November 2024 | CJ

November 2024

What is Divinity Penance? For what is this penance performed? Who is it? When? How to do it? Can you explain?


இறைநிலை தவம் என்பது என்ன? எதற்கான இத்தவம் செய்யப்படுகிறது? அதை யார்? எப்போது? எப்படி செய்யலாம்? விளக்கமுடியுமா?


இத்தனை கேள்விகளை ஒன்றாக அடுக்கி இருப்பதை பார்த்தால், நீங்கள் வேதாத்திரியத்தின் வெளியே இருந்து கேள்வி கேட்பதாக தெரிகிறது. உங்களுக்கு பதில் தருவதின் வழியாக, சில வேதாத்திரிய அன்பர்களுக்குமே உதவக்கூடும் என்றும் நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.

இறைநிலை தவம் என்பது, வேதாத்திரியத்தில் மட்டுமே வழங்கப்படும் தவமாகும். அதுவும் நேரடியாக, வேதாத்திரி மகரிஷி அவர்களே வழிநடத்துவதாக அமைந்திருக்கும். வேதாத்திரியத்தின் முழுமையையும், மெய்ப்பொருள் உண்மையையும் உண்டாகித்தரும் தவமாக உள்ளது. வேதாத்திய பாடங்கள், அகத்தாய்வு பயிற்சிகளான எல்லாம் பூர்த்தி செய்து, பிரம்மஞானம் அறிந்து, மற்றவர்களுக்கு அவ்வுண்மையை விளக்கித்தரும் அளவில், அறிந்துகொள்ள உதவும் தவமே ‘இறைநிலை தவமாகும்’. அப்படியான பயிற்சியின் முடிவில், இத்தவம் கற்றுக்கொண்டாலே, ஆசிரியராகிவிட முடியுமா? என்றால் அதுதான் இல்லை.

இறைநிலை தவம், தொடர்ந்து செய்து, அதை நாம் அனுபவமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியம். மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவது போல, ‘மனதின் அடித்தலமே நிலைபொருள், அது தெய்வம்’ என்ற வகையில், ஒருமுனையில் நாமும், மறு முனையில் மெய்ப்பொருளும், இணைந்திருக்கும் நிலையை உணர்ந்து, அந்நிலையிலேயே இருத்தல்’ என்பதை அனுபவமாக பெற வேண்டும். இதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அது அவரவருடைய, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி, அனுபவம், கர்ம வினை, அகத்தாய்வு ஆகியன துணையாக இருந்து உதவும். எனவே நாம் அக்காலத்தை கணிக்க முடியாது.

இந்த இறைநிலை தவம், முழுமையாக நம்மை, வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் அல்லது உயர்வைத்தந்து முழுமையை தரும் என்பது உண்மை. இது பொதுவெளியில் இல்லை. மற்ற எந்த யோக சேவை மையங்களிலும் இல்லை. இதற்கு முன்பும் எந்த ஒரு வகையில், இத்தவம் இருந்ததும் இல்லை என்பதே உண்மையாகும். முழுமையாக, தானாக, தான் உணர்ந்த உண்மையை, அன்பர்களுக்காக, அவர்களின் உயர்வுக்காக, வேதாத்திரி மகரிஷியே இத்தவத்தை வடிவமைத்து, நேரடியாக நடத்தியும் தந்தார். அதுவே இன்றும் தொடர்கிறது.

        சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், மெய்யியளாலர்களும் கண்ட மெய்ப்பொருள் உண்மையை, தவத்தின் வழியாக, உங்களுக்குள் உணர்த்தித்தருவதே ‘இறைநிலை தவத்தின் தத்துவமாகும்’. இதை நீங்களும் நானும் வார்த்தையால் விளக்கிக் கொள்ள முடியாது.

இந்த இறைநிலை தவத்தை எப்படிச் செய்யலாம்? அதை வேதாத்திரிய பாடத்திட்டத்தின் வழியாக உங்களுக்குச் சொல்லித்தருவார்கள். அதை நான் இங்கே விளக்கினால், நீண்டு எழுதிக்கொண்டே செல்லவேண்டும். பதிவு இப்போதைக்கு முடியாது. எனவே, நேரடியாக, வேதாத்திரியத்தில் இணைந்து கற்றுக்கொண்டு, இறைநிலை தவத்தை செய்யலாம். அதுதான் உங்களுக்கான உண்மை விளக்கத்தை தரும். 

