What is Divinity Penance? For what is this penance performed? Who is it? When? How to do it? Can you explain? | CJ

What is Divinity Penance? For what is this penance performed? Who is it? When? How to do it? Can you explain?

What is Divinity Penance? For what is this penance performed? Who is it? When? How to do it? Can you explain?


இறைநிலை தவம் என்பது என்ன? எதற்கான இத்தவம் செய்யப்படுகிறது? அதை யார்? எப்போது? எப்படி செய்யலாம்? விளக்கமுடியுமா?


இத்தனை கேள்விகளை ஒன்றாக அடுக்கி இருப்பதை பார்த்தால், நீங்கள் வேதாத்திரியத்தின் வெளியே இருந்து கேள்வி கேட்பதாக தெரிகிறது. உங்களுக்கு பதில் தருவதின் வழியாக, சில வேதாத்திரிய அன்பர்களுக்குமே உதவக்கூடும் என்றும் நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.

இறைநிலை தவம் என்பது, வேதாத்திரியத்தில் மட்டுமே வழங்கப்படும் தவமாகும். அதுவும் நேரடியாக, வேதாத்திரி மகரிஷி அவர்களே வழிநடத்துவதாக அமைந்திருக்கும். வேதாத்திரியத்தின் முழுமையையும், மெய்ப்பொருள் உண்மையையும் உண்டாகித்தரும் தவமாக உள்ளது. வேதாத்திய பாடங்கள், அகத்தாய்வு பயிற்சிகளான எல்லாம் பூர்த்தி செய்து, பிரம்மஞானம் அறிந்து, மற்றவர்களுக்கு அவ்வுண்மையை விளக்கித்தரும் அளவில், அறிந்துகொள்ள உதவும் தவமே ‘இறைநிலை தவமாகும்’. அப்படியான பயிற்சியின் முடிவில், இத்தவம் கற்றுக்கொண்டாலே, ஆசிரியராகிவிட முடியுமா? என்றால் அதுதான் இல்லை.

இறைநிலை தவம், தொடர்ந்து செய்து, அதை நாம் அனுபவமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியம். மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவது போல, ‘மனதின் அடித்தலமே நிலைபொருள், அது தெய்வம்’ என்ற வகையில், ஒருமுனையில் நாமும், மறு முனையில் மெய்ப்பொருளும், இணைந்திருக்கும் நிலையை உணர்ந்து, அந்நிலையிலேயே இருத்தல்’ என்பதை அனுபவமாக பெற வேண்டும். இதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அது அவரவருடைய, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி, அனுபவம், கர்ம வினை, அகத்தாய்வு ஆகியன துணையாக இருந்து உதவும். எனவே நாம் அக்காலத்தை கணிக்க முடியாது.

இந்த இறைநிலை தவம், முழுமையாக நம்மை, வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் அல்லது உயர்வைத்தந்து முழுமையை தரும் என்பது உண்மை. இது பொதுவெளியில் இல்லை. மற்ற எந்த யோக சேவை மையங்களிலும் இல்லை. இதற்கு முன்பும் எந்த ஒரு வகையில், இத்தவம் இருந்ததும் இல்லை என்பதே உண்மையாகும். முழுமையாக, தானாக, தான் உணர்ந்த உண்மையை, அன்பர்களுக்காக, அவர்களின் உயர்வுக்காக, வேதாத்திரி மகரிஷியே இத்தவத்தை வடிவமைத்து, நேரடியாக நடத்தியும் தந்தார். அதுவே இன்றும் தொடர்கிறது.

        சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், மெய்யியளாலர்களும் கண்ட மெய்ப்பொருள் உண்மையை, தவத்தின் வழியாக, உங்களுக்குள் உணர்த்தித்தருவதே ‘இறைநிலை தவத்தின் தத்துவமாகும்’. இதை நீங்களும் நானும் வார்த்தையால் விளக்கிக் கொள்ள முடியாது.

இந்த இறைநிலை தவத்தை எப்படிச் செய்யலாம்? அதை வேதாத்திரிய பாடத்திட்டத்தின் வழியாக உங்களுக்குச் சொல்லித்தருவார்கள். அதை நான் இங்கே விளக்கினால், நீண்டு எழுதிக்கொண்டே செல்லவேண்டும். பதிவு இப்போதைக்கு முடியாது. எனவே, நேரடியாக, வேதாத்திரியத்தில் இணைந்து கற்றுக்கொண்டு, இறைநிலை தவத்தை செய்யலாம். அதுதான் உங்களுக்கான உண்மை விளக்கத்தை தரும். 

இந்த இறைநிலை தவம் செய்வதற்கு, எந்த நேரமும் தனியான அமைக்கப்படவில்லை. பிரம்ம முஹூர்த்தம் என்ற அதிகாலை 3:30 என்றெல்லாம் கடின அவசியமில்லை. அதிகாலை, பகல், மாலை, இரவு என்ற வித்தியாசமும் பார்க்க வேண்டியதில்லை. அதுதான் இந்த இறைநிலை தவத்தின் சிறப்பும் ஆகும்.

முக்கியமாக ஒன்றை, இங்கே சொல்லுகிறேன். இந்த இறைநிலை தவத்தின் வழியாக, நம்முடைய உடலில், எந்த ஒரு ஆதார சக்கர மையங்களும் தூண்டப்படுவதில்லை. அதனால் ஏற்படக்கூடிய கடினமோ, சிக்கலோ, பயமோ அவசியமும் இல்லை. நம்முடைய மனமே இதில், இத்தவத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நம்முடைய மனமே அந்த அனுபவத்தையும் பெறுகிறது, உயர்கிறது.

இறைநிலை தவம், வேதாத்திரியத்தின் முழுமை மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுன் முழுமையான உண்மையையும், உயர்வையும் தரும் தவமும் ஆகும்.

வாழ்க வளமுடன்.

-