Today's world in people's sharing! 3
மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்! 3
பகிர்வோரின் மனநிலை
இந்த கட்டுரையின் சாரமே இதுதான். உலகம் கையிலடங்கி விட்டதால், மனிதனுக்கு நிலை கொள்ளவில்லை. தன் கருத்தை பகிர்கிறேன் என்று பல வழிகளில், தானே சிக்கிக் கொள்கிறான். தன்னளவில் புரிந்துகொண்ட ஒன்று, பிறருக்கு சென்றடைகையில் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு அடிப்படையும் தெரியவில்லை. அதை கற்றுக்கொள்வதும் இல்லை. அதுகுறித்து கவலை கொள்வதும் இல்லை.
இன்றைய தொல்லைகாட்சி செய்தி பகிர்வுகளும் அப்படித்தான். மக்களின் மூளையை சலவை செய்வதில் முதலிடம் இதற்குத்தான் தரவேண்டும். மக்களை ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே, நிறுத்தி வைக்க இவர்களால் முடியும். உதாரணமாக, ஏதோ இரண்டு வீடுகளில், அருகருகே நடந்த ஒரு சாதாரண பிரச்சனையை, சாதிப் பிரச்சனையாக மாற்றி, தெருவை, ஊரை, சமூகத்தை, நாட்டைச்சார்ந்த கலகமாக மாற்ற இவர்களால் முடியும். ஆனாலும் தொல்லைக்காட்சி ஒரு குழு அமைப்பு.
தனி மனிதனில், ஒரு சாதாரண பிரச்சனை வளரும், ஆனால் சீக்கிரமாக அடங்கிவிடும் என்பது பொதுவானது. இதில் பழிக்கு பழி வாங்குதல் என்பது, பிறர்தூண்டுவதால் மட்டுமே நடக்கும். உண்மையாகவே பிரச்சனையில் தொடர்புடையோர் சமாதனத்திற்கே தயாராக இருப்பார்கள். இங்கே தனி மனிதர்கள், தங்களின் கருத்துக்களை புகுத்தி இரண்டு பேருக்கும் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.
பொதுவாக தனிமனிதனின் மனம், இந்த சுருங்கிய உலகில், எந்நேரமும் கொந்தளிப்பாக இருக்கிறது. ஒரு குப்பைத்தொட்டியில், குப்பை சேருவதைப் போல, எல்லா விசயங்களையும் தனக்குள் ஏற்றிக்கொண்டு தன் நிலை என்ன, தன் குணம் என்ன என்பதை மறந்தே போகிறான். ஒரே ஒரு நெருப்புப் பொறி கிடைத்தால், குப்பென்று பற்றி எரிவார்கள் அல்லது எரித்துவிடுவார்கள். இதில் படித்தவரும், படிக்காதவரும் பொதுவே.
இணையத்தில் பகிர்வோரின் மனநிலை
வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற, வெள்ளந்தியான மன நிலையில் நீங்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அல்லது மனம் விரிந்த நிலையில் எல்லாவற்றை சமநோக்கில் பார்க்கும் மனிதனாக இருங்கள். இப்பொழுது, நீங்கள் இணையத்தில் ஏதேனும் ஒரு இணைய பத்திரிக்கை செய்தி, சமூக பகிர்வு வளைத்தளமான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடுயூப் இவற்றை சற்றே பார்வை இடுங்கள். ஒரு மணி நேரத்திற்குள்ளாக, உங்கள் மனம் கொந்தளிக்கும் என்பது உறுதி.