இந்த இறைநிலை தவம் செய்வதற்கு, எந்த நேரமும் தனியான அமைக்கப்படவில்லை. பிரம்ம முஹூர்த்தம் என்ற அதிகாலை 3:30 என்றெல்லாம் கடின அவசியமில்லை. அதிகாலை, பகல், மாலை, இரவு என்ற வித்தியாசமும் பார்க்க வேண்டியதில்லை. அதுதான் இந்த இறைநிலை தவத்தின் சிறப்பும் ஆகும்.

முக்கியமாக ஒன்றை, இங்கே சொல்லுகிறேன். இந்த இறைநிலை தவத்தின் வழியாக, நம்முடைய உடலில், எந்த ஒரு ஆதார சக்கர மையங்களும் தூண்டப்படுவதில்லை. அதனால் ஏற்படக்கூடிய கடினமோ, சிக்கலோ, பயமோ அவசியமும் இல்லை. நம்முடைய மனமே இதில், இத்தவத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நம்முடைய மனமே அந்த அனுபவத்தையும் பெறுகிறது, உயர்கிறது.

இறைநிலை தவம், வேதாத்திரியத்தின் முழுமை மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுன் முழுமையான உண்மையையும், உயர்வையும் தரும் தவமும் ஆகும்.

வாழ்க வளமுடன்.

-


Do you know how to treat a lifelong partner, lover and better half?


உங்களின் மனதை கவர்ந்தவரிடம், வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவருடன், வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் தெரியுமா?


உலகில் மனிதனின் பிறப்பு, என்றுமே தனியாக நிகழ்ந்துவிடுவதில்லை. ஆண், பெண் என்றான அன்பு, காதல், அதன் வழியான திருமண பந்தம், குடும்பம் என்ற அமைப்பு ‘பெரும்பான்மையாக’ அமைந்திருக்கிறது. அதுதான் சமூகத்தின், உலகின் நடைமுறையாகவும் இருக்கிறது. பிறக்கும் ஆணும், பெண்ணும் தனக்கு பருவம் வந்த காலத்தில், அடுத்த நிலையான வாழ்வைத் தொடங்க, ஆண் ஒரு பெண்ணையும், பெண் ஒரு ஆணையும் துணையாகக் கொண்டு, திருமணம் வழியாக, குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் பெற்றோரும், உற்றோரும், நண்பர்களும் துணையாக இருந்து, இதை வழிநடத்தியும் தருகிறார்கள். இந்த குடும்பம் என்ற அமைப்பு எனக்கு, அமையவில்லையே? என்று கேட்கிறீர்களா? இதோ அதற்கான விளக்கமும் காண்போம்.

தனி நபரான வாழ்க்கை, ஓர் முழுமையை தருவதில்லை. எனினும், அது கடமையை தீர்த்தல் என்பதாக நிகழ்ந்துவரும். இந்த தனி நபர் என்ற நிலை, தன் விருப்பத்தாலும், சூழ்நிலையாலும், சந்தர்ப்பங்களாலும் அமைந்துவிடும். ஆனால், எந்த நொடியிலும், இதை அவரே விரும்பி, தன் முயற்சியாலும், மற்றவர்களின் துணை மற்றும் உதவியாலும், நிச்சயமாக மாற்றம் கொள்ள முடியும். அப்படி இருக்கும்பொழுது, யார்மீதோ பழி சொல்லுவதில் அர்த்தமில்லை. உலகின் நடைமுறைக்கு ஏற்றபடி, கல்வி, வழக்க பழக்கம், வேலை, பொருளாதாரம் என்ற வகையிலும், உங்களை தகுதியாக்கிக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும். முக்கியமாக காத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இயற்கை எந்தவகையிலும், பழி கொள்வதாக கருத இடமில்லை. எனவே தனி நபருக்கும் இயல்பாக, இல்லறம் அமையும்.

எந்த வகையில், ஆண், பெண் என்று இருந்தவர்கள், கணவனும் மனைவியாக, ஒருவருக்கு ஒருவர் துணையாக, சடங்குகள், சம்பிரதாயம், வழக்கம் வழியாகவோ, ஒப்பந்த பதிவு வழியாகவோ, திருமணமாகி, இல்லறத்தை தொடங்குகின்றனர். அந்த இல்லறம் சிறப்பாகவே தொடர்கிறதா? என்று கேள்வியை முன்வைத்தால், 

‘சிறப்பாகத்தான் சென்றுகொண்டு இருக்கிறது’ என்போருக்கு, என்னுடைய நல்வாழ்த்தை பகிர்கின்றேன். ‘அது, சிறப்பாக தொடங்கியது உண்மைதான். ஆனால் இன்றோ தடுமாறுகிறது’ என்பது பெரும்பாலோரின் பதிலாகும். 

