்ய மாட்டார்கள். சிறிது காலம் கழித்து அதன் பலனை பெற்று அனுபவிப்பார்கள். வேறு ஒரு நபர் வந்து கேட்டால், “நான் ஒன்றும் சும்மா பெறவில்லை. இது உனக்கு வேண்டுமானால், இவ்வளவு பணமோ, பொருளோ கொடுத்து பெற்றுக்கொள்” என்று சொல்லிவிடுவார்கள். இவர் பெற்றதோ இலவசம், அதை அப்படியே பகிர்ந்து கொடுக்க மனமில்லை.
இன்னும் உண்மையை சொல்லப்போனால், இவர் பெற்ற பலனை தரப்போவதில்லை. அதை பகிரவும் முடியாது. ஆனால் அந்த வித்தையை, அறிவை தர மறுக்கிறார். இதனாலே அந்த உண்மை, அவரளவில் நின்று விடுகிறது. பொருள் வாங்காமல் தரமாட்டேன் என்று முடிவு செய்து விடுவதால் அது அழிந்தும் போய்விடும். இந்த மாதிரியான நபர்களிடம் சிக்கிவிட கூடாது என்பதில், சித்தர்கள் கவனமாக இருந்தனர் என்று சொல்லலாம்.
ஆனாலும், சித்தர்கள் உண்மை உணர்ந்தவர்கள். அவர்கள் இத்தகைய தவறான மனப்போக்கு கொண்ட மனிதர்களை தண்டிப்பதில்லை. ஏனென்றால், அவரவர்க்கு அவரே நீதியரசர். எனவே தான் செய்த செயலுக்கு, இயற்கையின் வினை விளைவு நீதியால் தண்டிக்கப்படுவார். அது எப்பொழுது என்பது அவருக்கு தெரியாது.
இதன் அடிப்படையில்தான், அரசன் அன்று கொல்வான், இறை நின்று கொல்லும் என்று சொல்லுவார்கள்.
வாழ்க வளமுடன்.
-----
Thanks to image by: BBC