இப்படியான உலகிலா நாம் வாழ்கிறோம்? இவன் இப்படியா? அவன் அப்படியா? இந்தத் தலைவரா? என்று பலப்பல வகைகளில் சிந்தித்து, உங்களுக்குள் தீர்வு நோக்கி நகர்வீர்கள். இவனை அடக்கலாம், அவனை ஒடுக்கலாம், இதையெல்லாம் இப்படி செய்யலாமே என்று ஒரு கூட்டத்தின் தலைவனைப்போல திட்டமிடுவீர்கள் என்பது உறுதி. நீதியை நிலை நாட்ட வந்த தலைவனைப்போல நீங்கள் மாறிவிடுவீர்கள். இத்தகைய தூண்டுதலைத்தான் இந்த இணையவழி பகிர்வுகள் தருகின்றன. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
பகிர்வில் தனி மனித மனநிலை
இது இன்னும் ஓர் முக்கியமான தலைப்பு. திரைப்படங்களில், “ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்” என்ற சொற்றொடர் மிகப்பிரபலம். அது உண்மையல்ல என்றாலும், ஒரு மனிதனின் மனநிலையை நாம் யூகம் செய்ய முடியும். வெளிப்படையாக சிலர் சொல்லாமல் இருந்தாலும், இப்பொழுது இதைத்தான் அவன்/அவள் நினைத்துக் கொண்டிருக்கிறான்/ள் என்று நாம் சிந்திக்கலாம். ஆனால் அந்தக்காலம் மலையேறிவிட்டது அல்லது மலையிறங்கிவிட்டது. ஆம்.
நான் ஒரு செய்தியை பகிர்ந்தாலும், நீங்கள் ஒரு செய்தியை பகிர்ந்தாலும், ஒரு மூன்றாம் மனிதன் தன் கருத்தை தெரிவிக்கும் வழியில் இணையம் வளர்ந்துவிட்டது. அந்த கருத்துப்பகிர்வு எவ்வளவு தன்மையாக இருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள். 100 க்கு 99 சதம் வன்மம் தூண்டும் நிலையில்தான் எதிர்கருத்துக்கள் பகிரப்படுகின்றன. மனிதனின் மனம் இதத்தை இழந்துவிட்டது. எதிராள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை ஏதுமின்றி, உடனுக்குடனே வன்மம் தலைக்கேறி எழுத்தில் வந்து நிறைந்து நிற்கிறது. தற்பொழுது “கிளப்ஹவுஸ்”ஸில் வார்த்தைகளும் கிடைப்பதாக அறிகிறேன்.
ஒட்டுமொத்தமாக மனித சமூகம், தன் தகுதி இழந்து கிடப்பதாக எண்ண இடமிருக்கிறது. வளர்ந்தோரும், வளர்வோரும் இதில் வித்தியாசமில்லை. பேசவும், எழுதவும் தெரியாத குழந்தைகள் கூட காட்சி வடிவத்தில் வந்துவிட்டார் என்றும் சொல்ல முடியும்.
தீர்வுப் பகிர்வு
எப்பொழுதுமே நமக்கு இருக்கும் ஒர் உயர்ந்த எண்ணம் என்ன என்றால், எல்லாமே உடனடியாக மாறிவிட வேண்டும் என்று விரும்புவதுதான். இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆனால் தனி மனிதனாக, நாம் மாறினால் நிச்சயமாக மாறிவிடும். அதாவது நம் மனம் மட்டுமே. ஒரு பூனை கண்ணை மூடிக்கொண்டால், உலகம் இருண்டுவிட்டதாக நினைக்குமாம். இருக்கட்டுமே, அதற்கு அதனுடைய உலகம் இருண்டுவிட்டது. உனக்கென்ன கவலை. நீ உன் உலகத்தில் இரு.
உன் வீட்டின் கதவுக்கு வெளியே புயலும், மழையும் என்றால், வீட்டில் கதவுக்குப் பின்னே நீ பாதுகாப்பாகத் தானே இருப்பாய்? கொஞ்ச நாளைக்கு அப்படி இருக்கலாம். நீ இல்லை என்பதால் கூட, அந்த புயலும் மழையும் அடங்கிவிடாது என்றாலும், பார்வையாளர் இல்லை என்றால் அங்கே ஆட்டம் நடக்காது அல்லது ஒத்திவைக்கப்படும் அல்லவா? அதுபோல காலத்தால் அடங்கிவிடும்.
பகிர்தல் அல்லாது இந்த உலகம் இல்லை. பகிர்வுதான் இந்த உலகை, மனித சமூகத்தை நகர்த்துகிறது என்பது மாபெரும் உண்மை. பகிர்தலில் நமக்கும் கடமை இருக்கிறது. நல்லதை பகிர்வோம், விலகி நிற்போம். மீண்டும் நல்லதை பகிர்வோம். மாற்றம் கொள்வோம். மாற்றம் ஒன்றே மாறாதது.
வாழ்க வளமுடன்.
-----