சிறப்பாக தொடங்கியது ஏன் தடுமாறுகிறது? என்று அதில் சிக்கிக் கொண்ட கணவனும், மனைவியும் சிந்திக்கின்றனர். அதை விலக்கிட, தீர்த்திட முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களே அறியாமல், மேலும் மேலும் சிக்கிக் கொள்கின்றனர். இதற்குப் பிறகு, அந்த தடுமாற்றம், அவர்களை பாதை மாற்றி, திசைக்கு ஒருவராக பிரித்தும் வைக்கிறது. இந்த தடுமாற்றம், சிக்கல், பிரச்சனை ஆகியவற்றுக்கான தீர்வு என்ன? என்று வேதாத்திரி மகரிஷியிடம், அன்பர்கள் கேட்கிறார்கள். அவர் ஓர் துறவி ஆயிற்றே? என்று கேள்வி எழுந்தாலும், அதற்கு அவரே பதிலும் சொல்லுகிறார். ‘நான் துறவியாகவே ஆன்மீகத்தில் நுழையவில்லை. உங்களைப்போல, நானும் இல்லறத்தில் வாழ்ந்து, அந்த நிறைவில்தான், யோகத்தில் நின்றேன். அதனால், அந்த வாழ்வியல் அனுபவம் எனக்கு உண்டு. அதன் அடிப்படையில் உங்களுக்கு வழிகாட்டிடவும் முடியும்’ என்கிறார்.

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி? இதோ, வேதாத்திரி மகரிஷியின் வழிகாட்டுதலை காண்போம். சிறப்பான குடும்ப வாழ்க்கைக்கு, மூன்று பண்புகள், 1.  விட்டுக் கொடுப்பது, 2.  அனுசரித்துப் போவது, 3.  பொறுத்துப் போவது ஆகிய குணங்கள் அவசியம். இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.

விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!’ எல்லோரும் ஆவலோடு, மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா? மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா? மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.

‘யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.’ என்கிறார்.

அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது. ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார். ‘அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம். அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள்.  அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள். அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்!’

இல்லறத்தை விட்டு விலகிடாமல், அதில் ஓர் நிறைவைகண்டு, முழுமை செய்துவிட்டு, தன் வாழ்நாள் முழுவதும், யோகத்தின் வழியாக, பருவம் வந்த அனைவருமே, மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், நான் யார்? என்ற தன்னையறிதலும், பிரம்மஞானமும் வழங்கி, தனிமனித விடுதலையும், அமைதியும் தந்து, அதன் வழியாக, உலக சமாதானமும் தந்து வழிநடத்தும், வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்துவதை உணர முடிகிறதுதானே?

விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது. அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும் என்றும் குறிப்பிடுகிறார் மகரிஷி. அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற கீழ்க்கண்ட பத்து அறிவுரைகளை கவனத்தில் கொள்வோம். 

பத்து வழிகள்:

1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4.  வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம்.

அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.

5.  ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம். அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிக்கு இடம் தரும்.

மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.  பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தால் இது பொருந்தாது.

7.  குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்

8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி 

யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. அவரவர் அடிமனமே இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10.  நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

What is the answer to those who say that the practice of yoga is a deception, a survival for a yogi?


யோக பயிற்சி என்பது ஏமாற்றுவேலை, யோகிக்கான பிழைப்பு என்று கூறுபவர்களுக்கு பதில் என்ன?



இந்த கேள்விக்கான பதிலை, வேதாத்திரி மகரிஷியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை சொல்லாம். ஒரு உண்மை விளக்க தத்துவ நிகழ்ச்சிக்குப் பிறகு, கேள்வி நேரத்தில் ஒரு இளைஞன், வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கிறான்.

‘சுவாமிஜி, உங்கள் கருத்துக்களால் நான் ஈர்க்கப்பட்டேன். மகிழ்ந்தேன். உண்மைகளும் தெரிந்தன. இந்நிலையில், நான் உங்களைப்போல ஆகவேண்டும். அதற்கு என்னவழி?’

‘நல்லது, அது கடினமில்லை. இங்கே வழங்கப்படும் பயிற்சிகளில் இணைந்து, கற்றுக்கொள்க. அப்பயிற்சிகளே உன்னை, என்னளவிற்கு உயர்த்தித்தரும்.’

‘ஓ, அதற்கெல்லாம் விருப்பமில்லை. எளிமையாக உங்களைப்போல ஆகவேண்டும், அதுதான் என் நோக்கம்’

இளைஞனின் கருத்தை புரிந்துகொண்ட பின் ‘சரி, அப்படியானால், உடனடியாக ஒரு துணிக்கடைக்குச் சென்று, இதுபோல வெள்ளை குர்தா, வேஷ்டி, மஞ்சள் துண்டு வாங்கிக்கொள். அணிந்து தயாராகலாம். ஆனால் இதுபோல தாடி வளர, குறைந்தது மூன்று மாதம் ஆகுமே?’

‘ஆமா, ஆனாலும்...’

‘உனக்கு என்ன விருப்பமோ அதை நீயே செய்துகொள், ஒத்துவரவில்லை விட்டுவிடு’ என்று வேதாத்திரி பதிலளிக்கிறார்.

இப்படியாக, உண்மையை அறிந்து உணராமல், எந்த ஆராய்ச்சியும் இல்லாமல், வெளி தோற்றத்தில் தன்னை, யோகியாக காட்டும் நபர் எப்போதுமே உண்டுதான். உண்மையான யோகிக்கு கிடைக்கும் மரியாதையை, தானும் பெற விரும்பி, இப்படி வேடமிட்டுக் கொள்கிறார்கள். தன்னை நாடி வரும் மக்களிடம், பணமும் பொருளும் பெற்று, தன்னை மட்டும் உயர்த்திக் கொள்கிறார்கள். இது ஒருபுறம் நிகழ, இப்படியான போலியான யோகிகளைதான் மக்களும் நம்புகிறார்கள் என்பதும் உண்மை. ஒரு யோகி, தன்னுடைய தோற்றத்தில், இப்படி இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அது ஒரு நடைமுறை பழக்கமே அன்றி, கட்டாயமில்லை.

பெரும்பாலான யோகிகள், காவியும், பச்சையும், ஆரஞ்சு, மஞ்சள் துண்டு, தாடி, மீசை, ஜடாமுடி என்று இருப்பார்கள். கையில் நுகத்தடியும், கமண்டலமும் கூட உண்டு. புலித்தோல், நம் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதால், அது இல்லை. ஆனால், வேதாத்திரி மகரிஷி இதற்கு மாறாக, வெள்ளை குர்தா, பஞ்சகட்சம் வேஷ்டி,  காவி துண்டு என்றுதான் அமைத்துக் கொண்டார். தாடி மீசை இயல்பாக அமைத்து கொண்டார். தான் உணர்ந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் வழியாகவும் தெளிவு செய்தார். விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டினார்.

ஆனாலும், வேதாத்திரி மகரிஷியின், வான் காந்த தன்னிறைவுக்குப் பிறகு, சில யோகிகள் வேடத்தை ஏற்றுக்கொண்டுதான் வலம் வருகிறார்கள். அவர்களையும், சுவாமிஜி என்றுதான் வேதாத்திரிய அன்பர்களும், மக்களும் அழைக்கிறார்கள். இவர்கள் உண்மையா? போலியா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வேதாத்திரி மகரிஷி, சுவாமிஜி என்பதை விட, ஐயா என்று அழைப்பதை விரும்பினார் என்பதும் உண்மை. தன்னை அருட்தந்தை என்று சொல்லப்படுவதையும் ஏற்றுக்கொண்டார். விருப்பு வெறுப்பு ஏதுமில்லாத அரவணைப்பும், திருத்துதலும், கண்டிப்பும், பாதுகாப்பும், உயர்வு தருவதும் தந்தையின் பண்புகள் தானே!

இந்த போலியான யோகிகளை மக்கள் ஏற்பது, பல நூறு ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இன்றும், இப்போதும் உண்டுதான். எனினும், தன் காலத்திலேயே, மக்களின் அறிவு வளர்ச்சி மாறிவருகிறது. யோகிகளை அடையாளம் காண்பதில், மக்கள் நிலை இப்படி மாறியுள்ளது என்று அவரே விளக்க்குகிறார். ‘அறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரைத் தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.'

‘யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு, தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.’

‘தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகின்றது. இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.’என்பதாக,  அருட்தந்தை வேதாத்திரி மகரிசி தெளிவு செய்கிறார்.

ஆனால், மக்களின் சுய சிந்தனையும், ஆராய்ச்சியும் அற்ற நிலையில், தோற்றத்திற்கு மதிப்புதந்து ஏமாறும் போக்கு மாறவில்லை என்பது உண்மையே. ஒரு பைத்தியக்காரரைக்கூட சித்தர் என்று சொல்லும் கூட்டமும், மதிக்கும் கூட்டமும் நம்மிடையே உண்டு. அதுபோல, காவியும், தாடியும், ஜாடாமுடியும் இருந்தாலே, இவர் யோகி என்று மதித்து, கைகட்டி, காலில் விழும் கூட்டமும் நம்மிடையே உண்டு. இதற்கு வழி, காலமும், அதுதரும் அனுபவமும் மட்டுமே.

வாழ்க வளமுடன்.

-

How can we understand that God and Brahmmam are? Does it really matter? Is it necessary to accept that?


இறை என்பதும் பிரம்மம் என்பதும் எப்படி விளங்கிக் கொள்வது? உண்மையாகவே இருக்கிறதா? அப்படி ஏற்றுக்கொள்வது அவசியம் தானா?


        உங்கள் அடிப்படை சந்தேகத்தை விளக்கக்கூடிய கேள்வி என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் உதவக்கூடிய விளக்கமும் கிடைக்கும் என்பதும் உண்மை. ஏற்கனவே இந்த கேள்வியின் அடிப்படையில், விரிவாக விளக்கம் தந்துள்ளேன். அதை, இங்கே தேடிப்பார்த்து படித்து அறியலாம். இன்று கூடுதலாக, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி விளக்கித்தருகிறார் என்றும் பார்க்கலாம்.

இறைநிலை உணர்ந்த அறிவு, வாழும் எல்லா மனிதர்களுக்கும் வேண்டும். அது அவசியமும் கூட. காரணம், அதில் அவனுடைய பரிணாம எழுச்சியின் உண்மை மறைந்திருக்கிறது. மற்ற ஜீவன்களில் இருந்து, எந்த வகையில் அவன், ஆறாம் அறிவின் உன்னதத்தை பெற்றிருக்கிறான் என்ற காரணம் உள்ளடங்கி இருக்கிறது. அது அவனுடைய பிறவிக்கடமையாகவும், பிறவியின் நோக்கமாகவும் இருக்கிறது. இதை தெரிந்து கொள்ளாமல் போனாலும், உதாசீனப்படுத்தி விலகிக் கொண்டாலும், யாருக்கும் ஏதும் இழப்பு இல்லை. ஆனால், பிறந்த அந்த மனிதனின், பிறப்பு ‘வீணாகி விடுகிறது’. எனவே, அறிந்து உணராமல் மடிந்துவிடுவது, அவனுக்கே இழப்பாகிறது. அந்த இழப்பு, அவனுடைய வாரீசுகளுக்கும் தொடர்ந்தால் என்னாவது? 

இந்த நிலையில், ஒரு மனிதன் அவனின், பிறவி நோக்கமும், பிறவிக்கடமையும் தெரிந்து கொண்டால் என்னவாகும்? ‘நான் யார்?’ என்று தெரிந்து கொண்ட பிறகு, கிடைக்கக்கூடிய அந்த ‘முழுமை இன்பம்’ அனுபவமாக மட்டுமே கிடைக்கக்கூடியது. ஒருபோதும் வார்த்தைகளால், எழுத்துக்களால் விளக்கித்தர முடியாது. எனினும், வேதாத்திரி மகரிஷி அதுகுறித்த விளக்கத்தை, உங்கள் அளவிற்கு தருவதை, இதோ காணலாம்.

பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீகக் கருவூலம் மனித பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப்போற்றப்படுகிறது. அதுவேதான், இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடையதாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.

இது விரைவு, பருமன், காலம், தூரம் எனும் நான்கு கணக்குகளுக்கும் உட்படாதது. இம்மாபெரும் ஆற்றலிலிருந்து தான் பரமாணுவெனும் நுண்ணியக்கத் தூள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்து பேரணு, செல்கள், பல உருவத் தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவுத் தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிணாமம் தான், ‘பிரம்மம்’ எனும் தெய்வீகப் பேரற்றாலின் சரித்திரம்.

மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற் பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளன. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாகக் காணக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் ஆகும். இத்தகைய அறிவுதான் இறைநிலையுணர்ந்த அறிவு. அறிவாகவும், அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்மஞானம் ஆகும்’ என்ற வகையில் உண்மை விளக்கமளிக்கிறார், வேதாத்திரி மகரிசி.

இந்த உண்மைகளை, தன் வாழ்நாளில் அறிந்து உணர்வதற்காகவே பிறவியெடுக்கிறான். ஆனால் பிறந்த பிறகும், வாழும் நிலையிலும், அதை மறந்துவிடுகிறான். எல்லாவற்றையும் மறுத்தும் விடுகிறான். அதோடு மடிந்தும் விடுகிறான்.

வாழ்க வளமுடன்.